Wednesday 27 June 2012

கலாச்சாரம்



கலாச்சாரம்

நதியின் மடிப்புகளில் தொட்டில் கட்டித் தவழ்ந்தது
இந்தக் கலாச்சாரத் தொல்லியியல்.

வானம் - பூமி - காலம் - சூழல்  தொட்டு
சடங்குகள் வேறுபடும் போதெல்லாம்
மனிதர்களும் வேறுபடுகிறார்கள்.

பெரும்பாலும் வழிபாடுகளில் 
ஒரு மனித இனத்தின் கலாச்சாரத்தைக்
கண்டுபிடித்து விடலாம். 

மனிதக் குழுக்களின் கலாச்சாரங்கள்,
வாழ்வியலின் புவியீர்ப்பு மையத்தில் தான் எழுதப்பட்டது.

உறவுகள் பின்னப்பட்டு ஒரு
குறிப்பிட்ட வெளியில் வாழ்ந்து கொண்டிருந்தது
இந்த மனிதக் கூட்டம்.

அரசர்கனின் பேச்சுவார்த்தைகளில் 
அந்தச் சமூகத்துக்கான கலாச்சாரம்
கவனமாக எழுதப்பட்டது.

ஒரு சமூகத்தின் ஆட்சி நிலைகுழையும் போதெல்லாம் அச்சமூகத்துக்கான கலாச்சாரமும்
ஆடைமாற்றிக் கொள்கிறது.

வயல் வெளிகளில் - களத்து மேடுகளில்
அறுவடை செய்தார்கள்  இந்தக் கலாச்சாரத்தை
நமது மூத்த மனிதர்கள்.

ஆடுமாடுகளே  மனிதர்களின்
ரொக்க மதிப்புகள்

வயல் வரப்புகளே
வகுப்பறைகள்

அதோடு
காதலும், வீரமும்
தமிழனின் பழைய ஏற்பாடுகள்.

அதில் கலந்து விட்டது
சில பகட்டுப் பாடுகள்.

அதற்குக் காரணம்
வாழ்வியலின் அழகியல் தட்டுப்பாடுகள்.

கணவன் மனைவிக்குள்
சண்டைகள் இருக்கும், சச்சரவுகள் இருக்கும்
ஆனால் இப்போது நடக்கும்
விவாகரத்துகளோ, தற்கொலைகளோ
முன்னொரு காலப்பதிவில்
எந்த இடத்திலும் இல்லை.
   
கூட்டு மனிதர்கள்
தங்கள் வீட்டுக் குள்ளே முடிந்து கொண்டார்கள்
கலாச்சார முடிச்சுகளை.

ஜெமீந்தார்கள்
மிட்டாமிராஸ்தாரர்கள்
பண்ணையார்கள் என்று வாழ்ந்த காலக்கட்டத்தில்,

பிறப்பால் ஒதுக்கப்பட்டவர்கள்
கொத்தடிமைகளாக நசுக்கப்பட்டர்கள்.

அதிகாரம்
மனிதர்களின் வாழ்வியலில்
ஏறுவரிசையும், இறங்குவரிசையும் எழுதிப்பார்த்தது.

தேவலோக அழகிகள் என்ற
கற்பனைப் பாத்திரங்களான
ரம்பை, ஊர்வசி,மேகலைகளுக்கு நடுவில்
தேவதாசி முறை, பொட்டுக்கட்டிவிடும் பழக்கம்
அன்றைய நடைமுறையில்
தலைதெரித்து ஆடியது.

முட்டாள் சாத்திரங்களை வேரறுத்து
பெண்களின் முன்னேற்றத்துக்காக
சட்டமேதைகளும், பெரிய மனிதர்களும்
பிறந்தார்கள்.

வாரிசுரிமைப் போர்களின்
இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட
ஐரோப்பியர்களின் வருகை
ஒரு யுகத்திற்கான கலாச்சார மாற்றமானது.

மேற்கத்திய நாடுகளின் இறக்குமதியில்
கலாச்சாரமும் அடங்கியிருந்தது.

