Tuesday 2 July 2013

முதியோர் இல்லம் வேண்டும் .

முதியோர் இல்லம் பற்றிய கருத்துக்கள் , நவீன காலத்துக்குப் பிறகு வலுப்பெறத் தொடங்கின.  இன்றளவும் புதுக்கவிதைகளில் – அதுவும் ஹைக்கூ வடிவத்தில் நான்கு வரிகளுக்குள் முதியோர் காப்பகங்கள் குறித்து நகைச்சுவையாக எழுதுகிறார்கள் .  
 
ஒரு பக்கக் கதைகளில் கூட பெற்றோர்களை  முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது அவதூறாகச் சொல்லப்பட்டு ,வன்மையாகக் கண்டிக்கிறார்கள.

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்களின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டிய சினிமாக்களும் நல்ல வரவேற்பை பெறுகிறதென்றே சொல்லலாம் . பிள்ளைகள் பெற்றோர்களுக்குச் செய்யும் கோரம் அதில் இழையோடுகிறது .

இந்தப் பின் நிவீனத்துவக் காலப்பெருவெளியில் , [ Post modern period] இந்த நிலைப்பாடு  மாற்றத்துக் குள்ளதாக இருக்கிறது . வளர்ந்த மேலை நாடுகளில் , வாழ்வியலின் சொர்க்கமாக முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதை நாம் தொலை  நோக்குப் பார்வையில் பார்ப்பது , இனி வரும் நூற்றாண்டுகளின் தேவையாக இருக்கும் .

நமது காலச்சாரத்தில் ‘குடும்ப அமைப்பியல் சிதைந்து பல வருடங்களான பிறகும் , இந்த முதியோர் இல்லம் பற்றிய கருத்தென்பது , பாவமாகவும் –பரிதாபமாகவும் இருந்து வருகிறது .

நம்மூர்களில் , குடும்பம் என்பது உறவுகளால் பின்னப்பட்டு , பகையாக இருந்தாலும் , கொல்லி வைக்கும் நேரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் வராமல் எதையும் செய்ய விடமாட்டார்கள் .

“என்ன இருந்து என்னப்பா , நாளைக்கு நல்லது பொல்லதுனா நாளு பேரு வேணுமப்பா – என்ற பெருசுகளின் வார்த்தைகள இன்னும் தளர்ந்து விடவில்லை . ஆனால் , மேலை நாடுகளில் தன் இறப்புச் செலவோடு  சேர்த்து, “இந்த இடத்தில் தான் என்னைப் புதைக்க வேண்டும் , அதற்கு இவ்வளவு செலவாகும் …? என்றெல்லாம் கணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

அங்கு , முதியோர் இல்லங்கள் நல்ல வசதியோடு செயல்பட்டு வருகின்றன . பல லட்ச ரூபாய் மதிப்பில் முன் பணம் கட்டி , “யாரையும் நம்பி நானில்லை என்று , நடை தளர்ந்தவர்கள்  சேர்ந்து கொள்கிறார்கள.

தள்ளாடிய வயதில் நடைபழக குழாய் பைககளும் , குழந்தைகளைப் போல பார்த்துக் கொள்ள அழகான இளம் செவிலித் தாய்களும் வெளிநாட்டு முதியோர் இல்லங்களில் பணி புரிகிறார்கள் .

முதியோர் காப்பகங்களில் சுகாதாரம் மிகுந்த மருத்துவமனையும் , நல்ல ஜீரணமாகின்ற உணவும் கிடைக்கிறது .
மெத்தப் படித்தவர்கள் , நூலகம் – செய்தித் தாள் – வார , மாத இதழ்கள் என்று வாசிக்கவும் , திரைப்படங்கள் பார்க்கவும் முறையான வசதிகளை இங்கு ஏற்படுத்தியிருக்கிறார்க்ள் .

பிள்ளைகள் படித்து வேலை வாய்ப்புகளுக்காக தொலை தூரத்திற்குச் சென்ற விடும் சூழலில் , வயது முதிர்ந்த பெற்றோர்கள் தனிமையில் இருந்த நொந்து போகாமல் , முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுகிறார்கள்.

தங்களது முதுமை பிள்ளைகளுக்குச் சுமையாக இருந்து விடாமல் , பெற்றவர்கள் முதியயோர் இல்லங்களில் தங்கி விடுகிறார்கள் .

பிற்போக்கான வாழ்வில் எந்தத் தெளிவும் பெறாமல் , தன் பிள்ளைகளை அடித்து மிரட்டி விரட்டியடித்த பெற்றோர்கள் , மீண்டும் குழந்தைகளாக தவழும் போது வாழ வழியில்லாமல் தவிக்கிறார்கள் .

சந்ததி இடைவெளியில் வளர்ந்த குழந்தைகள் ,பெற்றவர்களுக்கு ஏற்ற மனநிலையில் வளர முடியாமல் , தெரித்து ஓடி தங்களுக்கான இருப்பியலைத் தாங்களே அமைத்துக் கொள்கிறார்கள். 

இம்மாதிரியான சூழ்நிலையில் , வயது தளர்ந்த காலத்தில் முதியவர்களைத் தத்தெடுக்க சில அறக்கட்டளைகள் காப்பகங்களை நடத்தி வருகின்றன.

நல்ல தட்ப வெட்ப நிலையில் ,சுகாதாரம் மிக்க – மருத்துவ வசதி நிறைந்த முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட்டால் , பல லட்சங்களைக் கட்டி முன்பதிவு செய்ய நம் நாட்டிலே அனேகர் தயாராக இருக்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் , இனிவரும் ஆண்டுகளில் முதிர்யோர் இல்லங்கள் நல்ல வணிகமாகவும் செயல்படும் என்பதில் ஆச்சர்யமில்லை.

– சந்திரபால் .


No comments:

Post a Comment