Wednesday 10 July 2013

அரசு மருத்துவமனைகள்…

சத்தியம் டி.வி.க்காக எழுதியது ...


மருத்துவத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் வரும் போதெல்லாம் புதுப்புது நோய்களும் வந்து விடுகின்றன. 

‘ஸ்டெம்செல்கள் வளர்த்து செய்யும் சிகிச்சை முறையே மருத்துவத்தின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது.
இது நாள் வரை மருத்துவத்தில் சந்தித்த எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டே வருகிற ஸ்டெம் செல் சிகிச்சையில் நாம் முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்னும் அரசு மருத்துவ மனைகளில் நம்மவர்கள் சளி காய்ச்சலுக்குக் கூட 2 மாதங்களுக்கு மேல் அலைய வேண்டியிருக்கிறது .
அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 1 நாளைக்கு மட்டும் 1 லட்சம் பேர் புறநோயாளிகளாக வந்து போகிறார்கள். 16 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.
தலைவலி என்று தனியார் மருத்துவமனைக்குப் போகும் சாதாரண மக்களால் சிகிச்சைக்காகும் செலவை சமாளிக்க முடியவில்லை.

இதனால் பலர் மருத்துவரிடம் செல்லாமல் கசாயத்தையும் , மளிகைக் கடை மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் .  சிலர் சிகிச்சைக்குச் செல்ல வழியில்லாமல் நோயாளிகளாகவே கடைசி வரை வாழ்ந்து வருகிறார்கள் .

காசில்லாத குடித்தனங்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று வருவதையெல்லாம் சொல்லிமாளாது .

அதிகாலையில் சென்று நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.  மருத்துவ பயிற்சி மாணவர்களே பெரும்பாலும் புறநோயாளிகளுக்குப் பரிசோதனை செய்கிறார்கள் . இதில் சிகிச்சைக்காக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் , நோயாளிகள் பொறுமையிழந்து வருந்துகிறார்கள் .

சில நோயாளிகள் 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவக் குறிப்புகளை வைத்துக் கொண்டு  அலைகிறார்கள் .  அதுவும் ஸ்கேன் – எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளுக்கு குறித்து கொடுத்த நாளில் தான் வர வேண்டியதாகியுள்ளது.  தவணை முறையில் தேதி குறித்து அனுப்புவதற்கு என்ன வலுவான காரணம் இருக்கிறதென்று தெரியவில்லை.

புற நோயாளிகளுக்கு , வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால்,  மற்ற நாட்களில் பயிற்சி மருத்துவர்களே , மாத்திரையை மட்டும் கொடுத்தனுப்புகிறார்கள் .

இப்படி இலவசம் – சலுகை என்பதால் நோயாளிகள் தாமதமாகவும் சிரத்தை இல்லாமலும் அரசு மருத்துவ மனைகளில் குணப்படுத்தப்படும் நிலையில் ,[ 7.10.2013 ]இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ கருவிகள் வாங்கும் மேம்பாட்டு திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது .

108 எனும் [அவசரகால ஊர்திகள்] 116 புதிய ஆம்புலன்ஸ்களை வாங்க ரூ.15 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் முதல்வரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நோய்வாய்ப்பட்டு வந்த சாதாரண மக்கள்  மன உளைச்சலில் சிக்காமல் அரசு மருத்துவமனைகளில் விரைந்து சிகிச்சை பெற இந்த நிதி ஒதுக்கீடு பெரும் தேவையாக இருந்தாலும் , அரசு மருத்துவர்கள் சரியான நேரத்தில் வைத்தியம் பார்க்க வேண்டும் : அவர்களின் கடமைகள் சரியாக வந்து சேர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .

-  சந்திரபால் .


No comments:

Post a Comment