Wednesday 29 August 2012

ரிக்சா


இந்த நவீன உலகத்தில் அழுக்குப்படாமல் எத்தனையோ வேலை வாய்ப்புகள் வந்து விட்டாலும், ரிக்சா ஒட்டுபவர்கள் இன்னும் பழைய நூற்றாண்டின் வடிவமாகவே இருக்கிறார்கள்.

மனிதனை மனிதன் சுமந்து செல்லும் பல்லக்குத் தூக்கிகள் போலவே, இந்த ரிக்சா தொழிலும் இன்னும் மாறவில்லை.

வயிற்றுப் பிழைப்புக்காக ரோட்டோர இடுக்குகளில் ரிக்சா மிதித்தே தேய்ந்த எலும்புகளோடு கிட்டத்தட்ட 50 வயதை கடந்தவர்களும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நகர வீதிகளில் சாலை நெரிசலில் இருமிக்கொண்டே நகரும் மோட்டார் வண்டிகளை இயக்குவதே சிரமமாக இருக்கும் போது, இந்த மிதி வண்டி ரிக்சாக்களை ஓட்டுவது மிகுந்த வலியாக இருக்கும்.

வெயில் காலங்களை விட மழைக்காலங்களில் ரிக்சாவை ஓட்டிப் பிழைப்பவர்களின்  நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

மழை வரும் போது, பயணிகள் நனையாமல் ஷேர் ஆட்டோக்களில் பறந்து விடுகிறார்கள்.

மழை வந்தால் சந்தோஷம் தான். ஆனால் நடைமுறையில்....?

தரையில் விரித்து வியாபாரம் செய்பவர்களுக்கும், பிளாட்பார குடியிருப்பில் காலம் தள்ளுபவர்களோடு சேர்த்து ரிக்சா ஓட்டுபவர்களுக்கும், மழைக்காலத்தில் பஞ்சப்பாடுதான்.

பீளாஸ்டிக் பேப்பரையோ கோணிப் பையையோ தலையில் மாட்டிக் கொண்டு மழைத்துளிகள் வழிந்து ஓட, பல்லைக் கடித்துக் கொண்டு சந்தைகளில் காய்கறி மூட்டைகளை அடுக்கி ரிக்சா மிதிக்கிறார்கள்.

கைவண்டியில் நவீன வடிவமாக கண்டிபிடிக்கப்ட்ட ரிக்சா பல மாற்றங்களைத் தாண்டி வந்திருக்கிறது.

பின்னால் இரண்டு சக்கரங்களும், முன்னால் ஒரு சக்கரத்தோடும்....

வசதிக்குத் தக்கவாறு மூட்டை முடிச்சுகள் ஏற்றிச் செல்ல பின்னால் ஒரு சக்கரமும், முன்னால் இரண்டு சக்கரஙகளும் கொண்ட ரிக்சாக்களும் இன்று அதிகமாக இருக்கின்றன.

மோட்டார் ரிக்சாக்களே... நவீன ரிக்சாக்களின் கடைசி வடிவமாக இருக்கின்றன.

கல்கத்தா பீகார் போன்ற மாநிலஙகளில் 18000க்கும் மேற்பட்ட ரிக்சாக்கள் ஓடுகின்றன.
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நா வயசு முறுக்குல இருக்கப்ப ரிக்சா ஓட்ட ஆரம்புச்சே...
அன்னைக்கெல்லாம் இம்புட்டு கார் பஸ்செல்லாம் இல்லப்பா...

இன்னைக்கி...
இந்த ரோட்ல பாருங்க...
எத்தினி ஆட்டா, பைக்கு ஒதுங்க முடியில...

அப்ப எல்லாம் எங்களுக்குப் போட்டியா
குதிர வண்டிக்காரவுக இருப்பாக...
இன்னைக்கு அவுகயெல்லாம் என்னன்னமோ தொழில் பண்ணிட்டுப் போயிட்டாக...

இந்த ரிக்சாவத் தவற எனக்கு வேற தொழிலு செஞ்சு பழக்கமில்ல...
அதனாலதான இத விடமுடில...

முன்னமாதி பெருசா எங்குட்டும் சுத்தரதில்ல...
இந்தத் தெரு மொக்குலே தான் நின்னுக்குறது...
சவாரி வந்தமிட்டக்கு ஓட்டுவேப்பா...
பழக்கமானவுக... எப்பவும் வர்றவுக... வந்தாலே
அன்னைக்குப் பொழப்பு ஓடியிரும்...

முன்னமாதியெல்லாம் தூரம் தொலைக்கு
சவாரிக்குப் போறதில்ல...
கொஞ்சம் ஒடம்புக்கு ஒருமாதிரி இருந்தா
பேசாமா வீட்ல இருந்துக்குவே...

இரத்தம் சுண்டிப்போச்சுல...
பெடல மிதிக்க முடியல..
கால் நடுக்கம் கொடுக்குதுப்பா...

