Friday 20 July 2012

எனவே சீமான் வடிவே!


வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்.
வாழ்வைத் தமிழுக்காக எழுதிக்கொடுத்த பச்சைத் தமிழன்.
தமிழனுக்குத் தோள் கொடுக்க மட்டும் குனியும் சுத்த தமிழன்.

சாதியா அதனால் என்ன?
மதமா இருந்தால் என்ன?

நீ தமிழன் நீதான் தமிழன்
அஃதே அஃதே ஓரினம்
அதுதான் அதுதான் ஒரே இனம்

நீ தமிழன் நீ தமிழன் என்று பிற மாநிலத்தால் நீர் இல்லாமலும்,
கடலில் மீன் இல்லாமலும் அவதியுறும், அனாதைகளாக அகதிகளாக அழிக்கப்பட்ட தமிழர்களை,
நான் தமிழன் நான் தமிழன் என்று, கர்வம் ஏற்றி நாம் தமிழராய் ஒன்றிணைத்த வைர நெஞ்சு. சறுகுகளைப் பட் பட் பட் பட்டென்றெரிபட வைத்த அக்னிக்குஞ்சு.

ஆதித்தனார் சொன்ன நாம் தமிழர் கொள்கையை உலகறியச் செய்த செல்லவச் சீமான் ஒரு கொள்கைச் சீமான்.

உலகில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் வரும் பிரட்சனைக்கு எழும் முதல் குரல் இவர் குரல். எழுதும் முதல் மடல் இவர் விரல்.

ஈரமில்லாத நெஞ்சில் தமிழ் ஈழம் எப்படி நனையும்?
இருப்பாய் தமிழா நெருப்பாய் எனவே சீமான் வடிவே.

கற்புக்கரசி கண்ணகியா? மாதவியா? என்றால் கற்பிழந்தவன் கோவலன் மட்டும் தான் என்பது போல,
திராவிடனா? தமிழனா? -  எரிந்தது ஒரு ஜனக்கூட்டம் என்று பார்த்தால் என்ன?

பேச்சும் கூச்சலும் இருந்தென்ன லாபம்?      
எது நடந்தாலும் அது அதிகாரத்தின் வழி நடக்கும்.
வரும் ஒரு நாள் ஜனநாயக பாரதம்!
கூடாது இனியொரு தாமதம்!

சதுப்பு நிலக் காடுகள்


அலையாத்திக் காடுகள், கடலோரத்தில் அடர்ந்து வளரும் வனாந்திரப் பசுமைகளின் சுயராஜ்யம்.

கடல் கொந்தளிப்பத் தடுக்கும் அவசியம்.

சதுப்பு நிலக்காடுகள் என்றழைக்கப்படும் அழையாத்திக் காடுகளில், ஆண்டு முழுக்க தேங்கும் நீரில் வலை போல வேர்கள் பின்னிக்கொண்டு,  எல்லா பருவ மாற்றத்தையும் தாங்கும் சுர புன்னை மரங்கள் வளர்கின்றன.

நீர் வாழ் பறவைகளும் பருவகாலங்களில் வெளிநாட்டுப் பறவைகளும் கீச்சிடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் இந்தப் புதர்க் காடுகளில்.

பல வகையான மீன்களும், மித வெப்ப ஈரப்பதத்தில் வாழக்கூடிய விலங்களும் படர்ந்த தாவரச் சுருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறன.

படகுகளிலும், மரப் படுக்கைகளிலும் அமைக்கப்பட்ட கடலோடிகளின் தற்காலிகக் குடித்தனங்கள் இந்த சதுப்பு நிலக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

இங்கு களிமண்ணிலும், வண்டல் மண்ணிலும் தேங்கும் கடல் நீர், எந்த நேரத்திலும் வற்றுவதில்லை.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களின் இலை, கூளம், கனிகள்  போன்றவை நீர் மற்றும் நிலத்தில் விழுந்து, நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் சிதைவுற்று மீன்நத்தை, நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக மாறுகின்றன.

இங்கு வளரும் கண்டல் மரங்கள், இலை நுனி காம்புகள் முதல் வேர்வரை மருத்துவத்துக்காக பயன்படுகிறன.

ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா தளங்களின் நந்தவனமாக இருக்கும் இந்தச் கடலோரக் காடுகளுக்குப் பறவைகளைப் போல பயணிகள் வந்து போகிறார்கள்.

கடற்கரையோரப் பகுதிகளில் உப்பளங்களை விரிவுபடுத்தவும், நகர விரிவாகத்திற்காகவும் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நகரமயமாக்கலின் நெருக்கடியில், புலம் மனிதர்களால், சதுப்புநிலக் காடுகள் செதுக்கப்படுகிறன. அழிக்கப்படுகின்றன.

உப்பளத் தொழில் தற்போது சதுப்புநிலக் காடுகளுக்கு சவால் விடும் வகையில் மாறி வருகிறது. உப்பளங்கள் துவங்க, பல இடங்களில் சதுப்பு நிலக்காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

உப்பளங்களின் கழிவுகள் பல இடங்களில் சதுப்பு நிலக்காடுகளில் விடப்படுகின்றன. இதனால் எண்ணற்ற தாவரங்கள் கருகி வருகின்றன.

கடலோரப் பகுதிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய சதுப்பு நிலக்காடுகள் தற்போது, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து வருவதற்கு உப்பளங்கள் காரணமாக உள்ளன.

வேலைவாய்ப்பு, வர்த்தகம் - போன்றவற்றுக்கு  உப்பளங்கள் தேவை தான் என்பதால், உப்பளங்களை தடை செய்யாமல் ஒழுங்கு செய்ய வேண்டும்.

சுனாமியின் நினைவை மறக்கமுடியாமல் இருந்தாலும், இருக்க இடமில்லாமல் சென்னை போன்ற பெரும் நகரங்களில், கடலோரப் பகுதியிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியில், சுந்தர வனக்காடுகளான இந்த அலையாத்திக் காடுகளை உருவாக்குவது என்பது நடைமுறையில் சிக்கல் தான்.

ஆனால், இனிவரும் நூற்றாண்டுகளில்... 
உலகப்பேரழிவான சுனாமி மீண்டும் வருவது நிச்சயம். 

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் பக்கத்துக் கோள்களுக்கே பட்டம் விட்டாலும் இயற்கையின் விளையாட்டை தாமறிக்க இயற்கைதான் வர வேண்டும். 

சுனாமியை தடுக்க சுந்தரவனக்காடுகள் தான்தோன்றியாக வளர்தால் மட்டுமே தகும்.






Thursday 12 July 2012

செம்மறிகள்


                       செம்மறிகள்

ஒரு தன்னியல்பின் சுரங்கத் தடங்களில்
மறைகிறான் குற்றங்களின் எலும்புகளைச் சுமந்து கொண்டு
உதடுகளின் பனி வெடிப்புகளில் உதிறும் புன்னகையில்.

வன்மத்தின் சுவாச மயக்கத்தில் மிருகங்கள் உறுமுகின்றன
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்.

வெள்ளந்திகள் என அனுதாபங்கள் சொன்ன தடயத்தில்
நடத்தலாம் இந்த முத்தமிட்டு நக்கும் நாடகத்தை.

இதுவரைக்கும் தேடியும் இன்னும் கிடைக்கவில்லை
சொரிக்கல்லில் ஒளிந்த மனதுக்கான திறவுகோல்.

உள்ளொடுங்கும் ஏவாளின் வார்த்தைகளுக்காக பொய்கள்
ஒன்று கூடித் துப்புகின்றன சில நூறு பக்கங்களை.

அவ்வளவு எளிதில் நடந்திராது ஒரு பாராட்டும் பூச்சென்டும்.

அறுந்து தொங்கும் பகட்டில் சில சொல் உதிர்கின்றன  வாழ்த்துக்கள்.

நெருடிய பிரதேசத்தில் வெள்ளை தேவதைகளின் வீட்டில் பட்டாம் பூச்சிகள் தேன் குடிக்கும் போதெல்லாம் கனவுக்கு இன்னும் ஒரு வயதாகிறது.

மௌனனிகள் சொல்வடியும் எதையும் கொண்டு ஓட முடியாத சப்பானிகள்.

கட்டுக்கட்டாக பொன்னாங்கன்னிகள் அறுத்துச் சுமந்து வர அறிவுரை சொல்லும் பிரியாணிக்கடை செம்மறிகள்.

