Friday, 14 September 2012

யோகா

ஒரு மனிதன் சரியான வழியில், தன்னை ஒருகிணைத்து வாழ்க்கையை எளிமையாக வாழக் கற்றுக் கொள்வதற்கு யோகாவும் அதன் ஆசனங்களும் துணை புரிகின்றன.

யோக எனபது, ஒருங்கிணைத்தல் அல்லது வழிநடத்துதல் என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.

மனித வாழ்வியலில் நான்கு நிலைகளை யோகம் ஒருகிணைப்பதாக யோகிகள் வரையறுத்திருக்கிறார்கள்.

உடல், மனம், அறிவு, ஆன்மா இந்த நான்கும் யோகத்தில் ஒருகாணைத்து ஒரே வழியில் செல்கிறன. அதன்வழி யோகாவின் ஆசனங்கள் உடலை சீராக வைக்கின்றன.

யோகா என்பது ஒரு கலை.  இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை சொல்ல முடியாது. 

அறிவியலைக் கண்டுபிடித்தவர் யார் என்பதை எப்படி சொல்ல முடியாதோ, அது போலவே யோகாவை பல காலகட்டங்களில் சித்தர்களும், ஞானிகளும் யோகிகளும் முனிவர்களும், ரிஷிகளும் யோகாசனங்களைக் குறிப்புகளாக எழுதி வைத்தார்கள்.

யோகாவில் குறிபிடத்தக்கவராக திருமூலரைச் சொல்கிறார்கள். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் யோகம் சார்ந்த கருத்துக்களும், உடல் சார்ந்த ஆசனங்களும், மூச்சுப் பயிற்சியைப் பற்றிய கருத்து்ககளும் தத்துவங்களாக எழுதப்பட்டிருக்கின்றன.

யோகக் கலைக்கலையைத் தொகுத்து சூத்திர வடிவத்தில் முதன் முதல் இலக்கணம் கண்டவராக பதஞ்சலி முனிவரைக் குறிப்பிடுகிறார்கள். பதஞ்சலி முனிவர் சமஸ்கிரதத்துக்கும் இலக்கணம் எழுதிய பெருமைக்குரியவர்.

இவர் பெயரால் பதஞ்சலி யோக ஆராய்ச்சி மையங்கள் என்று, ஏராளமான யோக தரிசனங்கள் நடைபெற்று வருகின்றன.

கண் மூடிக் கொண்டு இருப்பதிலும், உடல் வளைத்து பயிற்சி செய்வதிலும் மட்டும் யோகம் அடங்கி விடாது. அது கலையாக இருப்பதால் யோகத்தின் படிநிலைகள் கடலாக இருக்கின்றன.

108 வகையான யோகங்கள் இருக்கின்றன. இந்த யோககங்களின் வழி வந்த ஆசனங்கள் பல ஆயிரக் கணக்கில் உலக நாடுகள் அனைத்திலும் பரவி இருக்கின்றன.

பக்தி யோகம், ஞான யோகம், கிருத யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் என 108  பிரிவுகளாக யோகம் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

சதா தன் பக்தியால் உருகி அன்பின் வழியே மனிதப் பிறவியிலிருந்து இறைவனிடம் சரணாகதி அடைவதை பக்தி யோகம் என்கிறார்கள்.

கர்மம் என்பது, வினை அல்லது செயல் என்று பொருள்படுகிறது. செய்கின்ற செயல்பாடுகள் மூலம் இறைநெறியைக் காண்பதைக் கர்ம யோகம் என சொல்கிறாரக்ள்.

காந்தியடிகள், அன்னை தரசா, அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் செய்கின்ற செயல்பாட்டின் மூலம் இறைவனை நாடினார்கள். அதாவது, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்கள் என சொல்லலாம்.

பிறவியிலிருந்தே ஞானமடைந்த நிலையில் இறைநெறியை அடைவதாகத் தோன்றியவர்கள் ஞான யோகம் அடைந்தவர்களாக சொல்லப்படுகிறார்கள்.

இன்றளவும் உலகம் முழுக்க சிறப்பாகக் கற்றுக் கொள்ளப்படும் யோகமாக ராஜயோகம் இருக்கின்றது.

108 யோகங்களும் ராஜ யோகத்தில் அடங்குவதாலும் மற்ற யோகங்களைக் காட்டிலும் தலை சிறந்த யோகம் என்பதாலும் இதனை ராஜயோகம் என்றழைக்கிறார்கள்.

ராஜயோகத்தின் உட்பிரிவாக அஸ்டங்க யோகம் என்றொரு பகுப்பு இருக்கிறது. அஸ்டம் என்றால் எட்டு என்று பொருள்படுகிறது.

அஸ்டங்கம் என்பது, எட்டு அங்கங்களை கொண்டதாகும். இந்த யோகத்திற்கு, கதயோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. ராஜயோகம் , அஸ்டங்க யோகம், கதயோகம் என்ற மூன்றும் ஒரே யோகமென சொல்கிறார்கள்.

எட்டு படிநிலைகளில், ஒரு மனிதன் யோகத்தைக் கற்று வாழ்வில் சிறப்படையும் வழிமுறைகள் அஸ்டங்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

அஸ்டங்க யோகத்தின் ஒவ்வொரு படிநிலையையும் இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் படிக்க வேண்டியதாக இருந்தது. எட்டு நிலைக்கும் சேர்த்து மொத்தம் 16 ஆண்டுகள் குருகுலத்தில் பயிற்றுவித்தார்கள்.

