Wednesday 10 July 2013

‘பேஸ்புக்’கில் குறை தீர்க்கும் பக்கம் அரசு துறைகளில் வருமா ?

சத்தியம் டி.வி. இணையத்துக்காக எழுதியது...


மதுரையில் புதிதாக வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் எல் . சுப்ரமணியன், இதற்கு முன்னால் இருந்த ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா செய்த face book ல் புகார் தெரிவிக்கும் முறையைத் தானும் தொடர்ந்து செய்ய போவதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக , மதுரையில் மட்டும் ஆட்சித் தலைவர்களின் பணியும் அதனால் நெருக்கடிகளால் ஏற்படும் அவர்களின் இடமாற்றமும் எப்போதும் கவனிக்கத் தக்கதாக இருக்கும்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் உதயசந்திரன் மதுரையில் நாடு போற்றும் பல நல திட்டங்களைத் துணிச்சலுடன் செய்தார். அதனால் அவர் அப்போதைய அரசியல் தலையீடுகளில் சிக்கி அதிலிருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறந்து விட முடியாது .

இது போலவே சமீபகாலத்துக்கு முன்னால் மதுரையில் சகாயம் என்ற ஆட்சியர் பொதுமக்களின் குறை மற்றும் புகார்களை இணைத்தளங்களின் மூலம் அனுப்ப வழி செய்து அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கினார் .

ஆட்சியர் சகாயத்தின் இடமாற்றத்திற்குப் பிறகு மதுரைக்கு வந்த ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா “Face Book க்கின் மூலம் மக்கள் தங்கள் குறைகளையும் – புகார்களையும் என்னிடம் தெரிவிக்கலாம்” என்று சொல்லி அதை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தினார் .

இந்த முறையின் மூலம்  மதுரை மாவட்ட பொதுமக்களிடமிருந்து ஆயிரக்காணக்கான குறைகளும் , புகார்களும் வந்து அவைகளை ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தீர்த்து வைத்தார் .
பொதுமக்கள் இதற்கு அமோக ஆதரவு தெரிவித்த நிலையில் , ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டார்.  குறை தீர்க்கும் இந்த Face Book கணக்கை இனி வரும் ஆட்சியர் இயக்குவாரா ?அல்லது புதிதாக வரும் ஆட்சியர் வேறு ஏதேனும் மாற்று வழி முறை செய்வாரா ? என மதுரை மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், “ஏற்கெனவே இருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் செய்த குறை தீர்க்கும் Face Book  சேவை இனியும் தொடர்ந்து இயங்கும். பொதுமக்கள் அந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்தி தங்களது ஆலோசனைகள், குறைகள் மற்றும் புகார்களை அதே முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
அதில் நீங்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை உடனுக்குடன் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


இணையத்தில் மாபெரும் வளர்ச்சியாக இருக்கும் face book சேவையை உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களும் , சமூக ஆர்வலர்களும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அதில் பொது மக்கள் தங்களின் கருத்துக்களையும் புகார்களையும் ஆட்சியளர்களிடம் சொல்லி வருகிறார்கள் .  இது சமகால தகவல் பதிவின் நேரடி பகிர்வாகும். 

வெகுகாலத்திற்கு முன்பிருந்தே முதல்வர் தனிப்பிரிவுக்கென்று தனியாக ஒரு இணைய பக்கம் இயங்கி வருகிறது . அதில் பொதுமக்கள் மின்னஞ்சல் செய்து வரும் நிலையில் , சமீப ஆண்டுகளில் சென்னை மேயர் சைதை துரைசாமி face  book கணக்கொன்றில் பொதுமக்களின் கருத்துக்களுக்கு விடையளித்து வருகிறார்.

எந்த ஒரு குறையும் கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருந்தாலும் “நமக்கு எதற்கு வம்பு?” என்று ஒதுங்கிப் போகவே நாம் நினைப்பது மிகச் சாதாரணமாகி விட்டது . அதனால் நமக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சிக்கலைக் கூட உரிய ஆய்வுகளுக்கு எடுத்துச் செல்வதில்லை.

அதற்கு முக்கிய காரணம், புகார் கொடுக்கும் வழிமுறைகளில் உள்ள குறைபாடும் புகார் பெறப்படும் முறையில் உள்ள அலட்சியமும் தான் என்றால் யாரும் மறுக்க முடியுமா ?
வியக்கத்தக்க இணையத்தள வளர்ச்சியில் அரசு துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பெயரில்  face  book பக்கம் இருந்தாலும் , குறை தீர்ப்பதற்கு என்று தனியொரு துறையை அமைத்தால் புகார்களைக் கொடுப்பதும் , பெறுவதும் மிக எளிதாக விடும் .

ஆனால் , ஊழல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தில் இது சாத்தியமா என்ற கேள்வியும் மனதில் எழுகிறது . இந்நிலையில் ,

மதுரை ஆட்சியர்கள் face  book ஐ பயன்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது தான் . இது போல face  book குறை தீர்க்கும் பக்கம் அரசின் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக காவல் துறையிலும் வருமென எதிர்பார்க்கலாம்.

- சந்திரபால்.

No comments:

Post a Comment