Monday 17 June 2013

ஒச்சுக்காளை என்ற ஒச்சு .



 
குமாரைப் பார்க்க வேண்டுமென்றால் அந்தக் காளியம்மன் கோவிலுக்குச் சென்றால் பார்க்கலாம் என்பார்கள் . காளியம்மன் கோவில் திண்ணையில் ஐய்யப்பனிடம் உலக அரசியல் பேசிக் கொண்டு குமார் உட்கார்ந்திருப்பான் .
பட்டிக்காட்டில் மெத்தப் படித்தவர்கள் என்று இந்த இரண்டு இளவட்டங்களைத் தான் சொல்வார்கள். ஆனால் எந்த வேலைக்குமே போகாமல் ,ஒரு காரல் மார்க்ஸைப் போலவும் ஏங்கல்ஸைப் போலவும் குமாரும் – ஐய்யப்பனும் பேசித் திரிவார்கள்.
புளிய மரத்தடி – பெரிய குளத்துக் கரையடி – சுடுகாட்டுக் கல்லரைப் பக்கம் அதை விட்டால் மாந்தோப்பு – என்று குமாரும் ஐய்யப்பனும் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள் .  
தாஸ்தாவஸ்கியின் நடிப்புக் கோட்பாடுகள் அத்தனையும் இவர்களுக்குத் தெரியும் . பிராய்டுக்கு எதிராக வந்த லக்கானின் உளவியல் பற்றியும் இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். நீட்ஸேவின் தத்துவங்களைப் படித்து விட்டு கூலிக்கு மாரடிக்கும் இந்த கிராமத்துச் சனங்களைக் கிண்டலடித்துக் கொண்டு ஒரு வேப்ப மரத்தடியிலேயோ புளியமரத்து நிழலிலேயோ இந்த இருவரும் பொழுது போக்குவார்கள்.
பொழுது விடிந்தவுடன் புலம்பிக்கொண்டே வேலை - வெட்டி , குடும்பம் , கடன்  என்று அன்றாடம் படும் அக்கப்போர்களைப் பொறணிப் பேசிக் கொண்டு , ஒரு சிகரட் கஞ்சா புகைக்கு இந்த உலகத்தின் அனைத்து இன்பத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பெற்று கொண்டதாக ஐய்யப்பன் நினைப்பான் . ஆனால் குமார் ஏனோ இதுவரைக்கும் எந்தக் புகை – மது பழக்கத்திலும் சிக்காமல் இருக்கிறான் . ஆனால் ஊர் காரர்களோ , குமாரும் கனகஞ்சாவில் மிதப்பதாகவே நினைக்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் இந்தப் படிக்காத சனங்கள் ஐய்யப்பனுக்கும் – குமாருக்கும் நல்ல மதிப்புக் கொடுக்கிறார்கள் . இந்த இரண்டு பேரும் யாருடனும் பேசாமல் இருப்பதால் இவர்களுடன் ஏதாவது பேசலாம் என்று ஊர் மக்கள் எப்போதும் நினைப்பார்கள் .
கொய்யத் தோப்பாக இருந்தாலும் மாந்தோப்பாக இருந்தாலும் கையில் ஒரு புத்தகத்தோடு கிடைத்த நிழலில் அப்படியே அமர்ந்து விடுவார்கள் .   ஹிட்லரின் “எனது போராட்டம் பற்றியோ டால்ஸ்டாயின் “போரும் அமைதியும் பற்றியோ பேச ஆரம்பித்து விடுவார்கள்.
தோப்புக் காரர்களும் இவர்கள் இருப்பதைப் பெரிய இடைஞ்சலாக நினைக்க மாட்டார்கள் . ஏதோ ஆசைக்கு தோப்பில் இரண்டு பழங்களைப் பிடிங்கித் திண்பார்களே தவிர பை நிறைய களவாடும் புத்தியெல்லாம் இந்த இரண்டு பேருக்கும் எப்போதுமே கிடையாது .
