கதைகள்

ஒரு தாடிக்காரனின் கதை

“இந்தத் தாடியை ஏன் எடுக்கக் கூடாது” ….? என்று இன்று தான் மனோகரன் யோசிக்க ஆரம்பித்தான் . ஆனால் அவ்வளவு எளிதாக வளர்ந்த தாடியா அது . மனோகரனை மனோ என்று தான் அழைப்பார்கள் . பழக்கமான நண்பர்கள் ‘தாடி’ என குறும்பாகச் சொல்வார்கள் .

மனோகரனுக்கு நல்ல அகலமான மூஞ்சியென்பதால் “காரல் மார்க்ஸ் போல தாடி வைக்கனும்” என்று சொல்வார்கள் . “இந்த சின்ன வயசுல எதுக்குப்பா இம்புட்டு மயிரு” .? சிலர் கெட்ட வார்த்தைகளிலும் திட்டுவார்கள். அதற்காகவே தன் சொந்த ஊருக்கு திரும்பும் நினைப்பில்லாமல் மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக வேலை செய்தான்.

எல்லோரலும் தாடி வைப்பது இயலாதது தான் . ஆனால் விஞ்ஞானிகளும் – எழுத்தாளர்களும் – சன்னியாசிகளும் – பைத்தியக்கார்களும் தாடி வைத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் காதல் தோல்வியடைந்தவர்கள் தான் தற்காலிகமாகத் தாடி வைக்கிறார்கள் .

மனோகரன் படித்த படிப்புக்கு இந்த சில்லைரை வேலையெல்லாம் அவனுக்கு ஒத்து வராது தான். இருந்தாலும் அவன் சம்பளத்துக்காக வேலை செய்யவில்லை. மூச்சு வாங்க ஓடி வந்தவன் ஓட முடியால் கொஞ்சம் நின்று ஓய்வெடுப்பதாகவே இந்த வேலையை நினைத்தான் .

மனோகரன் MBA படித்து அதில் கோல்ட் மெடல் வாங்கியவன் .பிரபலத் தொழிலதிபர்கள் மனோகரனை விலைக்கு வாங்க அவரசப்பட்ட தருணம் , தன் காதல் லயத்தில் நெஞ்சுடைந்து தெம்பில்லாமல் விழுந்தான் . ஒரே கல்லூரியில் 5 வருடம் படித்த மனோகரனின் காதலுக்கான வயதும் ஐந்து தான்.

ஒரு மின்னல் வேகத்தில் வந்த காதல் 5 வருடங்கள் கடந்து வந்து , நேற்றுக்கு முந்தைய நாள் முடிவெடுத்து இரண்டு நாளுக்குள் திருமணம் நடந்தது. அது மூன்றாம் நாளே முடுவுக்கு வந்து விட்டது . பெற்றோர்கள் வண்டி வண்டியாக வந்திறங்கி அவன் மனைவியைத் அவர்கள் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள் .

கைக் குழந்தையாகக் கதறினான் மனோகரன் . சாகத் துடித்தவனைக் கழுத்தறுத்து போட்டது போல ஒரு மக்கள் நல மன்றம் உதவுவதாகச் சொல்லி கோர்ட் வாசலில் வைத்து நிரந்தமாகவே மனைகரனை அவன் மனைவியிடமிருந்து பிரித்து வைத்தது . வகுப்பறையில், ஆசிரியரை உட்கார வைத்து பாடம் நடத்தியவன் கல்லூரியில் குறுகி நடக்க முடியாமல், தேர்வெழுதாமலே திரும்பி வந்தான். மனோகரன் தன் உடம்பைச் சுமக்க முடியாமல் நடந்தான் .

மூன்று வருடங்கள் மூலையிலே படுத்தும் உருண்டும் வளர்த்த தாடியோடு கிளம்பினான் . தன் இருப்பதைத் தக்க வைக்க தன்னை எழுந்து நிற்க வைக்க பழைய தெம்பை வலுக்கட்டாயமாக வரவழைத்தான் . நண்பர்களின் உதவியால் போன இடத்தில் உடனே வேலை கிடைத்தது . மிகக் குறைந்த சம்பளம் வாங்கினாலும் எந்தச் செலவும் இல்லாமல் வாரம் மீன் - தலைக் கரி என்று சகல வசதியோடும் நிம்மதியாக சமைத்து மனோகரன் நாட்களைக் கடத்தினான் .

பருவ மழையில் நனைந்ததில் காய்ச்சல் வந்து படுத்த மனோகரன் இருமலுடன் சுணங்கி விழுந்தான் . நண்பர்கள் கூப்பிட்டும் வராத மனோகரனுக்கு காய்ச்சல் முற்றி பெரும் வேதனையானது . ஒரு தனியார் மருத்துவ மனையில் மனோகரன் தங்கி வைத்தியம் பார்க்க நேர்ந்தது . மருத்துவ மனையில் தனக்கு பக்கத்துப் படுக்கையில் ஒரு இளம் பெண் சிகிச்சைக்காகப் படுத்திருத்திருப்பதை மனோகரன் பார்த்தான்.

முரட்டுத் தாடியோடு அந்தப் பெண்ணைப் பார்ப்பது மனோகரனுக்கு சங்கடமாக இருந்தது. இவனுக்கு நேராக இந்தப் பெண் படுத்திருப்பதால் இவன் என்ன செய்தாலும் அவள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஐந்தாறு நாட்கள் மனோகரனை பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தவளை வெகுளியாகவே மனோகரன் நினைத்தான். நல்லிரவில் மருத்துவ மனைக்கு வெளியே இருக்கும் கடைக்குச் சென்று பிளாஸ்டிக் டம்ளரில் டீ வாங்கிக் கொண்டு தன் படுக்கை நோக்கி வந்தான் மனோகரன் .

அந்த நேரம் தன் தாய் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க அவள் தூங்காமல் மனோகரனைப் பார்த்துக் கூப்பிட்டாள். ”டீ கட இன்னம் இருக்குங்களா”…? என்று அவள் கேட்டவுன் மனோகரன் எதுவும் யோசிக்காமல் அருகில் செனறான் . “இந்தா இத குடிக்கங்க”.. டீக் கப்பை கொடுத்து விட்டு நகர்ந்தவுடன் அவள் கூப்பிட்டாள் .

