Wednesday, 15 August 2012

ஹறப்பா




5000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கான அடையாளங்கள் சிந்து நதிக்கரை ஓரத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்றளவும் துப்பறியப்படுகிறது.

சிந்து நதிக்கரையின் சமமான வெளியில், தோன்றிய இந்த நாகரீகம் உலகத்தின் முதல் நாகரீகம் என்றும், எகிப்து மற்றும் மெசபதோமியா போன்ற பழமையான நாகரீகஙகளோடு தொடர்பு கொண்டுள்ளது என்றும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றளித்துள்ளனர்.

இன்றைய பாகிஸ்தானிலிருந்து பலுகிஸ்தான் வரையும் சிந்துவெளி நாகரீகம் பரவியிருந்தது.

ஹறப்பா மற்றும் மொஹஞ்சதாரோ பகுதிகளையே சிந்து சமவெளி மக்கள் மையமிட்டிருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோ என்றால், செத்தவர்களின் மேடு என்ற பொருள்படுவதாகச் சொல்கிறார்கள்.

இந்நாகரிக வளர்ச்சியின் உச்சக்கட்டம் கிமு.2500 என்றே அறிஞர்கள் கொள்ளுகின்றர்.

கடல் கோளாலால் மூழ்கிய தமிழகத்தின் தென்னகப்பகுதியான லெமூரியா கண்டத்தில், கண்ணடெடுக்கப்பட்ட முத்திரைகளும் எழுத்துக்களும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் தடயங்களில் காணப்படுகிறது.

பிராமி என்று சொல்லப்படும் தாய்மொழித் தமிழின் மூத்த வரிவடிவம் சிந்து சமவெளிக் கல்வெட்டுகளிலும், லெமூரியா கண்டத்தின் கல்வெட்டுகளிலும், செதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழினம் எப்போது தோன்றிய இனம்?
தமிழ்மொழி ந்தக் காலத்தில் தோன்றியது?
தமிழர்களின் வாழ்க்கை எப்படி நடந்தது?
சிந்து சமவெளி மக்களுக்கும், தமிழர்களுக்கும்,
எப்படி தொடர்பு ஏற்பட்டது?
சிந்து சமவெளி மக்களே தமிழர்கள் தானா?

ஆங்கிலேயராலும், வேறு வெளிநாட்டு ஆராச்சியாளர்களாலும், இந்திய அறிஞர்களாலும் வெளிடப்பட்ட தொல்லியல் ஆய்வுகள
பல விதமான தகவல்களை தந்துள்ளன.
சிந்து சமவெளியில் திராவிடர்கள் வாழவில்லை, அவர்கள் வேறு இனம் என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்ல அது ஆரியம் சார்ந்த மொழி என்றும், சொல்லுவோர்கள் உண்டு.

1856ல் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையேயான புகையிதத் தண்டவாளப் பாதையினை அமைக்க கிழக்கு இந்திய ரயில்வே கம்பனி, சர் ஜோன் மற்றும் வில்லியம் என்ற இரண்டு பொறியியலாளர்களை அப்பகுதிக்கு அனுப்பினார்கள்;.  

ரயில் பாதையினை அமைக்க நிலத்தினைத் துப்பரவு செய்தபோது அங்கு நன்றாகச் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மிகப்பழைய கட்டிடங்கள் புதையுண்டிருப்பதனைக் கண்டார்கள். தொடந்து வடக்கு நோக்கித் தமது வேலைகளைச் செய்து கொண்டு போகும்போது ஹறப்பா என்னும் பிரதேசத்தில் புதையுண்டிருந்த செங்கற்களை அகழ்ந்தெடுத்தார்கள்.

1922ல் ஆங்கில நாட்டுத் தொல்லியலாளர் சேர் ஜோன் மாஷல் அவர்கள் சிந்துநதியின் கரையோரங்களில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாய்வழிக் கிடைத்த ஆதாரங்களையும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்ட தொல்லியல்
சின்னங்களின் அடிப்படையிலும் தொல்லியல் ஆராய்ச்சி செய்தபோது செழித்தோங்கிய ஒரு மனித நாகரீகம் நிலத்துள் 60அடி ஆழத்தின் கீழ் புதையுண்டு கிடந்ததனை முதலில் கண்டார்.

400 நகரஙகளும் கிராமங்களும் செழித்து வளர்ந்த ஒரு சீர்மையான
நாகரீகம் இருந்ததற்கான செய்திகள் ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டன.

ஆங்கிலேயர்களின் ஈடுபாட்டினையும் அவர்களோடு சேர்ந்து வடவிந்திய இந்துகளும் வடவிந்திய முஸலிம்களும் ஆய்வில் ஈடுபட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் பழைய கட்டிடங்களும்
எலும்புக் கூடுகளும், ஒழுங்காக அமைக்கப்பட்ட தெருக்களும்,
பெரிய நீச்சல் குளமும், மண்பாண்டங்களும், முத்திரை பதித்த நாணயங்களும், கல்வெட்டுகளும், ஓவியங்களும் அடங்கிய நினைவுச் சின்ங்களைக் கண்டார்கள்.

ஹறப்பாவிலும், மொஹஞ்சதாராவிலும் மட்டும் தான், உலக ஆராய்ச்சியிலே முதன் முதலில் சுட்ட செங்கல் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாதாளச் சாக்கடை அமைத்து முறையான நகர சுகாதார அமைப்பில் சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்தார்கள் என்றால், நாம் இப்போது வாழும் நவீனத்துவத்தை அவர்கள் அப்போதே வாழ்ந்து பார்த்திருக்கிறார்கள். 

ஆண் பெண் தனித்தனியாக குளிக்க வசதியாக குளங்களும் தானியக் களஞ்சியங்களும் ஹறப்பாவில் இருந்திருக்கிறது.
தென் ஆசியாவின் முதன் முதலான விவாசாயம் பற்றி அறிதல்
சிந்துவெளியிலிருந்தே கிடைக்கின்றது. பலுகிஸதானின் மேட்டு நிலங்களிலும் சிந்துவின் மேற்குக் கரைகளிலும் கிமு.6500களில் விவசாயம் புரிந்துள்ளார்கள். அங்கு கோதுமையும் பலவித மிருக வளர்ப்பும் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த விவசாயத்துக்கு சிந்து நதியே உயிர் நாடியாக இருந்திருக்கக் கூடு்ம்.

சுமேரிய மற்றும் மெசதோமிய மக்களின் முத்திரைகளோடு சிந்து சமவெளி மக்களின் முத்திரைகள் ஒத்திருப்பாதால் இவர்கள் செய்த பன்னாட்டு வணிகம் தெரிய வருகிறது. 

பன்னாட்டு வணிகத்திற்கு பெரிய அளவில் நீர்ப்பாசன
வசதிகள் உதவியாக இருந்திருக்கும் என்றேஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கோவில்கள் இருந்ததற்கான எதுவித ஆதாரங்களும் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஒரு மத குருவின் உருவம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசர்கள் பற்றிய தகவலோ, அடிமைகள் அல்லது வேறு ஏவல் செய்யும் வேலையாட்கள் பற்றிய எந்தத் தகவலோ எங்கும் கிடைக்கவில்லை.  

நகரில் வாழ்ந்தவர்கள் பலர் வர்த்தகர்களாகவும் கலைஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.


பண்டைய சிந்துசமவெளிச் சிற்பங்களும், விதவிதமான மட்பாண்ட உற்பத்திகளும், உலோக கைவினைப் பொருட்களம், தங்க, செப்பு நகைகளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்பினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட வட்டத்தாழிகள்
கண்டுபிடிக்கப்பட்டன. கழுத்தில் அணியும் மாலைகள் மணிகளும் முத்துக்களும் சேர்த்துச் செய்யப்பட்டிருந்தன.

யாழ் வடிவ முத்திரை காணப்படுவதால் இசையிலும் ஹறப்பா மக்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட ஓவியங்களின் வண்ணங்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது.

வீடுகள் கட்டும்போது அதனை அலங்கரிக்க பழிங்கு கற்களும்
விஷேட உருளைக் கற்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சில வீடுகள் பெரியதாக அமைந்திருப்பதைப் பார்க்கும் போது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் நிலை நமக்குப் புரிகிறது.

யோக அல்லது தியான நிலையில் உள்ள முத்திரைகள் காணப்படுவதால், சிந்து சமவெளி மக்கள் யோக கலை பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

ஏறத்தா 4000 முத்திரைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இம்முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்கள் தமிழின் முத்தைய எழுத்து வடிவமாக இருப்பதால், சிந்து சமவெளிமக்கள் பேசிய மொழி, தமிழ் மொழி தான் என்றும், அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்றும், உலகத்தில் தோன்றிய முதல் மனிதர்கள் தமிழர்கள் தான் என்றும் தமிழ் அறிஞர்கள் வாதாடுகிறார்கள்.

உலக மொழிகளின் வடிவங்கள், மூத்த தமிழ் எழுத்துக்களின் வடிவமான பிராமி எழுத்துக்களோடு சம்மந்தப்பட்டிருக்கிறன.

