Wednesday 14 November 2012

முதல் தலை முறை இளைஞர்கள்



முதல் தலை முறை இளைஞர்கள் எதிர் கொள்ளும் பிரட்சனைகள் இங்கு ஏராளம் இருக்கின்றன . அது பற்றிய சிறு ஒளிப்பதிவு இதோ உங்களுக்காக ….

களைத்துப் போட்ட சோழிகளைப் போல , ஒரு சமூதாயத்தின் முதல் தலைமுறை இளைஞர்கள், தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குள் , மிகச் சாதாரணமாக 30 வருடங்கள் கடந்தோடிவிடுகின்றன .

மாதச் சம்பளத்தில் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வேலை செய்யும் இளைஞர்கள் தங்கள், அடிப்படைத் தேவைகளைக் கூட சம்பளத் தேதிக்கு தான் ஒத்தி வைக்க வேண்டியிருக்கிறது.

இன்னும் எத்தனை காலம் இந்த பேஜ்சுலர் லைப் என்று அலுத்து கொண்டே எங்கோ ஓரிடத்தில் பெற்றவர்களை விட்டு பிரிந்து வேலை செய்யும் இளைஞர் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள் .

நண்பர்களின் பேண்ட் ,சர்ட்களை மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டும் ,வாரம் ஒரு நாள் டாஸ்மாக்கில் சென்று கொண்டும்  மாதக் கடைசியில் , ஒரு நேர சாப்பட்டோடு உறங்கும் இளைஞர்கள், சென்னை கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களில் நிச்சயம் இருப்பார்கள் .

இன்னும் 5 வருடங்களில் செட்டிலாக வேண்டும் – 2 வருடங்களில் செட்டிலாக வேண்டும்  என்று கனவுகளையும், ஆசைகளையும் தேக்கி வைத்து, விரட்டியடிக்கும் வாழ்க்கையின் கடைசி வரைக்கும் செல்ல துணியும் ஒவ்வொரு இளைஞர்களும் பல திரைக்கதைகள் இருக்கும். 

உலக ரெஸ்டாரன்களை விட  சுவையான சாப்பாடு எது என்றால் , அது அம்மா கையில் சாப்பிடுவது தான் , என்று சொல்லும் இளைஞர்கள் கையேந்து பவன்களில் சலித்துக் கொண்டே சாப்பிட வேண்டிருக்கிறது .

வீட்டில் உள்ள அக்காக்கள் அல்லது தங்கைகளைக் கரை சேர்க்கும் வரைக்கும் முதல் தலைமுறையில் பிறந்த வாலிபர்கள் ,வயிற்றையும் வாயையும் மட்டுமல்ல ஆண்மையும் கட்டிப் போராட வேண்டியிருக்கிறது.

30 வயதைக் கடந்தும், திருமணம் ஆகாத இளைஞர்களை நடைமுறை வாழ்க்கையில்  மிகச் சாதாரணமாக பார்க்க முடியும் . உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் கலந்த பாலியல் தேவையை அவர்கள் எப்படி நிறைவேற்றுவார்கள் .

மனித உளவியலின் அடிப்படையில் …. ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கு பெரும்பாலும் பாலியலே மையக் காரணமாக இருப்பதாகச் சொல்வார்கள் .
ஒரு தனிமனிதன் தடுமாறும் போது , அவனைச் சுற்றிய பின்னிக்கிடக்கும் சமூகமும் தடம் மாறும் என்பதே எதார்த்தம் .

குடும்பத்தில் முதல் ஆளாக படித்து வெளியேறும் முதல் தலைமுறை இளைஞன் , தன் வாழ்க்கையின் பெருவெளியில் நடக்கும் போது எதிர் கொள்ளும் பிரச்னையில்     தன்னுடைய முந்தைய தலைமுறைக்கும் , தன் தலைமுறைக்கும் , இனிவரும் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து மூன்று தலைமுறைக்கும்  தானே போராட வேண்டியிருக்கிறது .

வாங்கிய சம்பளம் வாடகைக்கே சரியாக இருக்கும் போது , நிறைவேறாத ஆசைகளோடும் , தீராத ஏக்கங்களோடும் - இந்த பேஜ்சுலர்கள் உலகத்தை வெறித்துக் கொண்டே வேடிக்கை பார்க்கிறார்கள் .

மொழிகலாச்சாரம்பொருளாதாரம் என்று ,சமூகம் பின்னிய வலைகளில் சிக்கிக் கொண்டே நடுத்தர இளைஞர்கள் நிற்காமல் நீந்த வேண்டியுள்ளது .

வெளிநாடுகளிலோ அல்லது வெளியூர்களிலோ 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில், வேலையென்ற பெயரில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களை நீங்கள் பார்த்திருக்கூடும் .

ஒரு நேர சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் நம்பிக்கையும் - தைரியத்தையும் பலமாக வைத்துக்கொண்டு, விழுந்து விழுந்து எழுந்த முதல் தலை முறை மனிதர்கள் ஜாம்பவான்களாக , பேரேடாக , கலை உலக நாயகர்களாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும்  வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் .

வெள்ளத்தில் நீச்சல் பழகியவர்கள் பள்ளத்தைக் கண்டு நீந்தாமலா நின்று விடுவார்கள்.

இளைஞர்களே நிராகரிக்கப்பட்ட வாழ்க்கையைச் சாதகமாக்குங்கள்  …..
இளைஞர்களே நிராகரிக்கப்பட்ட வாழ்க்கையைச் சாதகமாக்குங்கள்  …..

சத்தியம் செய்திகளுக்காக விஜய் முத்துசாமியுடன் சந்திரபால் ….