Monday 10 June 2013

ஒரு சின்ன சந்தோஷம் இன்று . அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .

நான் ஒரு கதை எழுதி 1 வருடம் ஆகிறது . அந்தக் கதையை படித்த ஒரு நண்ப்ர இன்று என்னைத் தொடர்பு கொண்டு " என் வாழ்க்கையை அப்படியே எழுதியிருக்கீங்க " - என்று சொன்னார் .

அந்த கதை இது தான் ............................


சமீராவின் காதல் .


சமீராவுக்குப் பர்தா அணிவதில் இன்று ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது . அடுக்கி வைத்த துணிகளில் ஒளித்து வைத்திருந்த பர்தாவை எடுத்துப் பார்க்கும் போது , கடந்து போன 2 வருடங்கள் நிதானமாக நினைவுக்கு வருகின்றன .

‘அம்மா அத்தாவ பார்க்க எப்பமா கூட்டிட்டுப் போவ’..? – கொஞ்சு மொழியில் நச்சரிக்கும் நிஷாவின் வார்த்தைகளுக்கு இப்போது தான் உண்மையான பதிலை, சமீரா சொல்வதாக நினைத்துக் கொள்கிறாள் .

திருமணம் நடந்த சில வாரங்களில் சரவணன் தனக்குப் பர்தா வாங்கிக் கையில் கொடுத்த போது , சமீரா நுணக்கமாகச் சிரித்தாள் . காதலின் ஆழ அகலங்களை நன்கு புரிந்து கொண்டாள் .நிஷா நடக்கப் பழகத் தொடங்கிய நாள் முதல், திட்டுத் திட்டாய் கசிந்த பிரட்சனைகளால் இந்த இரண்டு வருடத்தில் சமீராவும் – சரவணனும் ஆளுக்கொரு மூலையில் வெள்ளத்தில் கரை ஒதிங்கியவர்களாகப் பிரிந்து விட்டார்கள் .

சமீரா தனியாக இருக்கும் சங்கதி கேள்விப்பட்ட இளவட்டங்கள், மலின வார்த்தைகளில் பேசிப்பார்த்தார்கள் . உறவுக்கார ஆண்கள் நலம் விசாரிப்பதாக எச்சிலூரினார்கள் . பள்ளியில் உடன் பணி யாற்றும் ஆசிரியர்கள் கூட டீ குடிக்கக் கூப்பிட்டு இனிப்பாகப் பேசினார்கள் .எந்த ஒரு இச்சைக்கும் இடம் கொடுக்காமல் இரும்பு மனுசியாக சமீரா வாழப் பழகிக் கொண்டாள் .

எப்படியும் ஒரு நாள் சமீரா தன்னைத் தேடி ஓடி வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் ,சரவணன் காலம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் . வழியில் பர்தா போட்டு யாராவது போனால் , அதை தன் மனைவியாக நினைத்து மனதுக்குள் மட்டும் அழுது கொள்வான் . தன் மாமன் மகளை வைத்து, பெருசுகள் வீட்டில் பிரட்சனை பண்ணும் போதெல்லாம் சமாளித்துக் கொண்டவன் , இப்போது மாமன் மகளை வீட்டிலே தங்க வைக்க முடிவு செய்த போது , தாங்க முடியாத சரவணன் , சமீராவுக்கு போன் பண்ணி அழ ஆரம்பிக்கிறான் .

“ஏம் பிள்ளைய பார்க்கனும் . “ஏம் பிள்ளையாவது நான் பார்த்துக்கிறனே” …! சரவணன் கெஞ்சும் போது , “நாளைக்கே வர்ரே” - சமீரா சொல்கிறாள் .

வீட்டில் யார் யாரோ ஏதேதோ சொன்னாலும் , சரவணன் சொன்ன வார்த்தைகளை மட்டும் சமீரா திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கிறாள் . புது ‘கெவுன்’ வாங்கி நிஷாவுக்கு போட்டு , இன்று மட்டும் பர்தா அணியாமல் சமீரா தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் இரண்டு ‘டிக்கட்’ எடுக்கிறாள் . சரவணன் ‘ஆபீஸூ’க்குப் போகாமல் ‘லீவு’ போட்டு சமீராவுக்காகக் காத்திருக்கிறான் .

ரயில் பயணத்தில் தூங்கி எழுந்த சமீரா ,தனக்குள் தயங்கி வருத்தப்படுகிறாள் .கொஞ்ச நேரம் நகராமல் அமர்ந்து பெருமூச்சு விடுகிறாள் . ஒரு பையை எடுத்துக் கொண்டு ரயிலில் இருக்கும் ‘பார்த் ரூம்’புக்குள் சென்று வருகிறாள்.

‘ரயில்வே ஸ்டேசனி’ல் சரவணன் சமீராவுக்காகக் காத்திருக்கிறான் . “அத்தா வர்ராரு பாரு” ….! – என்று சமீரா சொன்னதும் நிஷா துள்ளிக் குதித்து ஓடுகிறாள் . நிஷா ,சரவணனின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள். “அம்முவுக்கு என்ன வேணும் சொல்லங்க” - என்று கை நீட்டி கேட்கிற அத்தனையும் நிஷாவுக்கு சரவணன் வாங்கிக் கொடுக்கிறான் .

“வீட்ல அம்மா கிட்ட சொல்லீட்டீங்ளா”….? “ம்ம் நேத்தே சொல்லீட்டேன் . பெரியக்கா உன்ன பார்க்கனும்னு வந்திருக்காங்குது”…! “ ஆமா அவுங்களுக்கு என்ன கொழந்த பொறந்திருக்கு” ….? பேசிக் கொண்டே நடந்து செல்கிறார்கள் . சமீரா பர்தா போடாமல் வந்ததை நினைத்து சரவணன் இன்னும் அதிகமாக சந்தோஷப்படுகிறான்.

சமீரா வீட்டுக்கு வந்ததும் வெறும் வார்த்தையில் மட்டும் வரவேற்கிறார்கள் . சரவணனின் அம்மா கூட முகம் கொடுத்து பேச வில்லை . பெரியக்கா நாகலெட்சுமி தான் நிஷாவுக்குச் சோறு ஊட்டி விடுகிறாள் . “சமீரு , நீ வருவனு நேத்துல இருந்தே சாரு ‘ஆபிஸ்சு’க்கு லீவு விட்டாரு”….! “ஏன்ட சொன்னாரு அண்ணி”....! காதலிக்கும் போது சரவணன் விட்டுக்கு வந்த சமீராவாகவே, இன்று வெட்கத்தில் தலை குனிந்து சொல்கிறாள்.

கதவைச் சாத்தியதும் “என்ன விட்டுட்டு எங்கடி போன” ….? கட்டியணைத்து நெருக்கித் தழுவுகிறான் . கட்டிலில் சாய்த்து அழுத்துகிறான் . “இருங்க”….! “இருங்கனு சொல்றேல”….! “நீ எதுனும் இப்ப சொல்லவேணாம்” …! “சொன்னா கேளுங்க”….! “இருங்க”….! “இப்ப வெறும் சைவம் மட்டும் தான் .இன்னம் மூனு நாளு கழிச்சு தான் எல்லாம்” . “கொஞ்சம் பொருத்துக்கங்க”…! “என்னடி” ….!”போடி…. சமி”…! “நா தான் வந்துட்டெல” ….! “நல்ல வேள ….. இன்னும் ரெண்டு வாரம் …. அறைப்பரிட்சை ‘லீவு’ இங்க தான இருக்கப் பேறே …! என்ன வேணாலும் பண்ணு” …! “சமீ” ….! “ம்ம்” …! ஏங்குகிறான் சரவணன் . “எனக்கு மட்டும் என்ன மரத்துலையா கை கால் செஞ்சுருக்கு” ….! “ரெண்டு நாள் தான” …!