மயிலிறகின் சுமை பொறுக்காமலா அச்சு முறிந்தது? இங்கே வெறுமையின் கனத்திலும்.

எங்கிருந்தோ இன்னும் விளங்காமல் ரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றன நினைவுகளின் பள்ளத்தாக்குகள் வழி வந்த இவைகள்.

Tuesday 10 July 2012

பாப்பாத்திகளின் தூங்கும் பகல்.


பாப்பாத்திகளின் தூங்கும் பகல்.


அவள் பச்சை நிறமணிந்து  காற்றில் ஏதேதோ எழுதி வந்தாள்.
ஒரு வெயில் அறிக்கையில், இப்படிக் குறிப்பிட்டிருந்தது.

நீயும் ஒரு நாள் சாகாராவுக்குள் வருவாய், கதை மண்டலச் சுருளில் ஒவ்வொரு கன்னியிலும் உனது பெயரும் உடனே எழுதப் பெறும்.

மௌனத்தின் அதிர்வுகளில், உன் பால் வெளி அண்டத்தின் கடைசி ஜாமம் கிழியும் சத்தம் கேட்டு நீ எழுவாய்.

அவனும் பரிதாபத்தின் குறியீடுகளைப் பிழைத்திருத்தம் செய்து, நேற்றிரவு முளைத்த காளாகளுக்கடியில் போட்டு வருவான். ஒரு சலனத்தில் கடல் பொங்கும்.

நரம்புகள் தாளத்துக்கு தடுமாறிய தாண்டவத்தில் உச்சிப் பொழுது பனி உதிர்க்கும்.

காத்திருத்தல் என்பது ஒரு ஆக்காட்டிக் குருவிக்கு நிகழ்ந்திருக்கலாம்.

தபோவனத்தின் தண்ணீர்ச்சாலையில் நெய்த கவிதைகளை பருத்திச் சுளையின் உடலின் வழி வாசித்து விட்டு வந்தார்கள்.

தேவாங்குகளின் கதறல் கேட்டு மொழி பெயர்ப்புகளின் போக்கத்த வார்த்தைகள் புழகத்தில் வரத் தொடங்கியன.

பச்சை இரவுகளில் வடிந்த ஈரப்பசையை ஒடித்துத் தின்ற துத்த நாகங்கள் சாத ஊழையிடுகின்றன யோனியின் மடிப்புகளில்.

அதோடு, கார்ட்டூன் வார்த்தைகளில் கதைத்த நிமிடங்கள் காட்சியின் குறுந்தொன்மங்களாகக் கனக்கின்றன.

ஒரு பனிக் காலத்தின் திமிரில் வளர்ந்த வரிக்குதிரைகள் வெறுத்துக் கத்தும் குழி பறிக்கும் கனவுகளில்.

சுகந்தத்தின் அடைமழை பொறுக்காமல் தவிப்புகள் புதருக்குள் மண்டிக் கிடக்கும். விதிகள் திருத்தும் ஒரு அச்சகத்தில் அச்சப் பிழைகள்.

ரத்தம் குடிக்கும் நீலிகளுக்கு வயிறு நிரம்பும். சந்திப்புகள் பெரிதென பட்டுப் பூச்சியின் நுனி விரலில் தீண்டும் வெளி.

உச்சுக் கொட்டும் மழை நனையும் கனவிலிருந்து ஆவாரஞ் செடி இலை மறைத்த சிவப்புப் பாப்பாத்திகளுக்காக தூங்கும் பகல்.    

Sunday 8 July 2012

காதல் என்றால் என்ன ?


                                                             உயிர்களுக்குப் பொதுவானது காதல்

மனிதனைத் தவிர எந்த உயிரும்
காதலைப் பகுத்தறிவதில்லை

பக்குவம் தேடும் மனிதர்கள் மட்டும்
காதலை சென்சார் செய்து கொள்கிறார்கள்.

ஒரு சமூகம் மாறியதால் காதலின் வடிவங்கள் மாறலாம். ஆனால், வழிகள் மாறாது.

ஜாதி மதம் பொருளாதாரம் கௌரவம் எல்லாம் கடந்து பல யுகங்களாகக் காதல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

காதலை மூடி மறைக்கலாம்; வெறுக்கலாம்; வன்மையாகக் கண்டிக்கலாம். ஆனால், காதல் இல்லாத ஒரு சமூதாயத்தை யாராலும் உருவாக்கிவிட முடியாது.