சிந்து சமவெளி முத்திரைகளில்...
பிரமி எழுத்துக்களின் வடிவங்கள் ஏராளம் இருக்கின்றன.

சிந்து சமவெளியின்
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் புதைத்தது
பஞ்சமா....
வெள்ளப் பெருக்கில் மூடி மறைந்த துன்பமா....
விரட்டியத்த அன்னியர்களின் பலவந்தமா...

நிச்சயக் குறிப்புகள் எதுமில்லை...
அவர்கள் விட்டுச் சென்ற தடங்களே
தொடர்ந்து குறிப்பெழுதுகின்றன.











பெண்களுக்கான ஆடைகள் நேற்று...இன்று... நாளை...




இலை தழைகளும், விலங்குகளின் தோல்களும் தொல்குடி மனிதர்களின் ஆடைகளாக இருந்திருக்கலாமென்றே யூகிக்கலாம்.

பகுத்தறியாமல் இருந்திருந்தால், மனிதர்களும் விலங்குகளைப் போல, ஆடைகள் இல்லாமல் அழகாக இருந்திருப்பார்கள்.        

குளிரும் வெப்பமும்
ஆடைகளுக்கான தேவையைத் தீர்மானி்த்தன.
மதங்களும் அதன் சடங்குகளும்
ஆடைகளுக்கான வடிவத்தைத் தீர்மானித்தன.

நாடோடிகளின் வேட்டைச் சமூகத்திலும்,
சேறு கலக்கிச் சோறு குடிக்கும்  விவசாயக் குடியிலும்
மேல் சட்டை அணியும் பழக்கமெல்லாம் இருந்ததில்லை.

ஆண்கள் உடுத்தும் எந்த ஆடையையும்
பெண்கள் உடுத்த முடியும்.
ஆண்களுக்குச் சமமாக பெண்கள் இருப்பதில்,
ஆடைகளே முதல் வரிசையில் நிற்கின்றன...

பெண்களின் ஆடையில், பட்டும், பருத்தியும்
குறிப்பிட வேண்டிய தொழில் நுட்பங்கள்...

பருத்தி நூலைத் திரித்து நெய்த பக்குவம்,
முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டிலிருந்து வந்தது.

சீன தேசத்திலிருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டது.


பாம்பின் தோல் போல பளபளப்பும்,
முங்கில் கணுக்களின் இடை போல, மென்மையும் கொண்ட ஆடைகளைப், பெண்கள் உடுத்தியதாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே  இலக்கியக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சேலைதான்
பெண்களுக்கான பாரம்பரிய ஆடை என்பது,
திறந்த வெளிச்செய்தியாகும்.

தொட்டில் கட்ட தலை துவட்ட தலைச் சுமைக்குச் சும்மாடு கட்ட மரத்து நிழலில் விரித்துப் படிக்க என்று தமிழச்சிகளிடம் சேலையின் பங்கு பலதரப்பட்டது.

திருவிழாக்களிலும், பண்டிகை நாட்களிலும், பட்டுப்புடவை அணிவது ஒரு மரபாக இருந்தது.

திருமணத்தில் மணமகளுக்கு பல லட்சங்களில் பட்டுப் புடவை எடுக்கிறார்கள்.

16 முழம் கொண்ட பெரிய கனமான சேலைகளை அணிவது பெண்கள் பேசும் புரணரியில் கௌரவமானது.

தாவணியும், பட்டுப்பாவாடைகளும், மஞ்சள் பச்சை சிவப்பு என்ற மூன்று நிறங்களை மையப்படுத்தியே நெய்யப்பட்டது.

கைதறியில் தரித்த கதர் நூல் ஆடைகளே, அனேக பெண்களின் ஆடைகளாக இருந்தன.

தொடக்கத்தில், வெள்ளை நிறத்தில் மட்டுமே பெண்கள் ரவிக்கைகள் அணிந்தார்கள்.

பூக்களே பெரும்பாலும் பெண்கள் உடுத்தும் ஆடைகளுக்கு டிசைன்களாக இன்றளவும் இருந்து வருகிறது.

தெருக்கூத்து, பரதம், நாடக சபாக்கள் போன்ற கலைகளில் இருந்து தான், பெண்களின் ஆடைகளுக்கான வடிவங்கள் மாறியது.

ஐரோப்பியரின் வருகையும், அன்னியப் படையெடுப்பும், உலக கலாச்சரத்தை வீதியெங்கும் விதைத்தது.

கலாச்சாரத்தின் அடிப்படைத் தேவையில், ஆடைகளின் புதிய வடிவங்கள் மேற்கத்திய மனிதர்களிடம் இறக்குமதி செய்யப்பட்டன. 


பெண்களுக்கான ஆடைகளில், வழிபாடுகள் வகுத்த அணுகு முறைகளின் அடையாளங்களைச் சொல்லியாக வேண்டும்.

இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும் முறையில் ஆடை என்பது, ஒரு மதத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறது.

கிறித்தவர்களின் திருமணத்தில் பெண்கள் வெண்ணிற ஆடைகளை அணிகிறார்கள்.

இந்து மதத்தின் முந்தைய வழக்கத்தில், விதவைகளின் குறியீடாக வெள்ளை நிற ஆடைகள் இருந்திருக்கின்றன.
   
19 நூற்றாண்டின் தோற்ற மயக்கத்தில், திரைப்படக் கொண்டாட்டத்தில், பெண்கள் சுடிதார் அணிந்து கொண்டார்கள்.

வெயிலில் தொலைந்த வாழ்க்கையை களையெடுப்புக் காடுகளில், குனிந்து தேடிக்கொண்டிருக்கும் பட்டிக்காட்டு கண்ணம்மாவுக்கும், பொண்ணம்மாவுக்கும் சுடிதாருக்கான தேவை என்றுமே ஏற்ப்படாது.

இன்று...

பழங்காலத்துச் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளே, இன்றைய நவீன ஆடைகளுக்கான முன்மாதிரிகள்....

ஜீன்ஸ் பேன்ட்களும் இறுக்கமான டீசர்ட்களும் பெண்கள் அணிவது இன்றைய காலத்தில் மிகச் சாதாரணமாகி விட்டது.

திரைப்படங்களின் களைத்துப்போட்ட டிசைன்களில் பெண்களுக்கு விதவிதமான ஆடைகள் ஏராளம் வந்து விட்டன.

நேற்று வெளிவந்த சினிமாவில், கீரோயின் உடுத்திய கவுனும்,
ஜீன்ஸ் பேன்டும் மாடலாக வைத்து ஜவுளித் தொழிலாளர்கள், சந்தையில் எப்படி விற்பனை செய்யலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

நைட்டி என்கிற ஆடை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர ஆடையாக இருக்கிறது.

நீச்சல் ஆடை, உடற்பயிற்சி ஆடை, கர்ப்பகாலங்களில் உடுத்தும் ஆடை, என்று பெண்களுக்கான ஆடைகள் சூழ்நிலைக்கேற்ப வந்து விட்டன.

பியூட்டி பார்லர், பேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கான களங்கள் இன்று பெருகி விட்டன.

பேஷன் ஷோ கொண்டாட்டங்களில், அலங்கோலமாக பெண்கள் ஆடை அணிந்து வருவதற்காக மேக்கப் டிசைனர்கள் வித்தியாசமான முறையில் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கிறார்கள்.

கண்ணாடிகள், ஜமிக்கிகள், மணிகள்,சிப்பிகள், பெரிய பட்டன்கள் என்று, பெண்களின் ஆடை மடிப்புகளில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

மாடலிங்க் என்ற பெயரில் வேடிக்கை காட்டுவதற்காக இன்றைய பெண்கள் அரை குறை ஆடைகளை உடுத்துவதில் பெருமைப்படுகிறார்கள்.

சாக்குகள், பிளாஸ்டிக் காகிதங்கள் என்று ஆடைகளில் புதிய முயற்சிகளைப் பேஷன் சோஷக்களில் பெண்கள் செய்து பார்க்கிறார்கள்.

ஆங்கில வாசகங்களும், பயங்கரமான படங்களும் கொண்ட டீசர்டுகளை அணிவதை இன்றைய பெண்கள் மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.

இன்னும் நைட்டி அணிய கூச்சப்படும் நடுத்தரவு வயது பெண்கள்  கிராமங்களில் இருக்கிறார்கள்.

இந்த நவீன உலகத்தில், குடும்பம் - வேலை காசு என்று, ஓடிக்கொண்டிருக்கும் அவசரத்தில், பலங்குடியினரில் குறிப்பிட்ட கூட்டம் மட்டும் ஆதி கால மனிதர்களின் சாயலில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். 
  
நாளை...

காலம் ஒரு சுழி என்று சொல்வார்கள்....
அது தொடங்கிய இடத்துக்கே மீண்டும் சென்று நிற்கும்.