இயமம் என்பது, அஸ்டங்க யோகத்தில் முதல் படிநிலையாக இருக்கிறது. இயமம் என்பது தனிமனித ஒழுக்கம் என்று சொல்கிறார்கள்.

உண்மையாக இருத்தல், பிற உயிர்களைத் துன்புறுத்தாதிருத்தல், பொய் பேசாதிருத்தல், திருடாதிருத்தல் போன்ற உட்பிரிவுகளைக் கொண்ட தனிமனித ஒழுக்கங்களைக் கொண்டதை இயமத்தில் போதித்தார்கள்.

நடைமுறையில் ஒரு மனிதன் பொய் சொல்லிக் கொண்டும் தீய வார்த்தைகளைப் பேசிக் கொண்டும் தனிமனித ஒழுக்கமில்லாமல் தினமும் பல மணி நேரம் தியானம் செய்து கொண்டிருந்தால் அதற்கான எந்த பலமும் அவருக்குக் கிட்டாது.

தனிமனித ஒழுக்கத்தைக் கடந்து சமூதாய ஒழுக்கத்துக்குள் வருவதை நியமம் என்கிறார்கள். இந்த இரண்டாம் படிநிலையில், அகசுத்தத்தைக் கடந்த ஒரு மனிதன் புற சுத்தத்துக்குத் தயாராகிறான்.

மனதளவிலும், உடலளவிலும் கற்றுக் கொண்ட ஒழுக்கங்கள் தனக்கும் தன்னைச் சுற்றியிருக்கும் சமூதாயத்துக்கும் பயன்படவே இயமும், நியமமும்  உருவாக்கினார்கள்.

அஸ்டங்க யோகத்தின் மூன்றாம் படிநிலையான ஆசனத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள்படுகிறது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட ஒருவரால் சூழலுக்கு ஏற்றபடி ஒழுங்காக இருக்க முடியாது. உடலும் மனமும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல உடல் திடமும், மன ஆரோக்கியமும் உடைய ஒருவரால் மட்டும் தான் எந்தச் சூழலிலும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நின்ற நிலை ஆசனம், அமர்ந்த நிலை ஆசனம், மல்லாந்த நிலை ஆசனம்,குப்புற நிலை ஆசனம் என்ற நான்கு நிலையில், உடலை முன்புறமாக வளைப்பதும் உடலை பின்புறமாக வளைப்பதும் பக்கவாட்டில் வளைப்பதும், உடல் தாங்கி இருப்பதும், உறுதி நிலைப்படுத்தும் வகையிலும் ஆசனங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரைக்கும் 84 லட்சம் ஆசனங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக் கிறார்கள். இந்த ஆசனங்கள் அனைத்தும் நம்மைச்  சுற்றி அமைத்திருக்கும் மரம் செடி பறவைகள், விலங்குகள் போன்ற இயற்கையின் பின்புலத்திலிருந்தும் அதன் நிகழ்வுகளில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டதாக உணர முடிகிறது.

சிங்கத்தின் தலைமைப் பண்பில் இருந்து கண்டறியப்ட்ட ஆசனம் சிம்மாசனம் எனவும் மயில் தோகை தாங்கி ஆடும் நிலையில் இருந்து கண்டறியப்பட்ட ஆசனம் மயில் ஆசனம் மயூர் ஆசனம் என்கிறார்கள்.

ஒட்டகம் தண்ணீர் இல்லாத சூழலிலும் தன் நுரையீரலை எப்படி வைத்துக் கொள்கிறது, என்பதை அடிப்படியாக வைத்து கண்டறியப்பட்ட ஆசனம் தான் ஒட்டக ஆசனம் என்று சொல்லப்படுகிற உஷ்ராசனம் எனச் சொல்கிறார்கள்.

பாம்பு படம் எடுப்பது போல் முதுகெலும்பை நிமிர்த்தியிருக்கும் பாம்பு ஆசனத்தை புஜங்க ஆசனம் எனச் சொல்கிறார்கள்.

இம்மாதிரியான 84 லட்சம் ஆசனங்களில் 1000 ஆசனங்கள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் திருமணம் ஆனவர்களுக்கென்றும், திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சார்ய சன்னியாசி நெறியில் உள்ளவர்களுக்கென்றும், தனி தனி ஆசனங்கள் இருக்கின்றன.

ஆரோக்கியமான, நோய் நொடியில்லாத - மேன்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு 30 ஆசனங்கள் போதுமென்று ஆசன குருக்கள் சொல்கிறார்கள். இந்த 30 ஆசனங்களே ஆசனங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கின்றன.

ஆசனங்களில் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவதற்கு மூச்சே காரணமென கண்டறிந்து உணர்ந்திருக்கிறார்கள்.

காலைநேர செயல்கள் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம், உறங்கி விழித்த நமக்கு மூச்சு நிதானமாக இருக்கும். அதனால் அதிகாலையில் செய்கின்ற வேலைகள் நமக்கு அழுத்தமில்லாமல் இருக்கும் என்கிறார்கள்.

எப்போழுதெல்லாம் ஒரு மனிதனுக்கு மூச்சு நிதானமாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவன் தன் காரியங்களை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

பிறரிடம் கோபப்படும் போதும், சண்டையிடும் போதும் நமது மூச்சு வேகமாகச் செயல்படுகிறது. உடல் பதட்டப்படுகிறது. உள்ளம் நடுங்கி, அறிவு செயலிழந்து விடுகிறது.

