Wednesday 10 July 2013

தவிக்கும் நெய்தல் மனிதர்கள் .


இணையத்தில் சத்தியம் டி.வி.க்காக எழுதியது ...  

“ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் .
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”

கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் வரிகளின் அர்த்தம் உணரும் போது, தமிழக மீனவர்களின் குடும்பங்கள் ஏதோ அகதிகள் போல தவிப்பை நினைக்க வேண்டியிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கும் பல்வேறு போராட்டங்களும் , அதனால் தமிழகத்துக்கு வரும் சுற்றாலப் பயணிகள் தாக்கப்படுவதும் , அதைத் தொடர்ந்து குன்னூரில் பயிற்சிக்கு வந்த இலங்கை ராணுவ வீரர்கள் பல போராட்டங்களுக்கிடையில் வெளியேற்றப்பட்டனர்.

இது தவிர, ராஜ்பக்சே திருப்பதிக்கு  தரிசனம் செய்ய வந்த போது தமிழ் நாட்டில் உள்ள ‘தமிழர் ஆதரவு கட்சிகள்’ கடுமையான கண்டனத்தை வைத்து ‘கருப்புக் கொடிகளோடு’ சாலைகளை மறித்து நின்றனர். சட்ட ஒழுங்கென்று இதில் ஏராளமானவர்கள் கைதானார்கள்.

குறிப்பாக , சென்னையில் நடக்கும் ‘ஐபியலி’ல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் களம் இறங்கக் கூடதென கடுமையான கட்டளையை விடுத்த தமிழக அரசு அதில் வெற்றியும் கண்டது  .

சமீபத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த “தமிழக மாணவர் போராட்டம்”  நிலைத்து நிற்க முடியாமல் போனதற்கு பல உள்முரண்கள் இருந்தாலும் , அது 1965 களில் நடத்த ‘ஹிந்தி எதிர்ப்பு’ போராட்டத்திற்கு இணையாகச் சொல்லப்பட்டது .

இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையே நடந்த கிரிக்கட்டில் இலங்கை அணி தோற்றுப் போனதால் , அன்று இரவு மீன் பிடிக்கப் போன தமிழக மீனவர்களுக்கு நடுக்கடலில் அடி விழுந்தது.

நேரடியாக மீனவர்களுக்கு சம்மந்தமில்லாத இலங்கை எதிர்ப்பு சம்பவங்கள்  நடந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்பதால்,  எதைப் பற்றியும் யோசிக்காமல் சிங்களத்தின் கடலோரப்படையினர் தமிழக மீனவர்கள் தூப்பாக்கி சூடு நடத்துகின்றனர். 

இப்படியெல்லாம் தொடர்ந்து பல வடிவங்களில் இலங்கைக்கு எதிர்ப்பாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டத்தால் ராஜ்சபக்சே அரசாங்கம் எரிச்சலடைந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷியம் தான் . இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்று மத்திய அரசு நழுவிக் கொண்டு இருக்கிறது .

இந்த இலங்கை எதிர்ப்பின் அடிப்படை காரணங்களால் , இலங்கையானது தமிழக மீனவர்களை அடிக்கடி தாக்கிக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது தமிழக மீனவர்களைச் சிறை பிடிப்பதை ஒரு வழக்கமாகவும் எதிர்ப்புக் குறியீடாகவும் நடத்தி வருகிறது .

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் இன்னும் அதிரடி முடிவுகளை எடுக்க மறுக்கிறதே என்று  தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சேவுக்கு இணையாக மத்திய அரசையும் எதிர்க்கிறார்கள்.

இதனால் தமிழக மீனவர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசாங்காத்திடம் மத்திய அரசு நேரடி பேச்சு வார்த்தையில் இறங்க மறுக்கிறது . 

ஆக, இப்படி அரசியல் காரணங்களுக்காக அப்பாவிகள் சிக்கிக் கொண்டு செத்த மீன்களாக கரைக்கு வருகிறார்கள்.

செத்த மீனவர்களுக்காகவும் – சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களுக்காவும் கடலோடி சமூதாயம் போராட்டம் நடத்தினால் அது அவர்களுக்கு மட்டும் தான் இழப்பு என்கிறார்கள் . அந்த போராட்டாங்களால் எந்த வெற்றியும் இது வரை கிடைக்கவில்லை. கடலுக்கு போகாமல் மீனவர்கள் முற்றுகை செய்தால் பொதுமக்கள் மீனே சாப்பிடாமல் இருந்து விடப் போகிறார்களா என்ன ! அதனால் எந்த நட்டமும் ஏற்பட போவதில்லை.

மீனவர்களின் துயரச் செய்திகள் இல்லாத பத்திரிகைளே இல்லை. உண்ணிப்பாக கவனித்தால் புரியும் , தினமும் மீனவர்கள் பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இந்தியா முழுக்க ஆள்வதாக இயங்கும் மத்திய அரசால் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கொடுக்காத கர்நாடக அரசை எதுவும் செய்ய முடியாத போது வேறொரு நாடான இலங்கையிடம் எப்படி நிபந்தனை வைக்க முடியும் ? என்றும் சொல்கிறார்கள் .

இந்த அதிகாரப் பிடியில் ….   

“ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”

எதையும் இங்கு அரசியலாக்கும் சமகாலத்தில் நெய்தல் நில மக்கள் காக்கப்பட வேண்டும். 
-  சந்திரபால் .

No comments:

Post a Comment