“என்னங்க டீ கம்மியா இருக்கு…” அவள் கேட்டதற்கு சிறு புன்னகையுடன் மனோகரன் , “நான் குடிச்சுக்கிட்டே வந்தேன் … வேணும்னா குடிங்க… இல்லையினா கீழ ஊத்துக்கங்க ம் ….” சிரித்துக் கொண்டே தன் படுக்கையில் வந்து திரும்பி படுத்தான் , அவள் என்ன செய்வாளோ என்று திரும்பி பார்த்தான் . ஒரு சொட்டு விடாமல் மண்டி குடித்துக் கொண்டே அரைக் கண்ணில் மனோகரனைப் பார்த்தாள் அவள் .
மருத்துவ மனையில் நர்ஸூகளும் ஆயாக்களும் நோயாளிகளும் கூட நன்றாக தூக்கிக் கொண்டிருக்க இந்த இரவு முழுவதும் கண்களுக்குள் பதுக்கிய வார்த்தைகளை சமமாக இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள் .
அடுத்த நாள் அவளே வந்து மனோகரனின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு வீட்டுக் கிளம்பினாள். கிளம்பிப் போகும் போதே போன் செய்து பேசினாள் . அடுத்த நாளே சகலமும் பேசி கொஞ்சினாள் .

வாழக்கையின் அடுத்த பாதையில் தெரிகிறது. இவனும் இரண்டொரு நாளில் மருத்துவ மனையிலிருந்து தன்னுடைய அறைக்கு வந்தான் . இரவு முழுக்க எழுந்து உட்கார்ந்து யோசித்தான் . இந்த வெறுமையில் அனிச்சையாக வந்திருக்கும் சமாச்சாரங்களை உணர்ந்து மனோகரன் யாருக்கும் தெரியாமல் வெட்கப்பட்டான்.

காலை எழுந்தவுடன் சலூன் கடைக்குச் சென்று ,தாடியை எடுத்து விட்டு கொஞ்சமாய் இருந்த சடை முடியையும் குறைத்து அலுவலகம் சென்றான் . நண்பர்களுக்கு மனோகரனை பார்த்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் .

மனோகரன் வெட்கப்பட்டான் . புதுப் பொண்ணு போல கூச்சப்பட்டான். என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் மருகினான் .

அலுவலகத்தில் இருக்கும் போதே அவள் போன் செய்தாள் . ஒளிந்து கொண்டே மனோகரன் பேசினான் . இப்படி போனிலே குடும்பம் நடத்தினார்கள். தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவள் மனோகரனிடம் சொன்னாள் . சொன்னதும் மனோகரன் தனக்கு நடந்த எல்லாம் கசப்புகளையும் மறைக்காமல் அவளிடம் சொன்னான் . அதையெல்லாம் அவள் பெரிதாகவே நினைக்கவில்லை .

அவளும் தன்னைப்பற்றி சொன்னாள். தனக்கு “மாடலிங்” விருப்பம் என்று சொன்னதும் மனோகரனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. “அங்கெல்லாம் தப்பான உறவுகள் இருக்கும்ல” என்று மனோகரன் கேட்டதற்கு , சற்றும் யோசிக்காமல், “அதெல்லாம் பார்த்தால் முடியுமா … அத பற்றியெல்லாம் எனக்கு கவலையே இல்ல” . என்று நிறுத்தாமல் சிரித்தாள் அவள் . மனோகரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . யாரிடமும் சொல்ல முடியவில்லை .

இன்று விடுமுறை என்பதால் , எப்போதும் சமைப்பது போல இல்லாமல் தூக்கிக் கொண்டே இருந்தான் . காலையிலே போன ரிக் அடித்தது. அவள் எதற்கு சிரி்க்கிறாள் என்றே தெரியாமல் சிரித்துக் கொண்டே பேசினாள். விருப்பமில்லாமல் மனோகரன் அவளிடம் பேசினான்.

வீட்டில் இன்று யாருமில்லை . என் தோழிகள் எல்லோரும் இன்று வருவார்கள் என்று அவள் சொன்னாள் . மேலு.ம் அவர்களோடு சேர்ந்து நான் சந்தோமாக இருப்பேன் என்று சொன்னாள் . மனோகரன் புரியாமலே கேட்டுக் கொண்டிருந்தான் . நான்கைந்து தோழிகளுடன் கதவை மூடிக் கொண்டு “Group sex செய்வோம்” என்று கூச்சமில்லாமல் மனோகரனிடத்தில் சொன்னாள் . மனைவியாக நினைத்து கனவிலே பிள்ளை பெற்று பார்த்தவன் ஒரு கணம் இறந்தான் .

கோபப்படக் கூட முடியாமல் சரி சரி என்று சொல்லி விட்டு எப்படியோ போனை வைத்தான் மனோகரன்.
இந்த தற்காலிகமான வலி தாங்க முடியாதது தான் . ஆனால் , இதோடு

போய் விட்டதே என்று மனசைத் தேற்றவும் முடியாமல் மனோகரன் எழுந்து கண்ணாடியைப் பார்த்தான் . தாடி லேசாக வளர்ந்திருந்தது இந்த முறை தாடி யாருக்காக வளர்கிறது. எப்போதுமே அவளுக்காக மட்டும் தான் !.

- சந்திரபால் ..

.................................................................................................................................................
.................................................................................................................................................
யாரவள் ?


காலையிலிருந்தே சாப்பிடாமல் , நேரம் போக வேண்டுமென்று செந்தில் சாயக்காலம் வரை உறக்கிக் கொண்டிருந்தான் . அலுவகலத்தில் முதல் ‘சிப்டுக்கு’ப் போயிருந்த பார்த்திபன் ‘பேன்ட்’ ‘சர்ட்’ மாற்றி விட்டு உறங்கும் 
செந்தில் அருகே வந்தான். மற்ற நண்பர்கள் ஊருக்குப் போயிருந்தார்கள் .




"டே …! செந்திலு ..! என்னாடா உடம்புக்கு முடியலையா” …? போர்வையை உதறி செந்தில் எழுந்தான் . “இல்லடா நைட்டுதூங்கலையில அதான்”…! “ சரி ,நான் போயிட்டு வர்ரே …! டே, நா  வர லேட்டாகும் நீ சாப்டுரு” ….! வந்ததும் நிற்காமல், ‘பைக்’கை எடுத்துக் கொண்டு பறந்தான் பார்த்திபன் .



ஒவ்வொரு மாதக் கடைசியிலும் இப்படி தான் . சொந்த ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் இருந்தாலும் பசிக்கும் முன்பே , அம்மாவின் கை பக்குவத்தில் வகைவகையாக சாப்பிட்டதைப் பசியோடு இருக்கும் செந்தில் நினைத்துக் கொண்டான் . பார்த்திபனிடம் காசு  வாங்கி சாப்பிடலாம் என்று படுத்தே கிடந்தவன் பசியில் சோர்ந்தான் .