உலகத்தின் முதல் மனிதனின் தொடக்கத்திலிருந்து - ஒரு மனிதனின் உணர்வுகளின் அடிப்படைதான் காதல்.

மொழி பேசத் தெரியாத கல்மனிதர்களின் காலம் தொடர்ந்து,
இலக்கியம், தத்துவம், ஊடகம், இணையம் என்று காதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்க இலக்கியங்களில் 2381 பாடல்களின் வழி, காதலையும், வீரத்தையும் பாடியிருக்கிறார்கள். அதில் 1862 பாடல்கள் காதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பாடப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், நமக்குக் கிடைக்காமல் போன பாடல்கள் எத்தனை ஆயிரம் என்று யாருக்குத் தெரியும்...

எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே உலக மொழிகள் இலக்கணம் சொல்லியிருக்கின்றன.

ஆனால், தமிழ் மொழியில் மட்டும் மனித வாழ்வியலில் காதலுக்காக தனி இலக்கணம் வகுத்தவன் சங்கத் தமிழன்.

பொரிநுதல் வியர்த்தல்
புதுமுகம் புரிதல்
நகுநயம் மறைத்தல்

-என்று தொல்காப்பியன் துளித் துளியாக விவரிக்கிறான் இந்தக் காதல் கடலின் ஆழத்தையும் அதன் ஈரத்தையும்.

மானசீகக் காதல், தெய்வீகக் காதல், லட்சியக் காதல், நாயக நாயகி பாவம் என்று நம் முன்னோர்கள் காதலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

லைலா மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ ஜூலியட், ஷாஜகான் மும்தாஜ், காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற காதல் நட்சத்திரங்களை, காதல் செய்யாதவர்களும் மறந்து விடமாட்டர்கள்.

பார்வையிலே காதல், பார்க்காமலே காதல், நாக்கை அறுத்துக் கொண்டு காதல் என்று 1980 -90 களின் தொடக்கத்தில், திரைப்படங்கள் காதலுக்கான வடிகாலாக இயங்கி வந்தன.

காதலை, இயற்கை வர்ணனையில் குழைத்து, கிராமிய மெட்டுகளில் வாசித்தது, இளைய ராஜாவின் ஹார்மோனியத் தாளங்கள்...


90 களுக்குப் பிறகு, ஏ,ஆர் ரகுமானின் இசைப்புரட்சியில், புதிய இசைக்கருவிகளின் விதவிதமான ஒலிகளில் காதலுக்கான சங்கதிகள் வாசிக்கப்பட்டன.

இந்த சமகால திரைஉலகில் பெரும்பாலும், காதலை திறந்த வெளியில் களைத்துப்போட்டு விட்டு ஒரு துள்ளல் இசையில் அதைச் சொல்வதோடு, காதலில் நல்ல பதிவுகளையும் இயக்குநர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இன்று, தேர்ந்தெடுத்துக் காதல் செய்யும் அளவுக்கு இன்று பல வகை மனிதர்களின்  - விதவிதமான எண்ணங்கள்.

கொஞ்சம் சிரித்தால் போதும், இருக்கிறது கையில் மொபையில் போன்.

பேசுகிறார்கள், பேசுகிறார்கள் மாதக்கணக்கில். உலகத்திலே செல்போன் பேசுகிறவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது இந்தியாதான் என்கிறார்கள்.

ரமேஷை விட சுரேஷ் பெட்டராக இருந்தால் பெரும்பாலானவர்கள் கைகுலுக்கிப் பிரிந்து விடுகிறார்கள்.

திரிஷா போனால் என்ன திவ்யா இருக்கிறாள் என்ற கலாச்சாரத்தில், இன்று காதலும் இலவச இணைப்பாக இருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகாவது காதலிக்க முடிகிறதா...
பிரியமானவர்களை நேசிக்க நேரம் இருக்கிறதா...

பிடித்தமான சமையல் - ஆசைப்பட்டுக் கேட்ட புடவை நேரம் கிடைக்கும் போது செல்கிற சுற்றுலா பயணம் - பிறந்த நாள் பரிசு - இப்படி தீர்ந்து விடாத சந்தோஷசங்கள் காதலில் ஏராளம் இருக்கிறன.