நாளைய உலகில், இலைகளும் மரப்பட்டைகளும், விலங்குகளின் தோல்களும் பெண்களுக்கான ஆடைகளாகும்.

மீண்டம் பருத்தி பட்டு சிந்தட்டிக் காட்டன் என்று தொடங்கும்.





கல்வி நேற்று இன்று நாளை...




அடர்ந்த வெளிக்காடுகளில் வளர்ந்த மரத்தின் தால்வாரஙகளில்....
கதை கேட்கும் மரபில், வாய் மொழியாக தொடஙகியது நேற்றைய கல்வி முறை...

கலை - இலக்கியம் - தத்துவம் - கணிதம் - விஞ்ஞானம் அறிவியல் மருத்துவம் சட்டம் - ஆண்மீகம் அரசியல் - போர் தந்திரம் என்று கல்வியில் பகுக்கப்பட்ட - தொகுக்கப்பட்ட நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டன.

ஞானிகளும் யோகிகளும், பெரும் முனிவர்களும் ஆசிரியர்களாக இருந்ததார்கள் என்று, புரணக் கதைகளும், பயணக் குறிப்புகளும் சாட்சி சொல்கின்றன.

பல வருடங்கள் தியானித்து இயற்கையோடும், கலைகளோடும் வாழ்க்கையை மாணவர்கள் நன்குணர்ந்தார்கள்...

ஆரம்ப காலத்தில், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கல்வி கற்று கொடுக்கப்பட்டது.

ஆசானிடத்தில் அரசர்களும் தாழ்ந்து பணிந்து வணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

ஆசிரியருக்குத் தேவையான உதவிகள் செய்து, பொன்னும் பொருளும் கொடுத்துப், படித்து வந்தார்கள் என்பதை தமிழ் இலக்கியப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

ஓலைச் சுவடிகளிலும், மணலிலும் எழுதிப் பழகினார்கள். ஆயிரக் கணக்கான பாடல்களையும், சில நூறு கணிதச் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்தார்கள்.

வாள் சிலம்பம் வர்மம் மல்யுத்தம் போன்ற போர்க்கலைகள் கற்பது பாரம்பரியமாக இருந்தன.
கூத்து, பரதம் போன்ற நிகழ்த்துக் கலைகளும், ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிடக்கலைகளும் நம் முன்னோர்களின் கல்வியில் ஒரு பகுதியாகவே இருந்தன.

காலம் சூழல் என்று, எல்லாம் மாற்றிப் போட்ட அரசர்களின் படையெடுப்புகள், அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என வந்தபோதெல்லாம் கல்வி முறையிலும் திருப்பங்கள் உண்டானது.

1835 ஆம் ஆண்டுகளில்... மெக்காலே என்ற வெள்ளையர் கொண்டு வந்த கல்வித் திட்டம், கல்வியில் இது வரைக்கும் இல்லாத அணுகு முறையைக் கொண்டு வந்தது.

ஆங்கிலேய ஆட்சியில் சில பாதிரிமார்கள் செய்த சேவையில், மதம் - கல்வி -மருத்துவம் சுகாதாரம் என்ற, தன்னார்வத் தொண்டுகள் இந்திய தேசத்தைப் பக்குவப்படுத்துவதாகப் பார்வையிட்டது.

தலை நிமிர்ந்து பார்க்கும் உயரமான கட்டிடங்கள், கல்விக் கூடங்களாக அமைக்கப்பட்டன.

பல மாதங்களாக கப்பல்களில் கொண்டுவரப்ட்ட பிரமாண்டமான மரப்பலகைகள் கட்டக்கலையில் கல்விக்கூடங்களாக வடிவமைக்கப்பட்டன.

தேக்கு மர நாற்காலிகளில் எல்லோரும் சமமாக அமர்ந்து படிக்கும் நிலமையை அவர்கள் உருவாக்கினார்கள்.

ஆங்கிலேயர்கள் அமைத்த கல்விக் கூடங்களில், அன்றைய தினத்தில் மிகவும் சொர்ப்பமானவர்களே படித்தாலும், அதே இடத்தில் இன்று பல ஆயிரக்கணக்காண மாணவர்கள் இலவசமாக பட்டம் வாங்கிச் செல்கிறார்கள்.

சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்து தான், வித விதமாக மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

கல்வியின் தரத்தை இவ்வளவு வசதியாக கட்டி மதிப்பீடு செய்திருக்கிறார்கள், நம்மை ஆட்சி செய்த வெள்ளை மனிதர்கள்.

இன்று...

உலகத்தை உள்ளங்கையில் புரட்டிப் பார்க்கும் கல்வித் திட்டங்களை இன்று உருவாக்கியிருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த மூலையிலும் சென்று படிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளம் இருக்கின்றன.

பாடத்திட்டங்களும், தேர்வு முடிவுகளும் இன்று இணையத்தில் வாசிக்கப்படுகின்றன.

இந்த மின்னணு உலகத்தோடு இயங்கக் கற்றுக் கொண்டால் போதும். இன்றைய கல்விக்கு ஏற்ற வகையில் பயணிக்க முடியும்.

ஆனால், கரட்டுக் காடுகளில்...
புழுதி பறக்கும் கிராமங்களில்...

மூக்கை உறிஞ்சி கொண்டே செல்லும் பாவாடை கிழிந்த சிறுமிகளும், அழுக்குச் சிறுவர்களும், லட்சக் கணக்கில் செலவாகும் இன்றைய கல்வியில் சேர்ந்து எப்படி ஓடப் போகிறார்கள் ?

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முதல் இடம் பெறும் பள்ளிகள், பெரும்பாலும் தனியார் பள்ளிகளாகவே இருக்கிறன.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் முதல் இடம் பெறாததற்குக் காரணம் என்னவாக இருக்கும் ?

படிக்கும் மாணவர்கள் மேல் குறையா? பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மீது குறையா? இல்லை அரசு பள்ளியே குறைதானா?

பள்ளியில் படித்து முடிக்க முடியாத பாடங்களை டியூசனில் வந்து படித்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், பாடத் திட்டத்தில் குறையா ? நடத்தும் முறையில் குறையா ?

பல ஆசிரியர்கள் வாங்கும் டூயூசன் பீஸ், அவர்கள் வாங்கும் அரசாங்க சம்மபளத்தை விட அதிகமாக இருக்கிறது.

பள்ளி முடிந்தவுடன், சில ஆசிரியர்கள் படிப்பு அல்லாமல் வேறு விதமான பகுதி நேர வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி பாடம் கற்று கொள்வார்கள் ?

அதிக புள்ளிகளையும், விருதுகளையும் எடுத்த பள்ளிகளை ஊக்கப்படுத்தும் அரசு, அடிப்படை வசதியில் பின்தங்கிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் கவனிக்க மறுத்து விடுகிறது.

படித்து பட்டம் வாங்கிய முதல் தலைமுறையினர் பெரும்பாலும் கல்லூரி முடித்து வீதிக்கு வந்ததவுடன் தான் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள்.

இன்றைய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் வேலை வாய்ப்புகள் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும்,

போட்டித் தேர்வுகள் என்று தனியாக படிப்பதற்காக, ஐந்தாறு வருடங்கள் ஒதுக்கி மீண்டும் படிக்கத் தொடங்குகிறார்கள்.

கல்லூரியில் படித்த வரலாறோ, இலக்கியமோ, பொருளாதாரமோ முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி யெடுக்கிறார்கள்.

பத்திரிக்கை சினிமா உணவு மற்றும் கைத் தொழில்களான மீன் வளர்ப்பு கோழி வளர்ப்பு பட்டுப்பூச்சி வளர்ப்பு தேனி வளர்ப்பு காளான் வளர்ப்பு போன்ற படிப்புகள் இன்றைய கல்வியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

தொலை தூரக் கல்வியில் பல விதமான படிநிலைகள், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று துறைகளைப் பற்றி படிக்க வழி வகுத்துள்ளன.

படிப்பதற்குத் தேவையான தகவல்கள் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. 

கலையிலும், தொழில் நுட்பத்திலும் சிகரத்தில் ஏறி பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறைச் செயல் பாடுகளில்...

மனிதர்களைப் போலவே யந்திரங்கள் இன்று பாடம் நடத்துகின்றன.

கல்வியில் நாளை நிலை எப்படி இருக்கும்.....?

நாளை...

கல்வியில் நாளை...
கரும்பலகைகள் தேவையற்றதாக இருக்கும் ....
சாக்பீஸ் தயாரிப்பு நின்று விடும்...
புத்தகச் சுமை குறையும் ...
எழுதுகோல் தேவைப்படாது....
அயல் நாடுகளைப் போல கணிணி மையம் ஆகும்...
மணலில் எழுதி பழகிய கல்வி போல
கணிணியில் எழுதுவார்கள்...
கதிர்வீச்சில் பாடம் கவனிப்பார்கள்.
கல்வியில் வி்ஞ்ஞானம் நாளை விளையாட்டுப் பொருளாகும்...
பக்கத்துக் கோள்களுக்குப் பயணமாகும்....