விதவிதமான ஆசைகளை
உலகம் விரும்பும்
கலாச்சாரக் கதம்பம் இது.

கலாச்சாரத்தில் பின்னப்பட்ட பச்சை நரம்புகளே,
ஒரு சமூதாயத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகள்.

செயல்பாடுகள் அத்தனையும்
உலகத்தின் பொதுவில் வந்து நிற்கும் போது
கலாச்சாரமும் பொதுவாக இருக்கிறது.

நமக்கானத் தொன்மக் கலாச்சாரம்
தொலைந்து போகும் -  இந்தச்
சந்ததி இடைவெளியல்,
முதல் தலைமுறையின் வாழ்வியல்
பாழ் பட்டுப் போக வேண்டியிருக்கிறது.

இன்றைய கலாச்சாரத்தின் அடிப்படை இதுதான் என்று நிதானித்துச் சொல்லிவிட முடிவதில்லை.

அதிநவீனத் தகவல்தொழில் நுட்பங்கள்
இன்றைய மனிதர்களின் உணர்வுகளை
எளிதில் பகிர்ந்து கொள்ள வைக்கிறது.

சேட்டிங், டேட்டிங் என்று
இளைய தலைமுறைகள் கிறுக்கும் பதிவுகளை
விடிந்தால் ஊடகங்கள் ஒப்பித்துவிடுகிறது.

சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகங்கள்
சொல்லித் தரும் புதிய வாழ்வியல் முறைகளை
நாம் விரும்பாவிட்டாலும் 
சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கண்ணகி காலத்திலும் கூட
காலம் கெட்டுக் கெடக்கு புள்ள’, போகும் போது ஆத்தாள கூட்டிட்டு போ- என்ற
கிழவி மொழி நாட்டு நடப்பைச் சொல்லி வைத்திருக்கும்.

அச்சு யந்திரமும், தகவல்த் தொடர்பும்
போக்குவரத்தும் யந்திரமாக்கப்படாத காலத்தில்
கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.

ஆனால், இன்றைய
ஊடகங்கள் சொல்லித் தருகிறது
புதுபுதுக் கலாச்சாரத்தை.



களைத்துப் போட்டதெல்லாம்
இங்கு கலாச்சாரமாகிறது.

கலாச்சாரத்தின்
வடிவங்கள் மாறிவிட்டது
புதுபுது அர்த்தங்கள் தேடிவிட்டது

குலசாமிக் கோவில்
அய்யனார் குதிரை
அங்காடி வாசலில்
அலங்காரப் பொருளாகவும் இருக்கிறது

குளியல் உடையை
தெருவில் அணிந்து வருவதற்கும்
எந்தக் கூச்சமும் இல்லை

விண்வெளி மனிதர்களின்
விசைத்தட்டு ஆடைகளும்
கொண்டாட்ங்களில் பங்கேற்கக்
கொண்டு வரப்படும்

கலாச்சாரத்தை சூழல் தீர்மானிக்கிறது
சூழல் மாறும் போது கலாச்சாரமும் மாறுகிறது

அடர்ந்த வழியில்
நடந்து கொண்டியிருக்கிறது
இந்தத் திறந்த வெளிக் கலாச்சாரம்


வேதியல் கலவையில்
துரித உணவுகள்

வாழ்வியல் நாடகத்தில்
கார்டூன் ஆடைகள்

இசையிலும் கூத்திலும்
மின்சாரத் தாளங்கள்

கட்டணப் படியின் வரிசையில்
வழிபாட்டு நேரங்கள்

பளிங்கு வாசலில் பிளாஸ்டிக் கோலங்கள்

பக்கத்து வீட்டில் கொலை நடந்தாலும்
பத்திரிக்கையில் வரும்வரை
புரியாத பாடங்கள்

அந்தந்த  இடத்துக்குத்  தக்கவாறு
மனிதர்களின் தனிநடிப்பின் வேடங்கள்

எல்லாம்
நடப்பியல்  கலாச்சாரத்தின் நாடகங்கள்

பார்த்துப் பார்த்துப் பழகும்
கலாச்சாரம் காலம் தொட்டு இளகும்
ஆசை கொண்ட அச்சில் அமரும்

சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்து
கற்களோடும்
இலை தளை ஆடைகளோடும்
கலாச்சாரம் தொடங்கும்.