செந்தில் , நேற்று இரவே சரியாக சாப்பிடவில்லை .பசி குடலைக் கிள்ளியது . பெட்டியில் எப்போதோ போட்டு வைத்திருந்த சில்லரைகளைப் பொறுக்கிக் கொண்டு நடந்தான் .

கையில் இருப்பதை வைத்து இரண்டு இட்லி ஒரு தோசையெல்லாம் சாப்பிட முடியாதென்பதால் , செந்தில் தெருவோரம் தள்ளு வண்டியில் வைத்து விற்கும் வாழைப்பழங்களைப் பார்த்தான் .

12 ரூபாய்க்கும் சேர்த்து வாழைப்பழம் வாங்கிக் கொண்டு, செந்தில் தன் இருக்கும் இடத்திற்கு நடந்தான் .   


தெருவிளக்கின் வெளிச்சத்தில் இரண்டு சிறிய மூட்டைகளோடு , அழுக்குச் சேலை சுற்றி ஒரு வயதானவள் குத்த வைத்து அமர்ந்திருந்தாள் .

குறுக்கும் நெடுக்குமாக வந்து போகின்ற, வாகனங்களையோ - மனிதர்களையோ பார்க்காமல் ஏதோ ஒரு சிந்தனையில் மூக்கைச் சிந்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் .
பஞ்சத்தில் அடிபட்டவனுக்குத் தான் ,பசியின் அருமை புரியும் . அகதிகளுக்குத் தான் சுதந்திரத்தின் வலிமை தெரியும் . வாழைப்பழங்களோடு வரும் செந்தில் , கிறுக்கச்சி போல தோன்றும் அவளிடம் வந்தான் .

“இந்தாங்கமா” ….! நான்கு வாழைப் பழங்களை எடுத்து நீட்டினான் செந்தில் . “அதல்லாம் ஒன்னும் வேணாம்” …! அகங்காரத்தோடு அவள் பேசி மறுத்தாள் .

“அம்மா ,ஒங்க மகன் மாதி நெனச்சுக்கங்க” …! “இந்தங்க”….! மறுபடியும் வாழைப்பழங்களை நீட்டினான் .

“இந்தப்பா , எனக்கு பிள்ளையெல்லாம் யாருமில்ல போப்பா” ….! கோப்பட்டாள் அவள் .

அவள் சொன்னதும் , நின்றவன் அவளருகில் அமர்ந்தான் . “எனக்கு அம்மா இல்லனு நெனச்சுக்கங்க” ….! “இந்தங்க” …! கையில் கொடுத்தால் வாங்க மாட்டாள் என்று , செந்தில் மடியில் வாழைப்பழங்களை வைத்தான் .

“நீ நல்லா இருக்கனுப்பா”…..! கையெடுத்துக் கும்பிட்டாள் அவள் . 

அவள் யார் …?  உங்களுக்குத் தெரிந்தால்  சொல்லுங்கள் .
................................................................................................................................................
................................................................................................................................................


சமீராவின் காதல் .


ஒரு சின்ன சந்தோஷம் இன்று . அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .

நான் ஒரு கதை எழுதி 1 வருடம் ஆகிறது . அந்தக் கதையை படித்த ஒரு நண்ப்ர இன்று என்னைத் தொடர்பு கொண்டு " என் வாழ்க்கையை அப்படியே எழுதியிருக்கீங்க " - என்று சொன்னார் .

அந்த கதை இது தான்................

............................

சமீராவுக்குப் பர்தா அணிவதில் இன்று ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது . அடுக்கி வைத்த துணிகளில் ஒளித்து வைத்திருந்த பர்தாவை எடுத்துப் பார்க்கும் போது , கடந்து போன 2 வருடங்கள் நிதானமாக நினைவுக்கு வருகின்றன .

‘அம்மா அத்தாவ பார்க்க எப்பமா கூட்டிட்டுப் போவ’..? – கொஞ்சு மொழியில் நச்சரிக்கும் நிஷாவின் வார்த்தைகளுக்கு இப்போது தான் உண்மையான பதிலை, சமீரா சொல்வதாக நினைத்துக் கொள்கிறாள் .

திருமணம் நடந்த சில வாரங்களில் சரவணன் தனக்குப் பர்தா வாங்கிக் கையில் கொடுத்த போது , சமீரா நுணக்கமாகச் சிரித்தாள் . காதலின் ஆழ அகலங்களை நன்கு புரிந்து கொண்டாள் .நிஷா நடக்கப் பழகத் தொடங்கிய நாள் முதல், திட்டுத் திட்டாய் கசிந்த பிரட்சனைகளால் இந்த இரண்டு வருடத்தில் சமீராவும் – சரவணனும் ஆளுக்கொரு மூலையில் வெள்ளத்தில் கரை ஒதிங்கியவர்களாகப் பிரிந்து விட்டார்கள் .

சமீரா தனியாக இருக்கும் சங்கதி கேள்விப்பட்ட இளவட்டங்கள், மலின வார்த்தைகளில் பேசிப்பார்த்தார்கள் . உறவுக்கார ஆண்கள் நலம் விசாரிப்பதாக எச்சிலூரினார்கள் . பள்ளியில் உடன் பணி யாற்றும் ஆசிரியர்கள் கூட டீ குடிக்கக் கூப்பிட்டு இனிப்பாகப் பேசினார்கள் .எந்த ஒரு இச்சைக்கும் இடம் கொடுக்காமல் இரும்பு மனுசியாக சமீரா வாழப் பழகிக் கொண்டாள் .

எப்படியும் ஒரு நாள் சமீரா தன்னைத் தேடி ஓடி வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் ,சரவணன் காலம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் . வழியில் பர்தா போட்டு யாராவது போனால் , அதை தன் மனைவியாக நினைத்து மனதுக்குள் மட்டும் அழுது கொள்வான் . தன் மாமன் மகளை வைத்து, பெருசுகள் வீட்டில் பிரட்சனை பண்ணும் போதெல்லாம் சமாளித்துக் கொண்டவன் , இப்போது மாமன் மகளை வீட்டிலே தங்க வைக்க முடிவு செய்த போது , தாங்க முடியாத சரவணன் , சமீராவுக்கு போன் பண்ணி அழ ஆரம்பிக்கிறான் .