  
 




  

      


பனை மரங்களும், சில அடையாளங்களும்...






பனை மரம் என்பது, ஒரு அடையாளம். கிராமங்களின் கம்பீரம்.
தாவரத்தின் சாம்ராஜ்யம். தமிழகத்தின் மாநிலத் தாவரம் பனைமரம்.

சோழருக்கு அந்திப்பூ, பாண்டியருக்கு வேப்பம்பூ
சேரர்களுக்கு பனம்பூ தான் அடையாளம்.

பனைமரங்கள் பருவ முதிர்ச்சியடைய  15 ஆண்டுகள் வேண்டும்.

ஆண்பனை, பெண்பனை, கூந்தற்பனை, தாளிப்பனை என்று, 34 வகையான பனைமரங்கள் தமிழ் மண்ணின் தாவரப் பாரம்பரியம்.

தாளிப்பனை என்ற பனைமர ஓலையிலிருந்து தான் ஓலைச்சுவடிகள் தயார் செய்திருக்கிறார்கள்.

வேர் முதல் நுனி வரை பனைமரத்தைப் பயன்படுத்தலாம்.

சித்தர்கள் தங்கள் மருத்தக் குறிப்பில், பனைமரங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

சிறு நீரக நோய்களை நீக்கவும், உடம்பின் உள்ளிருக்கும் புண்களைப் போக்கவும், பனை நுங்கு - நல்ல மருந்தென்று சொல்லப்படுகிறது.

வெப்பத்தால், எலும்புகள் சூடாகும் உஷ்ணத்தில் ஏற்படும் வேர்க்குறு தழும்புகளும், அம்மைக் கொப்பளங்களும் குளிர்ந்த பனைநுங்கு நீரில் கரைந்து விடுகின்றன.

பனைமட்டைச் சாறு பிழிந்து, கண்களில் ஏற்படும் பாதிப்புகளை நம் தமிழச்சிகள் குணப்படுத்தியிருக்கிறார்கள்.
 
சோர்வை நீக்குவதற்காகவும் உடல் வலி மற்றும் அலுப்பைப் போக்குவதற்கும் பனைமர பானங்கள் பயன்படுகின்றன.

ஒரு பனைமரத்தைக் காட்டி, வழி சொல்லும் கிராமத்துக் கிழவிகளின் வார்த்தைகள், இந்தக் காற்றில் கலந்திருக்கிறன.

பனைமரத்தின் உச்சியில், சடை சடையாக கூடு கட்டும் நூற்றுக்கணக்கான தூங்கனாங்குருவிகளின் சத்தம் தொலைந்து போனதைச் சொல்லியாக வேண்டும்.

மைனாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க, யாரும் சொல்லாமல் பனைமரங்களைக் கொத்திக் கொண்டிருக்கும் மரங்கொத்திகள்.

பனைமரப் பொந்துகளில் கத்திக் கொண்டிருக்கும், பச்சைக் கிளிகளின் முத்தக் காட்சிகளை யாராலும் சென்சார் செய்ய முடியாது.

மழை காலங்களில், காலை நேரப் பனித்துளிகளின் ஈரம் காய்ந்து விடுவதற்குள், கிராமத்துச் சிறுவர்கள் - இன்னும் ஏதாவது ஒரு கிராமத்தில், பனம்பழம் பொருக்கிக் கொண்டு இருப்பாரகள்.

பனை மரத்தின் உச்சியில் ஏறி குருவி பிடிக்க கை நீட்டியவுடன், அங்கு - சுற்றி படுத்திருக்கும் பாம்பைப் பார்த்து விழந்த சிறுவர்கள் கிராமப்புரங்களில் நிச்சயம் இருப்பார்கள்.

நுங்கு மட்டையில் வண்டி செய்து, காரன் அடித்துக் கொண்டே, காலையில் இருந்து வீட்டுக்கு வராமல் ஊர் சுத்தும் சிறுவர்களின் விளையாட்டில் பனைமரங்களுக்கான பங்கும் இருக்கிறது.

ஆற்றங்கரை ஓரங்களில், தான்போக்கில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, பனைமர நிழலில் பேசிய கதைகளுக்கு இன்று வயதாயிருக்கக் கூடும்.

பனங்கருக்குகள் அடர்ந்து புதர் போல மண்டிக்கிடக்கும் குட்டிப் பனங்கன்றுகளைச் சடா முனிகள் என்று சொல்லி வைத்து, மிரட்டிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கும்.

பனை மரங்கள் வெட்டப்படும் போது, தனிமையின் பெரும் பரப்பின் அமைதியில் கல்லெறியப்படுகிறது.

தெருக்கடை வீதியிலோ, வீட்டு வாசலிலோ ஒரு பனை மரத்தை நட்டு வளர்ந்து விட முடியாது. ஏன், தோட்டத்தில் கூட பனை மரம் நட்டு வைத்து வளர்த்த அனுபவம் எதுவும் இல்லை.

சில பழமையான கல்லூரிகளில், பனைமரங்களைப் பார்க்க முடிகிறது. இதனால் அந்த கல்லூரிகளுக்கான வயதைக் கணிக்க முடியும்.

பருவகாலங்களில், மரம் ஏறும் பனையேறிகள், பனைமரத்தில் வடியும் நீரில், பதநீரும், கள்ளும் இறக்குகிறார்கள். பனங்கற்கண்டும் - கருப்பட்டியும் தயார் செய்கிறார்கள்.

பனை ஓலை வேய்ந்த குடிசைகளில், பனங்காடுகளுக்கு மிக அருகிலே குடித்தனம் நடத்துகிறார்கள் இந்தப் பனையேறிகள்.

பனையேறிகளுக்கு, சோறு போட்டது பனை மரம் தான். குடியிருக்க வீடு கட்டியது பனை ஓலையில் தான். அடுப்பு எரிவது பன மட்டையில் தான். கொதிக்கும் உலையைக் கிண்டுவது பனங்கையில் தான்.

பனை மரத்தையும் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது.

ஆனால், பருவ காலங்களைத் தவிர மற்ற நாட்களில் சோற்றுக்கு என்ன செய்வது ?

வறண்ட பூமியும், பனை மரங்களும், வாழ்விழந்து, அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தின் குறியீடாக இருக்கின்றன.

பனங்காடுகளுகளையும் பனயேறிகளையும் கடந்து போகும் மேகங்கள் கண்மூடிக் கொள்கின்றன.

இந்த மின்னணு உலகத்தில் பனையேறிகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தப் பனையேறிகள் மாவட்ட அலுவலகத்தில் அரசாங்கப் பதவியா கேட்கிறார்கள் ?

அழிந்த வாழ்வாதாரங்களுக்கு ஆதரவுதானே கேட்கிறார்கள்!

வம்சா வழியை குலத்தொழிலை தமிழின் பண்பாட்டு மரபைத் தானே கேட்கிறார்கள்...

அரசுக்கு இதில் என்ன சங்கடம் இருக்கிறது...

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதியமானும் ஔவையாரும் கள் குடித்து மகிழ்ந்த காட்சிகளைச் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம்.

கள் என்பது பனை மரத்தின் தாய்ப்பால்.

செயர்க்கையான உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ
ஆராய்ச்சியாளர்களால், பயன்படுத்தும் அவசியம் பனை மரங்களுக்கு ஏற்படவில்லை.

அதனால்தான், பனைமரங்களில் கிடைக்கும் பனம்பழம் - நுங்கு பதநீர் கள் பனங்கற்கண்டும் கருப்பட்டி –– பனங்கிழங்கு பனங்குறுத்து பேன்ற உணவுப்பொருள்கள், மனிதனுக்கு எந்த பக்கவிளைவையும் இது வரைக்கும் ஏற்படுத்தவில்லை.    

பெரும்பாலும் பனையேறிகளுக்கு, சொந்தமாகப் பனைமரங்கள் இருப்பதில்லை. பெரும் நிலப்பரப்புகள் வைத்திருக்கும் முதலாளிகளிடம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மரம் ஏறுகிறார்கள்.  

பயன்பாடற்ற நீண்டவெளிக் காடுகளில், வரப்போரங்களில், தானாக வளர்ந்து நிற்கும் பனைமரங்களை மொத்த வருமானத்துக்காக, மர வெட்டுக்காரர்களிடம் முதலாளிகள் விலை பேசி விடுகிறார்கள்.

பல வருடங்களாக வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், ஒரு சில மணி நேரத்தில், துண்டு துண்டாக நறுக்கப்படுகிறன.

செங்கல் சூளைகளின் அடுப்பில், கனத்து எரிந்து சாம்பலாகின்றன.

ஒரு பழமையான தாவர இனம் இப்படி அழிக்கப்படுகிறது.

பனை மரங்களை வேட்ட அரசு தடை விதித்தால் மட்டும் தான், பனை மரங்களை நாம் பாதுகாக்க முடியும்.

பனைமரங்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டு வராவிட்டால், இனிவரும் நூற்றாண்டிகளில், பனைமரங்களை மீயூசியங்களில் தான் பார்க்க முடியும்.
 