Tuesday 26 June 2012

எத்தனிப்பு

எத்தனிப்பு

நிதர்சனமான எத்தனிப்புகள்
உயிரின் பதிவுகளாகத் திசைதடுமாறிப்
பதைத்துத் திகைத்து உருண்டு புரண்டதில்
பாகாய் உருகிய துப்பல்களும்
அதன் அதீதங்களும் நீர்க்குமிழ்களாக - அதை
மைக்ரோ வினாடிகளில் பழங்கதையாக்கியது
விம்மி விம்மி நொதித்த மனம்
தகிக்க முடியாத பிதற்றல்கள் மரணித்திருப்பதாய்
சட்டென்று தணிந்து சாமரம் வீசிட
நந்தவனப் பூக்கள் திறந்து
செந்தேன் அமுதம் சொட்டி
துளித்துளியாக விவரிக்கிறது - தன்
சாதாரண நிமிடங்களின் அந்தரங்கத்தை......

பாலை....

பாலை....

கால்நூற்றாண்டைத் தொடப்போகும்
வயதின் நீளத்தில் - ஒரு
கட்டாய நிமித்தமாக
மூங்கில் குழலின் முனங்களில்
நயமான சோகத்தின் நடுவில்
குதலை போல அன்னை அவள்
கதறிய துளிகளுக்குத் தேற்றுதல் இல்லாமல்
இலவம் பஞ்சுக்கு இறகுகள் தேவையில்லை என்றாலும்
சின்னதொரு விசும்பலில்
வாழ்க்கையின் இரண்டாம் பக்கத்தை
வாசிக்கப் பயணிப்பாய்....

மருதம்.....

மருதம்.....

விடிகாலை தாழ் திறந்து
வெயில்த் தாரை சொட்டப்போகும் காலவெளியில்
பரிமாறும் அழகிலே
பசி தீர்ந்து போகும் இணக்கத்தில்
அறுசுவையில் ஒன்று போல்
நீ கோபிக்கும் காரத்தில்
செல்லக்கோபத்தை ரசிப்பதற்காகச்
செய்த சின்னச் சின்னக் குரும்புகளில்
ஆம்பல் இதழில் ஒட்டாத நீர் போல
பிணக்கத்தின் முடிவில் இழையும்
பிரியத்தின் வெளிப்பாடுகள்.....

நெய்தல்.....

நெய்தல்.....

பிரபஞ்சப் பேராழியில்
பேச்சு வார்த்தைகளைச் செவியுறாமல்
ஏதுமற்றவளாய் உயிர் திரட்டி
ஓரிருவேளை உண்ண மருத்தும்
உன் தேவை இழந்து
வாடைக்காற்றும் திரும்புகையில்
கரையில் விழுந்த மீனாக
உன் தனித்த சிறகுகள் துடித்துக்
காலம் பின்னோக்கி நகரும் போது
நீ ஞாபக மறதியின் எல்லை தொடுவாய்

முல்லை....

முல்லை....

சிலுசிலுத்துச் சலசலக்கும்
ஒரு மாரிக்காலத்தில்
மாலை நேரக் காற்றின் தீரத்தில்
'கொழுநன்' வரவு நோக்கி
கொழுந்தின் பற்றுதல் ஏக்கமாக
வாசற்படி ஓரத்தில்
ஏதோ சிலவற்றை ஒத்திகையிட்டு
கடிகார முள் பார்த்துத் திகைக்கையில்
விரைந்து வினைமுடித்துத்
திடுமென வரும்
திருமுகம் கண்ட தருணம்.....

குறிஞ்சி.....

குறிஞ்சி.....