மூச்சு நிலை மாறும் போது மனநிலையும் உடல் நிலையும் மாறி அறிவு செயலிழந்து போகும்.
மூச்சை ஒழுங்குபடுத்தினால் மனம், உடல், அறிவு மூன்றையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.
இதை அடிப்படையாக வைத்தே யோகிகள், பிராண யாமம் என்ற மூச்சைக் கட்டுப்படுத்தல் பயிற்சியை மேற்கொண்டார்கள்.

மூச்சு என்ற உயிர் சக்தியைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்களே நீடித்த வாழ்வை வாழ முடியும். பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தவிர்த்து எப்போதும் நிதானத்துடன் இருக்க முடியும்.

யோகிகள் 18 மணிநேரம் வரை மூச்சுப் பயிற்சி செய்திருக்கிறார்கள். இதனால் உணவு இல்லாமலும் காற்றை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு நீண்ட ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு சாமான்ய மனிதன் தினமும் மூன்று மணிவரை மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளாலாம்
புலன்கள் வழியாக வெளியே செல்லக் கூடிய மனதை மனதுக்குள்ளே திருப்புதலை யோகத்தின் ஐந்தாம் படிநிலையாகச் சொல்கிறார்கள். இதனைப்  பிரத்தியாகரம் என அழைக்கிறார்கள்.

உடல் எப்படித் துடிக்கிறத, காற்று எந்தெந்த வழியில் சென்று வருகிறதென்று மனதுக்குள் செல்வது என்பதை உணரும் நிலையை பிரத்தியாகரம் எனச் சொல்கிறார்கள்.

நெற்றிக்கு நடுவில் மட்டும் கண்கள் மூடி பார்வையைச் செலுத்துதல் போன்ற சிறுசிறு பயிற்சிகள் மூலம் மனதுக்குள் செல்லுதல் பிரத்தியாகரமாக இருக்கிறது.

பிரத்தியாகாரத்தில் 12 மடங்கு நிலைத்திருக்க முடியும் என்றால் அது தாரனை எனச் சொல்கிறார்கள்.

தாரனை நிலையில் இருக்கும் ஒருவர் அவர் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியாளராக இருப்பார். அதாவது, எந்த ஒரு செயலில் தீர்க்கமாக நம்பிக்கையும் உழைப்பும் கொண்டு கொஞ்சமும் நழுவாமல் செல்லும் போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை தாரனை எனக் கருதுகிறார்கள்.

தாரனையின் 12 மடங்கே தியானம். இதை யோகத்தின் ஏழாம் படிநிலையாகச் சொல்கிறார்கள்.

கண்மூடிக் கொண்டு கொஞ்ச நேரம் கால் மடக்கி உட்கார்ந்திருப்பது மட்டும் தியானம் அல்ல. உள்மனதுக்குள் செல்வதும் தன்னை முழுமையாக உணர்ந்து அதில் மனதையும் உடலையும் நிலைத்திருக்கச் செய்வதே தியானமாக வகுத்திருக்கிறார்கள்.

தியானம் என்பதற்கு எளிதான விளக்கமாக ஆங்கிலத்தில் கான்சன்ட்ரேசன் எனச் சொல்கிறார்கள்.
அதாவது மனதை ஒருநிலைப்படுத்துத்துதல் என்ற பொருளில் பின்பற்றுகிறார்கள்.

ஏன் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்...? ஒருநிலைப்படுத்துவற்கான தேவை என்ன…? ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் தான் தியானம் பயன்படுமா….? என்பதற்கு சரியான விடையை உணர்ந்து பார்த்திருக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் சூரிய ஆற்றல் இருந்தாலும் ஒரு லென்ஸ் மூலம் அதை எடுத்து காகித்தில் நிறுத்தும் போது, சூரியனின் வெப்ப ஆற்றலால், காகிதம் தீப்பிடித்து எரிகிறது.

சோலார் செல் கருவியின் மூலமே சூரியனிடமிருந்து நமக்கு மின்சாரம் கிடைக்கிறது.
ஒரு மனிதனின் மனம் ஆயிரம் சூரியனுக்குச் சமமாக இருக்கிறது. பல விதமான எண்ணங்கள் வந்து குழைந்து விடுகிறது. அதனால் ஒருநிலையில் ஒருசெயலை நிறுத்த முடிவதில்லை.

ஏதோ ஒரு செயலைச் செய்ய ஆசையும், ஆர்வமும் இருந்தாலும் அதற்கான ஒருகிணைப்பும், நிதானமும் இருப்பதில்லை.
மனம் ஒருநிலைப்படும் போதே எந்த ஒரு செயலும் நடக்கிறது. அதற்கான தகுத்த பயிற்சிகள் தேவைப்படுகிறது.

தியானம் என்ற சோலார் செல்லின் மூலம் மனதை நிறுத்தும் போது, அது நமக்கும் தேவையான மன ஆற்றலைக் கொடுக்கின்றது.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் சக்தி முழுவதும் ஒன்று சேரும் போது, அவன் நினைத்த காரியம் 100 சதவீதம் வெற்றியடைகிறது.

உறுதியும், ஒருகிணைப்பும் இல்லாத மனதில் எழும் எண்ணங்கள் பாலை நிலத்தில் விழுந்த துளி போல காய்ந்து விடுகிறது.

பல மனிதர்கள், நிறைவேறாத ஆசையிலும் - கனவிலும் வாழ்க்கையை முடித்து மரித்துப் போகிரார்கள்.

ஒவ்வொரு நாளும் நம்பிக்கையிழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனக்குள் இருக்கும் சிக்கலை மறைத்துக் கொண்டு யார் யாரையோ எதை எதையோ காரணமமாகச் சொல்கிறார்கள்.