மேல்தட்டுத் தொழில்களால், பனைமரங்கள் புழக்கத்தில் இல்லாமல் பேய்விடுகிறன. ஒரு தாய் மொழியின் அழிவைப் போல...

சந்தனமரங்களை வெட்டுவதை விட கொடுமையானது பனை மரங்களை வெட்டுவது.

வீட்டு ஒரு மரம் வளர்க்கலாம் என்று எல்லோரும் கிளம்பினாலும், அவ்வளவு விரைவாக பனைமரகளை வளர்த்துவிட முடியாது.

ஆனால், சில நொடிகளில்... பனைமரங்களை அழித்து விடுகிறார்கள்.

பனைமரங்கள் வெட்டப்பட்ட பிறகு, அந்த இடத்தின் மண்ணியல் நிலை மற்றும் மதிப்பீடுகள் எல்லாம் மாறி விடுகிறன.

பனங்காடுகள் இருந்த இடத்தில், வீட்டு மனைகள் குடியேற்றம் போக்குவரத்து நெரிசல் தெருக்கடைகள் என்று, பாதாளச் சாக்கடைகள் வரை எல்லாம் மாறிவிடுகிறன.

நகரமயமாதலின் தொடகத்தில், பனைமரங்கள் காணமல் போய்விடுகின்றன.

தமிழகம் மகான்கள் வாழ்ந்த பூமி என்பார்கள்....  

தலை வெட்டினால் உயிர்வாழாத ஜீவன்கள் பனைமரங்கள். அதாவது, சிரஞ்சீவிகள். கற்பக விருட்சங்கள் இந்தப் பனைமரங்கள்.

நம் தலைமுறைக்குப் பனைமரங்களின் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இயற்கையின் அற்புதத்தைப் புரிய வைக்க வேண்டும்.
 
எஞ்சியிருக்கும் பனைமரங்கள் எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம்.  திடீர் திடீரென்று அடுக்கு மாடிகளும் தெருக்கடைச் சந்துகளும் உடனே வரலாம்.


Friday, 20 July 2012

எனவே சீமான் வடிவே!


வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்.
வாழ்வைத் தமிழுக்காக எழுதிக்கொடுத்த பச்சைத் தமிழன்.
தமிழனுக்குத் தோள் கொடுக்க மட்டும் குனியும் சுத்த தமிழன்.

சாதியா அதனால் என்ன?
மதமா இருந்தால் என்ன?

நீ தமிழன் நீதான் தமிழன்
அஃதே அஃதே ஓரினம்
அதுதான் அதுதான் ஒரே இனம்

நீ தமிழன் நீ தமிழன் என்று பிற மாநிலத்தால் நீர் இல்லாமலும்,
கடலில் மீன் இல்லாமலும் அவதியுறும், அனாதைகளாக அகதிகளாக அழிக்கப்பட்ட தமிழர்களை,
நான் தமிழன் நான் தமிழன் என்று, கர்வம் ஏற்றி நாம் தமிழராய் ஒன்றிணைத்த வைர நெஞ்சு. சறுகுகளைப் பட் பட் பட் பட்டென்றெரிபட வைத்த அக்னிக்குஞ்சு.

ஆதித்தனார் சொன்ன நாம் தமிழர் கொள்கையை உலகறியச் செய்த செல்லவச் சீமான் ஒரு கொள்கைச் சீமான்.

உலகில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் வரும் பிரட்சனைக்கு எழும் முதல் குரல் இவர் குரல். எழுதும் முதல் மடல் இவர் விரல்.

ஈரமில்லாத நெஞ்சில் தமிழ் ஈழம் எப்படி நனையும்?
இருப்பாய் தமிழா நெருப்பாய் எனவே சீமான் வடிவே.

கற்புக்கரசி கண்ணகியா? மாதவியா? என்றால் கற்பிழந்தவன் கோவலன் மட்டும் தான் என்பது போல,
திராவிடனா? தமிழனா? -  எரிந்தது ஒரு ஜனக்கூட்டம் என்று பார்த்தால் என்ன?

பேச்சும் கூச்சலும் இருந்தென்ன லாபம்?      
எது நடந்தாலும் அது அதிகாரத்தின் வழி நடக்கும்.
வரும் ஒரு நாள் ஜனநாயக பாரதம்!
கூடாது இனியொரு தாமதம்!

சதுப்பு நிலக் காடுகள்


அலையாத்திக் காடுகள், கடலோரத்தில் அடர்ந்து வளரும் வனாந்திரப் பசுமைகளின் சுயராஜ்யம்.

கடல் கொந்தளிப்பத் தடுக்கும் அவசியம்.

சதுப்பு நிலக்காடுகள் என்றழைக்கப்படும் அழையாத்திக் காடுகளில், ஆண்டு முழுக்க தேங்கும் நீரில் வலை போல வேர்கள் பின்னிக்கொண்டு,  எல்லா பருவ மாற்றத்தையும் தாங்கும் சுர புன்னை மரங்கள் வளர்கின்றன.

நீர் வாழ் பறவைகளும் பருவகாலங்களில் வெளிநாட்டுப் பறவைகளும் கீச்சிடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் இந்தப் புதர்க் காடுகளில்.

பல வகையான மீன்களும், மித வெப்ப ஈரப்பதத்தில் வாழக்கூடிய விலங்களும் படர்ந்த தாவரச் சுருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறன.

படகுகளிலும், மரப் படுக்கைகளிலும் அமைக்கப்பட்ட கடலோடிகளின் தற்காலிகக் குடித்தனங்கள் இந்த சதுப்பு நிலக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

இங்கு களிமண்ணிலும், வண்டல் மண்ணிலும் தேங்கும் கடல் நீர், எந்த நேரத்திலும் வற்றுவதில்லை.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களின் இலை, கூளம், கனிகள்  போன்றவை நீர் மற்றும் நிலத்தில் விழுந்து, நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் சிதைவுற்று மீன்நத்தை, நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக மாறுகின்றன.

இங்கு வளரும் கண்டல் மரங்கள், இலை நுனி காம்புகள் முதல் வேர்வரை மருத்துவத்துக்காக பயன்படுகிறன.

ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா தளங்களின் நந்தவனமாக இருக்கும் இந்தச் கடலோரக் காடுகளுக்குப் பறவைகளைப் போல பயணிகள் வந்து போகிறார்கள்.

கடற்கரையோரப் பகுதிகளில் உப்பளங்களை விரிவுபடுத்தவும், நகர விரிவாகத்திற்காகவும் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நகரமயமாக்கலின் நெருக்கடியில், புலம் மனிதர்களால், சதுப்புநிலக் காடுகள் செதுக்கப்படுகிறன. அழிக்கப்படுகின்றன.

உப்பளத் தொழில் தற்போது சதுப்புநிலக் காடுகளுக்கு சவால் விடும் வகையில் மாறி வருகிறது. உப்பளங்கள் துவங்க, பல இடங்களில் சதுப்பு நிலக்காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

உப்பளங்களின் கழிவுகள் பல இடங்களில் சதுப்பு நிலக்காடுகளில் விடப்படுகின்றன. இதனால் எண்ணற்ற தாவரங்கள் கருகி வருகின்றன.

கடலோரப் பகுதிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய சதுப்பு நிலக்காடுகள் தற்போது, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து வருவதற்கு உப்பளங்கள் காரணமாக உள்ளன.

வேலைவாய்ப்பு, வர்த்தகம் - போன்றவற்றுக்கு  உப்பளங்கள் தேவை தான் என்பதால், உப்பளங்களை தடை செய்யாமல் ஒழுங்கு செய்ய வேண்டும்.

சுனாமியின் நினைவை மறக்கமுடியாமல் இருந்தாலும், இருக்க இடமில்லாமல் சென்னை போன்ற பெரும் நகரங்களில், கடலோரப் பகுதியிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியில், சுந்தர வனக்காடுகளான இந்த அலையாத்திக் காடுகளை உருவாக்குவது என்பது நடைமுறையில் சிக்கல் தான்.

ஆனால், இனிவரும் நூற்றாண்டுகளில்... 
உலகப்பேரழிவான சுனாமி மீண்டும் வருவது நிச்சயம். 

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் பக்கத்துக் கோள்களுக்கே பட்டம் விட்டாலும் இயற்கையின் விளையாட்டை தாமறிக்க இயற்கைதான் வர வேண்டும். 

சுனாமியை தடுக்க சுந்தரவனக்காடுகள் தான்தோன்றியாக வளர்தால் மட்டுமே தகும்.






Thursday, 12 July 2012

செம்மறிகள்


                       செம்மறிகள்

ஒரு தன்னியல்பின் சுரங்கத் தடங்களில்
மறைகிறான் குற்றங்களின் எலும்புகளைச் சுமந்து கொண்டு
உதடுகளின் பனி வெடிப்புகளில் உதிறும் புன்னகையில்.