'நெஞ்சு நேர்ந்தவள்' உனக்கு
மின்மினிப் பூச்சிகள் இறகசைக்குமொரு
அடர்ந்த இரவின்
சுட்டும் விழிக் கதிர்களில்
அரும்பு அவிழ்ந்த குறிஞ்சியுன்னை அளந்து
மயில் தோகையின் ஸ்பரிசத்தில்
கலைந்த கூந்தல் தவம் கலைந்துச்
செந்தேன் இதழ் பருகி ஓங்குமலை அடுக்கத்தில்
பொங்கிச் சிந்திச் சிதறும் நதி போல
மடை திறக்கும் உன்
மடந்தை......

பச்சை இரவு


பச்சை இரவுகளில் வடிந்த
ஈரப்பசையை
ஒடித்துத் தின்ற துத்தநாகங்கள்
சதா ஊலையிடுகின்றன
யோனியின் மடிப்புகளில்......

சுட்ட கனவு ! சுடா தடா கம்

சுடும் கனவில் உயிர் எழுதி
மடைதிறக்கும் விழி நுனியில்
கட்டுக் கட்டாகக் கொட்டிக் கிடக்கிறது
என் இதயம்...

அதிகாரம் பக்குவம்

அதிகாரம்

நீ நினைத்து ஒன்று நடக்க வேண்டுமென்றால் அது அதிகாரத்தில் வழி நடக்கும்....

அதிகாரம் என்றால்.....
ஒரு
பெற்றோராக.....
ஆசிரியராக.....
காதலராக......ஒரு நாட்டுக்குத் தலைவராக....
இப்படி காரியத்துக்குத் தக்கவாறு....
எது நடக்க வேண்டுமென்றாலும் அது அதிகாரத்தால் மட்டும்....
ஆனால் - அதில் ஒரு பக்குவம் இருக்கிறது, எந்த அதிகாரம் மேலோங்கியிருக்கிறதோ அது தான் காரியத்தைச் சாத்தியமாக்கும்...............
..........

அடங்கா பேச்சி !

"ஏதாவது பேசு"
எனறு கேட்பதற்கு முன்னால்
ஏதோ ஒன்றைப் பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேன்
அசைவுகளோடு மட்டும்...

ஈகை கவி ஓவிய கவி தோழமைக்கு !

என் நண்பனின் காதலி பிறந்த நாளுக்கு நண்பன் கேட்க நான் எழுதிக் கொடுத்தது......

வாழ்த்து...

நீ கருவறை மடிப்பில் தவழ்ந்தது
எனக்காக என்று
நினை ஓரங்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்

உனைப் பார்த்தும் நான்
குழந்தையான ரகசியத்தை
இதுவரை உன்னிடத்தில் நான் சொன்னதில்லை...

உனக்கும் அப்படித் தான் என்ற நினைப்பெனக்கு...

உன் பருவத்தின் அடுத்த அடியை
நீ எடுத்து வைத்தாலும்
எனக்கு எப்போதுமே
நீ முதல் பார்வையின் பிம்பத் துகள் தான்...

உன் பிறந்த நாளுக்கு
வாழ்த்து சொல்வதற்காக
என்னையே நான் வாழ்த்திக் கொள்கிறேன்....!

சர்க்கார் கொடுக்கும் , சர்க்கரை அல்வா !

சக்கரை ஆலை ஏமாற்றி
எரிந்தார்கள் விவசாயிகள்
கரும்புக் காடுகளில்...
சக்கரையில்
எத்தனால் எடுத்து
வாகனம் இயக்கு!
உனக்குப் பெட்ரோல் எதற்கு!
உழவன் வேண்டும் நமக்கு!
இதை உணராமல் ஏனடா வழக்கு!
அட போடா என்டா உன் சமத்து....

கொடுக்கு அரசியல் ! சதுரங்க அவியல் !

கண்டனம்
உலக செஸ் சாம்பியன் சீப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 5 வது முறையாகப் பட்டம் பெற்று இருப்பது மிக்க பாராட்டுக்குரியது.

