Monday, 17 September 2012

புல்லாங்குழல்...


உலக இசைக் கருவிகளில், கம்பிக் கருவிகளுக்கெல்லாம் முன்னோடியாக யாழும், தாளத்தத்துக்கு அடிப்படையாக பறையும், கற்றுக் கருவிகளுக் கெல்லாம் முன்னோடியாக புல்லாங்குழல் இருந்தது.

மூங்கில் தண்டில் வண்டுகள் குடைந்த துளைகளில் நுழைந்த காற்று, இசையாக வெளிவருவதை உணர்ந்த மனிதன் புல்லாங்குழல் செய்து கொண்டான்.

மெல்லிய மூங்கில் தண்டை நெருப்பில் இலேசாக வாட்டி, குறிப்பிட்ட இடைவெளியில் துளைகள் இட்டு, குங்கிலியம் என்னும் மெழுகு தடவி புல்லாங்குழல் தயாரிக்கப்படுகிறது.

எட்டு அங்குலத்திலிருந்து மூன்று அடி நீளம் வரை புல்லாங்குழல் தயாரிக்கிறார்கள்.

மூங்கில் மரத்தைத் தவிர மற்ற மரத்தண்டுகளையும் லெகுவாக இளைத்து உருளையாகச் செய்து புல்லாங்குழல் செய்கிறார்கள்.

உலோகத்தகடுகளிலும் விலங்குகளின் எலும்புகளிலும் இன்று, புல்லாயங்குழல் செய்கிறார்கள்.

துளைகளுக்குப் பதிலாக காற்றின் விசைக்கேற்ப கீ வைத்த பட்டன்களை புல்லாங்குழலில் பயன்படுத்துகிறார்கள்.

சீனர்கள் புல்லாங்குழலில் மாறுபட்ட ஒலிகளை வரவவைப்பதற்காகக், கொத்து கொத்தாக குழல்களை அடுக்கி ஊதும் சாம்போனா (Zampona) கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.

எலெக்ரானிக் கீ போர்டில் புல்லாங்குழல் ஒலியைப் பதிவு செய்து வாசித்தாலும், புல்லாங்குழலில் ஊதி வாசிக்கும் போது கிடைக்கும் இசை போல கீ போர்டில் வாசிப்பது இருக்காது என்கிறார்கள்.

கமகம் என்ற இசை உத்திகள் எல்லாம் புல்லாங்குழல் வாசிப்பவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும்.

அதிகாலை மற்றும் மாலை நேர சூழலுக்கு பெரும்பாலும் புல்லாங்குழல் இசை ஏற்றதாக இருக்கும்.

ஹரிப் பிரதாச் சவ்ராசியர் என்பவர் இந்தியப் புல்லாங்குழல் இசைக் கலைகர்களில் முக்கியமானவராக இருக்கிறார்ர்.

உலப் புகழ் பெற்ற திரைப்படமான டைட்டானிக் படப் பாடலில் வாசித்த புல்லாங்குழல் இசை கல் மனதையும் கரைக்கும் என்பதுண்மை.

80 - களுக்குப் பிறகு, வெளிவந்த இளையராஜாவின் நாட்டுப்புற மரப்பைத் தழுவிய பாடல்களில், புல்லாங்குழலின் பங்கு அதிகமாக இருந்து வந்தது.

A.R. ரகுமான் முதல் படமான ரோஜா திரைப்படத்தில், தொடக்க இசையாக வரும் புல்லாங்குழல் ஓசை தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலுக்கு வாசித்த இசை முறை சீனர்களின் புல்லாங்குழல் இசையைச் சார்ந்ததாக இருப்பதை நாம் உணர முடியும்.

பெரும்பாலும் சூழலுக்குத் தக்கவாறு வசனங்களுக்குப் பின்னால் புல்லாங்குழல் வாசிப்பது திரைப்படங்களில் பிரமாதமாக இருக்கின்றது.

மேலை நாடுகளில் புல்லாங்குழலுக்கென்றே தனிக்கச்சேரிகள் நடப்பது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சங்க இலக்கியங்களில் புல்லாங்குழல் பற்றிய பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.

பெரும்பாணாற்றுப்படை மற்றும் குறிஞ்சிப்பாட்டில் ஆம்பல் பண்ணில் குழல் வாசிப்பதாகக் குறிப்புகள் வருகின்றன.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர். என்று திருக்குறளில் புல்லாங்குழல் பற்றி பேசப்படுகிறது.

