Wednesday 15 August 2012

பனை மரங்களும், சில அடையாளங்களும்...






பனை மரம் என்பது, ஒரு அடையாளம். கிராமங்களின் கம்பீரம்.
தாவரத்தின் சாம்ராஜ்யம். தமிழகத்தின் மாநிலத் தாவரம் பனைமரம்.

சோழருக்கு அந்திப்பூ, பாண்டியருக்கு வேப்பம்பூ
சேரர்களுக்கு பனம்பூ தான் அடையாளம்.

பனைமரங்கள் பருவ முதிர்ச்சியடைய  15 ஆண்டுகள் வேண்டும்.

ஆண்பனை, பெண்பனை, கூந்தற்பனை, தாளிப்பனை என்று, 34 வகையான பனைமரங்கள் தமிழ் மண்ணின் தாவரப் பாரம்பரியம்.

தாளிப்பனை என்ற பனைமர ஓலையிலிருந்து தான் ஓலைச்சுவடிகள் தயார் செய்திருக்கிறார்கள்.

வேர் முதல் நுனி வரை பனைமரத்தைப் பயன்படுத்தலாம்.

சித்தர்கள் தங்கள் மருத்தக் குறிப்பில், பனைமரங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

சிறு நீரக நோய்களை நீக்கவும், உடம்பின் உள்ளிருக்கும் புண்களைப் போக்கவும், பனை நுங்கு - நல்ல மருந்தென்று சொல்லப்படுகிறது.

வெப்பத்தால், எலும்புகள் சூடாகும் உஷ்ணத்தில் ஏற்படும் வேர்க்குறு தழும்புகளும், அம்மைக் கொப்பளங்களும் குளிர்ந்த பனைநுங்கு நீரில் கரைந்து விடுகின்றன.

பனைமட்டைச் சாறு பிழிந்து, கண்களில் ஏற்படும் பாதிப்புகளை நம் தமிழச்சிகள் குணப்படுத்தியிருக்கிறார்கள்.
 
சோர்வை நீக்குவதற்காகவும் உடல் வலி மற்றும் அலுப்பைப் போக்குவதற்கும் பனைமர பானங்கள் பயன்படுகின்றன.

ஒரு பனைமரத்தைக் காட்டி, வழி சொல்லும் கிராமத்துக் கிழவிகளின் வார்த்தைகள், இந்தக் காற்றில் கலந்திருக்கிறன.

பனைமரத்தின் உச்சியில், சடை சடையாக கூடு கட்டும் நூற்றுக்கணக்கான தூங்கனாங்குருவிகளின் சத்தம் தொலைந்து போனதைச் சொல்லியாக வேண்டும்.

மைனாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க, யாரும் சொல்லாமல் பனைமரங்களைக் கொத்திக் கொண்டிருக்கும் மரங்கொத்திகள்.

பனைமரப் பொந்துகளில் கத்திக் கொண்டிருக்கும், பச்சைக் கிளிகளின் முத்தக் காட்சிகளை யாராலும் சென்சார் செய்ய முடியாது.

மழை காலங்களில், காலை நேரப் பனித்துளிகளின் ஈரம் காய்ந்து விடுவதற்குள், கிராமத்துச் சிறுவர்கள் - இன்னும் ஏதாவது ஒரு கிராமத்தில், பனம்பழம் பொருக்கிக் கொண்டு இருப்பாரகள்.

பனை மரத்தின் உச்சியில் ஏறி குருவி பிடிக்க கை நீட்டியவுடன், அங்கு - சுற்றி படுத்திருக்கும் பாம்பைப் பார்த்து விழந்த சிறுவர்கள் கிராமப்புரங்களில் நிச்சயம் இருப்பார்கள்.

நுங்கு மட்டையில் வண்டி செய்து, காரன் அடித்துக் கொண்டே, காலையில் இருந்து வீட்டுக்கு வராமல் ஊர் சுத்தும் சிறுவர்களின் விளையாட்டில் பனைமரங்களுக்கான பங்கும் இருக்கிறது.

ஆற்றங்கரை ஓரங்களில், தான்போக்கில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, பனைமர நிழலில் பேசிய கதைகளுக்கு இன்று வயதாயிருக்கக் கூடும்.

பனங்கருக்குகள் அடர்ந்து புதர் போல மண்டிக்கிடக்கும் குட்டிப் பனங்கன்றுகளைச் சடா முனிகள் என்று சொல்லி வைத்து, மிரட்டிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கும்.

பனை மரங்கள் வெட்டப்படும் போது, தனிமையின் பெரும் பரப்பின் அமைதியில் கல்லெறியப்படுகிறது.

தெருக்கடை வீதியிலோ, வீட்டு வாசலிலோ ஒரு பனை மரத்தை நட்டு வளர்ந்து விட முடியாது. ஏன், தோட்டத்தில் கூட பனை மரம் நட்டு வைத்து வளர்த்த அனுபவம் எதுவும் இல்லை.

சில பழமையான கல்லூரிகளில், பனைமரங்களைப் பார்க்க முடிகிறது. இதனால் அந்த கல்லூரிகளுக்கான வயதைக் கணிக்க முடியும்.

பருவகாலங்களில், மரம் ஏறும் பனையேறிகள், பனைமரத்தில் வடியும் நீரில், பதநீரும், கள்ளும் இறக்குகிறார்கள். பனங்கற்கண்டும் - கருப்பட்டியும் தயார் செய்கிறார்கள்.

பனை ஓலை வேய்ந்த குடிசைகளில், பனங்காடுகளுக்கு மிக அருகிலே குடித்தனம் நடத்துகிறார்கள் இந்தப் பனையேறிகள்.

