Sunday 8 July 2012

காதல் என்றால் என்ன ?


                                                             உயிர்களுக்குப் பொதுவானது காதல்

மனிதனைத் தவிர எந்த உயிரும்
காதலைப் பகுத்தறிவதில்லை

பக்குவம் தேடும் மனிதர்கள் மட்டும்
காதலை சென்சார் செய்து கொள்கிறார்கள்.

ஒரு சமூகம் மாறியதால் காதலின் வடிவங்கள் மாறலாம். ஆனால், வழிகள் மாறாது.

ஜாதி மதம் பொருளாதாரம் கௌரவம் எல்லாம் கடந்து பல யுகங்களாகக் காதல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

காதலை மூடி மறைக்கலாம்; வெறுக்கலாம்; வன்மையாகக் கண்டிக்கலாம். ஆனால், காதல் இல்லாத ஒரு சமூதாயத்தை யாராலும் உருவாக்கிவிட முடியாது.

உலகத்தின் முதல் மனிதனின் தொடக்கத்திலிருந்து - ஒரு மனிதனின் உணர்வுகளின் அடிப்படைதான் காதல்.

மொழி பேசத் தெரியாத கல்மனிதர்களின் காலம் தொடர்ந்து,
இலக்கியம், தத்துவம், ஊடகம், இணையம் என்று காதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்க இலக்கியங்களில் 2381 பாடல்களின் வழி, காதலையும், வீரத்தையும் பாடியிருக்கிறார்கள். அதில் 1862 பாடல்கள் காதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் பாடப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், நமக்குக் கிடைக்காமல் போன பாடல்கள் எத்தனை ஆயிரம் என்று யாருக்குத் தெரியும்...

எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே உலக மொழிகள் இலக்கணம் சொல்லியிருக்கின்றன.

ஆனால், தமிழ் மொழியில் மட்டும் மனித வாழ்வியலில் காதலுக்காக தனி இலக்கணம் வகுத்தவன் சங்கத் தமிழன்.

பொரிநுதல் வியர்த்தல்
புதுமுகம் புரிதல்
நகுநயம் மறைத்தல்

-என்று தொல்காப்பியன் துளித் துளியாக விவரிக்கிறான் இந்தக் காதல் கடலின் ஆழத்தையும் அதன் ஈரத்தையும்.

மானசீகக் காதல், தெய்வீகக் காதல், லட்சியக் காதல், நாயக நாயகி பாவம் என்று நம் முன்னோர்கள் காதலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

லைலா மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ ஜூலியட், ஷாஜகான் மும்தாஜ், காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற காதல் நட்சத்திரங்களை, காதல் செய்யாதவர்களும் மறந்து விடமாட்டர்கள்.

பார்வையிலே காதல், பார்க்காமலே காதல், நாக்கை அறுத்துக் கொண்டு காதல் என்று 1980 -90 களின் தொடக்கத்தில், திரைப்படங்கள் காதலுக்கான வடிகாலாக இயங்கி வந்தன.

காதலை, இயற்கை வர்ணனையில் குழைத்து, கிராமிய மெட்டுகளில் வாசித்தது, இளைய ராஜாவின் ஹார்மோனியத் தாளங்கள்...


90 களுக்குப் பிறகு, ஏ,ஆர் ரகுமானின் இசைப்புரட்சியில், புதிய இசைக்கருவிகளின் விதவிதமான ஒலிகளில் காதலுக்கான சங்கதிகள் வாசிக்கப்பட்டன.

இந்த சமகால திரைஉலகில் பெரும்பாலும், காதலை திறந்த வெளியில் களைத்துப்போட்டு விட்டு ஒரு துள்ளல் இசையில் அதைச் சொல்வதோடு, காதலில் நல்ல பதிவுகளையும் இயக்குநர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இன்று, தேர்ந்தெடுத்துக் காதல் செய்யும் அளவுக்கு இன்று பல வகை மனிதர்களின்  - விதவிதமான எண்ணங்கள்.

கொஞ்சம் சிரித்தால் போதும், இருக்கிறது கையில் மொபையில் போன்.

பேசுகிறார்கள், பேசுகிறார்கள் மாதக்கணக்கில். உலகத்திலே செல்போன் பேசுகிறவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது இந்தியாதான் என்கிறார்கள்.

ரமேஷை விட சுரேஷ் பெட்டராக இருந்தால் பெரும்பாலானவர்கள் கைகுலுக்கிப் பிரிந்து விடுகிறார்கள்.

திரிஷா போனால் என்ன திவ்யா இருக்கிறாள் என்ற கலாச்சாரத்தில், இன்று காதலும் இலவச இணைப்பாக இருக்கிறது.

திருமணத்துக்குப் பிறகாவது காதலிக்க முடிகிறதா...
பிரியமானவர்களை நேசிக்க நேரம் இருக்கிறதா...

பிடித்தமான சமையல் - ஆசைப்பட்டுக் கேட்ட புடவை நேரம் கிடைக்கும் போது செல்கிற சுற்றுலா பயணம் - பிறந்த நாள் பரிசு - இப்படி தீர்ந்து விடாத சந்தோஷசங்கள் காதலில் ஏராளம் இருக்கிறன.

காதலின் வகுப்பில் மாணவன்தான் பண்டிதன் - என்றும்

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது. - என்று காதலைப் பக்குவமாக பதிவு செய்திருக்கிறார்கள்.


காதலில் சில விஷயங்கள் அர்த்தமில்லாமல் இருக்கிறன.
அர்த்தமில்லாத அனைத்தும் ஆழமாக இருக்கிறன.
அது ஆழமாக இருப்பதால்தான் அதற்கு அர்த்தம் புரிவதில்லை.

ஏதோ ஒர் ஈர்ப்பில், பருவ காலங்களில் ஆணும் பெண்ணும் பழகும் நிலையை affection என்றும் infatuation என்றும் ஆங்கில வார்த்தைகளில் அனுபவப்பட்டவர்களாக சொல்லிவிடுகிறார்கள்.

காதல் என்பது, திட்டமிட்டு நிகழ்வதில்லை. ஒரு சமூகத்தின் பின்னணிகள் இசைக்கும் போது மனிதர்களின் இதயங்கள் சிந்தி விடுகின்றன.

குறித்த இடத்தில் - சரியான நேரத்தில், காத்திருக்கும் போது கொந்தளித்து கிளம்பும் பரிதவிப்பின் சுமையை, காதலர்கள் மட்டுமே உணர்வார்கள்.

காத்துக் கிடந்து வராவிட்டால், நேசிப்புக்குரியவர்களை, மனகுக்குள் கண்டிக்கிறார்கள்.

அருகில் வந்தவுடன், நெஞ்சுக்குள் மழை பெய்கிறது.
கோபம் பொய்யாகிறது.

இதில் என்ன நடந்தாலும், கடைசி வரைக்கும் காத்திருக்கும் வலிமை இன்று எத்தனை காதலுக்கு இருக்கிறது. 

திரையிசைப் பாடல்கள் கேட்டு வளரும் மயக்கத்தில் பிஞ்சுப் பருவத்திலே நழுவி விடுகிறார்கள்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு கதையில் கதாநாயகனுக்குக் காதலிப்பது மட்டுமே வேலையாக இருப்பதால், அதைப்பார்த்த கிரக்கத்தில்,

காதல் செய்யும் வாலிபர்களுக்கு சொந்தக்காலில் நிற்க முடியாத பரிதாபமே யதார்த்தமாக இருக்கிறது.

திருமணம் என்று வரும் போதுதான் காதலர்களுக்கு இடையில்  ஒரு உலகப்போரே வந்து விடுகிறது.

சேட்டிங் டேட்டிங் என்று இன்றைய மாடலிங் மனிதர்களுக்கு மத்தியில், ஆடையிலும் -  அலங்காரத்திலும் காதலுக்கான குறிப்பு எழுதப்படுகிறது.

sms  என்றும் email என்றும் அனுப்பும் குறுந்தகவல்கள், நொடிக்கும் நேரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன.  

இந்தத் தகவல் தொடர்பு யுகத்தின் உச்சத்தில், மெல்லிய அதிர்வுகளைக் கூடத் தாங்க முடியாமல் தற்கொலைகளும், விவாகரத்துகளும் தொடர்ந்து கதை எழுதுகின்றன.

உலகக் கலாசசாரம் பொதுவானதால், நமக்கான அடையாளங்க
ளைத் தொலைத்து விட வேண்டியிருக்கிறது.

திரைப்படங்களைப் பார்த்து காதலை ஊக்குவிக்கும் இந்தச் சமூகம் தெருவுக்கு வந்தவுடன் எதார்த்தத்தை தோற்கடித்து விடுகிறது.

கலப்புத் திருமணங்களை ஆதரித்து வேலை வாய்ப்புகளும், நிதி உதவிகளும் அரசாங்கம் வழங்கி வரும் நேரத்தில்,

காதலர் தினத்துக்குக் கருப்புக் கொடி தாங்கிக் கொண்டு சில சமூக அமைப்புகள், தங்களின் அடிப்படை மானத்தைக் கட்டிக் காத்துக் கொள்கிறன.

காதலில் மட்டும் தான் கற்பு என்பதை உணர முடிந்தது.
கண்ணியம் இருக்கிறது, கட்டுப்பாடு இருக்கிறது.

ஆனால், எந்த இடத்தில் இருந்து காதல் வந்ததோ, அந்தக் கட்டுப்பாடுகள் எதும் இல்லாத இடத்தை நோக்கி மீண்டும் சென்று கொண்டேயிருக்கிறது, இன்றைய காதல்.

அளவற்ற சுதந்திரம் தான், இன்றைய காதல் கசப்பதற்கு முக்கிய  காரணமாக இருக்கிறது.

தொழில்நுட்பம் அதிலும் ஊடகம் என்று பெருகி விட்ட  அழுத்தத்தில் சில உண்மையான காதலர்களும்
இருக்கிறார்கள், இருப்பார்கள்.











No comments:

Post a Comment