Thursday 4 July 2013

திவ்யாவுக்காக எழுதுகிறேன் .

கட்டுரையை எழுதி முடித்த சில நொடிகளில் … இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் அழுகின்றன.

இளவரசன் இறந்த செய்தி தெரியாமல் எழுதப்பட்ட கட்டுரை இது .



திவ்யாவுக்காக எழுதுகிறேன் .

திவ்யாவை யாரும் தயவு செய்து திட்டாதீர்கள் . அவரது காதலை மலின வார்த்தைகளில் பேசி விடாதீர்கள் . “சாக்கடையில் மீன் பிடித்தாலும் குழம்பு ருசி பார்க்கும் இந்த ஜாதி வெறியில் இப்படி நடப்பதெல்லாம் ஒரு வழக்கம் தான் . ஆனால் இது சாதாரணம் அல்ல. 

திவ்யா – இளவரசன் பற்றி புதிய அறிமுகம் எதுவும் தேவையில்லை தான் . ஆனால் கட்டுரையின் அவசியத்துக்காக எழுதுகிறேன்.

இவர்களது காதல் திருமணத்தால் தர்மபுரி தீக்கரையானது . திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.  அதைத் தொடர்ந்து தர்மபுரியில் கௌரவக் கொலைகள் நடந்தன . பல நூறு வீடுகள் எரிந்து சாம்பலாயின.   
பத்து மாதங்கள் திவ்யா இளவரசனுடன் இல்லறம் நடத்தி வந்தார். அதைத் தொடர்ந்து தன் அம்மாவிடமிருந்து வந்த அழைப்பின் பேரில் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பார்த்து விட்டு வந்து விடுவதாகச் சென்ற திவ்யா திரும்பவில்லை.

என்ன முயன்றாலும் இளவரசனால் திவ்யாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை . அடுத்த என்ன வழக்கம் போல இறுதி தீர்ப்பு நீதி மன்றம் தானே !  HCP என்று சொல்லப்படும் ‘ஆட்கொணர்வு மனுவை இளவரசன் தொடுத்தார். 

அந்த மனுவின் மீதான உத்தரவு படி 15 நாட்களுக்குள் கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனதாக கருதப்பட்ட நபர் காவல் துறையின் உதவியில் நீதிபதியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் . அதனால் , திவ்யாவும் நீதி மன்றத்திற்கு வந்தார் . ஆனால் , இளவரசன் னின் திவ்யாவாக அல்ல. தாயின் மகளாக வந்து சேர்ந்தார் . கைத்தாங்கலாக திவ்யாவை அவரது தாயார் தேன்மொழி நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். 

“யாரும் என்னைக் கடத்த வில்லை . நானாகத்தான் என் அம்மாவைப் பார்க்க சென்றேன் . இப்போது என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் , என் அம்மாவோடு இருக்க விரும்புகிறேன் .  இப்போது நான் குழப்பமாக இருக்கிறேன் .  என் கணவர் இளவரசனோடு செல்ல விரும்பவில்லை . எனஎன கிளிப்பிள்ளை போல சொன்னார் .

இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு வந்த திவ்யாவை பத்திரிகையாளர்கள் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து செய்திகள் எழுதினார்கள். அந்த படங்களில் உள்ள ‘திவ்யாவின் முகம் சொல்லும் என்ன நடக்கிறது இந்த சமூகத்தில் என்று !

திவ்யா அம்மாவோடு செல்வதாகச் சொன்ன வாக்கு மூலத்தை அறிந்த எல்லோரும் திட்டித் தீர்த்த போது திவ்யாவின் வட்டாரங்கள் சந்தோஷத்தில் துள்ளினார்கள். தங்களுடைய பெண் மீதான வழக்கு ஜெயித்து விட்டதாக இருந்தார்கள்.

கலையிழந்து போனார் இளவரசன். யாரும் ஆறுதல் சொல்லி தேற்றுமளவுக்கு எளிதானதல்ல இது . இளவரசனுக்கு மட்டுமல்ல திவ்யாவுக்கும் தான் . இன்னும் இந்த தேசத்தில் பெண்கள் களிமண் பொம்மைகளாக இருக்கும் பட்சத்தில் திவ்யா மட்டும் என்ன செய்ய முடியும் ?  

‘காதல் தோற்றது ‘காதல் செத்தது  என்றெல்லாம் பல தலைப்புகளில் கட்டுரைகளைச் செய்திகளால் எழுதித் தள்ளினார்கள். ஆனால் இந்த ‘சமூகம் தோற்றது ‘இந்த சமூகம் செத்தது என்று ஏன் எழுத மறுக்கிறார்கள் என்று விளங்கவில்லை. ?

இந்த கட்டுரை எழுதும் இந்த நாளில் திவ்யா - இளவரசன் காதல் திருமணம் இறுதி முடிவுக்கு வந்து விட்டதாக தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள் .

“எனது தந்தையின் நினைவு தொடர்ந்து வருவதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் . இனி எப்போதும் இளவரசனிடம் சேர்ந்து வாழப்போவதில்லை . என்று திவ்யா வாக்குமூலம் கொடுத்தார் .

திவ்யா தனது சொந்த முடிவில் தான் இப்படி சொல்லியிருப்பாரா ….? என்பதை பெரும் உளவியல் வல்லுனர்களைக் கூட்டி முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை . சாமானியர்கள் யாரிடம் கேட்டாலும் சொல்லவார்கள் . இந்த தேசத்தில் என்ன நடக்கிறதென்று ?

கூகுல் போன்ற இணையத்தளங்களில் திவ்யா என்று எழுதி உடனே கூடவே இளவரசன் என்ற பெயர் வந்து நிற்கிறதே , அதை பிரித்து விட முடியுமா ?

திவ்யாவும் – இளவரசனும் சேர்ந்து எடுத்த ஒரே புகைப்படம் பல நூறு பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் ஆயிரக்கணக்கில் இருப்பதை பிரித்து விட முடியுமா …?

அவ்வளவு ஏன் , சுற்றி இருப்பவர்கள் எல்லாம் துண்டை உதறி தோளில் போட்டு விட்டு போய்விடலாம் . இந்தச் சம்பவத்தை பார்த்து படித்துக் கொண்டே சூடாக ஒரு டீ குடித்துக் கொண்டே நான்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டு கிளம்பி விடலாம். ஆனால் , இதில் சம்மந்தப்பட்டவர்கள் இதை யெல்லாம் மறந்து விட்டு , அடுத்த கட்ட வாழ்க்கைக்கு ஆயத்தமாகி விட முடியுமா என்ன!

இருதயத்தில் ஓடுவது ரத்தம் தான் . பெட்ரோல் டீசல் அல்ல.

மறக்க முடியாத நினைவுகளில் யாருடைய கனவிலோ வாழ்வதை விட பிரிந்தவர்களைச் சேர்ந்து வைப்பது தான் நல்லது .

சரி விசயத்துக்கு வருவோம் . எந்த ஒப்பந்தத்தில் திவ்யா இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரியா விட்டாலும் , ஏதோ ஒரு நிர்பந்தத்தில் தான் இதெல்ல்லாம் நடக்கிறது .

இளவரசன் உயிருக்கு ஆபத்து இருக்கமோ இல்லையோ இன்னும் சில நாட்களில் திவ்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கலாம் .  அதற்கு யாரோ ஒருவர் தயாராக இருக்கலாம்.  

இனி வரும் ஆண்டுகளில் திவ்யா – இளவரசன் போல வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு பெயர்களில் காதல் திருமணங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் . 

- சந்திரபால். 


No comments:

Post a Comment