Wednesday 26 June 2013

மண் சோறு .


மண்ணும் மழையும் தவிர வேறெந்த தொடக்கமும் மனிதனுக்கு இல்லை.
சேறு கலக்கிச் சோறு குடிக்கப் பழகியவன், அதே சேற்றைப் பிசைந்து பக்குவப்படுத்திக் கொஞ்சம் நுட்பமாக, மண்பாண்டங்கள் செய்து கொண்டான்.

சிந்து சமவெளி – மெசபதோமியா –எகிப்து என்று, மனிதனின் மூத்த நாகரீகங்களைத் தோண்டியெடுக்கும் போதெல்லாம் அங்கு மண் பாண்டங்கள் ஏராளம் கிடைக்கின்றன.

உலை கொதிக்க – குடிநீர் தேக்க - பசுக்களுக்குத் தண்ணீர் காட்ட - நெல்லோ, கொள்ளோ, கிடைத்த பயிர் பச்சைகளைச் சேமிக்க பெரும் பெரும் குளுமைகள்அல்லது மொடாக்கள் – மனிதன் செத்தால், புதைக்க முதுமக்கள் தாழிகள் என்று, மண்ணும் மழையுமே மனிதனுக்கு தொழில் நுட்பத்தின் தொடக்கமாகும்.

நாடோடிகளுக்குப் பிறகு, அரசன் – படை - போர் என்று, குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்த மனிதக் கூட்டம் ஒவ்வொன்றும், ஒரு தொழில் செய்தது.
வண்ணார்கள் – நாவிதர்கள் – வைத்தியர்கள் – ஆசாரிகள் –பூசாரிகள் – என்று,பொற்கொல்லன் வரை இருந்த பட்டியலில் குயவர்களும் இருந்தார்கள்.

கலை என்று பார்க்கப்போனால், மனிதனுக்குத் தொழில் தான் கலையாகவும்,,கலைதான் தொழிலாகவும் இருந்தது.

ஆயக்கலை அறுபத்து நான்கு என்றால், அதில் மண் பாண்டங்கள் செய்வதும் அடங்கலாம் .

தேவையான அளவில் தண்ணீரைத் தேக்கிக் கொண்டு, களிமண்ணோடு செம்புழுதியைச் சேர்த்துக் குயவர்கள் பானைகளை வனைகிறார்கள். வெயில் காலங்களில் அதிகமான பானைகளைச் செய்து காய வைக்கிறார்கள் .

நெருப்பில் மூட்டம் செய்து ஈர பதத்தில் உள்ள பானைகளைச் சுட்டு எடுக்கிறார்கள் .
மனிதனின் கலை அத்தனையும் சடங்குகளில் சங்கமிக்கும் என்பது உலகமறிந்த ஒன்று .

சடங்குகள் என்றால்,முதல் வரிசையில் எப்போதும் வழிபாடுகளே வந்து நிற்கின்றன.

மண் பானையில் பொங்கும் அழகு பார்த்தே இனிப்புச் சோற்றுக்குப் பொங்கல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

புது மண் பானையில், தை முதல் நாள் அன்று பொங்கள் வைப்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது.

சிறு சிறு மண்கலயங்களில் நவ தானியங்கள் வளர்த்து முளைப்பாரி என்று திருவிழாக்களில் சுமந்து வரும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது.
மண்ணால் செய்த சட்டிகளை அக்கிச் சட்டிகளாக ஏந்தும் ஐதீகங்கள் குயவர்களின் வயிற்றை ஓரளவுக்கு நிரப்புகின்றன.

மண் கலயங்களில் கரகம் ஜோடித்து திருவிழா நேரத்து இரவுகளில் ஆடுகிறார்கள்.
தெய்வச் சிலைகளும், குதிரை மற்றும் பாம்பு உருவச் சிலைகள் செய்யும் வம்சா வழி மக்கள் இன்றும் இருக்கிறார்கள் . கோவில் திருவிழாக் காலங்களில் தெய்வச் சிலைகளைத் தலையில் சுமந்து கொண்டே கூட்டமாக நடந்து வருவார்கள் .

விதை சோளமோ நெல்லோ நிறைத்து வைக்கும் ஆளுயரத்தில் செய்த பெரிய மண் பானைகள் கிராமத்து வீடுகளில் இன்றும் பாதுகாப்பாக இருக்கின்றன .

