Thursday 13 June 2013

வண்ணாத்திப் பாறை .




சகாராவில் காக்கா முள்ளொடித்து
தொன்மத்தில் சிதறுண்ட கதைகளுக்கு
வார்த்தைகள் தேடி வருகிறாள் வெயிலணிந்து…

சிறுக்குளத்தில் முளைத்த வண்ணாத்திப் பாறையருகே
மேயவிட்ட வெள்ளாட்டுக் குட்டியும்…

மணல் பொருக்கி
தாஜ்மஹால் குடிபுகும் அம்மணப் பேத்தியும்…

அது தவிர்த்தும்…

நரம்புகளின் தட்டச்சுப் பதிவுகளில் சத்தம் கேட்க
வருகிறாள் நிழல் மிதித்து…

பனிமலைகளைக் குழிபறிக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில்
கசாப்பு நாற்றத்தின் நினைவில் வருகிறாள் கண் ஒளி விழுந்து…

கோடாங்கிகளின் அணுத்திரள் ஒலி திரண்ட பதங்களும்…
சீமத்தண்ணி கெடுவும் ….
கெந்துக்காரன் வசவும்…
ஆத்தாவோட சாட்டல்களும்…
நனவோடைப் படுகையில் மிதந்து கொண்டிருக்க,

ஆவாரஞ்செடிகளில்
அழுக்குச் சேலை உரசி வருகிறாள் பொடி சுட்டு…

துரோகத்தின் துருவச் சண்டைகளோ
ஒரு ஊழிக்காலத்தில் பூக்கும் இசங்களோ
சாபாநாயகனின் பேனா மை காய்ந்த வரிகளோ
மாரடிக்கும் கூத்தோ
பருவப் பேரங்களோ
கிரிக்கட்டின் மைக்ரோ வினாடிகளோ – இன்ன பிறவும்
அறியாது வருகிறாள் வியர்வை சுமந்து… 

- சந்திரபால் .  
 

 

No comments:

Post a Comment