இந்த ஊரின் பத்து ஏக்கர் மாங்காட்டையும் ஒச்சு ஒரு ஆளாக காவல் காத்து வந்தான் .  காவல் நேரத்தில் சிடுமூஞ்சியாகவே இருப்பான் ஒச்சு . இவன் ஆறு அடிக்கும் மேல் இருப்பதால் பெரியவர்களே மாந்தோப்புக்குள் நுழைய பயப்படுவார்கள் . எந்த நேரத்தில் எங்கிருந்து வந்து பிடிப்பான் என்று யாருக்கும் தெரியாது . மாங்கா திருடும் சிறுவர்கள் ஒச்சுவிடம் சிக்கிக் கொண்டால் ஒன்னுக்குப் போய் விடுவார்கள் .
அப்படி எப்போதாவது மாட்டிக் கொண்ட சிறுவர்கள் கையில் பிடிபட்டால் ஊர் மந்தைக்கு இழுத்துக் கொண்டு போய் , ஒச்சு அவர்களின் பெற்றவர்களுடைய மாணத்தைச் சந்தி சிரிக்க வைத்து விடுவான் .  
அன்றொரு நாள் அணில் கடித்த மாங்காயைக் கடித்துத் திண்று கொண்டே ஐய்யப்பனிடம் நேற்று படித்த பக்கத்தைக் குமார் பிரமாதமாகச் சொல்லிக் கொண்டு இருந்தான் .
அந்த நேரம் அங்கு வந்த ஒச்சு, திருட்டுப் பயல்களைப் பிடிக்க வருவது போல விறுவிறுவென்று வந்தான் . வந்ததும் சத்தம் போட்டுக் கத்தினான் . “குமாரு இங்க வந்து மாங்கா எடுக்குற வேலையெல்லாம் வச்சுக்காத … இதேது வேற பயலுகலா இருந்தா கட்டி வச்சு உருச்சு புடுவனப்பா …. பார்த்து நடந்துகக … ஆமா சொல்லிப்புட்டே “ –
ஒச்சுச் சொன்ன இந்த வார்த்தையை , அணில் கடித்த மாங்காயை வைத்திருந்த குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . குமார் பேசுவதற்குள் ஐய்யப்பன் எழுந்து பேசினான் . “என்ன ஒச்சு … என்னாச்சு ஒனக்கு … போயா ! போய் பொழைக்கிற பொழப்ப பாரு… சிரித்துக் கொண்ட ஐய்யப்பன் ஒச்சுவை அப்புறப்படுத்தினான் . 
குமார் ஒச்சுவை முறைத்துக் கொண்டு கண் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் . அந்தப் பார்வையில் இரண்டு வருட கதை இருப்பது ஊரே அறிந்த ஒன்று தான் .
இரண்டு வருடத்துக்கு முன்னால் சின்ன ஒரு வாக்கு வாதத்தில் பேசிய ஒச்சுவை , ஊரே நின்று தடுக்க தடுக்க குமார் தனியொரு ஆளாய் அடித்து துவட்டி எடுத்தான் . ஒச்சு உயரமாக இருந்ததால் கையில் கிடைத்தக் கருங்கற்களை எடுத்து குமார் வீச , ஒச்சு மயங்கி விழுந்தான் . அந்த நேரம் ஐய்யப்பன் வராமல் இருந்திருந்தால் ஒச்சுவைப் பிணமாகத் தான் பார்த்திருக்க முடியும் ,
“ஒரு அணில் கடிச்ச மாங்காவுக்காக இந்த சலுவட்ட பயல்ட நான் பேச்சு வாங்கனுமா….! ஆத்திரம் தாங்காமல் , ஐய்யப்பனைக் கூட்டிக் கொண்டு குமார் பெரிய குளத்துக்குப் போனான் .