பெருமைப்படுவோம் -பெருமைப்படுத்துவோம். அதற்காகச் சாதனையாளன் ஆனந்துக்குத் தமிழக அரசு பட்டம் கொடுக்கலாம். அவர் பிஞ்சுகள் நெஞ்சத்தில் படர அவருடைய சார்பில் ஒர் அரங்கம் அமைத்து மெத்த தலைமை கொடுக்கலாம்.

ஆனால் விளிம்பு நிலையிலும் -முதல் தலைமுறையிலும் தவியாய் தவித்து போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் தமிழக அரசு ஆனந்துக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து கௌரவப்படுத்துவது மிகவும் தவறான காரியம்... அது கண்டிக்கத்தக்கது ....

தகுந்த களம் கிடைக்காமல் வெறும் அனுதாபங்களோடும்-பகட்டுப் பரிதாபங்களோடும் தனக்குள்ளே தன்னைச் சுமையாக்கிக் கொண்டு அலையும் சிறகுகளைத் தரும்பிக் கூடப் பார்க்காத இந்தச் சாதனையாளனின் பரிவட்டமும் ஒரு சுயநலம் தான்....


மிக்க கடுகடுத்தேன்...................................

சந்திரா ஆண் பால் ஒன்டி வேங்கை !


யாருக்கு யார் ?

யார் நல்லவர்கள்
யார் கெட்டவர்கள்
எல்லோரும் நல்லவர்கள்
எல்லோரும் கெட்டவர்கள்

இசை யாழ் யுவதி அவள் !

ஒருநாள்
நெடுநாள்
முறுவல் எதனால்
தையல் ?

நீ நெகிழ்ந்த மையல்
இமையில் கண்டேன்
இமையில் விழுந்த பார்வை
தரையில் கண்டேன்.

கண்கள் குளிரக்
காதலாகிக் கசிந்தேன்
நெஞ்சம் அதிர
யாதுமாகி வழிந்தேன்.


பெரிது மகிழ்ந்து நான்
எதற்கும் அஞ்சேல் .
 

நிகழுமிங்கெல்லாம்
நின்னை அல்லால்
செய்கை ஒன்றில்லை எனக்கு.
ஒரு சொல் இசையாதா !
விழி அசையாதா!
மெத்த மையல் கொண்ட முகிலே...
பொழிந்தால்
வழிந்தால்
மெல்ல நீ அவிழ்ந்தால்
அத்துணை சொட்டும்
பருகும் என் இருதயம்...

இளைய ராஜா

இளையராஜா
பிரந்த நாள்

இசைக்கு ராஜா இளைய ராஜா
பெயரிலே இசைக்கான
அரியணை இருக்கிறது

இசையின் நரம்புகளே
இதழ் அசைவுகள்

கலைமகள் வீணை எடுத்து
ராஜாவிடம் வாசிக்கக் கேட்டாள்

விரல்கள் வீணை தொட்டவுடன்
கூடு விட்டுக் கூடு பாய்ந்தாள் கலைமகள்

இளையராஜாவின் இருதயச் சங்கதியில்
அதிரும் தாளகதியில்....

இசைமொழி எழுதிய பெருந்தகை
இசைஞானி என்கிறது ஊர் அதை

இசைத் தாளங்கள்
சிந்தித்தால் அது பாடங்கள்
சிந்தித் தேன் பாயும் ஓடங்கள்

உனது இசை மொழிகள் கடந்தது
உலகம் உன் இசையில் கரைந்தது....

குழைத்து

நான்
குழைத்துக் கொடுத்த
அந்தரங்கத்தை வீதியெங்கும்
வாரி இறைத்தவள் நீதானடி!
வலிக்கிறதென் இதயம்...

குறுநகை

குறுநகை
குறுமகள் நறுமுகை
எனக்குள் வந்த குறுந்தொகை
நெஞ்சில் அலை
கொதித்த கண்ணில் உலை
பளிங்குச் சிலை
நான் தேடி அலைந்த பனிக்குகை
பீத்தோவன் இசை
காவியப் படுதா வரித்த
ஹோமரின் கதை
மகா கவி கவிதை...