காதலின் வகுப்பில் மாணவன்தான் பண்டிதன் - என்றும்

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது. - என்று காதலைப் பக்குவமாக பதிவு செய்திருக்கிறார்கள்.


காதலில் சில விஷயங்கள் அர்த்தமில்லாமல் இருக்கிறன.
அர்த்தமில்லாத அனைத்தும் ஆழமாக இருக்கிறன.
அது ஆழமாக இருப்பதால்தான் அதற்கு அர்த்தம் புரிவதில்லை.

ஏதோ ஒர் ஈர்ப்பில், பருவ காலங்களில் ஆணும் பெண்ணும் பழகும் நிலையை affection என்றும் infatuation என்றும் ஆங்கில வார்த்தைகளில் அனுபவப்பட்டவர்களாக சொல்லிவிடுகிறார்கள்.

காதல் என்பது, திட்டமிட்டு நிகழ்வதில்லை. ஒரு சமூகத்தின் பின்னணிகள் இசைக்கும் போது மனிதர்களின் இதயங்கள் சிந்தி விடுகின்றன.

குறித்த இடத்தில் - சரியான நேரத்தில், காத்திருக்கும் போது கொந்தளித்து கிளம்பும் பரிதவிப்பின் சுமையை, காதலர்கள் மட்டுமே உணர்வார்கள்.

காத்துக் கிடந்து வராவிட்டால், நேசிப்புக்குரியவர்களை, மனகுக்குள் கண்டிக்கிறார்கள்.

அருகில் வந்தவுடன், நெஞ்சுக்குள் மழை பெய்கிறது.
கோபம் பொய்யாகிறது.

இதில் என்ன நடந்தாலும், கடைசி வரைக்கும் காத்திருக்கும் வலிமை இன்று எத்தனை காதலுக்கு இருக்கிறது. 

திரையிசைப் பாடல்கள் கேட்டு வளரும் மயக்கத்தில் பிஞ்சுப் பருவத்திலே நழுவி விடுகிறார்கள்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு கதையில் கதாநாயகனுக்குக் காதலிப்பது மட்டுமே வேலையாக இருப்பதால், அதைப்பார்த்த கிரக்கத்தில்,

காதல் செய்யும் வாலிபர்களுக்கு சொந்தக்காலில் நிற்க முடியாத பரிதாபமே யதார்த்தமாக இருக்கிறது.

திருமணம் என்று வரும் போதுதான் காதலர்களுக்கு இடையில்  ஒரு உலகப்போரே வந்து விடுகிறது.

சேட்டிங் டேட்டிங் என்று இன்றைய மாடலிங் மனிதர்களுக்கு மத்தியில், ஆடையிலும் -  அலங்காரத்திலும் காதலுக்கான குறிப்பு எழுதப்படுகிறது.

sms  என்றும் email என்றும் அனுப்பும் குறுந்தகவல்கள், நொடிக்கும் நேரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன.  

இந்தத் தகவல் தொடர்பு யுகத்தின் உச்சத்தில், மெல்லிய அதிர்வுகளைக் கூடத் தாங்க முடியாமல் தற்கொலைகளும், விவாகரத்துகளும் தொடர்ந்து கதை எழுதுகின்றன.

உலகக் கலாசசாரம் பொதுவானதால், நமக்கான அடையாளங்க
ளைத் தொலைத்து விட வேண்டியிருக்கிறது.

திரைப்படங்களைப் பார்த்து காதலை ஊக்குவிக்கும் இந்தச் சமூகம் தெருவுக்கு வந்தவுடன் எதார்த்தத்தை தோற்கடித்து விடுகிறது.

கலப்புத் திருமணங்களை ஆதரித்து வேலை வாய்ப்புகளும், நிதி உதவிகளும் அரசாங்கம் வழங்கி வரும் நேரத்தில்,

காதலர் தினத்துக்குக் கருப்புக் கொடி தாங்கிக் கொண்டு சில சமூக அமைப்புகள், தங்களின் அடிப்படை மானத்தைக் கட்டிக் காத்துக் கொள்கிறன.

காதலில் மட்டும் தான் கற்பு என்பதை உணர முடிந்தது.
கண்ணியம் இருக்கிறது, கட்டுப்பாடு இருக்கிறது.