“ஏம் பிள்ளைய பார்க்கனும் . “ஏம் பிள்ளையாவது நான் பார்த்துக்கிறனே” …! சரவணன் கெஞ்சும் போது , “நாளைக்கே வர்ரே” - சமீரா சொல்கிறாள் .

வீட்டில் யார் யாரோ ஏதேதோ சொன்னாலும் , சரவணன் சொன்ன வார்த்தைகளை மட்டும் சமீரா திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கிறாள் . புது ‘கெவுன்’ வாங்கி நிஷாவுக்கு போட்டு , இன்று மட்டும் பர்தா அணியாமல் சமீரா தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் இரண்டு ‘டிக்கட்’ எடுக்கிறாள் . சரவணன் ‘ஆபீஸூ’க்குப் போகாமல் ‘லீவு’ போட்டு சமீராவுக்காகக் காத்திருக்கிறான் .

ரயில் பயணத்தில் தூங்கி எழுந்த சமீரா ,தனக்குள் தயங்கி வருத்தப்படுகிறாள் .கொஞ்ச நேரம் நகராமல் அமர்ந்து பெருமூச்சு விடுகிறாள் . ஒரு பையை எடுத்துக் கொண்டு ரயிலில் இருக்கும் ‘பார்த் ரூம்’புக்குள் சென்று வருகிறாள்.

‘ரயில்வே ஸ்டேசனி’ல் சரவணன் சமீராவுக்காகக் காத்திருக்கிறான் . “அத்தா வர்ராரு பாரு” ….! – என்று சமீரா சொன்னதும் நிஷா துள்ளிக் குதித்து ஓடுகிறாள் . நிஷா ,சரவணனின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள். “அம்முவுக்கு என்ன வேணும் சொல்லங்க” - என்று கை நீட்டி கேட்கிற அத்தனையும் நிஷாவுக்கு சரவணன் வாங்கிக் கொடுக்கிறான் .

“வீட்ல அம்மா கிட்ட சொல்லீட்டீங்ளா”….? “ம்ம் நேத்தே சொல்லீட்டேன் . பெரியக்கா உன்ன பார்க்கனும்னு வந்திருக்காங்குது”…! “ ஆமா அவுங்களுக்கு என்ன கொழந்த பொறந்திருக்கு” ….? பேசிக் கொண்டே நடந்து செல்கிறார்கள் . சமீரா பர்தா போடாமல் வந்ததை நினைத்து சரவணன் இன்னும் அதிகமாக சந்தோஷப்படுகிறான்.

சமீரா வீட்டுக்கு வந்ததும் வெறும் வார்த்தையில் மட்டும் வரவேற்கிறார்கள் . சரவணனின் அம்மா கூட முகம் கொடுத்து பேச வில்லை . பெரியக்கா நாகலெட்சுமி தான் நிஷாவுக்குச் சோறு ஊட்டி விடுகிறாள் . “சமீரு , நீ வருவனு நேத்துல இருந்தே சாரு ‘ஆபிஸ்சு’க்கு லீவு விட்டாரு”….! “ஏன்ட சொன்னாரு அண்ணி”....! காதலிக்கும் போது சரவணன் விட்டுக்கு வந்த சமீராவாகவே, இன்று வெட்கத்தில் தலை குனிந்து சொல்கிறாள்.

கதவைச் சாத்தியதும் “என்ன விட்டுட்டு எங்கடி போன” ….? கட்டியணைத்து நெருக்கித் தழுவுகிறான் . கட்டிலில் சாய்த்து அழுத்துகிறான் . “இருங்க”….! “இருங்கனு சொல்றேல”….! “நீ எதுனும் இப்ப சொல்லவேணாம்” …! “சொன்னா கேளுங்க”….! “இருங்க”….! “இப்ப வெறும் சைவம் மட்டும் தான் .இன்னம் மூனு நாளு கழிச்சு தான் எல்லாம்” . “கொஞ்சம் பொருத்துக்கங்க”…! “என்னடி” ….!”போடி…. சமி”…! “நா தான் வந்துட்டெல” ….! “நல்ல வேள ….. இன்னும் ரெண்டு வாரம் …. அறைப்பரிட்சை ‘லீவு’ இங்க தான இருக்கப் பேறே …! என்ன வேணாலும் பண்ணு” …! “சமீ” ….! “ம்ம்” …! ஏங்குகிறான் சரவணன் . “எனக்கு மட்டும் என்ன மரத்துலையா கை கால் செஞ்சுருக்கு” ….! “ரெண்டு நாள் தான” …!

விடிந்ததும்…. சரவணனும் ,நிஷாவும் தூங்கிக் கொண்டிருக்க ,கருக்கல் பொழுதிலே எழுந்து சமீரா கதவைத் திறக்கிறாள் . ஆளாளுக்குப் பேசிய வார்த்தைகள் சமீராவுக்குக் கேட்கிறது . “நா இருக்கனும், இல்லனா அவ இருக்கனும்” . “பொட்டு வைக்காமா இன்னமும் மூலி மாதி குடும்பம் நடத்துறதா இருந்தா, இன்னைக்கே கெளம்ப சொல்லீரு பெரிய புள்ள” …! “ஊருல மான மரியாதியெல்லாம் போனது போதும்” ….! “நாலு பேரு ஏல்சமா பேசுறத்துக்கு முன்னால, ஒரு பாட்லு மருந்த குடிச்சிட்டு செத்து போயிறலாம்”…! “ஒரு பொட்டச்சிக்கு என்னா இவ்வளவு ஆணவம்” …! “இந்த ரெண்டு வருஷத்துல இல்லாதது இப்ப என்னா வந்துச்சா”…? “அவன மொதோ செருப்பக் கழட்டி அடிக்கனும்”….! - சரவணனின் அம்மா கொதிக்கிறாள்.

