Monday, 15 July 2013

நிலப்புத்தகம் அவள் .

அரங்கம் அதிரச் சிரிக்கிறாள்,
ஒப்பணைகாரன் தன் கடும் யோசனையில்
நொடிகளைச் சுமந்து கொண்டிருந்தான் .

நாடகச்சுருளில் கல்பறவைகளின் உடல் வழி
தன் கனவுகளையும் வெறுமையின் பெரும் பரப்பில்
வைத்து கூச்சலிடும் விற்பனைகாரி அல்ல இவள் .

பிணத்தின் உறக்கத்தை சபித்து விட்டு
குற்றத்தின் எலும்புகளை சுமக்கும் அவசியத்தில்
எனக்குச் சம்பதம் இல்லை என்றாள். 

வனமந்திரத்தின் அதிகாலை விழிப்பில்
கண்களை சுற்றி முற்றுகையிடும்
நொடிகளை வாங்கிக் கொண்டு
காலமும் கடன்காரியாக என்னால் வாழமுடியாதென்றும் சொன்னாள் .

“ மிருகங்கள் அத்தனையும்
அம்மணத்தின் அழகை மறைத்துக் கொண்டு
தெருவில் அலைகின்றன .

ஆண்களுக்குப் பெண்களாகவும்
பெண்களும் ஆண்களாகவும்
இரட்டை வேடமணிந்து உறங்குகிறார்கள்.

சில்லரைகளின் சத்தத்தைச் சங்கதிகளாக எழுதிக் கொண்டு
அடிமைகளின் ஒழுக்கத்தை மனப்பாடம் செய்கிறார்கள் .

சமூகவியலின் கண்ணாடி வயலில்
நீச்சல் தெரிந்திருந்தும் எல்லோரும்
ஒரு கருங்கல்லை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள் .
யார் யாரோ வந்து போகிறார்கள் .
இலவசமாய் தத்துவம் பேசுகிறார்கள் .
யாருடைய கனவிலோ நிற்கிறார்கள் : நடக்கிறார்கள் .
இந்தப் பகுத்தறியும் பாவிகள் . ”

கோதுமைநிறச் சிரிப்பில் ஒரு தானியமாக முளைத்தவள்
அரங்கம் அதிரச் சிரிக்கிறாள்
ஒப்பணைகாரன் தன் கடும் யோசனையில்
நொடிகளைச் சுமந்து கொண்டிருந்தான் .

“ முளைகள் கொரித்து
எறும்புகள் சுமந்து போகும்
விதைகள் அல்ல நான் .

நிறுவனத்தில் சிக்கிக் கொண்டு
பூச்சியினமாக என்னால் ஒருபோதும் வாழ இயலாது .
என் வார்த்தைகள் எங்கும் கூன்முதுகில்லை .
சமணன் உளியெடுத்து புடைக்கும் என் அதிரல் .  

அரங்கம் அதிரச் சிரிக்கிறாள்
ஒப்பணைகாரன் தன் கடும் யோசனையில்
நொடிகளைச் சுமந்து கொண்டிருந்தான் .

- சந்திரபால் .




No comments:

Post a Comment