தன்னையே தனக்குள் வெல்ல முடியால் வெளியில் தாண்டிக் குதித்து விழுந்து விடுகிறார்கள்.
மனதில் தைரியமும், தெம்பும் இழந்து போகும் போது மதிமயங்க போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதை ஆனந்தமாக நினைக்கிறார்கள்.

வாழ்க்கை என்பது,  எளிமையானது. மிகச் சாதாரணமாக வாழக் கூடியதென்பதை மறந்து விடுகிறார்கள்.

நான்கு பேர் கூடினால் பிரச்சனையைப் பற்றியே அதிகமாகப் பேசிக் கதைக்கிறார்கள்.

ஏதாவது ஒரு உறுதி மொழியோடு களைந்து செல்கிறார்கள். வாய்ச்சொல்லில் வீரரடி கிளியேஎன்று பாரதி சொன்னதைப் போல, வெறும் பேச்சில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெளியில் சுத்திக் கொண்டிருக்கும் எண்ணங்கள் அனைத்தையும் ஒரே புள்ளியில் நிறுத்தி ஆராயும் போது, இந்த உலகம் விளங்குகிறது. அதன் உச்ச நிலையில் பிறர் மனதை அறியவும் சக்தி கிடைக்கிறது. வான சாஸ்திரங்கள் புலப்படுகிறது. மற்ற கோள்கள் பற்றியும் உணர வழி கிடைக்கிறது.

தியானத்தின் 12 மடங்கை சமாதி எனச் சொல்கிறார்கள். இதனை யோகத்தின் எட்டாம் படிநிலையாகக் கருதுகிறார்கள். இந்த சமாதி நிலையே மனித வாழ்க்கையின் கடைசி நிலையாகும் என்று திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறார்கள்.

சமாதி என்பது, சமன் + ஆதி என்றார்கள். இதில், ஆதி என்றால் தொடக்கம் அல்லது மூலம் என்று சொல்கிறார்கள். தொடக்கத்தில் அல்லது மூலத்தில் சமமாக மாறிவிடுவதே சமமாதி எனக் கருதுகிறார்கள்.

வெளிப்புறமாக செல்லும் மனதை உள் நிறுத்துவதை பிரத்தியாகாரம் என்றும், பிரத்தியாகாரத்தின் 12 மடங்கை தாரனை என்றும், தாரனையின் 12 மடங்கை தியானம் என்றும், தியானத்தின் 12 மடக்கை சமாதியென்றும் வகுத்திருக்கிறார்கள்.

சாம்மான்ய  மனிதன், தன்னை உணர்தலின் படிநிலைகளைக் கடந்தால் இறை நிலையை அடைய முடியும். இறைவனுக்கு இணையாக இருக்க முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

சாமதி நிலையில் யோகத்தில் இருக்கும் ஒருவருக்கு உடல் இயங்காது. இடி மின்னல் என்று உலகத்தில் எது நடத்தாலும் விளங்காது.  இதனை இறப்பு என்று சொல்ல முடியாது . இறப்பும் பிறப்பும் அற்ற நிலை என்கிறார்கள். அப்போது காலச் சக்கரம் சுழலாது. பல ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிடும்.

யோகத்தில் சமாதி நிலையை அடைந்த ஒருவர், எப்போது வேண்டுமாலும் மனதைத் திருப்பி, அதற்கு கீழ் உள்ள நிலைக்கு அவர்களால் வந்து விட முடியும் என்கிறார்கள்.

யோகம் என்பது, சில மணி நேரம் மட்டும் செய்யக் கூடிதாக இருக்கக் கூடாது. வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைப் பிடிப்பதாக  இருக்க வேண்டும் என்கிறார்கள்.

எல்லா நேரமும் ஆசனம் செய்வது உகந்ததல்ல என்கிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை என்றும், மாலையில் சூரியன் மறையும் நேரங்கங்களிலிருந்து இரவு வருவதற்குள் ஆசனப் பயிற்சிகள் செய்யலாம் எனச் சொல்கிறார்கள்.

ஆசனம் செய்யும் இடம் தூய்மையானதாகவும், நல்ல காற்றோட்டமாகவும்,  இருக்க வேண்டும்.
இறுக்கமில்லாத ஆடை ஆணிந்திருத்தல் ஆசனப் பயிற்சிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஆசனப்பயிற்சியில் தொடக்கத்தில் இருப்பவர்கள் வெட்ட வெளியில் பயிற்சி எடுக்கக் கூடாது.
மலம் ஜலம் கழித்த பிறகு வெறும் வயிறாக இருக்கும் போது தான், ஆசனம் செய்ய வேண்டும்.
உணவு உட்கொண்ட பிறகு, 4 மணி நேரம் கழித்து  ஆசனம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அதிகாலை நேரமே சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள்.

காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும். அதனால் ஆசனமோ தியானமோ, மூச்சு பயிற்சியோ செய்ய காலை நேரம் ஏற்றதாக இருக்கும்.

மேலும் ஆசனம் செய்ய இரவு 5 மணி நேரமாவது உறங்கி இருக்க வேண்டும். களைப்பான நாட்கள்,  உடல் உறவு கொண்ட நாட்கள், நோய்வாய்பட்ட நாட்கள், பெண்களின் மாத விலக்கான நாட்கள் போன்ற சமயங்களில் ஆசனப் பயிற்சியைத் தவிர்த்து விட வேண்டும்.
எல்லா வயது கொண்டவர்களும் யோகப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

எந்த ஒரு கலையையும் ஆசிரியரின் துணை கொண்டு செய்வதே சிறப்பாக இருக்கும். யோகப்பயிற்சி மேற்கொள்வதற்கும் தகுந்த ஆசிரியர்களிடம் செல்வதே நல்லது. ஆசனத்தையோ, மூச்சு பயிற்சியையோ மாற்றி செய்தால் அதற்கான பக்க விளைவுகளை ஏற்ற நேரிடும்.