இந்தக் கேட்கக் கூடாத வார்த்தைகளுக்காகத் தான் பிரிந்திருந்த சமீரா அவசர அவசரமாக கிளம்பினாள் . விவரம் தெரிந்ததிலிருந்து மதர்ஷாவில் படித்து வளரந்த சமீராவால் இங்கு ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை . தூங்கிக் கொண்டிருந்த நிஷாவைக் கண்கலங்கிய வார்த்தையில் எழுப்பினாள் . தூக்க மயக்கத்தில் பிள்ளையும், கணவன் சரவணனும் கண் விழித்து எழுந்தார்கள் . எழுந்ததும் நிஷாவுக்கு சரவணன் ஆசையாக முத்தம் கொடுக்கிறான் . “ஆமா இந்த முத்தம் ஒன்னு தா கொறைச்ச” ….! “ஏ வாடி”….! “நிஷாவைத் தூக்கிக் கொண்டு ‘பாத்ரூம்’புக்குள் அமர வைக்கிறாள் . “சமீ” ….! “சமீரா என்னாச்சு” ….? “இருக்கலாம்னு தான் வந்தே” [ன்]. “விடியறத்துக்குள்ள” …..! “காது குடுத்து கேக்க முடியல”….! “என்ன செய்யச் சொல்றீங்க சரவணா”….? மூக்கைச் சிந்தி ஏறிந்து விட்டு , சரவணன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ‘பேக்கை’ எடுத்துக் கொண்டு தோளில் இருக்கும் நிஷாவை இறக்காமல் நடந்தாள் சமீரா .

‘ரயில்வே ஸ்டேசனி’ல் நின்று அழுகையை அடக்கினாள். “தனியா வீடு பார்க்க ரொம்ப நேரம் ஆயிறாது எனக்கு” ….! “அப்பா , இன்னைக்கா நாளைக்கானு இருக்குறாரு”…! “வா சமி” ….! “எனக்கு யார் இருக்கா”….! “சரவணா, நா பர்தா இல்லாமா எங்கையாவது போயிருக்கேனா”….? “ஏ தல விதி” ……! “அல்லா என்ன இப்படி சோதிக்கிறா “[ன்]. “நேரம் கெடச்சா ஊருக்கு வா”….! என்று கண்ணீர் கொட்டி அழுதாள் .

“ஈரமா தா [ன்] வந்தே” [ன்]. “ஈரமாவே போறே” [ன்]…..! ரயில் வந்து நின்றது .சமீரா மூக்கை உறுஞ்சி நடந்தாள் .

சந்திரபால்..

.................................................................................................................................................
.................................................................................................................................................



ஒச்சுக்காளை என்ற ஒச்சு .

குமாரைப் பார்க்க வேண்டுமென்றால் அந்தக் காளியம்மன் கோவிலுக்குச் சென்றால் பார்க்கலாம் என்பார்கள் . காளியம்மன் கோவில் திண்ணையில் ஐய்யப்பனிடம் உலக அரசியல் பேசிக் கொண்டு குமார் உட்கார்ந்திருப்பான் .

பட்டிக்காட்டில் மெத்தப் படித்தவர்கள் என்று இந்த இரண்டு இளவட்டங்களைத் தான் சொல்வார்கள். ஆனால் எந்த வேலைக்குமே போகாமல் ,ஒரு காரல் மார்க்ஸைப் போலவும் ஏங்கல்ஸைப் போலவும் குமாரும் – ஐய்யப்பனும் பேசித் திரிவார்கள்.

புளிய மரத்தடி – பெரிய குளத்துக் கரையடி – சுடுகாட்டுக் கல்லரைப் பக்கம் அதை விட்டால் மாந்தோப்பு – என்று குமாரும் ஐய்யப்பனும் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள் .  

தாஸ்தாவஸ்கியின் நடிப்புக் கோட்பாடுகள் அத்தனையும் இவர்களுக்குத் தெரியும் . பிராய்டுக்கு எதிராக வந்த லக்கானின் உளவியல் பற்றியும் இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். நீட்ஸேவின் தத்துவங்களைப் படித்து விட்டு கூலிக்கு மாரடிக்கும் இந்த கிராமத்துச் சனங்களைக் கிண்டலடித்துக் கொண்டு ஒரு வேப்ப மரத்தடியிலேயோ புளியமரத்து நிழலிலேயோ இந்த இருவரும் பொழுது போக்குவார்கள்.

பொழுது விடிந்தவுடன் புலம்பிக்கொண்டே வேலை - வெட்டி , குடும்பம் , கடன்  என்று அன்றாடம் படும் அக்கப்போர்களைப் பொறணிப் பேசிக் கொண்டு , ஒரு சிகரட் கஞ்சா புகைக்கு இந்த உலகத்தின் அனைத்து இன்பத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பெற்று கொண்டதாக ஐய்யப்பன் நினைப்பான் . ஆனால் குமார் ஏனோ இதுவரைக்கும் எந்தக் புகை – மது பழக்கத்திலும் சிக்காமல் இருக்கிறான் . ஆனால் ஊர் காரர்களோ , குமாரும் கனகஞ்சாவில் மிதப்பதாகவே நினைக்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் இந்தப் படிக்காத சனங்கள் ஐய்யப்பனுக்கும் – குமாருக்கும் நல்ல மதிப்புக் கொடுக்கிறார்கள் . இந்த இரண்டு பேரும் யாருடனும் பேசாமல் இருப்பதால் இவர்களுடன் ஏதாவது பேசலாம் என்று ஊர் மக்கள் எப்போதும் நினைப்பார்கள் .

கொய்யத் தோப்பாக இருந்தாலும் மாந்தோப்பாக இருந்தாலும் கையில் ஒரு புத்தகத்தோடு கிடைத்த நிழலில் அப்படியே அமர்ந்து விடுவார்கள் .   ஹிட்லரின் “எனது போராட்டம் பற்றியோ டால்ஸ்டாயின் “போரும் அமைதியும் பற்றியோ பேச ஆரம்பித்து விடுவார்கள்.

தோப்புக் காரர்களும் இவர்கள் இருப்பதைப் பெரிய இடைஞ்சலாக நினைக்க மாட்டார்கள் . ஏதோ ஆசைக்கு தோப்பில் இரண்டு பழங்களைப் பிடிங்கித் திண்பார்களே தவிர பை நிறைய களவாடும் புத்தியெல்லாம் இந்த இரண்டு பேருக்கும் எப்போதுமே கிடையாது .

இந்த ஊரின் பத்து ஏக்கர் மாங்காட்டையும் ஒச்சு ஒரு ஆளாக காவல் காத்து வந்தான் .  காவல் நேரத்தில் சிடுமூஞ்சியாகவே இருப்பான் ஒச்சு . இவன் ஆறு அடிக்கும் மேல் இருப்பதால் பெரியவர்களே மாந்தோப்புக்குள் நுழைய பயப்படுவார்கள் . எந்த நேரத்தில் எங்கிருந்து வந்து பிடிப்பான் என்று யாருக்கும் தெரியாது . மாங்கா திருடும் சிறுவர்கள் ஒச்சுவிடம் சிக்கிக் கொண்டால் ஒன்னுக்குப் போய் விடுவார்கள் .