விடிந்ததும்…. சரவணனும் ,நிஷாவும் தூங்கிக் கொண்டிருக்க ,கருக்கல் பொழுதிலே எழுந்து சமீரா கதவைத் திறக்கிறாள் . ஆளாளுக்குப் பேசிய வார்த்தைகள் சமீராவுக்குக் கேட்கிறது . “நா இருக்கனும், இல்லனா அவ இருக்கனும்” . “பொட்டு வைக்காமா இன்னமும் மூலி மாதி குடும்பம் நடத்துறதா இருந்தா, இன்னைக்கே கெளம்ப சொல்லீரு பெரிய புள்ள” …! “ஊருல மான மரியாதியெல்லாம் போனது போதும்” ….! “நாலு பேரு ஏல்சமா பேசுறத்துக்கு முன்னால, ஒரு பாட்லு மருந்த குடிச்சிட்டு செத்து போயிறலாம்”…! “ஒரு பொட்டச்சிக்கு என்னா இவ்வளவு ஆணவம்” …! “இந்த ரெண்டு வருஷத்துல இல்லாதது இப்ப என்னா வந்துச்சா”…? “அவன மொதோ செருப்பக் கழட்டி அடிக்கனும்”….! - சரவணனின் அம்மா கொதிக்கிறாள்.

இந்தக் கேட்கக் கூடாத வார்த்தைகளுக்காகத் தான் பிரிந்திருந்த சமீரா அவசர அவசரமாக கிளம்பினாள் . விவரம் தெரிந்ததிலிருந்து மதர்ஷாவில் படித்து வளரந்த சமீராவால் இங்கு ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை . தூங்கிக் கொண்டிருந்த நிஷாவைக் கண்கலங்கிய வார்த்தையில் எழுப்பினாள் . தூக்க மயக்கத்தில் பிள்ளையும், கணவன் சரவணனும் கண் விழித்து எழுந்தார்கள் . எழுந்ததும் நிஷாவுக்கு சரவணன் ஆசையாக முத்தம் கொடுக்கிறான் . “ஆமா இந்த முத்தம் ஒன்னு தா கொறைச்ச” ….! “ஏ வாடி”….! “நிஷாவைத் தூக்கிக் கொண்டு ‘பாத்ரூம்’புக்குள் அமர வைக்கிறாள் . “சமீ” ….! “சமீரா என்னாச்சு” ….? “இருக்கலாம்னு தான் வந்தே” [ன்]. “விடியறத்துக்குள்ள” …..! “காது குடுத்து கேக்க முடியல”….! “என்ன செய்யச் சொல்றீங்க சரவணா”….? மூக்கைச் சிந்தி ஏறிந்து விட்டு , சரவணன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ‘பேக்கை’ எடுத்துக் கொண்டு தோளில் இருக்கும் நிஷாவை இறக்காமல் நடந்தாள் சமீரா .

‘ரயில்வே ஸ்டேசனி’ல் நின்று அழுகையை அடக்கினாள். “தனியா வீடு பார்க்க ரொம்ப நேரம் ஆயிறாது எனக்கு” ….! “அப்பா , இன்னைக்கா நாளைக்கானு இருக்குறாரு”…! “வா சமி” ….! “எனக்கு யார் இருக்கா”….! “சரவணா, நா பர்தா இல்லாமா எங்கையாவது போயிருக்கேனா”….? “ஏ தல விதி” ……! “அல்லா என்ன இப்படி சோதிக்கிறா “[ன்]. “நேரம் கெடச்சா ஊருக்கு வா”….! என்று கண்ணீர் கொட்டி அழுதாள் .

“ஈரமா தா [ன்] வந்தே” [ன்]. “ஈரமாவே போறே” [ன்]…..! ரயில் வந்து நின்றது .சமீரா மூக்கை உறுஞ்சி நடந்தாள் .

சந்திரபால்.

No comments:

Post a Comment