ஆனால், எந்த இடத்தில் இருந்து காதல் வந்ததோ, அந்தக் கட்டுப்பாடுகள் எதும் இல்லாத இடத்தை நோக்கி மீண்டும் சென்று கொண்டேயிருக்கிறது, இன்றைய காதல்.

அளவற்ற சுதந்திரம் தான், இன்றைய காதல் கசப்பதற்கு முக்கிய  காரணமாக இருக்கிறது.

தொழில்நுட்பம் அதிலும் ஊடகம் என்று பெருகி விட்ட  அழுத்தத்தில் சில உண்மையான காதலர்களும்
இருக்கிறார்கள், இருப்பார்கள்.











Tuesday 3 July 2012

வாடகைப் புத்தக நிலையம்

வாடகைப் புத்தக நிலையம்

வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக் கொண்டு, புத்தகங்கள் கொடுத்து,

வாசித்து முடிந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு எளிய வர்த்தக முறையை வாடகைப் புத்தக நிலையங்கள் செய்து வருகின்றன.

தேடிக் கிடைக்காத புத்தகங்களும், அதிக விலையுள்ள புத்தகங்களும்,  வாசகர்களிடம் எளிதாக சென்றடைய ஆரம்பிக்கப் பட்ட வாடகைப் புத்தக நிலையங்களைத், தொடர்ந்து நடத்த முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சில் ஏற்பட்ட ஊடகங்களின் ஆதிக்கம், நடைமுறையில் புத்தக வாசிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது.

இன்றைய வாசிப்பின் தளங்கள் மாறி வருகின்றன. இணையங்கள் அதற்கான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன.

Blog என்ற வலைச்சரத்தில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள், தங்கள் எழுதிய படைப்புகளின் ஈரம் காய்வதற்குள் வாககர்களிடம் வரவேற்பைப் பெறுகிறார்கள்.

ஆனால், புத்தகம் புரட்டி வாசிப்பதற்கு இணையாக வேறெந்த வாசிப்பும் இருக்க முடியாதென்பதே பலரும் அறிந்த உண்மை.

இணையத் தளத்தில் அதிக நேரம் படிக்க முடியாத சூழ்நிலையும், அதனால் ஏற்படும் கண் எரிச்சலும் புத்தக வாசிப்பின் அருமையை நமக்கு உணரச் செய்யும்.

வாடகைப் புத்தக நிலையத்தை ஒரு சேவையாகவோ தனிப்பட்ட- சுய அக்கரைக்காகவோ நடத்த முடியுமே தவிர, ஒரு சமூக வர்த்தகமாக நடத்த முடிவதில்லை.

வாழ்க்கையின் பெரும் பரப்பை காட்சி ஊடகங்கள் நிறைத்து வருவதால், இன்றைய சூழலில் வளரும் தலைமுறைகளிடம் வாசிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது.

இன்றைய இளைய தலைமுறைகளிடம் வாசிப்பிற்கான தனிப்பட்ட முறையில் பயிற்சி ஏதும் இல்லை.

தங்களுடைய பாடத்திட்டங்களில் மட்டும் கவனமாக இருக்கும் பள்ளி கல்லூரிகளில் வகுப்பறை கடந்து வாசிப்பிற்கான தளங்களை ஏற்படுத்தித் தருவதில்லை.

படித்து முடித்து வீதிக்கு வந்தவுடன் தான் கற்றுக் கொள்ளவே ஆரம்பமாகும் சூழலை இன்றைய சமூகம் உருவாக்குகிறது.

8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில், ஒரு படைப்பாளன் தன் படைப்பை 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட வேண்டிய பரிதாபம் நிலவி வருகிறது.

அதிலும், ஒரு படைப்பாளனின் முதல் பிரதியின் வெளியீடும், விற்பனையும், வாசகர்களிடம் சென்றடைவது என்பது, அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. 

கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், நாவல்களையும், படைக்க மட்டுமே முழுக்க முழுக்க படைப்பாளர்கள் ஆழ்ந்திருக்கும் போது,

புத்தகங்களை வெளியிடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும்
பதிப்பகங்கள் மட்டுமல்ல அரசும் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் நாட்டில் மொத்தம் 5000 மேலான நூலகங்கள் இருந்தும் புத்தக வாசிப்பிற்கான வரவேற்பு கிடைக்காமல் போனதை ஆராய வேண்டியிருக்கிறது.