இந்த ரிக்சா தொழில்ல நாலு காசு பார்க்கனும்னா,
சந்த மார்க்கட்டுனு சுத்தியடிச்சா சம்பாரிச்சுப் புடலாம்...

ஒரு நா பொழுதுக்கு 1000 - த்திலிருந்து  -1500 பார்க்குறவனுக இருகானுக...

மாங்கு மாங்குனு மிதிச்சு ஓட்ன காசுல நல்ல குடிக்கிறது... அன்னக்கி சம்பாரிச்ச காச அன்னக்கே செலவுபண்ணிட்டு
ரிக்சா மிதிப்பானுக...

நானும் குடிப்பேன்...
ஒடம்பு இப்ப ஒத்துக்கிறது இல்ல...
அளவா வச்சுக்கிறது...
........................................................................................................................................................................................................

எ பெரு ரிக்சாங்க...
ஏதாவது ஒரு வெள்ளைக்கார பயதா எனக்கு பெரு வச்சுருக்கனும்னு நெனக்கிறேன்...

1940 தாம் வருசத்துல கை வண்டிக்குப் பதிலா எனைய ஓடவிட்டாங்க...

அன்னைக்கு தேதிக்கு எனக்குதான் நல்ல மவுசு...

மோட்டாரு வாகனத்துல போற அளவுக்கு பெரிய மனிசங்க, அப்ப ஊர் நாட்டுல ரொம்பக் கொறவுதான்...

எத்தன மைலு தூரமுனாலும் நடந்தே போயிருவாக...
கத பேசிக்கிட்டே கெளம்புனாகனா போற தூரம் தெரியாதும்பாக...

தலை சொமையா கொண்டு போக முடியாத மூட்ட முடிச்ச ஏ மேல ஏத்தி கொண்டு போவாக...
நடக்க முடியாதவுக... ஒடம்பு சவுரியமில்லாதவுக ஏமேல வந்து ஏறிக்குவாக...

படிச்சவுக... பணகாசு இருக்கவுக, அறையண - ஒரண கொடுத்து சவாரி செய்வாக...
ஆனா இன்னைக்கு எ நெலமா மாறி போனது எல்லாத்துக்கும் தெரிஞ்ச ஒன்னுதான்...

பக்கத்துத் தெருவுக்குப் போகனும்னா கூட பைக்க எடுத்துக்கிட்டு பறக்குறாக...
ரோட்ட நெறைச்சுக்கிட்டு வண்டிவாசிக எறும்பு புத்த இடிச்ச மாதி போகுதுக...

ஏதோ வடநாட்டுக்காரவுக... தொழில் பண்ணுறத்துக்கு வரும்போதும்,  வெளிநாட்டுக்காரவுக... ஊர் சுத்த வரும் போதும் அதிகமா சவாரி செய்றது ஏ மேலேயும் இருக்கும்..

பெட்ரோல் டீசல் வெல ஏறிப்போனதால நல்லாதப் போச்சு, நேரம் ஆனாலும் பரவாயில்லனு வயசான பெரிய மனுசங்க எங்கிட்ட வர்றாங்க...
மார்க்கட்டுக்குப் போற வீட்டு அம்மாவுக சவுரியமா இருக்குமுனு எனைய பயன்படுத்துறாக...

பிஞ்சுக் கொழந்தைகள பள்ளிக்கொடத்துக்குக் கொண்டு போறப்ப கொழந்தைகளோட கத மொழியும்... பாட்டுச் சத்தத்தையும் கேப்பதுல ஒரு சொகம் இருக்குதுங்க...
.....................................................................................................................................................................................................

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகத்தை மாற்றிப்போட்ட அச்சுக்கலையும், நீராவி யந்திரமும் போக்குவரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது.

மின்னல் வேகத்தில், வானத்தையும் தாண்டிப் போக நினைக்கும் இந்த விஞ்ஞானப் பயணத்தில்...
இந்த ரிக்சாக்களின் நிலை எப்படி இருக்கிறது…?

மொட்டார் வாகனங்களின் புகை சுகாதார மாசுபாடாக இருந்தாலும் இந்த நெருக்கடியான உலகத்தில் பயணிப்பதற்கு மோட்டார் வாகனங்களே சிறந்ததாக இருக்கின்றது.

ரிக்சாக்களின் மாற்று வடிவங்கள் மோட்டார் வசதியோடு வந்தாலும், அதைக் கூட வாங்க முடியாமல் வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் அழுக்கேறிய ஆடையோடு ரிக்சா மிதிப்பவர்களின் நிலையை என்ன மாற்ற முடியாதா....!

இந்த ரிக்சாக்களின் கதையும், வலியும் அரசுக்கென்ன தெரியாதா....!

எத்தனை இலவசத் திட்டங்களும்...
ஆதரவற்றவருக்கு வழங்கும் பணமும்...
வரவேற்கத்தக்கதுதான்.

அதோடு, ரிகசாக்காரங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்க வேண்டும்.


No comments:

Post a Comment