ஆசனங்கள் செய்யும் போது எப்படி தொடங்கியதோ அப்படியே நிதானமாக வெளிவர வேண்டும்.
ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும்செய்து முடித்த 30 நிமிடங்களுக்குப் பிறகே குளிக்கவோ உணவு உண்ணவோ செல்ல வேண்டும்.

யோகக் கலையில், தொடங்குவதற்கு முன்னால் கடைப்பிடிக்க வேண்டிய நிலையும், செய்யும் போது பின்பற்றும் முறையும், செய்து முடித்த பிறகு இருக்க வேண்டிய நிலையும் நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருக்கின்றது.

நோயால் பாதிக்கப்பட்டவர்க்கென்று தனிப்பயிற்சிகள் யோகாவில் இருக்கின்றன.
இதனால் புதிய உத்வேகமும் அறிவுக் கூர்மையும் ஏற்படும். மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தின் சிவப்பணுக்கள் அதிகரித்து சுறுசுறுப்பு ஏற்படும்.

தினந்தோறும் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் ஒதுக்கி யோகம் மேற்கொண்டால், இந்தப் பரப்பான வாழ்க்கையில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம். வருகின்ற பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.

எந்தப் பறவையும் பிரச்சனையில் சிக்கி தவிப்பது இல்லை. புதுபுது நோயில் நொந்து போவதில்லை. இரவுமுழுக்க நல்ல தூக்கத்தில் இருந்து கொண்டு அதிகாலையில் விழித்து இயற்கையில் முரண்படாமல் நிம்மதியான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நமக்கும் நாமே தொந்தரவாக இல்லாமல் இருந்தால் தான், பிறருக்கு நாம் தொந்தரவு தராமல் இருக்க முடியும்.
அதற்கு யோகக் கலை நிச்சயம் கை கொடுக்கும் என்பதை பின்பற்றினால் உணர முடியும்.





















 





















































































.


  

Wednesday, 5 September 2012

எதிர் நீச்சல்

வெள்ளத்தில் பழகிய நீச்சல் இது
பள்ளத்தைக் கண்டு நீந்தாமலா நின்று விடும்
கெக்கென்று உலகம் கூச்சல் இடும்
சிக்காமல் காற்று வெண்மேகமும் தொட்டு வரும்
ஓநாய்கள் ஒப்பாரி வைக்கும்…
ஏராளம் கண்ணீரைக் கக்கும்…
இசை பாட்டு மொழி சிலுசிலுப்புக்கு என்னோடு 
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது…

இருண்ட கருப்பு என் மேல் இருக்கும் 
திரண்ட வெறுப்பும் நெஞ்சோடு உரசும்
காலம் தட்டித் தட்டி எனை வளர்க்கும்
வைரம் தீட்டித் தீட்டிப் பளபளக்கும்
என் பாடு கல்லோடு முள்ளோடு
எந்நாளும் கண்ணீரு செல்லாது 
ஐயோ ஐயோ
குய்யோ முய்யோ
அது கண்டு எந்தக் கண்ணும் பார்க்காது
நீ எழுந்து வா என்றென்னை என் நெஞ்சம் சொல்லாமல் இருக்காது…

பறக்க இறகு எனக்காக வளரும்
கிழக்கில் பயணம் அதற்காக விடியும்
மேகம் விட்டு விட்டு மழை கொடுக்கும் 
தாகம் கேட்டுக் கேட்டு விடை கொடுக்கும்
நெஞ்செல்லாம் சங்கீதப் பூக்காடு
நஞ்சென்னும் செடியிங்கு பூக்காது
திக்கும் முக்கும்
உள்ளம் வெல்லும்
எனைத் தீண்டும் என்னைத் தோண்டும் ஓயாது
தீ வளர்த்து தான் இரு கண்ணில் விடி வெள்ளி இப்போது இது போதும்…


Monday, 3 September 2012

காதலும் காதல் சார்ந்த இடமும்


நாத்திகம் பழகியவன்
குறுநம்பிக்கைகள் வந்து நின்றபோது கல்லெறிந்தவன்
இன்று குடுகுடுப்பைக்காரனிடம்
உச்சுக் கொட்டுகிறான்...
என்ன நடந்திருக்கும் அவளுக்கு...?
இன்னும் என்ன என்ன நடக்கும்...?
காசு.... சில்லரை....
பழைய செல்போன் கூட
காலம் ஏற்க தட்சணையாகிறது

எனக்குத் தெரியும்...


இது தான்
நமது கடைசி சந்திப்பென்று
அப்போதெனக்குத் தெரியவில்லை...

உன் முதல் பார்வை
அனைத்தையும் எனக்கு விளக்கவில்லை...

என் பிடிவாதங்களுக்குக்
கடிவாளம் இடாத
உன் மெல்லய இதயத்தில்
இப்போதும் நான் இருக்கிறேனா...?

அப்படி இருந்தால்
அதற்கென வருந்துகிறேன்...

நினைவுகளோடு
எந்தக் கனவாயில் நான் வந்தாலும்
அது உன்னைக் காயப்படுத்தும் என்பதறிவேன்...