புத்தகங்களை அதிகமான எண்ணிக்கையில் பதிப்பிப்பதாலும், ஊர் ஊருக்கு நூலகங்கள் அமைப்பதாலும் மட்டும் புத்தக வாசிப்பு என்பது ஆதிகரித்து விடுவதில்லை.

எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகமும், எழுதிய படைப்புகளின் கதை - மையம் - பின்புலம் குறித்தான அனைத்து தகவல்களும் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

விளையாட்டிலோ அல்லது பிற துறைகளிலோ வெற்றி பெரும் சாதனையாளர்களுக்குக், கோடிக் கணக்கில் கொடுத்து கௌரவிக்கும் அளவிற்கு ஒரு எழுத்தாளன் அங்கிகரிக்கப்படவில்லை.

ஏதேதோ வரவுகளுக்கு விளம்பரங்களை அள்ளி எறியும் தொலைக்காட்சி சேனல்கள், ஒரு புத்தகத்தின் அருமையை எடுத்துச் சொல்வதில்லை.

வெகு விரைவாக எடுத்துச் செல்லும் இன்றைய காட்சி ஊடகங்கள் இதை முழுமையாகச் செய்தால் மட்டுமே எழுத்தாளர்களின் பிழைப்புக்கும் தொடர்ந்து எழுதுவதற்கும் வழி பிறக்கும்.

புத்தக வாசிப்பில் கிடைக்கும் தனக்கான சொந்தக் கற்பனையை, இன்றைய ஊடகங்களின் காட்சிப் பிம்பங்கள் பெரிய அளவிற்கு ஏற்படுத்தி விட முடியாது.

சேர்ந்தே இருப்பது, வறுமையும் புலமையும் என்ற திருவிளையாடல் வசனத்தை உண்மையாக்கும் இன்றைய சமூகப் போக்கை நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மாபெரும் படைப்பாளர்களுக்கு, நம் தமிழ் சமூகம் அளித்த மரியாதையில் பட்டினிச் சாவும் அடங்கும்.

சீத்தலைச் சாத்தான் என்ற சங்கப் புலவன் கூட, தானிய வணிகம் செய்து கொண்டு தமிழ் வளர்த்து வந்தான்.

பெருந்தலைச் சாத்தான் என்கிற புலவன், குமணன் காலடியில் பசியில் அழுது புலம்பிய காட்சியைப் சங்க இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

புலவர்களைப் பாதுகாப்பதற்காகவே புலவராற்றுப்படை என்ற தேற்றுதல் முறை நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டிருக்கிறது.

இதனால் தான் எழுத்தைப் புத்தக வடிவில் கொடுத்துப் பிழைக்க முடியாதென்பதை உணர்ந்த எழுத்தளர்கள், குறும்படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதி கொண்டிருக்கிறார்கள்.

சாகித்திய அகாதமி என்ற விருது எழுத்துலகில் வழங்கப்படும் உயர்நத விருதாகும்.

மிகச் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருதோடு 1 லட்ச ரூபாய் கொடுத்து அரசாங்கம் கௌரவிக்கிறது.

ஆனால், ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதினால் பல லட்சங்களை பார்த்து விடுகிறார்கள் இன்றைய ஊடக மொழி எழுத்தாளர்கள்.

பொழுது போக்கிற்காகவும், தூக்கம் வராத நேரத்திலும், பயணங்களிலும் மட்டும் புத்தகம் வாசிக்கப் பழகியவர்கள், 

சினிமாக்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் மூழ்கி விடுவதால், படிக்க நேரம் இல்லை என்கிறார்கள்.

வாழ்வின் அர்த்தத்தையும், அதன் புரிதலையும் ஒரு புத்தகத்தின் வழி தெரிந்து கொளள முடியும்.

உறவுகளின் மனித நேயமும் கற்பனை வளர்ச்சியும் வற்றிப் போனதற்கு காரணம் புத்தக வாசிப்பு குறைந்து போனது தான்.

இதனால் - மனஅழுத்தமும், விரக்தியும், குற்ற உணர்ச்சியும் மனிதர்களிடம் தேங்கிக் கிடக்கிறது.

