Saturday 20 July 2013

‘பேஸ்புக்’குல பேசியிருக்கேன் .




தீபாவுக்கு என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை . தெளிய முடியாத விடலைப் பருவம் பிடிவாதம் இது. ஐய்யப்பனுக்கும் என்ன செய்ய வேண்டுமென்று புரியவில்லை . “எதற்காக இந்தக் காதலை செய்து தொலைத்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டான் .
தன்னை விட ஐந்து வயது குறைவானவளைக் காதலித்தது தப்பு என்று அடிக்கடி ஐய்யப்பன் நினைப்பதுண்டு. சில சமயம் இதை தலை சுத்தி மறந்து விடுவது தான் நல்லது என்றெல்லாம் நினைத்திருக்கிறான். ஆனால் , தீபா அப்படியல்ல .
ஐய்யப்பனும், தீபாவும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள். ஆனால் வேறுவேறு ஆனால் வேறுவேறு சாதியைச் சேர்ந்தவர்கள். தீபா கெஞ்சிக் கொஞ்சி காதலித்து ஐய்யப்பனிடம் சம்மதம் வாங்கியதைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கென்று ஒரு நாவல் எழுத வேண்டியிருக்கும் .
வெளியூரில் படிக்கும் தீபா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஐய்யப்பனை பஸ்டாண்டுக்கு வரச்சொல்லி பார்த்து விட்டுதான் வருவாள். இன்றும் எப்படியாவது ஐய்யப்பனைப் பார்த்தே தீர வேண்டுமென்று இந்த அர்த்த ராத்திரியில் திண்டுக்கல் பஸ்டாண்டில் இறங்கி ஐய்யப்பனிடம் போனில் பேசி அழுது கதறினாள் .
ஐய்யப்பன் எவ்வளவு சொல்லியும் தீபா கேட்கவில்லை. சரி கிளம்பி போகலாம் என்றாலும் பையில் சல்லி பைசா இல்லை .
ஊரில் யாரிடமும் ஐய்யப்பன் பேசமாட்டான். கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே, அரசு பொதுத் தேர்வுகளுக்கு நூலகங்களில் படிக்க போவதைத் தவிர எந்த வேலை வெட்டிக்கும் ஐய்யப்பன் போனதில்லை . யாருடைய தலைமையின் கீழும் வேலைப் பார்ப்பது அவனுக்கப் பிடிக்காது . அதனாலே ஊரில் இவனை ஒத்தவர்கள் யாரும் ஐய்யப்பனிடம் எந்த சகவாசமும் வைத்துக் கொள்வதில்லை .
மாதச்சம்பளம் – அன்றாடம் கூலி – கடன் - சேமிப்பு என்று, அலைந்து திரிபவர்களைக் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் ஐய்யப்பன் இந்தக் காதலை ஏதோ வேண்டாத விஷயமாக நினைத்தான் . இருந்தாலும் தீபாவை குழந்தையிலே இருந்தே பார்த்து வருவதால் அவளை மறந்து விட துணிவில்லாமல் காலம் தள்ளி வந்தான் .
போனை கட் பண்ணினாலும் , தீபா திரும்ப திரும்ப கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். காசில்லாத போது தானே காதல் வரும். காசு பணம் கூடி வரும்போது இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் இந்தளவுக்கு வராது .
பெரும் மூச்சு வாங்கி கொண்டு ஐய்யப்பன் குமாருக்கு போன் பண்ணினான்.
மெட்ராஸில் ஒரு I.T.கம்பனியில் நல்ல வேலையில் இருப்பவன் குமார் . ஊரில் இருக்கும் போது இவர்கள் இருவரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், காலை 4 மணிக்கு ஆற்றில் திருட்டு மண் தோண்டுபவர்கள் வரும் வரைக்கும் பேசிக் கொண்டு இருப்பார்கள் .
ஒரே ஊரில் பிறந்து பன்னிரெண்டு வருடம் ஒன்றாக படித்தவர்கள் குமாரும் ஐய்யப்பனும் . ஐய்யப்பன் குமாரை விட நல்ல இங்கிலீஸ் பேசத் தெரிந்தவன் . ஆனால் குமார் அப்படியில்லை . ஏதாவது ஒரு வேலைக்குப் போய் ஜாலியா இருக்க வேண்டுமென்று பம்பரமாய் பறப்பான்.
எந்த மூலைக்குப் போனாலும் ஐய்யப்பன் மிஸ்டு கால் விட்டால் போதும் , குமார் 1 மணி நேரமாது பேசுவான் . ஆனால் , ஐய்யப்பன் அடிக்கடியெல்லாம் குமாருக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்க மாட்டான் .
“குமாரு , தீபா வந்திருக்கா[ள்] … கையிலே காசு இல்ல . என்ன சொன்னாலும் கேக்கமாட்டிங்றா ! – குமாரிடம் ஐய்யப்பன் புலம்பினான் .