Sunday, 2 September 2012

காகிதப் பூக்கள்


யாருமற்ற இரவில்
பனிப்புள்ளிகள் எழுதிய கவிதைகளை
நீயும் நானும் வாசித்துக் கொண்டிருக்கையில்
என் இருதய விக்கிப்பீடியாவைத் திறந்து
ஏதேதோ பதிவு செய்திருக்கிறேன்

உன்னோடு
மீன் குஞ்சுகள் பிடித்து விளையாடிய
டெல்டாப் பகுதிகளில்  
இன்று கான்கிரீட் மரங்கள் முளைத்திருக்கலாம்

என் மௌனத்தின் இடைவெளியை
நிறைக்க முடியாமல் கரைந்த தவிப்புக்களுக்கு
இதுவரைக்கும் - நான்
எத்தனையோ இலக்கணங்கள்
எழுதியிருக்கிறேன்

காகிதப்பூக்களில்
நான் தேனெடுக்க அலைந்த போதெல்லாம்
என் பால்வெளி அண்டத்தில்
தும்பைச் செடிகள் வெடித்ததாகச் சொன்னார்கள்

இருந்தும்
காலம் தூரம் எல்லாம்
கடந்து போன பெருவெளியில்
சிந்தனைக் கொலைகள்
ஏராளம் செய்திருக்கிறேன்
இன்னும் உன்னை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்




Wednesday, 29 August 2012

ரிக்சா


இந்த நவீன உலகத்தில் அழுக்குப்படாமல் எத்தனையோ வேலை வாய்ப்புகள் வந்து விட்டாலும், ரிக்சா ஒட்டுபவர்கள் இன்னும் பழைய நூற்றாண்டின் வடிவமாகவே இருக்கிறார்கள்.

மனிதனை மனிதன் சுமந்து செல்லும் பல்லக்குத் தூக்கிகள் போலவே, இந்த ரிக்சா தொழிலும் இன்னும் மாறவில்லை.

வயிற்றுப் பிழைப்புக்காக ரோட்டோர இடுக்குகளில் ரிக்சா மிதித்தே தேய்ந்த எலும்புகளோடு கிட்டத்தட்ட 50 வயதை கடந்தவர்களும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நகர வீதிகளில் சாலை நெரிசலில் இருமிக்கொண்டே நகரும் மோட்டார் வண்டிகளை இயக்குவதே சிரமமாக இருக்கும் போது, இந்த மிதி வண்டி ரிக்சாக்களை ஓட்டுவது மிகுந்த வலியாக இருக்கும்.

வெயில் காலங்களை விட மழைக்காலங்களில் ரிக்சாவை ஓட்டிப் பிழைப்பவர்களின்  நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

மழை வரும் போது, பயணிகள் நனையாமல் ஷேர் ஆட்டோக்களில் பறந்து விடுகிறார்கள்.

மழை வந்தால் சந்தோஷம் தான். ஆனால் நடைமுறையில்....?

தரையில் விரித்து வியாபாரம் செய்பவர்களுக்கும், பிளாட்பார குடியிருப்பில் காலம் தள்ளுபவர்களோடு சேர்த்து ரிக்சா ஓட்டுபவர்களுக்கும், மழைக்காலத்தில் பஞ்சப்பாடுதான்.

பீளாஸ்டிக் பேப்பரையோ கோணிப் பையையோ தலையில் மாட்டிக் கொண்டு மழைத்துளிகள் வழிந்து ஓட, பல்லைக் கடித்துக் கொண்டு சந்தைகளில் காய்கறி மூட்டைகளை அடுக்கி ரிக்சா மிதிக்கிறார்கள்.

கைவண்டியில் நவீன வடிவமாக கண்டிபிடிக்கப்ட்ட ரிக்சா பல மாற்றங்களைத் தாண்டி வந்திருக்கிறது.

பின்னால் இரண்டு சக்கரங்களும், முன்னால் ஒரு சக்கரத்தோடும்....

வசதிக்குத் தக்கவாறு மூட்டை முடிச்சுகள் ஏற்றிச் செல்ல பின்னால் ஒரு சக்கரமும், முன்னால் இரண்டு சக்கரஙகளும் கொண்ட ரிக்சாக்களும் இன்று அதிகமாக இருக்கின்றன.

மோட்டார் ரிக்சாக்களே... நவீன ரிக்சாக்களின் கடைசி வடிவமாக இருக்கின்றன.

கல்கத்தா பீகார் போன்ற மாநிலஙகளில் 18000க்கும் மேற்பட்ட ரிக்சாக்கள் ஓடுகின்றன.
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நா வயசு முறுக்குல இருக்கப்ப ரிக்சா ஓட்ட ஆரம்புச்சே...
அன்னைக்கெல்லாம் இம்புட்டு கார் பஸ்செல்லாம் இல்லப்பா...

இன்னைக்கி...
இந்த ரோட்ல பாருங்க...
எத்தினி ஆட்டா, பைக்கு ஒதுங்க முடியில...

அப்ப எல்லாம் எங்களுக்குப் போட்டியா
குதிர வண்டிக்காரவுக இருப்பாக...
இன்னைக்கு அவுகயெல்லாம் என்னன்னமோ தொழில் பண்ணிட்டுப் போயிட்டாக...

இந்த ரிக்சாவத் தவற எனக்கு வேற தொழிலு செஞ்சு பழக்கமில்ல...
அதனாலதான இத விடமுடில...

முன்னமாதி பெருசா எங்குட்டும் சுத்தரதில்ல...
இந்தத் தெரு மொக்குலே தான் நின்னுக்குறது...
சவாரி வந்தமிட்டக்கு ஓட்டுவேப்பா...
பழக்கமானவுக... எப்பவும் வர்றவுக... வந்தாலே
அன்னைக்குப் பொழப்பு ஓடியிரும்...