அப்படி எப்போதாவது மாட்டிக் கொண்ட சிறுவர்கள் கையில் பிடிபட்டால் ஊர் மந்தைக்கு இழுத்துக் கொண்டு போய் , ஒச்சு அவர்களின் பெற்றவர்களுடைய மாணத்தைச் சந்தி சிரிக்க வைத்து விடுவான் .  

அன்றொரு நாள் அணில் கடித்த மாங்காயைக் கடித்துத் திண்று கொண்டே ஐய்யப்பனிடம் நேற்று படித்த பக்கத்தைக் குமார் பிரமாதமாகச் சொல்லிக் கொண்டு இருந்தான் .

அந்த நேரம் அங்கு வந்த ஒச்சு, திருட்டுப் பயல்களைப் பிடிக்க வருவது போல விறுவிறுவென்று வந்தான் . வந்ததும் சத்தம் போட்டுக் கத்தினான் . “குமாரு இங்க வந்து மாங்கா எடுக்குற வேலையெல்லாம் வச்சுக்காத … இதேது வேற பயலுகலா இருந்தா கட்டி வச்சு உருச்சு புடுவனப்பா …. பார்த்து நடந்துகக … ஆமா சொல்லிப்புட்டே “ –

ஒச்சுச் சொன்ன இந்த வார்த்தையை , அணில் கடித்த மாங்காயை வைத்திருந்த குமாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . குமார் பேசுவதற்குள் ஐய்யப்பன் எழுந்து பேசினான் . “என்ன ஒச்சு … என்னாச்சு ஒனக்கு … போயா ! போய் பொழைக்கிற பொழப்ப பாரு… சிரித்துக் கொண்ட ஐய்யப்பன் ஒச்சுவை அப்புறப்படுத்தினான் . 

குமார் ஒச்சுவை முறைத்துக் கொண்டு கண் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் . அந்தப் பார்வையில் இரண்டு வருட கதை இருப்பது ஊரே அறிந்த ஒன்று தான் .

இரண்டு வருடத்துக்கு முன்னால் சின்ன ஒரு வாக்கு வாதத்தில் பேசிய ஒச்சுவை , ஊரே நின்று தடுக்க தடுக்க குமார் தனியொரு ஆளாய் அடித்து துவட்டி எடுத்தான் . ஒச்சு உயரமாக இருந்ததால் கையில் கிடைத்தக் கருங்கற்களை எடுத்து குமார் வீச , ஒச்சு மயங்கி விழுந்தான் . அந்த நேரம் ஐய்யப்பன் வராமல் இருந்திருந்தால் ஒச்சுவைப் பிணமாகத் தான் பார்த்திருக்க முடியும் ,

“ஒரு அணில் கடிச்ச மாங்காவுக்காக இந்த சலுவட்ட பயல்ட நான் பேச்சு வாங்கனுமா….! ஆத்திரம் தாங்காமல் , ஐய்யப்பனைக் கூட்டிக் கொண்டு குமார் பெரிய குளத்துக்குப் போனான் .

“ஐய்யப்பா இன்னைக்கு ராத்திரிக்கு இருக்குது …! செஞ்ஜே ஆகனும் ….!  - என்று குமார் எகாத்தாளமாகச் சொன்னான் . “அட  ஒலட்டி விடுங்க குமாரு . பார்த்துக்கலாம் என்று ஐய்யப்பன் சொன்னதைக் குமார்  பெரிதாக வாங்கிக் கொள்ளவில்லை.

நடுச்சாமம் . ஊரே அசமடங்கிக் கொண்ட நேரம் தூரத்தில் நாய்களின் ஊலை கேட்டுக் கொண்டிருக்க … சில நாய்கள் தங்கள் வீரத்தை வாசல் படியில் அமர்ந்து கொண்டே குறிப்பால் தெரியப்படுத்திக் கொண்டிருந்தன .

குமாரும் ஐய்யப்பனும் கையில் சாக்குப் பையுடன் மாங்காட்டை நோக்கி நடந்தார்கள். கமகமவென்று கஞ்சா புகையுடன் வேட்டியைத் தளர விட்டுக்கொண்டு ஐய்யப்பன் நடந்து வந்தான் .

ஐய்யப்பன் காட்டுக்கு வெளியே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்க, வேலியை ஒரே தாவில் குமார் தாண்டி மாங்காட்டுக்குள் குதித்தான் . கும்மியிருட்டாக இருந்தாலும் எந்த மரத்தில் சுவையான மாங்காய்கள் இருக்கும் என்று குமாருக்கு நன்றாகத் தெரியும் .

வீட்டிலே முடிவு செய்து வைத்த மாமரத்தை நோக்கி சத்தமில்லாமல் குமார் நடந்தான் . இடையில் காவல் கார ஒச்ச வர நேரிட்டால் அடித்து புரட்ட இது தான் சரியான தருணம் என்று , நாலு மூலையும் பார்த்துக் கொண்டே நடந்தான் குமார் .

அவன் குறித்த மாமரத்தில் அரவம் இல்லாமலும் , மாமரத்துக்கு வலிக்காமலும் ஏறினான். அவன் ஏறும் மரத்தில் ஏதோ சலசலப்பு கேட்டது . மரம் நல்ல உயரம் என்பதால் அந்த சத்தத்தை சரியாக யூகிக்க முடியவில்லை. இரவில் பழந்திண்ணி வௌவாள்கள் வந்திருக்கலாம் என்று அடுத்தடுத்த கிளைகளில் மிதித்து குமார் ஏறினான்.

தன் தலைக்கு மேல் ஏதோ அசைவது கண்டு அவன் உணர்வதற்குள் , அதை நிதானிக்க முடியால் குமார் வெளவெளத்துப் போனான் .

தலைக்கு மேலே எவனோ ஒரு களவானி பய துள்ளி “ஐய்யையோ என்று உளரி குதிக்கு மண்ணைக் கவ்வி ஒரே ஓட்டமாக இருட்டுக்குள் ஓடிப் போனான்.

சத்தம் கேட்டு என்னமோ ஆகிப்போச்சென்று, காட்டுக்கு வெளியே நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த ஐய்யப்பன் ஓடி வந்தான் . தீடீன்று எதிர் பாராமல் தலைக்கு மேல் ஒருவன் குதித்து ஓடியதால் நடுக்கம் நிற்காமல் குமார் மரத்தில் அப்படியே நின்று விட்டான். “குமார் என்னாச்சுங்க …? என்று பதட்டத்துடன் ஐய்யப்பன் கேட்க எதும் பேசாமல் ஒரு மாங்காயும் பிடுங்காமல் குமார் கீழே இறங்கி வந்தான் .

