Friday 5 July 2013

அரசியல் தீயில் இனி எரியும் இந்தக் காதல் மலர்கள் .


“ஜாதிகள் இல்லையடி பாப்பா” “ஜாதி இரண்டொழிய வேறில்லை” “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்” என்று கூறிய பாரதி - ஔவை போன்ற சான்றோர்களின் வார்த்தைகளை குழி தோண்டி புதைத்துவிட்டது தர்மபுரி சம்பவம்.

ரத்தத்தில் உறைந்து விட்டது ஒருமலர் . ஜாதிய தீயில் மாட்டிக் கிடக்கிறது ஒருமலர். காதல் மலர்களைப் பிரித்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி விட்டது. ‘லைலா மஜ்னு’ சம்பவத்திற்கு பிறகு சரித்திரத்தில் இடம் பெறப் போகுது [திவ்யா – இளவரசன்] இந்தக் காதல். அந்தப் பறவைகள் பறக்க அனுமதிக்கப் பட்டிருந்தால் இந்த சமூகம் பாராட்டியிருக்கும்.

அந்த பறவைகளின் சிறகுகளை ஒடித்த அந்தக் குற்றவாளிகளுக்கு இந்த சமூகம் சவுக்கடி கொடுக்கும். வருங்கால சமுதாயம் புழுதி வாரி தூற்றும்.

மனித நேயங்கள் மறுக்கப்பட்டு தனிமனித கௌரவங்கள் இந்த மிருக சம்பவத்தின் பின்னணியில் நிற்கின்றன. மனிதர்கள் இந்த சம்பவத்தை மன்னிக்க மாட்டார்கள். சுயநலமிகள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.‘கௌரவக்கொலை’ என்ற ஒன்று நடைமுறையில் உள்ளது, அது நேற்று நடந்து விட்டது. காதல் மலர்களில் ஒன்று புதைக்கப்பட்டு விட்டது: ஒன்று சிறையில் அடைக்கப்பட்டு விட்டது.

இருவருமே சூழ்நிலைக் கைதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. இதை அடிப்படையாக வைத்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடை பெறப் போகின்றன. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த காதல் கதை பெரிய பங்கு வகிக்கும். ஆனால் இந்த காதல் மலர்கள் இரண்டும் அந்த பிரச்சாரத்தீயில் எரிந்து கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment