Thursday 4 July 2013

உன்னோடு …



வாழ்க்கையில் குதூகலம் கொட்டிக் கிடக்கிறது .
நமக்கான இடம் இங்கு காலியாக இருக்கிறது .
இந்த வானம் – இந்த பூமி எல்லாம்
நம்மைக் கௌரவப்படுத்தும் ஏற்பாடுகள் .

என் விழகளைப் பார்த்து நீ விவரம் அறியும்
நம் உடன்பாடுகள் .

உன் செல்லக் கோபத்திற்காக என் குறும்புகள் செய்யும்
சின்னஞ்சிறு முரண்பாடுகள் .

நீ என்னோடு கலந்த நேரம் கூட தாமதம் என்று
என் நெஞ்சம் சொல்கிறது .
இருந்தாலும் உனக்கும் – எனக்கும்
இந்த ஒரு பிறவியே போதுமென்கிறது .

அந்த நந்தவனச் சாலையோரம் நாமிருவரும்
நடந்து போகிறோம் .
இருவர் வெப்பமும் இடம் மாறிக் கொள்ள சாரல்கள்
சடைசடையாய் பொழிகின்றன .

உன் பிஞ்சு விரல் என் முகம் தொட்டுத் தலை துவட்டுகிறது .

உடம்பெல்லாம் குளிர் .
உயிரின் ஒவ்வொரு அணுவிலும் ஈரம் .
அதோடு நீ கொடுக்கும் அர்த்தமுள்ள ஒரு முத்தம் .

உன் இதழ்கள் நடுங்க
சுவாசம் கூட சப்தமிடுகிறது .
கண்கள் மூடி மூடி
ஏதேதோ பேசுகிறது .

எனக்கும் அப்படி தான்.

முடிந்த வரை நான் அதை மூடி மறைக்கப் பார்க்கிறேன் .

தூரத்துப் பறவைகள் பேசிக் கொண்டு பறப்பது
நம்மைப் பற்றியாகத் தான் இருக்கும் என்ற நினைப்பு நாமிருவருக்கும் .

பாதையில் மழைத்துளிகள்
பாம்புக் குட்டிகள் போல ஓடிக் கொண்டிருக்கின்றன.

துள்ளிக் குதித்துக் கால்கள் நனைத்து
என்னை நோக்கி நீ கையசைக்கிறாய் !

மீண்டும் நாம் குழந்தைகளாகிறோம் .

தங்கக் காசுகளைப் போல
சூரியத் தாரையில் உன் முகம் ஜொலிக்கின்றன .
தண்ணீரின் ஒவ்வொரு சொட்டிலும் அது
பட்டுத் மிதக்கின்றன .

வானத்தில் ஏதோ ஒரு மேகம்
சப்தமிட்டு வாழ்த்துச் சொல்லி தூறலைத் தொடர்கிறது .

“எதாவது பேசு”  என்று நீ கேட்பதற்கு முன்னால்
ஏதோ ஒன்றை பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டியிருக்கிறேன் .

காலம் நம்மைத் தடை செய்யாமல் இருப்பதால்
உன்னோடு இருக்கும் இந்த ஒவ்வொரு பொழுதும்
அழகாய் இருக்கின்றது .

இந்த நேரத்தில்
நீ சூடிக் கொள்வதற்காக மலர்கள்
என்னை அழைப்பதாய் சொல்கிறேன் .

நீயும் புன்னைத்து ‘ம்’ என்று சொல்கிறாய் .

பதியமிட்டிருந்த பூச்செடியை வேரோடு எடுத்து
உனக்குப் பரிசளிக்கின்றேன் .

வாய்விட்டு நீ சிரிக்கின்றாய் .

அங்கிருந்த அனைத்து மொட்டுகளும்
மலர்ந்தும் மலராமல் என்னை அழைக்கின்றன .

நீ ‘ம்’ என்று சொல்லி விட்டால்
நீ இருக்கும் இடமெல்லாம் பூ வாசம் தான் .

அந்த வேளையில் நீ இன்னும்
நனைந்து கொண்டு இருக்கிறாய் .

தண்ணீர் சொட்டுகிறது .
இன்னும் மழைத் தூறக் கொண்டே இருக்கிறது .  

 - சந்திரபால்.

No comments:

Post a Comment