வந்தவுடன் குமார் சொல்ல சொல்ல ஐய்யப்பன் சிரிப்பு அடக்க முடியாமல் , இனிமேலும் இங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று மேலிருந்து விழுந்தவன் பிடுங்கிய ஒரு மூட்டை மாங்காயையும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
- சந்திரபால் .



‘பேஸ்புக்குல பேசியிருக்கேன் .




தீபாவுக்கு என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . தெளிய முடியாத விடலைப் பருவம் பிடிவாதம் இது. ஐய்யப்பனுக்கும் என்ன செய்ய வேண்டுமென்று புரியவில்லை . “எதற்காக இந்தக் காதலை செய்து தொலைத்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டான் .
தன்னை விட ஐந்து வயது குறைவானவளைக் காதலித்தது தப்பு என்று அடிக்கடி ஐய்யப்பன் நினைப்பதுண்டு. சில சமயம் இதை தலை சுத்தி மறந்து விடுவது தான் நல்லது என்றெல்லாம் நினைத்திருக்கிறான். ஆனால் , தீபா அப்படியல்ல .
ஐய்யப்பனும், தீபாவும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள். ஆனால் வேறுவேறு ஆனால் வேறுவேறு சாதியைச் சேர்ந்தவர்கள். தீபா கெஞ்சிக் கொஞ்சி காதலித்து ஐய்யப்பனிடம் சம்மதம் வாங்கியதைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கென்று ஒரு நாவல் எழுத வேண்டியிருக்கும் .
வெளியூரில் படிக்கும் தீபா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஐய்யப்பனை பஸ்டாண்டுக்கு வரச்சொல்லி பார்த்து விட்டுதான் வருவாள். இன்றும் எப்படியாவது ஐய்யப்பனைப் பார்த்தே தீர வேண்டுமென்று இந்த அர்த்த ராத்திரியில் திண்டுக்கல் பஸ்டாண்டில் இறங்கி ஐய்யப்பனிடம் போனில் பேசி அழுது கதறினாள் .
ஐய்யப்பன் எவ்வளவு சொல்லியும் தீபா கேட்கவில்லை. சரி கிளம்பி போகலாம் என்றாலும் பையில் சல்லி பைசா இல்லை .
ஊரில் யாரிடமும் ஐய்யப்பன் பேசமாட்டான். கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே, அரசு பொதுத் தேர்வுகளுக்கு நூலகங்களில் படிக்க போவதைத் தவிர எந்த வேலை வெட்டிக்கும் ஐய்யப்பன் போனதில்லை . யாருடைய தலைமையின் கீழும் வேலைப் பார்ப்பது அவனுக்கப் பிடிக்காது . அதனாலே ஊரில் இவனை ஒத்தவர்கள் யாரும் ஐய்யப்பனிடம் எந்த சகவாசமும் வைத்துக் கொள்வதில்லை .
மாதச்சம்பளம் – அன்றாடம் கூலி – கடன் - சேமிப்பு என்று, அலைந்து திரிபவர்களைக் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் ஐய்யப்பன் இந்தக் காதலை ஏதோ வேண்டாத விஷயமாக நினைத்தான் . இருந்தாலும் தீபாவை குழந்தையிலே இருந்தே பார்த்து வருவதால் அவளை மறந்து விட துணிவில்லாமல் காலம் தள்ளி வந்தான் .
போனை கட் பண்ணினாலும் , தீபா திரும்ப திரும்ப கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். காசில்லாத போது தானே காதல் வரும். காசு பணம் கூடி வரும்போது இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் இந்தளவுக்கு வராது .
பெரும் மூச்சு வாங்கி கொண்டு ஐய்யப்பன் குமாருக்கு போன் பண்ணினான்.
மெட்ராஸில் ஒரு I.T.கம்பனியில் நல்ல வேலையில் இருப்பவன் குமார் . ஊரில் இருக்கும் போது இவர்கள் இருவரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், காலை 4 மணிக்கு ஆற்றில் திருட்டு மண் தோண்டுபவர்கள் வரும் வரைக்கும் பேசிக் கொண்டு இருப்பார்கள் .
ஒரே ஊரில் பிறந்து பன்னிரெண்டு வருடம் ஒன்றாக படித்தவர்கள் குமாரும் ஐய்யப்பனும் . ஐய்யப்பன் குமாரை விட நல்ல இங்கிலீஸ் பேசத் தெரிந்தவன் . ஆனால் குமார் அப்படியில்லை . ஏதாவது ஒரு வேலைக்குப் போய் ஜாலியா இருக்க வேண்டுமென்று பம்பரமாய் பறப்பான்.
எந்த மூலைக்குப் போனாலும் ஐய்யப்பன் மிஸ்டு கால் விட்டால் போதும் , குமார் 1 மணி நேரமாது பேசுவான் . ஆனால் , ஐய்யப்பன் அடிக்கடியெல்லாம் குமாருக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்க மாட்டான் .
“குமாரு , தீபா வந்திருக்கா[ள்] … கையிலே காசு இல்ல . என்ன சொன்னாலும் கேக்கமாட்டிங்றா ! – குமாரிடம் ஐய்யப்பன் புலம்பினான் .
பக்கத்தில இருந்தாலாவது எதாவது உதவலாம் . குமாருக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை . “தீபாவ திரும்பி போகச் சொல்லுப்பா -  என்று சொல்லி விட்டு குமார் போனை வைத்து விட்டான் .
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பத்தைந்து வாங்கிக்கொண்டு ஐய்யப்பன் , தீபாவைப் பார்க்க கிளம்பினான் . ஐய்யப்பனிடம் காசிக்கிருக்காது என்று தெரிந்தே 300 ரூபாய் தீபா வைத்திருந்தாள்.
ராத்திரி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது . இனி பஸ்டாண்டில் நின்றால் போலிஸ்காரன் பிடிச்சிட்டு போயிருவான் என்று கோயமுத்தூர் வரைக்கும் போய் வர நினைத்தார்கள் .