அடுக்குப்பானையில் மறைத்து வைத்த முறுக்கும் அதிரசமும் தந்த சுவையை மறக்காதவர்கள் கிராமப்புறங்களில் நிச்சயம் இருப்பார்கள்.

நீரும் - மோரும் பெரும் மண் பானைகளில்,முன்னோரு காலத்தில் பொதுவில் 
வைத்த சான்றுகளை நம் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பனை மரத்திலும், தென்னை மரத்திலும் இறக்கிய கள்ளை மண் பானைகளில் நிரப்பி நுரையூட்டினார்கள்.
 

கம்பங்கூழும், சோளக்கூழும் மண் பானையில் ஊறும் போது வீடு முழுக்க கமகமக்கும் .

சோற்றுப் பருக்கைகளை விட மண் பானையில் புளித்த தண்ணீரைக் குடித்து வெளியில் கிளம்பும் கிராமத்தார்கள், மண் பானைகளின் அருமையை நன்கு அறிந்திருப்பார்கள்.

நேற்று வடிச்ச நெல்லுச்சோறும் இன்றைக்கும் மண் பானையில் மல்லியப்பூ போல மெது மெதுப்பாக இருக்கும்.

களிமண் அல்லது வண்டல் மண் என்றழைக்கப்படும் மண்ணோடு இளஞ் சிவப்பு நிறம் வரவழைப்பதற்காகச் செங்காட்டுப் புழுதி மண் சேர்க்கப்படுகிறது.
தினச் சந்தைகளிலும் வாரச் சந்தைகளிலும் மண் பானைகளை அடுக்கி விற்பனை செய்கிறார்கள்.

குதிரை பொம்மைகள் – பூந்தொட்டிகள் - கார்த்திகை தீபச் சட்டிகள் – படம் வரைந்து வண்ணம் தீட்டப்பட்ட மண் ஜாடிகள் என்று பல்வேறு பட்ட மண் பாண்டங்களை மொத்தமாகவும் சில்லரையிலும் ஆடர் செய்கிறார்கள்.
கோடை காலங்களில் குளிர்ந்த நீருக்காக மண் பாண்டங்களை அதிகமாக வாங்கிச் செல்கிறார்கள்.

சாலையோரங்களில் அரசியல் கட்சிக்காரர்கள் தண்ணீர் பந்தல்களில் மண்பானைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

பொங்கல் திருநாள் மற்றும் விநாயகர் சதூர்த்தி போன்ற காலங்களில்,வெறும் சடங்குக்காக மட்டும் இப்போது மண் பானைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
ஈமச்சடங்குகளுக்கு அழகழகான மண் ஜாடிகளைக் கிராமங்களில் இன்னும் பயன் படுத்துகிறார்கள்.

பிணம் தூக்கிப் போகிற போக்கில், பாதையோரத்தில் போட்ட மண் ஜாடிகளை எடுத்து விளையாடிய அனுபவம், கிராமத்துச் சிறுவர்களுக்கு இருக்கும் .

சுடுகாட்டில் பிணம் அடக்கம் செய்தவுடன் தோளில் மண் பானை சுமந்து பிணத்தை மூன்று முறை சுற்றி மண் பானையை கீழே போட்டு உடைப்பதை இன்னும் ஒரு சடங்கியலாக வைத்திருக்கிறார்கள். மின் மயானம் வந்த பிறகு அதெல்லாம் நகரங்களில் வழக்கிழந்து விட்டன .

பெரும் ஸ்டார் ஹோட்டல்களில் மண் பாண்டங்களை அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

பூப்போட்ட ஓவியங்கள் வரையப்பட்டு, பல விதங்களால் வார்னீஷ் செய்து கொள்கிறாகள்.

அலுமினியம்,பித்தளை,வெண்களம்,என்று உலோகங்களில் பொருட்கள் தயரிக்கப்படுவதால் மண் பானைகள் தேவையற்றதாகி விட்டது .
வெள்ளிக்கு ஈடாக சில்வர் பாத்திரங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பிளாஸ்டிக்கும், பீங்கான்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்த அவசர உலகத்தில் பயன்படுத்தப்பட்ட மண் பானைகள் மண்ணோடு மண்ணாகின்றன.
நெற்கதிர்களைக்கூட நேரில் பார்த்திராத இளம் தலைமுறைகளுக்கு, மண்பானைகளின் அருமை எப்படித் தெரியும்..?

