கவிதைகள்

அரங்கம் அதிரச் சிரிக்கிறாள், ஒப்பணைகாரன் தன் கடும் யோசனையில் நொடிகளைச் சுமந்து கொண்டிருந்தான் .



நாடகச்சுருளில் கல்பறவைகளின் உடல் வழி

தன் கனவுகளையும் வெறுமையின் பெரும் பரப்பில்

வைத்து கூச்சலிடும் விற்பனைகாரி அல்ல இவள் .



பிணத்தின் உறக்கத்தை சபித்து விட்டு

குற்றத்தின் எலும்புகளை சுமக்கும் அவசியத்தில்

எனக்குச் சம்பதம் இல்லை என்றாள். 



வனமந்திரத்தின் அதிகாலை விழிப்பில்

கண்களை சுற்றி முற்றுகையிடும்

நொடிகளை வாங்கிக் கொண்டு

காலமும் கடன்காரியாக என்னால் வாழமுடியாதென்றும் சொன்னாள் .



“ மிருகங்கள் அத்தனையும்

அம்மணத்தின் அழகை மறைத்துக் கொண்டு

தெருவில் அலைகின்றன .



ஆண்களுக்குப் பெண்களாகவும்

பெண்களும் ஆண்களாகவும்

இரட்டை வேடமணிந்து உறங்குகிறார்கள்.



சில்லரைகளின் சத்தத்தைச் சங்கதிகளாக எழுதிக் கொண்டு

அடிமைகளின் ஒழுக்கத்தை மனப்பாடம் செய்கிறார்கள் .



சமூகவியலின் கண்ணாடி வயலில்

நீச்சல் தெரிந்திருந்தும் எல்லோரும்

ஒரு கருங்கல்லை எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள் .

யார் யாரோ வந்து போகிறார்கள் .

இலவசமாய் தத்துவம் பேசுகிறார்கள் .

யாருடைய கனவிலோ நிற்கிறார்கள் : நடக்கிறார்கள் .

இந்தப் பகுத்தறியும் பாவிகள் . ”



கோதுமைநிறச் சிரிப்பில் ஒரு தானியமாக முளைத்தவள்

அரங்கம் அதிரச் சிரிக்கிறாள்

ஒப்பணைகாரன் தன் கடும் யோசனையில்

நொடிகளைச் சுமந்து கொண்டிருந்தான் .



“ முளைகள் கொரித்து

எறும்புகள் சுமந்து போகும்

விதைகள் அல்ல நான் .



நிறுவனத்தில் சிக்கிக் கொண்டு

பூச்சியினமாக என்னால் ஒருபோதும் வாழ இயலாது .

என் வார்த்தைகள் எங்கும் கூன்முதுகில்லை .

சமணன் உளியெடுத்து புடைக்கும் என் அதிரல் .  



அரங்கம் அதிரச் சிரிக்கிறாள்

ஒப்பணைகாரன் தன் கடும் யோசனையில்

நொடிகளைச் சுமந்து கொண்டிருந்தான் .



- சந்திரபால் .


மீண்டும் நான்..

இருப்பியல் தொலைந்த ஞாபகம்  வந்து போகும் போதெல்லாம்
எனக்குப் பயம் வருகிறது .

எனக்குள் என்னைச்  சித்திரவதை செய்கிறேன் .

மலினப் பிரச்சாரத்திற்கு நான் மட்டும் நடந்து போகிறேன் .

கண்ணீர் சிந்தாமல் நெடுநேரம் அழ முடிகிறது .

துருபடிந்த என் தோல்விகள் முத்தமிடுவதாய்

யாருக்கும் தெரியாமல் கீறி விட்டு போகின்றன .

என் வெறுமையில் பாறைகள் வந்திறங்கி 

அனிச்சைாய் வெடிக்கின்றன.

ஆயினும்….

சகாராவில் என்னை எடுத்துப் பேசும் போது, 

என் அத்தனை பலமும் சோலார் செல்லில் குவியும் ஒளியாய்

நான் வெளிச்சமிடுகிறேன் ….


மீண்டும் .....

புணைவின் நையாண்டிகள் .