"துளை செல்லும் காற்று மெலிசையாதல் அதிசயம்......"என்ற வைரமுத்துவின் பாடல் வரியும், எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற முழுப்பாடலும், புல்லாங்குழல் பற்றி பேசுகிறது.

வளையாத மூங்கிலில் ராகம் வளைந்து ஓடுதே என்று எழுதிய நா. முத்துக்குமார் பாடல் வரியும், புல்லாங்குழலின் அருமையை உணர்த்துகிறது.

பெரிய திருவிழாக்களில் நுற்றுக்கணக்கான புல்லாங்குழலைச் சுமந்து கொண்டு தனக்குப்பிடித்த மெட்டை வாசித்துக்கொண்டே புல்லாங்குழல் விற்பவரக்ளைப் பார்க்க முடியும்.

அவர்களின் குழலிசை பத்துப் பதினைந்து ரூபாய் விற்பனையிலே முடிந்து விடுகிறது.

செனாய், ரம்பெட் போன்ற, புல்லாங்குழலின் வழிவந்த பிற காற்றிசைக் கருவிகளும் புல்லாங்குழலின் சாயலாகவே இருக்கின்றன.

இனிவரும் நூற்றாண்டுகளில் விதவிதமான காற்றிசைக் கருவிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கையோடு இணைந்த புல்லாங்குழலுக்கு தனி இடம் இருந்து கொண்டே இருக்கும்.






தங்க மீன்கள்

ஒரு மழை ஜாமத்தைக் கூட
வெறுக்க நேர்ந்தது எதனால் …?

இப்போது இருட்டு மறித்தது
எல்லாத திசைகளும் குழம்பியது

பித்த வெறியில் 
பிஞ்சு மனம் பட்டுப்போனது

கடலோர மணலில் கட்டும் வீடுகள் 
அழகாகத் தான் இருக்கும்
அது வீடு என்பததால் குடிபுகவா முடியும்…?

துள்ளிக் குதித்தன தங்க மீன்கள்...

தாகத்தின் முடிவில் கடல் வற்றிப் போனது
நீந்த வழியின்றி மீன்கள் உயிர் விட நேர்ந்தது.


உருகும் தொனி

முகம் வெளிரிய வார்த்தைகள்
ஆயிரம் கொலைக்குறிப்புகளுக்குத்
தேதிகளிட்டு வக்கிழந்த சாயத்தில்
உச்சரிப்பின் முடிவுகளில் எச்சிலூறுகின்றன

மரியாதை நிமித்தமாக வேஷமிடுகின்றன

தெளிவற்ற தூரங்களில்
உடைந்த கால்களோடு பயணிக்கின்றன

பறவைகளின் ஒலி அதிரவுகளில்
சங்கதிகள் எழுதிய கமகத்தில்
இவர்களின் சிரிப்புகள் கூட
ஏதோ இரைச்ச லெனப்பட்டது.

இருளுக்குள் பதுங்கிய மௌனத்தின் மீது
டார்ச் அடித்து விளையாடுவார்கள்
என்பது தெரிந்த ஒன்று தான்

சித்தர்களின் மனவெளி வேண்டி
கெஞ்சுகிறேன் அதனாலும் உருகும் என் தொனி.

கதை சொல்லிகள்

என் கனவின் விடுதியில்
நீ தங்கிச் சென்ற நாட்கள்
ஒரு பனிக்கட்டியைப் போல
உருகியிருந்தால் பரவாயில்லை
கூண்டுக்குள் சிக்குண்ட கீரிப்பிள்ளையைப் போல
நினைகளை வெறித்துப் பார்க்கின்றன
எனக்கு எட்டிய வரை
எத்தனையோ ஆறுதல்களைச்
சொல்லிப் பார்த்து விட்டேன்
சொல்லித் தேற்றுமளவுக்கு அவ்வளவு எளிதானதா அது.