இதுபோல காதலிப்பவர்கள் எத்தனை பேர் இந்த ‘டெக்னிக்கை செய்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் தெரியும் . கெஞ்சி கெஞ்சி லவ் பண்ண வச்சு , அப்புறம் ஒதுங்க இடமில்லாம - பத்து நிமிஸம் கூட நின்று பேச முடியாமல் அலைகிறார்கள்.
அதிக நேரம் கூடவே இருக்க வேண்டும் . யாருடைய தொந்தரவும் இருக்க கூடாதென்றால் அதுக்கு ஒரே வழி இந்த பஸ் பயணம் தான். அதுவும் இரவு நேரத்துப் பயணமென்றால் நன்றாக இருக்கும் . தெருவில் நின்று பேசினால், எல்லோரும் நம்மையே பார்க்கிற மாதிரியே இருக்கும் .
வேறென்ன தான் செய்றது ! பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள் . தீபாவின் அழுத விழிகளை ஐய்யப்பன் தொட்டுத் துடைத்தான் . முதலில் தீபா , சாய்ந்து உட்காரும் சாக்கில் ஐய்யப்பனின் கண்ணத்தை ஈரமாக்கினாள். பிறகு வேறு வழியில்லாமல் ஐய்யப்பனும் .
காலை ஆறு மணிக்கெல்லாம் குமாருக்கு போன் செய்தான் ஐய்யப்பன் . “குமாரு ஏ.டி.எம். கார்டு இருக்கு , ஒரு ஐநூறு ரூபா பணம் போட்டு விடு .
“ம் சரி . எந்த பேங்க் ஐய்யப்பா ?
“ஸ்டேட் பேங்க் தான் குமாரு ! “ஐய்யப்பா, ஸ்டேட் பேங்குல அக்கவுண்ட் இருந்தால் தான் மத்தவங்களுக்கு பணம் போட்டு விட முடியும்னு இந்த மாசம் தான் புதுசா ரூல் கொண்டு வந்திருக்காங்க. பணம் போட்டு விடமுடியாது! “என்ன சொல்ற குமாரு! அத நம்பிதான் வந்துட்டேன். பேங்குல நூறு ரூபா தான் இருக்கு . வேற காசு இல்ல குமாரு!  
இந்த மாதிரி சங்கடத்தில் ஆளாகக் கூடாதென்றுதான் ஐய்யப்பன்,  தீபா கெஞ்சி கூப்பிட்டாலும் வர மறுத்து இருந்தான் . அதற்காக தீபாவைத் திட்டினால் சரியாக இருக்காதென்று முகம் தொங்கிப் போனான்.
குமாருக்கும் இது பெரிய கஷ்டமாக இருந்தது . இவர்களின் காதலுக்கு உதவி செய்வது குமாருக்கு ஒன்றும் புதிதல்ல. குமார் இருக்கும் தைரியத்தில் தான் ஐய்யப்பன் இப்படி எதையும் யோசிக்காமல் கிளம்பி வந்து விட்டான்.
இது கார்த்திகை மாதம் என்பதால் அடைமழை தூறிக் கொண்டே இருந்தது . கோயமுத்தூர் பஸ்டாண்டில் உட்கார கூட இடமில்லை . எல்லா இடத்திலும் ஈரம்.  திண்டுக்கல்லுக்கு திரும்பிப் போக , எப்படியும் இரு நூறு ரூபாயாவது வேண்டும். பேங்கில் இருப்பது நூறு ரூபாய் மட்டும் தான்.
தீபா, என்ன என்னவென்று ஐய்யப்பனிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள் . அவளிடம் எதையும் சொல்லாமல் தெரிந்தவருக்கெல்லாம் ஐய்யப்பன் போன் செய்து கொண்டே இருந்தான். அதிக நேரம் பேசினால் போனில் இருக்கும் காசும் போய்விடும் என்று பயம் இப்போது ஐய்யப்பனை மேலும் நோகச் செய்தது .
போனில் பேசுபவர்களும் வளவளவென்று அதிக நேரம் பேசுவதால் கடுப்பில் போனை வைத்து விட்டு ஐய்யப்பன் யோசனையில் இறங்கினான் .
இளம்பருவத்தில் வரும் காதலுக்கு இருக்கும் சக்தி சாதரணமானதல்ல. அதிலும் காதலியைப் பார்க்கவோ அல்லது அவளுக்கு பூவைத் தவிர வேறதையும் வாங்கிக் கொடுக்க வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று சில நிமிட பார்வையை மட்டும் தந்து விட்டு போவதென்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்.
இரவு முழுக்க கூடவே இருக்கும் தீபாவுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்காமல் , ‘பசிக்குதா என்று மட்டும் கேட்டுக் கொண்டே இப்படி நிற்பது ஐய்யப்பனுக்கு வேதனையாக இருந்தது .  
போனில் ரீங் அடித்தது . பெயரில்லாத நம்பர் வந்தது . யாராக இருக்குமென்று ஐய்யப்பன் அட்டன் பண்ணினான். “ ஹலோ நான் குமார் பிரண்டு காயத்திரி பேசுறேன் . நீங்க எங்க இருக்கீங்க ?
“நாங்க உக்கடத்துல இருக்கோம் . நீங்க ? “அங்கேயே இருங்க! நா இப்போ வந்திடுறே
ஐய்யப்பனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . போனில் பேசி இரண்டொரு நிமிடத்தில் மீண்டும் போன் செய்து கொண்டே காயத்திரி அருகில் வந்து நின்றாள்.
“ம் உங்கள பத்தி குமார் சொன்னாங்க…. இந்தாங்க! என்று வந்தவுடன் நூறு ரூபா தாள் சிலவற்றை எடுத்து நீட்டினாள் காயத்திரி .
                  ஐய்யப்பனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தீபாவையும், ஐய்யப்பனையும் வலுக்கட்டாயமாக கூட்டி போய் , காயத்திரி காலை டிபன் வாங்கிக் கொடுத்தாள் .
“நீங்க குமாருக்கு எப்படி பழக்கம் ? ஐய்யப்பன் சந்தோஷத்தோடு கேட்டான்.
“நான் குமார பார்த்ததே இல்ல. சும்மா ரெண்டு மாசம் தான் பழக்கம்.
குமார் பேஸ்புக்குல வர்ரப்ப பேசியிருக்கேன். என்று சொல்லி விட்டு எதிர்பார்த்திருந்த பஸ் வந்ததால் , காயத்திரி தாட்டா சொல்லி ஏறி மறைந்தாள்.
ஐய்யப்பன் குமாருக்கு போன் செய்து கொண்டே தீபாவை கூட்டிக் கொண்டு நடந்தான்.



- சந்திரபால் .

No comments:

Post a Comment