Monday 8 July 2013

வாதமே இல்லாத விடை .


அதிகாரத்துக்கும் – பணத்துக்கும் – வரட்டுக் கவுரவத்துக்கும் அங்கீகாரம் தேடும் இந்த தமிழ் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தால் நாம் வெட்கப்படத்தான் வேண்டும் . 
தனிமனிதனின் சுதந்திரம் சாதி யால் முற்றுகையிடப்பட்டு , அரசியலாக வீதியெங்கும் எடுத்து வீசப்பட்ட தர்மபுரி காதல் விவகாரம் இனி வரும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத வடுவாகவே இருக்கும் .
காதலை தவறு என்று சொல்பவர்கள் , இந்தச் சமூதாயத்தை முக்கிய அங்கமாகிவிட்ட கூத்து கும்மாளம் – இலக்கியம்- கலைகள் – சினிமாக் கம்பெனிகள் அத்தனையும் இழுத்து மூட போராடுங்கள்.  ஆனால் அது மூட முடியாது என்பது தான் வாதமே இல்லாத விடை.
தர்மபுரி பிஞ்சுகளை வாழ வைப்பதற்கு வழி சொல்ல முன்வராத இந்த ஜாதியை வைத்து எப்படி வாழ்வது ? உயிரோடு நின்று போராடி வந்த இளவரசனுக்கு எந்த விதத்தில் இந்த சமூதாயம் பாதுகாப்பளித்தது ?
இறந்து 5 நாட்கள் ஆகியும் விடாமல் போராட வந்திருக்கும் இந்த கூட்டங்களுக்கு என்ன என்ன தேவையென்று வரையறுத்தால் , தெரியும் இந்த சமூகம் எங்கே போயிறுக்கிறதென்று..?
ஒரே குடும்பத்தில் இரண்டு விதவைகள் !
“தன் மகள் கீழ்சாதிக்காரனைத் திருமணம் செய்தாள்” என்று சாதியின் கௌரவத்தை இறக்கிவைக்க முடியாத தந்தையால் திவ்யாவின் தாய் விதவையானார். 
இப்படிப்பட்ட “சாதியைத் தூக்கியெறிந்து வந்த திவ்யா அதே சாதியால் பிரிக்கப்பட்டதால் இளவரசன் இறந்து அவளும் விதவையானாள்.”
இளவரசனின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க தெரிந்தாலும் அதற்கு வழி இருந்தாலும் அதை இங்கு  நடக்காமல் தடுத்து முடக்கவே பெரும்வேலைகள் நடக்கின்றன .
இளவரசன் மரணம் கொலையா ? தற்கொலையா? என்ற கண்டுபிடிப்புகள் புது புது கடிதங்களோடு களம் இறங்கினாலும் சாதி வெறிபிடித்த சமூகம் செய்த கொலையால் தான் இளவரசன் மாண்டான் என்பதே பொதுபடையான பதிவு. 
ஒருவேளை உண்மை தெரிய வந்தாலும் அதுவும் அரசியலுக்கு ஆதாயமாகும்.
இனி வரும் அரசியல் பிரச்சாரங்களில் திவ்யா ,இளவரசன் – காதல் கௌவுரவப்படுத்தப்படும். அதைப் பற்றி எதிர் அணியினர் மேடையில் நின்று பிரமாதமாகப் பேசுவார்கள்.
அரசியல் நாற்காலியின் பலத்தை உணர்ந்தே  அளந்து நடக்கின்றன செயல்கள். அதில் அப்பாவிகளின் அழுகையும் கண்ணீரும் கடலில் கரைகின்ற நுரைகளாகக் காணாமல் போகின்றன.
தவித்து நிற்கும் போது கண்ணீர் துடைத்து கைகள் கொடுக்க வராதவர்கள் மரித்துப் போனவுடன் அஞ்சலி செலுத்த மட்டும் பவுய்யமாக வந்து நிற்பார்கள்.
- சந்திரபால்.

No comments:

Post a Comment