முன்னமாதியெல்லாம் தூரம் தொலைக்கு
சவாரிக்குப் போறதில்ல...
கொஞ்சம் ஒடம்புக்கு ஒருமாதிரி இருந்தா
பேசாமா வீட்ல இருந்துக்குவே...

இரத்தம் சுண்டிப்போச்சுல...
பெடல மிதிக்க முடியல..
கால் நடுக்கம் கொடுக்குதுப்பா...

இந்த ரிக்சா தொழில்ல நாலு காசு பார்க்கனும்னா,
சந்த மார்க்கட்டுனு சுத்தியடிச்சா சம்பாரிச்சுப் புடலாம்...

ஒரு நா பொழுதுக்கு 1000 - த்திலிருந்து  -1500 பார்க்குறவனுக இருகானுக...

மாங்கு மாங்குனு மிதிச்சு ஓட்ன காசுல நல்ல குடிக்கிறது... அன்னக்கி சம்பாரிச்ச காச அன்னக்கே செலவுபண்ணிட்டு
ரிக்சா மிதிப்பானுக...

நானும் குடிப்பேன்...
ஒடம்பு இப்ப ஒத்துக்கிறது இல்ல...
அளவா வச்சுக்கிறது...
........................................................................................................................................................................................................

எ பெரு ரிக்சாங்க...
ஏதாவது ஒரு வெள்ளைக்கார பயதா எனக்கு பெரு வச்சுருக்கனும்னு நெனக்கிறேன்...

1940 தாம் வருசத்துல கை வண்டிக்குப் பதிலா எனைய ஓடவிட்டாங்க...

அன்னைக்கு தேதிக்கு எனக்குதான் நல்ல மவுசு...

மோட்டாரு வாகனத்துல போற அளவுக்கு பெரிய மனிசங்க, அப்ப ஊர் நாட்டுல ரொம்பக் கொறவுதான்...

எத்தன மைலு தூரமுனாலும் நடந்தே போயிருவாக...
கத பேசிக்கிட்டே கெளம்புனாகனா போற தூரம் தெரியாதும்பாக...

தலை சொமையா கொண்டு போக முடியாத மூட்ட முடிச்ச ஏ மேல ஏத்தி கொண்டு போவாக...
நடக்க முடியாதவுக... ஒடம்பு சவுரியமில்லாதவுக ஏமேல வந்து ஏறிக்குவாக...

படிச்சவுக... பணகாசு இருக்கவுக, அறையண - ஒரண கொடுத்து சவாரி செய்வாக...
ஆனா இன்னைக்கு எ நெலமா மாறி போனது எல்லாத்துக்கும் தெரிஞ்ச ஒன்னுதான்...

பக்கத்துத் தெருவுக்குப் போகனும்னா கூட பைக்க எடுத்துக்கிட்டு பறக்குறாக...
ரோட்ட நெறைச்சுக்கிட்டு வண்டிவாசிக எறும்பு புத்த இடிச்ச மாதி போகுதுக...

ஏதோ வடநாட்டுக்காரவுக... தொழில் பண்ணுறத்துக்கு வரும்போதும்,  வெளிநாட்டுக்காரவுக... ஊர் சுத்த வரும் போதும் அதிகமா சவாரி செய்றது ஏ மேலேயும் இருக்கும்..

பெட்ரோல் டீசல் வெல ஏறிப்போனதால நல்லாதப் போச்சு, நேரம் ஆனாலும் பரவாயில்லனு வயசான பெரிய மனுசங்க எங்கிட்ட வர்றாங்க...
மார்க்கட்டுக்குப் போற வீட்டு அம்மாவுக சவுரியமா இருக்குமுனு எனைய பயன்படுத்துறாக...

பிஞ்சுக் கொழந்தைகள பள்ளிக்கொடத்துக்குக் கொண்டு போறப்ப கொழந்தைகளோட கத மொழியும்... பாட்டுச் சத்தத்தையும் கேப்பதுல ஒரு சொகம் இருக்குதுங்க...
.....................................................................................................................................................................................................

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகத்தை மாற்றிப்போட்ட அச்சுக்கலையும், நீராவி யந்திரமும் போக்குவரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது.

மின்னல் வேகத்தில், வானத்தையும் தாண்டிப் போக நினைக்கும் இந்த விஞ்ஞானப் பயணத்தில்...
இந்த ரிக்சாக்களின் நிலை எப்படி இருக்கிறது…?

மொட்டார் வாகனங்களின் புகை சுகாதார மாசுபாடாக இருந்தாலும் இந்த நெருக்கடியான உலகத்தில் பயணிப்பதற்கு மோட்டார் வாகனங்களே சிறந்ததாக இருக்கின்றது.

ரிக்சாக்களின் மாற்று வடிவங்கள் மோட்டார் வசதியோடு வந்தாலும், அதைக் கூட வாங்க முடியாமல் வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் அழுக்கேறிய ஆடையோடு ரிக்சா மிதிப்பவர்களின் நிலையை என்ன மாற்ற முடியாதா....!

இந்த ரிக்சாக்களின் கதையும், வலியும் அரசுக்கென்ன தெரியாதா....!

எத்தனை இலவசத் திட்டங்களும்...
ஆதரவற்றவருக்கு வழங்கும் பணமும்...
வரவேற்கத்தக்கதுதான்.

அதோடு, ரிகசாக்காரங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்க வேண்டும்.


தையலும் தையல்காரர்களும்...