அவன் முன்னால் எல்லோரும்
பைத்தியக்காரர்களாக நின்றார்கள்; நடந்தார்கள்.

புராணீகங்களில் வகுத்த தடத்தின் வரிசையில் நின்றார்கள்.

சகாராவின் பொதுவில் வைத்த இசைத்தட்டில்
ஓடி விழுந்து நொறுங்கினார்கள்.

சில நூற்றாண்டுகளாக வேடிக்கைப் பார்க்கப் பழக்கப்பட்டான்.

தோல்வியின் விம்மலும் விம்மலில்
வெற்றியென்று கைதட்டலும் அவன் புனைவில் நையாண்டிகள்…

ஒழுக்க விதிகளின் கந்தகத்தில் எரிந்தார்கள்.

சில நொடிகள் மட்டும் கக்கத்தில் இருந்தார்கள்.

கைகுலுக்கினார்கள் , - ஆனால்

சமுகவியலின் கண்ணாடி வயலில் நீச்சல் தெரிந்தும்
ஒரு கருங்கல்லை இறுக்கி கழுத்தில் கட்டிக் கொண்டார்கள்.

 சாவு மேளத்தின் தாளகதியைச் சிதைத்து
பிணத்தின் உறக்கத்தைச் சபித்தார்கள்.

- சந்திரபால் .

மந்திரக் குதிரைகள்

என் துருவங்கள் கரைந்த பனிவாசத்தில்
ஜீவராசிகள் அத்தனையும்
அகாலத்தில் மிதந்தன .
ஒரு விடியற்காலையில் வரும்
தயிர்க்காரியின் பாசத்தைக் கூட
பகிர்ந்து கொள்ளவில்லை 
உன் சினேகம் .

மொழிகள் ஆயிரம் இருந்தும்
என் கவிதைகளைத் தொலைத்து விட்டு
நான் என்ன செய்வேன் ?

ஒரு காந்தாரக்கலையின்
நெருக்கம் போலிருந்தோம் .

ஒவ்வொரு நாளும் சிந்தனைக் கொலைகள் ஆயிரம் செய்யும் போது
ஊளையிடும் நம் தொலைவு .
“இனி மந்திரக் குதிரைகள்
வந்து நிற்கலாம்.

நம் காற்றின் உடலை
யாரும் அணிந்து கொள்ளலாம்.

ஜீவதிரவியத்தில் ஒயாத அலைகளில்
கதையோடிகள் கால்கள் நனைக்கலாம்.

அஜந்தாக்களின் மூலிகைப்படங்களில்
முகம் பார்த்துப் போகலாம்.

குருவிகள் தூங்கும் நிலாப் பொழுதில்
குறுங்கதைகள் எழுதலாம்.

இனிவரும் எல்லா உலகங்களுக்கும்
உன் வார்த்தைகளே போதும் விதிஷா"!

- சந்திரபால் .



சித்தர்களின் வெளி .


நினைவுகள் நுரை தள்ளி

இரவைக் கிழித்துத் தொங்கவிடும் பிம்பங்கள்

சலங்கை கட்டி ஆடுகின்றன.

உயிர் அனத்தித் துடியாய் துடிக்கின்றது

மாயைச் சிலந்தியாக மனம் தப்பிக்க வழியிருந்தும்

சுருண்டு கத்தையாக வழிகின்றது.

வழி துணை இழந்த நடுப்பாதையில்

வலக்கையிலும் இடக்கையிலும் மாறி மாறித் திரும்பி

 ஊர்வலத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அலறுகின்றன

முகம் வெளிரிய வார்த்தைகள்

ஆயிரம் கொலைக்குறிப்புகளுக்குத்

தேதிகளிட்டு வக்கிழந்த சாயத்தில்
உச்சரிப்பின் முடிவுகளில் எச்சிலூறுகின்றன.

மரியாதை நிமித்தமாக வேஷமிடுகின்றன.....

தெளிவற்ற தூரங்களில்

உடைந்த கால்களோடு பயணிக்கின்றன....

பறவைகளின் ஒலி அதிரவுகளில்

சங்கதிகள் எழுதிய கமகத்தில்

இவர்களின் சிரிப்புகள் கூட ஏதோ இரைச்ச லெனப்பட்டது.