வன்மத்தின் சுவாச மயக்கத்தில் மிருகங்கள் உறுமுகின்றன
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்.

வெள்ளந்திகள் என அனுதாபங்கள் சொன்ன தடயத்தில்
நடத்தலாம் இந்த முத்தமிட்டு நக்கும் நாடகத்தை.

இதுவரைக்கும் தேடியும் இன்னும் கிடைக்கவில்லை
சொரிக்கல்லில் ஒளிந்த மனதுக்கான திறவுகோல்.

உள்ளொடுங்கும் ஏவாளின் வார்த்தைகளுக்காக பொய்கள்
ஒன்று கூடித் துப்புகின்றன சில நூறு பக்கங்களை.

அவ்வளவு எளிதில் நடந்திராது ஒரு பாராட்டும் பூச்சென்டும்.

அறுந்து தொங்கும் பகட்டில் சில சொல் உதிர்கின்றன  வாழ்த்துக்கள்.

நெருடிய பிரதேசத்தில் வெள்ளை தேவதைகளின் வீட்டில் பட்டாம் பூச்சிகள் தேன் குடிக்கும் போதெல்லாம் கனவுக்கு இன்னும் ஒரு வயதாகிறது.

மௌனனிகள் சொல்வடியும் எதையும் கொண்டு ஓட முடியாத சப்பானிகள்.

கட்டுக்கட்டாக பொன்னாங்கன்னிகள் அறுத்துச் சுமந்து வர அறிவுரை சொல்லும் பிரியாணிக்கடை செம்மறிகள்.

மயிலிறகின் சுமை பொறுக்காமலா அச்சு முறிந்தது? இங்கே வெறுமையின் கனத்திலும்.

எங்கிருந்தோ இன்னும் விளங்காமல் ரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றன நினைவுகளின் பள்ளத்தாக்குகள் வழி வந்த இவைகள்.

Tuesday, 10 July 2012

பாப்பாத்திகளின் தூங்கும் பகல்.


பாப்பாத்திகளின் தூங்கும் பகல்.


அவள் பச்சை நிறமணிந்து  காற்றில் ஏதேதோ எழுதி வந்தாள்.
ஒரு வெயில் அறிக்கையில், இப்படிக் குறிப்பிட்டிருந்தது.

நீயும் ஒரு நாள் சாகாராவுக்குள் வருவாய், கதை மண்டலச் சுருளில் ஒவ்வொரு கன்னியிலும் உனது பெயரும் உடனே எழுதப் பெறும்.

மௌனத்தின் அதிர்வுகளில், உன் பால் வெளி அண்டத்தின் கடைசி ஜாமம் கிழியும் சத்தம் கேட்டு நீ எழுவாய்.

அவனும் பரிதாபத்தின் குறியீடுகளைப் பிழைத்திருத்தம் செய்து, நேற்றிரவு முளைத்த காளாகளுக்கடியில் போட்டு வருவான். ஒரு சலனத்தில் கடல் பொங்கும்.

நரம்புகள் தாளத்துக்கு தடுமாறிய தாண்டவத்தில் உச்சிப் பொழுது பனி உதிர்க்கும்.

காத்திருத்தல் என்பது ஒரு ஆக்காட்டிக் குருவிக்கு நிகழ்ந்திருக்கலாம்.

தபோவனத்தின் தண்ணீர்ச்சாலையில் நெய்த கவிதைகளை பருத்திச் சுளையின் உடலின் வழி வாசித்து விட்டு வந்தார்கள்.

தேவாங்குகளின் கதறல் கேட்டு மொழி பெயர்ப்புகளின் போக்கத்த வார்த்தைகள் புழகத்தில் வரத் தொடங்கியன.

பச்சை இரவுகளில் வடிந்த ஈரப்பசையை ஒடித்துத் தின்ற துத்த நாகங்கள் சாத ஊழையிடுகின்றன யோனியின் மடிப்புகளில்.

அதோடு, கார்ட்டூன் வார்த்தைகளில் கதைத்த நிமிடங்கள் காட்சியின் குறுந்தொன்மங்களாகக் கனக்கின்றன.

ஒரு பனிக் காலத்தின் திமிரில் வளர்ந்த வரிக்குதிரைகள் வெறுத்துக் கத்தும் குழி பறிக்கும் கனவுகளில்.

சுகந்தத்தின் அடைமழை பொறுக்காமல் தவிப்புகள் புதருக்குள் மண்டிக் கிடக்கும். விதிகள் திருத்தும் ஒரு அச்சகத்தில் அச்சப் பிழைகள்.

ரத்தம் குடிக்கும் நீலிகளுக்கு வயிறு நிரம்பும். சந்திப்புகள் பெரிதென பட்டுப் பூச்சியின் நுனி விரலில் தீண்டும் வெளி.

உச்சுக் கொட்டும் மழை நனையும் கனவிலிருந்து ஆவாரஞ் செடி இலை மறைத்த சிவப்புப் பாப்பாத்திகளுக்காக தூங்கும் பகல்.    

Sunday, 8 July 2012

காதல் என்றால் என்ன ?


                                                             உயிர்களுக்குப் பொதுவானது காதல்

மனிதனைத் தவிர எந்த உயிரும்
காதலைப் பகுத்தறிவதில்லை

பக்குவம் தேடும் மனிதர்கள் மட்டும்
காதலை சென்சார் செய்து கொள்கிறார்கள்.

ஒரு சமூகம் மாறியதால் காதலின் வடிவங்கள் மாறலாம். ஆனால், வழிகள் மாறாது.

ஜாதி மதம் பொருளாதாரம் கௌரவம் எல்லாம் கடந்து பல யுகங்களாகக் காதல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

காதலை மூடி மறைக்கலாம்; வெறுக்கலாம்; வன்மையாகக் கண்டிக்கலாம். ஆனால், காதல் இல்லாத ஒரு சமூதாயத்தை யாராலும் உருவாக்கிவிட முடியாது.

உலகத்தின் முதல் மனிதனின் தொடக்கத்திலிருந்து - ஒரு மனிதனின் உணர்வுகளின் அடிப்படைதான் காதல்.

மொழி பேசத் தெரியாத கல்மனிதர்களின் காலம் தொடர்ந்து,
இலக்கியம், தத்துவம், ஊடகம், இணையம் என்று காதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்க இலக்கியங்களில் 2381 பாடல்களின் வழி, காதலையும், வீரத்தையும் பாடியிருக்கிறார்கள். அதில் 1862 பாடல்கள் காதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பாடப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், நமக்குக் கிடைக்காமல் போன பாடல்கள் எத்தனை ஆயிரம் என்று யாருக்குத் தெரியும்...

எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே உலக மொழிகள் இலக்கணம் சொல்லியிருக்கின்றன.

ஆனால், தமிழ் மொழியில் மட்டும் மனித வாழ்வியலில் காதலுக்காக தனி இலக்கணம் வகுத்தவன் சங்கத் தமிழன்.

பொரிநுதல் வியர்த்தல்
புதுமுகம் புரிதல்
நகுநயம் மறைத்தல்

-என்று தொல்காப்பியன் துளித் துளியாக விவரிக்கிறான் இந்தக் காதல் கடலின் ஆழத்தையும் அதன் ஈரத்தையும்.

மானசீகக் காதல், தெய்வீகக் காதல், லட்சியக் காதல், நாயக நாயகி பாவம் என்று நம் முன்னோர்கள் காதலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

லைலா மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ ஜூலியட், ஷாஜகான் மும்தாஜ், காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற காதல் நட்சத்திரங்களை, காதல் செய்யாதவர்களும் மறந்து விடமாட்டர்கள்.

பார்வையிலே காதல், பார்க்காமலே காதல், நாக்கை அறுத்துக் கொண்டு காதல் என்று 1980 -90 களின் தொடக்கத்தில், திரைப்படங்கள் காதலுக்கான வடிகாலாக இயங்கி வந்தன.

காதலை, இயற்கை வர்ணனையில் குழைத்து, கிராமிய மெட்டுகளில் வாசித்தது, இளைய ராஜாவின் ஹார்மோனியத் தாளங்கள்...


90 களுக்குப் பிறகு, ஏ,ஆர் ரகுமானின் இசைப்புரட்சியில், புதிய இசைக்கருவிகளின் விதவிதமான ஒலிகளில் காதலுக்கான சங்கதிகள் வாசிக்கப்பட்டன.

இந்த சமகால திரைஉலகில் பெரும்பாலும், காதலை திறந்த வெளியில் களைத்துப்போட்டு விட்டு ஒரு துள்ளல் இசையில் அதைச் சொல்வதோடு, காதலில் நல்ல பதிவுகளையும் இயக்குநர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இன்று, தேர்ந்தெடுத்துக் காதல் செய்யும் அளவுக்கு இன்று பல வகை மனிதர்களின்  - விதவிதமான எண்ணங்கள்.

கொஞ்சம் சிரித்தால் போதும், இருக்கிறது கையில் மொபையில் போன்.