பனையேறிகளுக்கு, சோறு போட்டது பனை மரம் தான். குடியிருக்க வீடு கட்டியது பனை ஓலையில் தான். அடுப்பு எரிவது பன மட்டையில் தான். கொதிக்கும் உலையைக் கிண்டுவது பனங்கையில் தான்.

பனை மரத்தையும் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது.

ஆனால், பருவ காலங்களைத் தவிர மற்ற நாட்களில் சோற்றுக்கு என்ன செய்வது ?

வறண்ட பூமியும், பனை மரங்களும், வாழ்விழந்து, அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தின் குறியீடாக இருக்கின்றன.

பனங்காடுகளுகளையும் பனயேறிகளையும் கடந்து போகும் மேகங்கள் கண்மூடிக் கொள்கின்றன.

இந்த மின்னணு உலகத்தில் பனையேறிகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தப் பனையேறிகள் மாவட்ட அலுவலகத்தில் அரசாங்கப் பதவியா கேட்கிறார்கள் ?

அழிந்த வாழ்வாதாரங்களுக்கு ஆதரவுதானே கேட்கிறார்கள்!

வம்சா வழியை குலத்தொழிலை தமிழின் பண்பாட்டு மரபைத் தானே கேட்கிறார்கள்...

அரசுக்கு இதில் என்ன சங்கடம் இருக்கிறது...

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதியமானும் ஔவையாரும் கள் குடித்து மகிழ்ந்த காட்சிகளைச் சங்க இலக்கியங்களில் பார்க்கலாம்.

கள் என்பது பனை மரத்தின் தாய்ப்பால்.

செயர்க்கையான உரங்களோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ
ஆராய்ச்சியாளர்களால், பயன்படுத்தும் அவசியம் பனை மரங்களுக்கு ஏற்படவில்லை.

அதனால்தான், பனைமரங்களில் கிடைக்கும் பனம்பழம் - நுங்கு பதநீர் கள் பனங்கற்கண்டும் கருப்பட்டி –– பனங்கிழங்கு பனங்குறுத்து பேன்ற உணவுப்பொருள்கள், மனிதனுக்கு எந்த பக்கவிளைவையும் இது வரைக்கும் ஏற்படுத்தவில்லை.    

பெரும்பாலும் பனையேறிகளுக்கு, சொந்தமாகப் பனைமரங்கள் இருப்பதில்லை. பெரும் நிலப்பரப்புகள் வைத்திருக்கும் முதலாளிகளிடம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மரம் ஏறுகிறார்கள்.  

பயன்பாடற்ற நீண்டவெளிக் காடுகளில், வரப்போரங்களில், தானாக வளர்ந்து நிற்கும் பனைமரங்களை மொத்த வருமானத்துக்காக, மர வெட்டுக்காரர்களிடம் முதலாளிகள் விலை பேசி விடுகிறார்கள்.

பல வருடங்களாக வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், ஒரு சில மணி நேரத்தில், துண்டு துண்டாக நறுக்கப்படுகிறன.

செங்கல் சூளைகளின் அடுப்பில், கனத்து எரிந்து சாம்பலாகின்றன.

ஒரு பழமையான தாவர இனம் இப்படி அழிக்கப்படுகிறது.

பனை மரங்களை வேட்ட அரசு தடை விதித்தால் மட்டும் தான், பனை மரங்களை நாம் பாதுகாக்க முடியும்.

பனைமரங்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டு வராவிட்டால், இனிவரும் நூற்றாண்டிகளில், பனைமரங்களை மீயூசியங்களில் தான் பார்க்க முடியும்.
 
மேல்தட்டுத் தொழில்களால், பனைமரங்கள் புழக்கத்தில் இல்லாமல் பேய்விடுகிறன. ஒரு தாய் மொழியின் அழிவைப் போல...

சந்தனமரங்களை வெட்டுவதை விட கொடுமையானது பனை மரங்களை வெட்டுவது.

வீட்டு ஒரு மரம் வளர்க்கலாம் என்று எல்லோரும் கிளம்பினாலும், அவ்வளவு விரைவாக பனைமரகளை வளர்த்துவிட முடியாது.

ஆனால், சில நொடிகளில்... பனைமரங்களை அழித்து விடுகிறார்கள்.

பனைமரங்கள் வெட்டப்பட்ட பிறகு, அந்த இடத்தின் மண்ணியல் நிலை மற்றும் மதிப்பீடுகள் எல்லாம் மாறி விடுகிறன.

பனங்காடுகள் இருந்த இடத்தில், வீட்டு மனைகள் குடியேற்றம் போக்குவரத்து நெரிசல் தெருக்கடைகள் என்று, பாதாளச் சாக்கடைகள் வரை எல்லாம் மாறிவிடுகிறன.

நகரமயமாதலின் தொடகத்தில், பனைமரங்கள் காணமல் போய்விடுகின்றன.

தமிழகம் மகான்கள் வாழ்ந்த பூமி என்பார்கள்....  

தலை வெட்டினால் உயிர்வாழாத ஜீவன்கள் பனைமரங்கள். அதாவது, சிரஞ்சீவிகள். கற்பக விருட்சங்கள் இந்தப் பனைமரங்கள்.

நம் தலைமுறைக்குப் பனைமரங்களின் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இயற்கையின் அற்புதத்தைப் புரிய வைக்க வேண்டும்.
 
எஞ்சியிருக்கும் பனைமரங்கள் எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம்.  திடீர் திடீரென்று அடுக்கு மாடிகளும் தெருக்கடைச் சந்துகளும் உடனே வரலாம்.


No comments:

Post a Comment