அலறல்

நினைவுகள் நுரை தள்ளி
இரவைக் கிழித்துத் தொங்கவிடும் பிம்பங்கள்
சலங்கை கட்டி ஆடுகின்றன
உயிர் அனத்தித் துடியாய் துடிக்கின்றது
மாயைச் சிலந்தியாக மனம்
தப்பிக்க வழியிருந்தும்
சுருண்டு கத்தையாக வழிகின்றது
வழி துணை இழந்த நடுப்பாதையில்
வலக்கையிலும் இடக்கையிலும்
மாறி மாறித் திரும்பி
ஊர்வலத்தில்
ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அலறுகின்றன
ஒரு சிரிப்பின் ஒளி வந்து வந்து பிழிய…

Sunday, 16 September 2012

மழலையர் பள்ளி



பிஞ்சு நடை பழகும் வயதில் கொழுந்து மொழி பேசும் குழந்தைகள், விளையாட்டாகப் படிக்கும் அழகைப் வளர்க்க மழலையர் பள்ளிகள் இன்று ஏராளம் வந்து விட்டன.

குழந்தைகளுக்கு சிறு வயதிலே நற்பண்புகளையும், படிப்பில் ஆர்வத்தையும் இயல்பாகக் கொண்டு வரும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மழலையர் பள்ளிகள் தொடக்கநிலைக்கும் முந்தைய நிலையாக இருக்கின்றது.

அதிகப்படியான புத்தரங்களோ, வீட்டுப் பாடங்களோ மழலையர் பள்ளி இருப்பதில்லை.
பெரும்பாலும் மழலையர் பள்ளியில் கற்றுத் தரப்படும் பாடங்கள் பாடல்களாகவும், படங்களாகவும், கதைகளாகவும் இருக்கின்றன.

நல்ல விசாலாமான வகுப்பறையாகவும், தனித் தனி இருக்கைகைகள் அமைக்கப்பட்டு,விளைப் பொருள்களோடு பாடம் நடத்துகிறார்கள்.

மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வகுப்பிலே,பழங்கள் இனிப்பு ரொட்டிகள் என்று பால் முதற்கொண்டு கொடுக்கிறார்கள்.

குழந்தைப் பருவத்திலே நட்பை வளர்த்துக் கொள்ளும் விதங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, ஆசிரியர்கள் குழந்தை  
மொழியில் பேசிகிறார்கள். குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.

அடிப்படையான ஆங்கில வார்த்தைகளைத் தாய் மொழியைப் போலக் கற்று கொடுக்கிறார்கள்.

அழகான சீருடையில் வரும் பழக்கத்தை மழலையர் பள்ளி முதல் பழக்கத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.   

கிளிக்குஞ்சுகளைப் போல தாவிக்கொண்டு, இரட்டை சடை பின்னி மை எழுதிய விழிகள் அசையும் நேரம் ஏதோ ஒரு ஆங்கிலப் பாடலை சரளமாக ஒப்பிக்கும் குழந்தைகளின் சிரிப்புக்கு உலகில் எதுவும் ஈடாகாது.

சட்டையை இடுப்பில் மடித்துக் கொண்டு டை கட்டி சின்ன பாதங்கள் நடந்து   வரும்  அழகில் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் அத்தனையும் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

தொடக்கத்தில் பெற்றோர் அணைப்பில் பிரிய மறுக்கும் குழந்தைகள், மழலையர் பள்ளியில் விளையாடும் நினைவிலும் பாட்டுப் பாடும் ஆர்வத்திலும் உற்சாகமாகி விடுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் கிளம்பி புத்தகப் பையை மாட்டிக் கொண்டு வாசலில் நிற்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை என்கிறார்கள்.

பொம்மைப் படங்கள் நிறைந்த புத்தகத்தில் எத்தனை பொம்மைகள்  கிருக்கிறதென்று குழந்தைகள் எண்ணிக் காட்டுகிறார்கள்.

பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பொம்மைகளைக் களைத்துப் போட்டாலும் குழந்தைகள் கற்றுக் கொண்ட பயிற்சியால் ஒழுங்காக அடுக்கி ஒன்று சேர்த்து விடுகிறார்கள்.

பல வண்ணங்களைக் கொண்டு விதவிதமான ஓவியங்களை குழந்தைகள் வரையக் கற்றுக் கொள்கிறார்கள்.

இம்மாதிரியான செய்முறைப் பயிற்சிகளே மழலையர் பள்ளிகளில், அடிப்படை பாடத்திட்டமாக இருக்கின்றது.

பல வீடுகளில் பெற்றோர்களுக்கு சுட்டிக் குழந்தைகள் பாடம் நடத்துகிறார்கள். படம் வரைந்து காட்டுகிறார்கள்.

வகுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் பெயரையும் நண்பர்கள் பெயரையும் குழந்தைகள் சொல்ல கேட்பதே பெற்றோர்களுக்கு ஒருகதை போல இருக்கும்.

வீட்டுக்கு வந்த விருந்துநர்கள் முன்னால் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடிச் சொல்லி குழந்தைகளிடம் கெஞ்சும் பெற்றோர்கள் பலரும்  இருப்பார்கள்.

இரண்டு வயதின் தொடக்கத்திலே பள்ளிக்குச் செல்ல பழகி விடுவதால் நடையுடை பேச்சில் பெற்றோர்களை விஞ்சுகிறார்கள், இந்தச்  சுட்டிக் குழந்தைகள்.

கீழ்படிதல்விட்டுக் கொடுத்தல்பகிர்ந்து உண்ணுதல்வணக்கம் செய்தல்சுத்தமாக  ஆடையணிதல் போன்ற ஒழுக்கங்களே மழலையர் பள்ளிகளில் முதன்மைப் பாடங்களாக இருகக்கின்றன. 

விவரம் அறியாத பருவத்தில் அர்த்தம் விளங்காத பத்து  - முத்து வரிகள் கொண்ட  
பாடல்களையும் நுனி நாக்கில் சரளமாக சொல்கிறார்கள்.

வகுப்பறைச் சுவர்களில்பெரும் பெரும் படங்களைக் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு படங்களில் பாடம் நடத்து கிறார்கள். இதனால் மிக எளிதாக படிக்கும் விஷியங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள்.

மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மேடையேறுகிறார்கள்.
சுதந்திரமாகப் படித்ததைச் சொல்லிப் பார்க்கிறார்கள்.

விளையாட்டாகவும், குழுச்செயல்பாடாகவும் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் நல்ல சிந்தனைகளை வளரக் உதவுகின்றன.

குழந்தைகள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் தொடந்து பாராட்டும்  
போதெல்லாம் குழந்தைகள் தன்னம்பிக்கை மிக்கவராக வளர மழலையர் பள்ளிகள் காரணமாக விளங்குகின்றன.

பல வேடங்களில் மேடையில் குழந்தைகள் வசனம் பேசும் மொழி அழகும் உடல் அசைவும் பெற்றோர்களைக் கௌரவிக்கிறது.

மழலையர் பள்ளியில் கற்றுத் தந்த அடிப்படை பாடங்கள் முதல் நிலை கல்வியில் சிறந்து விளங்குதற்கு உகந்ததாக இருக்கின்றன.

குழந்தைகளின் போக்கில் அவர்களுக்குத் தேவையான களத்தை இச்சிறு வயதிலே மழலையர் பள்ளிகள் தொடங்கி வைக்கின்றன. 

மழலையர் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகள் குழந்தைகளுக்கு விடா முயற்சியை வளர்க்கின்றன.

பெரும்பாலும் வீட்டில் ஒரே குழந்தை,என்ற நிலையில் வளந்த குழந்தைகள் மழலையர் பள்ளிக்கு வரும்போது பல குழந்தைகளுடன் பழகி நட்பும், சகோதரத்துவமும் கற்றுக் கொள்கிறார்கள்.

வளர்ந்த குழந்தைகளே சாலையைக் கடக்க முடியாத நெருக்கடியில்  இருக்கும் போது வீட்டுக்குள்ளே இருக்காமல் மழலையர் பள்ளியில் கூட்டம் கூட்டமாக குதூகளிக்கும் வாய்ப்பைக் குழந்தைகள் பெறுகிறார்கள்.

இரண்டு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்துக்குள் ஆடிப் பாடி படித்து விட்டு வகுப்பறையில் புறாக் குஞ்சுகளைப் போல் உறங்குகிறார்கள்.

இந்தச் சிறிய வயதிலே பெரிய அழுத்தங்களைப் படிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள் என சிலர் கருதினாலும், மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாடங்களைச் சிரமப்பட்டு புகுத்துவதில்லை என பள்ளி நிருவாகத்தினர் சொல்கின்றனர்.

குழந்தைகளின் விருப்பத்தின் வழியாக விளையாட்டு முறையிலே பாடங்கள் கற்றுக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

விவரம் அறியாத வயதிலே நல்ல பழக்கங்கள் அடி மனதில் நிறைவதால், பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதனால் மழலையர் பள்ளியைத் மிகவும் தேவையானதாக நினைக்கிறார்கள்.