கைக்குத்தல் அரிசியிலும், மண் பானையில் வடித்த சோற்றிலும், ஆரோக்கியம் இருக்கும் என்பதற்காக ஒன்டுக் குடித்தனங்களும், மேன்சனில் வாடகைக்கு வாழும் மாதக் கடைசிகளும் எப்படி மண் பானையில் சோறாக்க முடியும்.

“கலயத்துல கஞ்சி ஊத்திக் காட்டுக் கீரைய வதக்கிக் கட்டி மங்கொடத்த சொமந்து கிட்டு மத்தியானச் சோறு மாமனுக்குக் கொண்டு வருவேன். என்று மண் பானைகளைக், களையெடுப்புக் காடுகளில் இறக்கி வைத்து விட்டு தொலைந்து போன வாழ்க்கையைக் குனிந்து தேடிய தாய்மார்களும், இன்றைய இலவசத் திட்டத்தில் – “கேஸ் - ஸ்டவ் பயன்படுத்தும் நடை முறைகக்கு வந்து விட்டார்கள்.

300 மண் பானைகளைச் செய்வதற்கு 2000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. சூளை கட்டி அந்த 300 பானைகளைச் சுட்டால், அதில் 250 பானைகள் மட்டுமே நல்ல பதத்துக்கு வருகின்றன.

இப்படியே மூட்டு வலிக்க மண் மிதித்துக் குழைத்துக் குழைத்து மண் பாண்டங்கள் செய்து, ஒரு மாதத்துக்கு ஆயிரமோ ,இரண்டாயிரமோ பார்க்கும் குயவர்கள், உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து விடுகிறார்கள்.

“இந்த மண்ணக் கட்டிக்கிட்டு மாரடிக்கிற பொழப்பெல்லாம் எங்களோட போகட்டும் என்று வத்திப்போன வயிற்றுக்காட்டி வாயில் வந்த படி புலம்புகிறார்கள்.

ஜான் - முழம் என்று , வீட்டு மனைகள் விற்கப்படும் இந்தக் காலத்தில், தண்ணீர் நிறைந்து வழிய கண் மாய்களும் இல்லை. களி மண் எடுக்க கரை ஓரங்களும் இல்லை. பானைகளைச் சுடுவதற்கு கருவேல மரங்களும் இல்லை.

யந்திர மனிதர்கள் வாழும் இந்த மென் பொருள் உலோக யுகத்தில் மண் பானைகள் காலம் கழித்துப் போட்ட தேதிகளாகி விட்டன.

இயற்கையிலிருந்து மனிதர்கள் எப்போதெல்லாம் முரண்படுகிறார்களோ , அப்போதெல்லாம் அழிவை நோக்கிச் செல்கிறார்கள் .

மருத்துவத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் வரும் போதெல்லாம் புதுபுது நோய்களும் வருவதைப் போல மின்சாதங்களால் துரித உணவுகளில் பக்க விளைவுகள் ஏற்படுவது மிகச் சாதாரணம் .

எப்போதும் சமைத்த உணவு , சூட்டிலே இருப்பதற்கும், அல்லது எந்நேரமும் குளிரிலே இருப்பதற்கும், மிகக் குறைந்த விலையில் மின்சார சாதனங்கள் ஏராளம் வந்து விட்டன.

மண் பாண்டங்கள் தயாரிப்பவர்களே மண் பானைகளில் சோறாக்குகிறார்களா…? என்ற கேள்வியில்….
 

மண் பானைகள் சாங்கியங்களுக்கும் வெறும் சடங்குகளுக்கு மட்டும் பயன்பட்டு வருகிறன.

பொன்குடம் உடைந்தாலும் பொன்னாகும், மண் குடம் உடைந்தால் என்னாகும்…?
காலம் மாறும் போது இந்த மின்னணு உலகத்தில், பாரம்பரியங்களைக் கட்டிக் காக்க அவசியமில்லாமல், வக்கிழந்தவர்களாக வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

"மண்ணும் மழையும் மனிதன் வாழத் தொடக்கமே
மண்ணில் செய்யும் கலைகள் எல்லாம் கரையுதே
இயற்கை தந்த நெருக்கம் குறைந்ததே
செயற்கை வந்து சுறுக்கும் எழுதுதே
குயவன் விரல் நுனியில் பானை பளபளக்கும்
உலகம் அதை மறக்கும் சட்டென ஓடிட நினைக்கும்."


– சந்திரபால் .




No comments:

Post a Comment