Wednesday 17 July 2013

புராண நாடக்ததின் வீழ்ச்சியும் நவீன அரங்க வெளியும் ….



தமிழகத்தின் நாடகப் பாரம்பரியம் கூத்து மரபில் இருந்து வந்ததாகச் சொல்வார்கள் . புராணமாகவும் , பெரும் காப்பியமாகவும் இலக்கியத்தில் பதியப்பட்ட சுவடுகள் அரங்க வெளியில் நிகழ்த்துக் கலையாக வளர்ந்தது.

வாய்மொழியாக புழக்கத்தில் இருந்த  தொன்மக் கதைகளை நாடக பிரதிகளாக சங்கரதாஸ் சுவாமிகள் திருவிழாக் காலங்களின்  நடுச்சாமப் பொழுதுகளில் உலவ விட்டார் .

இன்னும் நம்மூர்களில் , மூக்குக்கு பொடி போட்டுக்கொண்டே கிழவன் – கிழவிகளான மனிதர்கள் நாடகச் சுருளில் இருமும் கதைசொல்லிகளாக அமர்ந்திருப்பார்கள் .

நல்லதங்காள்களைப் பற்றி சொல்லி அழுவார்கள் ; அரிச்சந்திரனின் மயான கண்டத்தில் பிணம் எரிந்த சாம்பலை அள்ளித் தெளிப்பார்கள் . மதுரை வீரனின் நெஞ்சுரத்தைச் சொல்லி , அவன் மாறுகால் மாறுகை வாங்கிய காவை ரத்தம் தோய்ந்த வார்த்தைகளில் கதைப்பார்கள். 

வள்ளி திருமணத்தில் நடந்த பெரும் கூத்தின் நையாண்டிகளை சொல்லி சிரிக்க வைப்பார்கள் .

இப்படி பழங்கதைகளை நாடகமாக வாத்தியங்களோடு எடுத்து வந்ததை சினிமா கொட்டகைகள் கொலை செய்து விட்டன .

அதிலும் குறை உயிராய் இன்னும் கிராமங்களில் ஒரு சடங்கியலாக முத்தாளம்மன் போன்ற நாடகங்களை சாமி கும்பிடுகளில் போடுவார்கள் .

பப்பூன் வந்து போகும் முதல் பாகம் முழுங்க சனமே கூடி  கைத்தட்டும் . அதற்கடுத்து நாடகக் கருவின் தொடங்கத்திலே, கூடியிருந்த முக்கால் பங்கு பேர் முழி சொக்கி தூங்கி விடுவார்கள் .

விடிந்தும் முடிவுக்கு வராத வள்ளி திருமண நாடகப் பிரதியெங்கும், வள்ளிக்கும் முருகனுக்கும் நேர்ந்த சண்டையில் யார் சாமர்த்தியமாக ஜெயித்தார்கள் என்பதெல்லாம் நடிகர்களின் திறமையைப் பொறுத்து அமையும் . 

பொதுவாக இந்தப் புராண நாடகப் பரப்பில்,  நாரதர் வேஷமிட்டு வந்தவருக்கு ‘மெத்தப் படித்தவர்’ என்ற மதிப்பு கிடைப்பதுண்டு . 

இவர் பாட ஆரம்பித்தால் நிறுத்தாமல் நூறு அடிகளை விடாமல்  வீசி தள்ளுவார். பக்கவாத்தியங்கள் நாரதரின் குரலுக்கு மல்லுக்கு நிற்கும் .

ஆனால் சில ஊர்களில் இப்போது இதெல்லாமல் குறைந்து விட்டது . திருவிழாக்கள் கொண்டாடுவதற்குக் கூட யாரும் விரும்புவதில்லை. 
100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களில் வரும் சினிமாக்களே நேரங்களை நிறைத்துவிட்டன .

இன்றைய நவீன மற்றும் பின் நவீன காலத்தில் நாடகவெளியில் பல பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு பார்வையாளர் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள் .

மேலை நாடுகளின் அரங்க சாயலில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து விதவிதமான ஒளியை பாய்ச்சி மாய உலகத்தின் பாத்திரங்களாக நடிகர்கள் வலம் வருகிறார்கள் .

நாடகம் எழுதுதல், வடிவமைத்தல், மேடை அமைப்பு, ஒளிஅமைப்பு, உடை அமைப்பு, முக ஒப்பனை, இசையமைப்பு, மேடை நிர்வாகம், நடிப்பு, இயக்குதல், குரல்வளம், பேச்சுவளம் முதலிய அனைத்தும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது .

அந்த வகையில் இம்மாதிரியான நவீன நாடகங்களை மேடையேற்றம் செய்பவர்களில் குறிப்பாக மதுரை கோவில்பட்டிக்காரர் முருகபூபதி முதல் வரிசையில் வந்து கொண்டிருக்கிறார் .

அவர் இயக்கிய மிருகவிதூசகம் – வனத்தாதி முதலிய நாடகங்களைக் 
குறிப்பிட்டுச் சொல்வதில் நவீன அரங்குவெளி தெரிய வரும் . 

-சந்திரபால் .

No comments:

Post a Comment