ஒரு கொலையோ, பெரும் விபத்துக்களோ நமக்கு பக்கத்திலே எளிதில் நடந்து விடுகிறன.

புத்தக வாசிப்பின் மகத்துவம்தான் மனதைத் தூய்மை ஆக்கும்.
உறவுகளையும் வாழ்வின் அர்த்தங்களையும் புரிய வைக்கும்.

வெளிநாடுகளில் இரண்டு மூன்று படைப்புகள் எழுதிய எழுத்தாளர்கள் உலக அளவில் பாராட்டு வருகிறார்கள்.

தனி அங்கிகாரத்துடன் உலக நாடுகளில் வலம் வருகிறார்கள்.

கேரளாவில் ஆண்டுக்கொரு முறை எழுத்தாளர் தினவிழ கொண்டடாடுகிறார்கள்.

சென்ற ஆண்டு கேரளாவில் வீதியில் இறந்து கிடந்த ஒருவன், எழுத்தாளன் என்று தெரிந்தவுடன் அவன் அரசாங்க மரியாதையில் அடக்கம் செய்யப்பட்டான்.

தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கான வாழ்வாதாரங்கள் காக்கப் படவேண்டும். வாசிப்பிற்கான புரிதலை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

வெறும் பாடத்திட்டங்களை மட்டும் வாசித்து சலிப்பு தட்டும் சூழலில், தத்ததுவம் - கலை - அறிவியல் - இலக்கியம் - பொது அறிவு என,

புத்தகங்களை நூலகங்களுக்கு அளிக்கும் 45 / சதவீத கழிவு விலையில் மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வாசிப்பு பழகத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

வேளை நேரம் முடிந்ததும் பிற வேளைகளில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கண்டித்து, பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு வாசிப்பிற்கான தகுந்த பயிற்சி முறைகளைக் கொண்டு வர வேண்டும்.

அரசின் தலையீடு இல்லாமல் தனியார் நடத்தி வரும் புத்தகத் திருவிழாக்களைப் பராட்டும் இந்நிலையில்,

சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் வாசிப்பின் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து  நடத்தப்பட வேண்டும்.

அதோடு, எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பாலமாக விளங்குபவைகளில் முதன்மையானவை புத்தக நிலையங்கள் மற்றும் நூலகங்கள் தான் என்றாலும்கூட; பழைய புத்தகக் கடைகள், வாடகை புத்தக நிலையங்களின் பங்கு தனித்துவம் பெறுவது மறுப்பதிற்கு இல்லை.

இன்றைய நவீன காலகட்டத்தில் "புத்தக வாசிப்பு" குறைந்து போனாலும், அதற்கான தளங்கள் மாறி "வாசிப்பு" பழக்கம் குறையாமல் அதிகரித்து வருவது  நல்ல வளர்ச்சி தான்.  










தீண்டும் மௌனம்

தீண்டும் மௌனம்

தீண்டும் மௌனத்திலே
தீராத கனவினிலே
ஒரு கவிதையாக காலம் களித்திருந்தேன்
நல்லதொரு கொள்கை வகுத்திருந்தேன்

நாளை வருவேனென்று நாட்கள் கடக்கிறதா?
நான்வரும் பாதையில் உன் இதயம் கிடக்கிறதா?
நான் உனக்காகத்தான்
என்றொரு பார்வையில் சத்தியம் செய்து கொடுத்தாய்!

நிலாவைக் கிழித்து விட்டாயடி – சகியே!
யாரிடம் நானிதைச் சொல்வேனடி
தேற்ற ஆளில்லை!
எது வந்தும் ஏக்கம் தீரவில்லை!
நான் குழைத்த அந்தரங்கத்தை
வீதியில் வாரி இறைத்தாயடி!
நீ என் முட்டாள் சிறுக்கி

கண்ணீர் வந்ததடி
கடந்த காலம் சுற்றி வளைத்ததடி
உலகம் வெறுத்ததடி
நிகழ்ந்த எதையும் இருதயம் நம்ப மறுத்ததடி
வானம் இடிந்ததடி - சகியே
வழக்கு வந்ததடி
மேகத்துளை வழியே
உதிரம் பொங்கி வழிந்ததடி