“ஐய்யப்பா இன்னைக்கு ராத்திரிக்கு இருக்குது …! செஞ்ஜே ஆகனும் ….!  - என்று குமார் எகாத்தாளமாகச் சொன்னான் . “அட  ஒலட்டி விடுங்க குமாரு . பார்த்துக்கலாம் என்று ஐய்யப்பன் சொன்னதைக் குமார்  பெரிதாக வாங்கிக் கொள்ளவில்லை.
நடுச்சாமம் . ஊரே அசமடங்கிக் கொண்ட நேரம் தூரத்தில் நாய்களின் ஊலை கேட்டுக் கொண்டிருக்க … சில நாய்கள் தங்கள் வீரத்தை வாசல் படியில் அமர்ந்து கொண்டே குறிப்பால் தெரியப்படுத்திக் கொண்டிருந்தன .
குமாரும் ஐய்யப்பனும் கையில் சாக்குப் பையுடன் மாங்காட்டை நோக்கி நடந்தார்கள். கமகமவென்று கஞ்சா புகையுடன் வேட்டியைத் தளர விட்டுக்கொண்டு ஐய்யப்பன் நடந்து வந்தான் .
ஐய்யப்பன் காட்டுக்கு வெளியே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்க, வேலியை ஒரே தாவில் குமார் தாண்டி மாங்காட்டுக்குள் குதித்தான் . கும்மியிருட்டாக இருந்தாலும் எந்த மரத்தில் சுவையான மாங்காய்கள் இருக்கும் என்று குமாருக்கு நன்றாகத் தெரியும் .
வீட்டிலே முடிவு செய்து வைத்த மாமரத்தை நோக்கி சத்தமில்லாமல் குமார் நடந்தான் . இடையில் காவல் கார ஒச்ச வர நேரிட்டால் அடித்து புரட்ட இது தான் சரியான தருணம் என்று , நாலு மூலையும் பார்த்துக் கொண்டே நடந்தான் குமார் .
அவன் குறித்த மாமரத்தில் அரவம் இல்லாமலும் , மாமரத்துக்கு வலிக்காமலும் ஏறினான். அவன் ஏறும் மரத்தில் ஏதோ சலசலப்பு கேட்டது . மரம் நல்ல உயரம் என்பதால் அந்த சத்தத்தை சரியாக யூகிக்க முடியவில்லை. இரவில் பழந்திண்ணி வௌவாள்கள் வந்திருக்கலாம் என்று அடுத்தடுத்த கிளைகளில் மிதித்து குமார் ஏறினான்.
தன் தலைக்கு மேல் ஏதோ அசைவது கண்டு அவன் உணர்வதற்குள் , அதை நிதானிக்க முடியால் குமார் வெளவெளத்துப் போனான் .
தலைக்கு மேலே எவனோ ஒரு களவானி பய துள்ளி “ஐய்யையோ என்று உளரி குதிக்கு மண்ணைக் கவ்வி ஒரே ஓட்டமாக இருட்டுக்குள் ஓடிப் போனான்.
சத்தம் கேட்டு என்னமோ ஆகிப்போச்சென்று, காட்டுக்கு வெளியே நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த ஐய்யப்பன் ஓடி வந்தான் . தீடீன்று எதிர் பாராமல் தலைக்கு மேல் ஒருவன் குதித்து ஓடியதால் நடுக்கம் நிற்காமல் குமார் மரத்தில் அப்படியே நின்று விட்டான். “குமார் என்னாச்சுங்க …? என்று பதட்டத்துடன் ஐய்யப்பன் கேட்க எதும் பேசாமல் ஒரு மாங்காயும் பிடுங்காமல் குமார் கீழே இறங்கி வந்தான் .
வந்தவுடன் குமார் சொல்ல சொல்ல ஐய்யப்பன் சிரிப்பு அடக்க முடியாமல் , இனிமேலும் இங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று மேலிருந்து விழுந்தவன் பிடுங்கிய ஒரு மூட்டை மாங்காயையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
- சந்திரபால் .



No comments:

Post a Comment