இருளுக்குள் பதுங்கிய மௌனத்தின் மீது

டார்ச்  அடித்து விளையாடுவார்கள்....

சித்தர்களின் மனவெளி வேண்டி

கெஞ்சுகிறேன் அதனாலும் உருகும் என் தொனி.

கதை சொல்லிகள்
 

சகாரவில் ஒரு மழை ஜாமத்தைக் கூட
வெறுக்க நேர்ந்தது எதனால் …?

இப்போது இருட்டு மறித்தது

எல்லாத திசைகளும் குழம்பின.

பித்தவெறியில் பிஞ்சு மனம் பட்டுப் போனது.

மண் வீடுகள் அழகாகத் தான் இருக்கும்

அது வீடு என்பததால் புகுந்து விடவா முடியும்…?

துள்ளிக் குதித்த தங்க மீன்களின் தாகத்தின் முடிவில் 

கடல் வற்றிப் போனது .

நீந்த வழியின்றி மீன்கள் உயிர் விட நேர்ந்தன.

கதை சொல்லிகளாக கனவின் விடுதியில்

அவள் தங்கிச் சென்ற நாட்கள்

ஒரு பனிக்கட்டியைப் போல உருகியிருந்தால் பரவாயில்லை ...

கூண்டுக்குள் சிக்குண்ட கீரிப்பிள்ளையைப் போல

நினைவுகளை வெறித்துப் பார்க்கின்றது பித்த மனம் .

எனக்கு எட்டிய வரை எத்தனையோ ஆறுதல்களைச்

சொல்லிப் பார்த்து விட்டேன்.

சொல்லித் தேற்றுமளவுக்கு அவ்வளவு எளிதானதா அது.

அகதிகள் தினம் :


இன்று அகதிகள் தினமாம் …
எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்!

“யாதும் ஊரே
யாவரும் கேளீர்  என்று சொன்ன அந்த கணியனைக் கூப்பிடுங்கள்
எங்கள் அகதிகள் முகாமுக்கு .

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று பாடிய தீருமூலரைக் கூப்பிடுங்கள் எங்கள் அகதிகள் முகாமுக்கு .

“காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்                என்ற பாடிய
மகாகவி பாரதியை உடனே கூப்பிடுங்கள் எங்கள் அகதிகள் முகாமுக்கு .

பிறந்ததே எங்களுக்கு குற்றமென்றால் நாங்கள் வாழ்வதெப்படி ?

இன்று அகதிகள் தினமாம் …
எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்!

கருவறைக்கும் கத்திகள் வைக்கும்
தேசத்தில் பிறந்து விட்டோம்
இனவெறியைப் பற்ற வைக்கும்
நாசத்தில் வளந்து விட்டோம்

இன்று அகதிகள் தினமாம் …
எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்!

சாக்கடையில் மீன் பிடித்து
குழம்பு ருசி பார்க்கிறதே இந்த ரத்த வெறி.

மனிதனுக்கு மனிதனா வேற்றுமை பார்ப்பது ….?

இன்று அகதிகள் தினமாம் …
எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்!

உலகம் முழுக்க அகதிகள் இருக்கிறார்கள் .
பல மில்லியன் கணக்கில் அலைந்து திரிகிறார்கள்

வழி தேடி வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்காத -
குடியுரிமை அளிக்காத எந்த ஒரு நாட்டு அரசியலும் வன்முறை தான் .

பக்கத்து வீட்டுக்காரனுக்குப் பாதை கொடுக்காத சனங்கள்
அகதிகளுக்கு எப்படி அடைக்கலம் கொடுப்பார்கள் .

உயிர்களை இழந்து தவித்து நிற்கும் அகதிகள் முன்னால் நாம்
பிணவசியக்காரர்களாக இருக்க வேண்டாம் .

கல்மனிதர்களின் காலம் தொட்டு அகதிகளாக மனிதர்கள் சாபமிட்டே வாழ்ந்து வருவது மனித இனத்தின் பெருமையில்லை .  

- சந்திரபால் .

No comments:

Post a Comment