பேசுகிறார்கள், பேசுகிறார்கள் மாதக்கணக்கில். உலகத்திலே செல்போன் பேசுகிறவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது இந்தியாதான் என்கிறார்கள்.

ரமேஷை விட சுரேஷ் பெட்டராக இருந்தால் பெரும்பாலானவர்கள் கைகுலுக்கிப் பிரிந்து விடுகிறார்கள்.

திரிஷா போனால் என்ன திவ்யா இருக்கிறாள் என்ற கலாச்சாரத்தில், இன்று காதலும் இலவச இணைப்பாக இருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகாவது காதலிக்க முடிகிறதா...
பிரியமானவர்களை நேசிக்க நேரம் இருக்கிறதா...

பிடித்தமான சமையல் - ஆசைப்பட்டுக் கேட்ட புடவை நேரம் கிடைக்கும் போது செல்கிற சுற்றுலா பயணம் - பிறந்த நாள் பரிசு - இப்படி தீர்ந்து விடாத சந்தோஷசங்கள் காதலில் ஏராளம் இருக்கிறன.

காதலின் வகுப்பில் மாணவன்தான் பண்டிதன் - என்றும்

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது. - என்று காதலைப் பக்குவமாக பதிவு செய்திருக்கிறார்கள்.


காதலில் சில விஷயங்கள் அர்த்தமில்லாமல் இருக்கிறன.
அர்த்தமில்லாத அனைத்தும் ஆழமாக இருக்கிறன.
அது ஆழமாக இருப்பதால்தான் அதற்கு அர்த்தம் புரிவதில்லை.

ஏதோ ஒர் ஈர்ப்பில், பருவ காலங்களில் ஆணும் பெண்ணும் பழகும் நிலையை affection என்றும் infatuation என்றும் ஆங்கில வார்த்தைகளில் அனுபவப்பட்டவர்களாக சொல்லிவிடுகிறார்கள்.

காதல் என்பது, திட்டமிட்டு நிகழ்வதில்லை. ஒரு சமூகத்தின் பின்னணிகள் இசைக்கும் போது மனிதர்களின் இதயங்கள் சிந்தி விடுகின்றன.

குறித்த இடத்தில் - சரியான நேரத்தில், காத்திருக்கும் போது கொந்தளித்து கிளம்பும் பரிதவிப்பின் சுமையை, காதலர்கள் மட்டுமே உணர்வார்கள்.

காத்துக் கிடந்து வராவிட்டால், நேசிப்புக்குரியவர்களை, மனகுக்குள் கண்டிக்கிறார்கள்.

அருகில் வந்தவுடன், நெஞ்சுக்குள் மழை பெய்கிறது.
கோபம் பொய்யாகிறது.

இதில் என்ன நடந்தாலும், கடைசி வரைக்கும் காத்திருக்கும் வலிமை இன்று எத்தனை காதலுக்கு இருக்கிறது. 

திரையிசைப் பாடல்கள் கேட்டு வளரும் மயக்கத்தில் பிஞ்சுப் பருவத்திலே நழுவி விடுகிறார்கள்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு கதையில் கதாநாயகனுக்குக் காதலிப்பது மட்டுமே வேலையாக இருப்பதால், அதைப்பார்த்த கிரக்கத்தில்,

காதல் செய்யும் வாலிபர்களுக்கு சொந்தக்காலில் நிற்க முடியாத பரிதாபமே யதார்த்தமாக இருக்கிறது.

திருமணம் என்று வரும் போதுதான் காதலர்களுக்கு இடையில்  ஒரு உலகப்போரே வந்து விடுகிறது.

சேட்டிங் டேட்டிங் என்று இன்றைய மாடலிங் மனிதர்களுக்கு மத்தியில், ஆடையிலும் -  அலங்காரத்திலும் காதலுக்கான குறிப்பு எழுதப்படுகிறது.

sms  என்றும் email என்றும் அனுப்பும் குறுந்தகவல்கள், நொடிக்கும் நேரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன.  

இந்தத் தகவல் தொடர்பு யுகத்தின் உச்சத்தில், மெல்லிய அதிர்வுகளைக் கூடத் தாங்க முடியாமல் தற்கொலைகளும், விவாகரத்துகளும் தொடர்ந்து கதை எழுதுகின்றன.

உலகக் கலாசசாரம் பொதுவானதால், நமக்கான அடையாளங்க
ளைத் தொலைத்து விட வேண்டியிருக்கிறது.

திரைப்படங்களைப் பார்த்து காதலை ஊக்குவிக்கும் இந்தச் சமூகம் தெருவுக்கு வந்தவுடன் எதார்த்தத்தை தோற்கடித்து விடுகிறது.

கலப்புத் திருமணங்களை ஆதரித்து வேலை வாய்ப்புகளும், நிதி உதவிகளும் அரசாங்கம் வழங்கி வரும் நேரத்தில்,

காதலர் தினத்துக்குக் கருப்புக் கொடி தாங்கிக் கொண்டு சில சமூக அமைப்புகள், தங்களின் அடிப்படை மானத்தைக் கட்டிக் காத்துக் கொள்கிறன.

காதலில் மட்டும் தான் கற்பு என்பதை உணர முடிந்தது.
கண்ணியம் இருக்கிறது, கட்டுப்பாடு இருக்கிறது.

ஆனால், எந்த இடத்தில் இருந்து காதல் வந்ததோ, அந்தக் கட்டுப்பாடுகள் எதும் இல்லாத இடத்தை நோக்கி மீண்டும் சென்று கொண்டேயிருக்கிறது, இன்றைய காதல்.

அளவற்ற சுதந்திரம் தான், இன்றைய காதல் கசப்பதற்கு முக்கிய  காரணமாக இருக்கிறது.

தொழில்நுட்பம் அதிலும் ஊடகம் என்று பெருகி விட்ட  அழுத்தத்தில் சில உண்மையான காதலர்களும்
இருக்கிறார்கள், இருப்பார்கள்.











Tuesday, 3 July 2012

வாடகைப் புத்தக நிலையம்

வாடகைப் புத்தக நிலையம்

வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக் கொண்டு, புத்தகங்கள் கொடுத்து,

வாசித்து முடிந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு எளிய வர்த்தக முறையை வாடகைப் புத்தக நிலையங்கள் செய்து வருகின்றன.

தேடிக் கிடைக்காத புத்தகங்களும், அதிக விலையுள்ள புத்தகங்களும்,  வாசகர்களிடம் எளிதாக சென்றடைய ஆரம்பிக்கப் பட்ட வாடகைப் புத்தக நிலையங்களைத், தொடர்ந்து நடத்த முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சில் ஏற்பட்ட ஊடகங்களின் ஆதிக்கம், நடைமுறையில் புத்தக வாசிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது.

இன்றைய வாசிப்பின் தளங்கள் மாறி வருகின்றன. இணையங்கள் அதற்கான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன.

Blog என்ற வலைச்சரத்தில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள், தங்கள் எழுதிய படைப்புகளின் ஈரம் காய்வதற்குள் வாககர்களிடம் வரவேற்பைப் பெறுகிறார்கள்.

ஆனால், புத்தகம் புரட்டி வாசிப்பதற்கு இணையாக வேறெந்த வாசிப்பும் இருக்க முடியாதென்பதே பலரும் அறிந்த உண்மை.

இணையத் தளத்தில் அதிக நேரம் படிக்க முடியாத சூழ்நிலையும், அதனால் ஏற்படும் கண் எரிச்சலும் புத்தக வாசிப்பின் அருமையை நமக்கு உணரச் செய்யும்.

வாடகைப் புத்தக நிலையத்தை ஒரு சேவையாகவோ தனிப்பட்ட- சுய அக்கரைக்காகவோ நடத்த முடியுமே தவிர, ஒரு சமூக வர்த்தகமாக நடத்த முடிவதில்லை.

வாழ்க்கையின் பெரும் பரப்பை காட்சி ஊடகங்கள் நிறைத்து வருவதால், இன்றைய சூழலில் வளரும் தலைமுறைகளிடம் வாசிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருகிறது.

இன்றைய இளைய தலைமுறைகளிடம் வாசிப்பிற்கான தனிப்பட்ட முறையில் பயிற்சி ஏதும் இல்லை.

தங்களுடைய பாடத்திட்டங்களில் மட்டும் கவனமாக இருக்கும் பள்ளி கல்லூரிகளில் வகுப்பறை கடந்து வாசிப்பிற்கான தளங்களை ஏற்படுத்தித் தருவதில்லை.

படித்து முடித்து வீதிக்கு வந்தவுடன் தான் கற்றுக் கொள்ளவே ஆரம்பமாகும் சூழலை இன்றைய சமூகம் உருவாக்குகிறது.

8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில், ஒரு படைப்பாளன் தன் படைப்பை 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட வேண்டிய பரிதாபம் நிலவி வருகிறது.

அதிலும், ஒரு படைப்பாளனின் முதல் பிரதியின் வெளியீடும், விற்பனையும், வாசகர்களிடம் சென்றடைவது என்பது, அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுவதில்லை. 

கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், நாவல்களையும், படைக்க மட்டுமே முழுக்க முழுக்க படைப்பாளர்கள் ஆழ்ந்திருக்கும் போது,

புத்தகங்களை வெளியிடுவதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும்
பதிப்பகங்கள் மட்டுமல்ல அரசும் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் நாட்டில் மொத்தம் 5000 மேலான நூலகங்கள் இருந்தும் புத்தக வாசிப்பிற்கான வரவேற்பு கிடைக்காமல் போனதை ஆராய வேண்டியிருக்கிறது.

புத்தகங்களை அதிகமான எண்ணிக்கையில் பதிப்பிப்பதாலும், ஊர் ஊருக்கு நூலகங்கள் அமைப்பதாலும் மட்டும் புத்தக வாசிப்பு என்பது ஆதிகரித்து விடுவதில்லை.

எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகமும், எழுதிய படைப்புகளின் கதை - மையம் - பின்புலம் குறித்தான அனைத்து தகவல்களும் தொடர்ந்து வெளியிட வேண்டும்.

விளையாட்டிலோ அல்லது பிற துறைகளிலோ வெற்றி பெரும் சாதனையாளர்களுக்குக், கோடிக் கணக்கில் கொடுத்து கௌரவிக்கும் அளவிற்கு ஒரு எழுத்தாளன் அங்கிகரிக்கப்படவில்லை.

ஏதேதோ வரவுகளுக்கு விளம்பரங்களை அள்ளி எறியும் தொலைக்காட்சி சேனல்கள், ஒரு புத்தகத்தின் அருமையை எடுத்துச் சொல்வதில்லை.

வெகு விரைவாக எடுத்துச் செல்லும் இன்றைய காட்சி ஊடகங்கள் இதை முழுமையாகச் செய்தால் மட்டுமே எழுத்தாளர்களின் பிழைப்புக்கும் தொடர்ந்து எழுதுவதற்கும் வழி பிறக்கும்.

புத்தக வாசிப்பில் கிடைக்கும் தனக்கான சொந்தக் கற்பனையை, இன்றைய ஊடகங்களின் காட்சிப் பிம்பங்கள் பெரிய அளவிற்கு ஏற்படுத்தி விட முடியாது.

சேர்ந்தே இருப்பது, வறுமையும் புலமையும் என்ற திருவிளையாடல் வசனத்தை உண்மையாக்கும் இன்றைய சமூகப் போக்கை நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

பாரதி, புதுமைப்பித்தன் போன்ற மாபெரும் படைப்பாளர்களுக்கு, நம் தமிழ் சமூகம் அளித்த மரியாதையில் பட்டினிச் சாவும் அடங்கும்.

சீத்தலைச் சாத்தான் என்ற சங்கப் புலவன் கூட, தானிய வணிகம் செய்து கொண்டு தமிழ் வளர்த்து வந்தான்.

பெருந்தலைச் சாத்தான் என்கிற புலவன், குமணன் காலடியில் பசியில் அழுது புலம்பிய காட்சியைப் சங்க இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

புலவர்களைப் பாதுகாப்பதற்காகவே புலவராற்றுப்படை என்ற தேற்றுதல் முறை நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டிருக்கிறது.

இதனால் தான் எழுத்தைப் புத்தக வடிவில் கொடுத்துப் பிழைக்க முடியாதென்பதை உணர்ந்த எழுத்தளர்கள், குறும்படங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கதை, வசனம் எழுதி கொண்டிருக்கிறார்கள்.

சாகித்திய அகாதமி என்ற விருது எழுத்துலகில் வழங்கப்படும் உயர்நத விருதாகும்.

மிகச் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருதோடு 1 லட்ச ரூபாய் கொடுத்து அரசாங்கம் கௌரவிக்கிறது.

ஆனால், ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதினால் பல லட்சங்களை பார்த்து விடுகிறார்கள் இன்றைய ஊடக மொழி எழுத்தாளர்கள்.

பொழுது போக்கிற்காகவும், தூக்கம் வராத நேரத்திலும், பயணங்களிலும் மட்டும் புத்தகம் வாசிக்கப் பழகியவர்கள், 

சினிமாக்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் மூழ்கி விடுவதால், படிக்க நேரம் இல்லை என்கிறார்கள்.

வாழ்வின் அர்த்தத்தையும், அதன் புரிதலையும் ஒரு புத்தகத்தின் வழி தெரிந்து கொளள முடியும்.

உறவுகளின் மனித நேயமும் கற்பனை வளர்ச்சியும் வற்றிப் போனதற்கு காரணம் புத்தக வாசிப்பு குறைந்து போனது தான்.

இதனால் - மனஅழுத்தமும், விரக்தியும், குற்ற உணர்ச்சியும் மனிதர்களிடம் தேங்கிக் கிடக்கிறது.

ஒரு கொலையோ, பெரும் விபத்துக்களோ நமக்கு பக்கத்திலே எளிதில் நடந்து விடுகிறன.

புத்தக வாசிப்பின் மகத்துவம்தான் மனதைத் தூய்மை ஆக்கும்.
உறவுகளையும் வாழ்வின் அர்த்தங்களையும் புரிய வைக்கும்.

வெளிநாடுகளில் இரண்டு மூன்று படைப்புகள் எழுதிய எழுத்தாளர்கள் உலக அளவில் பாராட்டு வருகிறார்கள்.

தனி அங்கிகாரத்துடன் உலக நாடுகளில் வலம் வருகிறார்கள்.

கேரளாவில் ஆண்டுக்கொரு முறை எழுத்தாளர் தினவிழ கொண்டடாடுகிறார்கள்.

சென்ற ஆண்டு கேரளாவில் வீதியில் இறந்து கிடந்த ஒருவன், எழுத்தாளன் என்று தெரிந்தவுடன் அவன் அரசாங்க மரியாதையில் அடக்கம் செய்யப்பட்டான்.

தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கான வாழ்வாதாரங்கள் காக்கப் படவேண்டும். வாசிப்பிற்கான புரிதலை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

வெறும் பாடத்திட்டங்களை மட்டும் வாசித்து சலிப்பு தட்டும் சூழலில், தத்ததுவம் - கலை - அறிவியல் - இலக்கியம் - பொது அறிவு என,

புத்தகங்களை நூலகங்களுக்கு அளிக்கும் 45 / சதவீத கழிவு விலையில் மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வாசிப்பு பழகத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

வேளை நேரம் முடிந்ததும் பிற வேளைகளில் ஈடுபடும் ஆசிரியர்களைக் கண்டித்து, பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு வாசிப்பிற்கான தகுந்த பயிற்சி முறைகளைக் கொண்டு வர வேண்டும்.

அரசின் தலையீடு இல்லாமல் தனியார் நடத்தி வரும் புத்தகத் திருவிழாக்களைப் பராட்டும் இந்நிலையில்,

சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் மற்றும் வாசிப்பின் விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து  நடத்தப்பட வேண்டும்.

அதோடு, எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பாலமாக விளங்குபவைகளில் முதன்மையானவை புத்தக நிலையங்கள் மற்றும் நூலகங்கள் தான் என்றாலும்கூட; பழைய புத்தகக் கடைகள், வாடகை புத்தக நிலையங்களின் பங்கு தனித்துவம் பெறுவது மறுப்பதிற்கு இல்லை.

இன்றைய நவீன காலகட்டத்தில் "புத்தக வாசிப்பு" குறைந்து போனாலும், அதற்கான தளங்கள் மாறி "வாசிப்பு" பழக்கம் குறையாமல் அதிகரித்து வருவது  நல்ல வளர்ச்சி தான்.  










தீண்டும் மௌனம்

தீண்டும் மௌனம்

தீண்டும் மௌனத்திலே
தீராத கனவினிலே
ஒரு கவிதையாக காலம் களித்திருந்தேன்
நல்லதொரு கொள்கை வகுத்திருந்தேன்

நாளை வருவேனென்று நாட்கள் கடக்கிறதா?
நான்வரும் பாதையில் உன் இதயம் கிடக்கிறதா?
நான் உனக்காகத்தான்
என்றொரு பார்வையில் சத்தியம் செய்து கொடுத்தாய்!

நிலாவைக் கிழித்து விட்டாயடி – சகியே!
யாரிடம் நானிதைச் சொல்வேனடி
தேற்ற ஆளில்லை!
எது வந்தும் ஏக்கம் தீரவில்லை!
நான் குழைத்த அந்தரங்கத்தை
வீதியில் வாரி இறைத்தாயடி!
நீ என் முட்டாள் சிறுக்கி

கண்ணீர் வந்ததடி
கடந்த காலம் சுற்றி வளைத்ததடி
உலகம் வெறுத்ததடி
நிகழ்ந்த எதையும் இருதயம் நம்ப மறுத்ததடி
வானம் இடிந்ததடி - சகியே
வழக்கு வந்ததடி
மேகத்துளை வழியே
உதிரம் பொங்கி வழிந்ததடி