இன்றைய உலகத்தில் ஆடைகளின் வடிவங்களெல்லாம் பாரம்பரியங்களைக் கடந்து சென்று விட்டது.

அலங்கோலமாய் களைத்துப்போட்ட வடிவங்களே நடைமுறையில் ஆடைகளின் கலாச்சாரமாக இருக்கின்றன.

பெரும்பாலும், ஆண்களை விட பெண்களே, கவர்ச்சியாக உடையணிந்து வருதில் கூச்சப்படுவதில்லை.

சட்டை மற்றும் பேன்ட் மடிப்புகளில் பல நூறு டிசையின்கள் ஜவளிக்கடைகளில் குவிந்து கிடக்கின்றன.

ஆடைகளை இறுக்கமாகவும், இல்லையென்றால் மிகவும் நீளமாகவும் தைத்து அணிந்து கொள்கிறார்கள்.

எம்பிராய்டிங் என்ற முறையில் பெண்களுக்குப் பூக்களிலும் ஆண்களுக்கு கட்டஙகளிலும் உடைகள் தயார்செய்கிறார்கள்.

பனியன் கம்பெனிகளில் நடிகர்களையும் அல்லது கிரிக்கட் வீரர்களையும் பயங்கரமான படங்களாக அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள்.

திரைப்படத்துறையில் ஆடைகளுக்கான டிசைனர்கள் பிரமாதமாகச் செயல்படுகிறார்கள்.

இந்த சினிமா டிசைன்ரகளே இளைஞகர்கள் எந்த வடிவத்தால் ஆடைகளை உடுத்தலாம் என்பதை முடிவு செய்கிறார்கள்.

அழகிப் போட்டிகளி்ல், ஆடைகளில் வடிவங்கள் முக்கியமானதாக இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளில் இருக்கும் போது உடுத்தும் ஆடைகளில் நிறங்களும், வடிவங்களும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கின்றன.


ஆசிரியராக வேலை பார்ப்பவர்கள் விரசம் இல்லாத விதத்தில் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரே நேர்கோட்டில் நிர்ணையித்த வடிவங்களைத் துணிக்கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

இளைஞர்களை மையப்படுத்தி தயாரிக்கப்ட்ட ஜீன்ஸ் ஆடைகள் இன்றைய காலக் கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்புக்கும் பொதுவானதாக மாறிவிட்டன.

இந்த ஆடை டிசைன்களுக்கெல்லாம் பின்னால் இருக்கும் சமூகம் பல தரப்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

பெரும் முதலாளிகலாகவும், மிகவும் சிறிய குடிசைத் தொழில்களாகவும் இவற்றுக்கிடையில் இடைத்தரகர்களாகவும் இந்த மின்னணு உலக்த்தில் வாழ்க்கையைத் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.

பஞ்சிலிருந்து நூலாக நெய்யப்பட்ட தரியாக பெரும் பண்டல்களாக கொண்டுவரப்பட்ட துணியை, ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள் புதிய டிசைன்களில் வரைபடம் வரைகிறார்கள்.

ஒரே இடத்தில் பல பிரிவுகளில் குழுக்களாக இருந்து கொண்டு சில மணிநேரத்தில் நூற்றுக்கணக்கில் ஆடைகளை விதவிதமாகத் தைத்து அனுப்புகிறார்கள்.

தையல் முறைகளில் காஜா பட்டன் வைக்கும் தனித்த தொழிலமைப்பை மட்டும் வைத்து இயங்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன.
மின்சாரத்தின் மூலம் அதிநவீன அயணிங் யந்திரங்கள் தினித்துறையாகச் செய்ல்படுகிறது.

நூற்றுக்கணக்கில் மட்டும் ஆடைகளைத் தயார் செய்யும் கார்மென்ஸ்களில் தினக்கூலிகளாக அயணிங் வேலையை நம்பி வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வீட்டில் இருந்து கொண்டே உருப்படிகளை வாங்கி எடுத்து பெண்கள் ஆடைகளைத் தைத்துக் கொடுக்கிறார்கள்.

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் துணிக்கடைகளிலும் தையல்கடைகளிலும் மிகவும் நெருக்கடியாக இருக்கும்.

தையல் கடைகளுக்கு ஆட்கள் சரியாக அமையாமல் பெரும் ஏற்படுவது மிகச் சாதராணமாக இருக்கும்.

தையல் கடையில் தைப்பதற்காக அதிகமாக துணிகள் வரும் போதெல்லாம் தையல்காரர்கள் பெரும் குழப்பம் அடைகிறார்கள்.

இந்த அவர காலங்களைச் சமாளிக்க முடியாமல் தையல் தொழிலை விட்டு விடுகிறார்கள்.

எப்பேர்பட்ட டிசைன் வந்தாலும் யந்திரத்தேடு யந்திரமாக இந்தத் தையல்காரர்கள் செயல்படுகிறார்கள்.

தைக்கும் துணிகளை எங்கோ ஓர் தேசத்தில் யார் யாரோ அணியும் கொள்கிறார்கள்.

ஆனால் தைக்கும் துணிகளுக்கும் தையல்காரர்கள் உடுத்தும் ஆடைகளுக்கும் சம்மந்தம் இருப்பதில்லை. அவர்கள் மிகச் சாதாரமாண ஆடைகளையே அணிகிறார்கள்.

ஆடைகள் உடல் மறைக்கும் பங்கில் கவன ஈர்ப்பிலும் சரிபாதியாக இருக்கின்றன.

இதையே ஆள் பாதி ஆடை பாதி சொன்னால் அது மிக்க பொருத்தமானதாக இருக்கும்.