பக்கத்தில இருந்தாலாவது எதாவது உதவலாம் . குமாருக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை . “தீபாவ திரும்பி போகச் சொல்லுப்பா -  என்று சொல்லி விட்டு குமார் போனை வைத்து விட்டான் .
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பத்தைந்து வாங்கிக்கொண்டு ஐய்யப்பன் , தீபாவைப் பார்க்க கிளம்பினான் . ஐய்யப்பனிடம் காசிக்கிருக்காது என்று தெரிந்தே 300 ரூபாய் தீபா வைத்திருந்தாள்.
ராத்திரி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது . இனி பஸ்டாண்டில் நின்றால் போலிஸ்காரன் பிடிச்சிட்டு போயிருவான் என்று கோயமுத்தூர் வரைக்கும் போய் வர நினைத்தார்கள் .
இதுபோல காதலிப்பவர்கள் எத்தனை பேர் இந்த ‘டெக்னிக்கை செய்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் தெரியும் . கெஞ்சி கெஞ்சி லவ் பண்ண வச்சு , அப்புறம் ஒதுங்க இடமில்லாம - பத்து நிமிஸம் கூட நின்று பேச முடியாமல் அலைகிறார்கள்.
அதிக நேரம் கூடவே இருக்க வேண்டும் . யாருடைய தொந்தரவும் இருக்க கூடாதென்றால் அதுக்கு ஒரே வழி இந்த பஸ் பயணம் தான். அதுவும் இரவு நேரத்துப் பயணமென்றால் நன்றாக இருக்கும் . தெருவில் நின்று பேசினால், எல்லோரும் நம்மையே பார்க்கிற மாதிரியே இருக்கும் .
வேறென்ன தான் செய்றது ! பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள் . தீபாவின் அழுத விழிகளை ஐய்யப்பன் தொட்டுத் துடைத்தான் . முதலில் தீபா , சாய்ந்து உட்காரும் சாக்கில் ஐய்யப்பனின் கண்ணத்தை ஈரமாக்கினாள். பிறகு வேறு வழியில்லாமல் ஐய்யப்பனும் .
காலை ஆறு மணிக்கெல்லாம் குமாருக்கு போன் செய்தான் ஐய்யப்பன் . “குமாரு ஏ.டி.எம். கார்டு இருக்கு , ஒரு ஐநூறு ரூபா பணம் போட்டு விடு .
“ம் சரி . எந்த பேங்க் ஐய்யப்பா ?
“ஸ்டேட் பேங்க் தான் குமாரு ! “ஐய்யப்பா, ஸ்டேட் பேங்குல அக்கவுண்ட் இருந்தால் தான் மத்தவங்களுக்கு பணம் போட்டு விட முடியும்னு இந்த மாசம் தான் புதுசா ரூல் கொண்டு வந்திருக்காங்க. பணம் போட்டு விடமுடியாது! “என்ன சொல்ற குமாரு! அத நம்பிதான் வந்துட்டேன். பேங்குல நூறு ரூபா தான் இருக்கு . வேற காசு இல்ல குமாரு!  
இந்த மாதிரி சங்கடத்தில் ஆளாகக் கூடாதென்றுதான் ஐய்யப்பன்,  தீபா கெஞ்சி கூப்பிட்டாலும் வர மறுத்து இருந்தான் . அதற்காக தீபாவைத் திட்டினால் சரியாக இருக்காதென்று முகம் தொங்கிப் போனான்.
குமாருக்கும் இது பெரிய கஷ்டமாக இருந்தது . இவர்களின் காதலுக்கு உதவி செய்வது குமாருக்கு ஒன்றும் புதிதல்ல. குமார் இருக்கும் தைரியத்தில் தான் ஐய்யப்பன் இப்படி எதையும் யோசிக்காமல் கிளம்பி வந்து விட்டான்.
இது கார்த்திகை மாதம் என்பதால் அடைமழை தூறிக் கொண்டே இருந்தது . கோயமுத்தூர் பஸ்டாண்டில் உட்கார கூட இடமில்லை . எல்லா இடத்திலும் ஈரம்.  திண்டுக்கல்லுக்கு திரும்பிப் போக , எப்படியும் இரு நூறு ரூபாயாவது வேண்டும். பேங்கில் இருப்பது நூறு ரூபாய் மட்டும் தான்.
தீபா, என்ன என்னவென்று ஐய்யப்பனிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள் . அவளிடம் எதையும் சொல்லாமல் தெரிந்தவருக்கெல்லாம் ஐய்யப்பன் போன் செய்து கொண்டே இருந்தான். அதிக நேரம் பேசினால் போனில் இருக்கும் காசும் போய்விடும் என்று பயம் இப்போது ஐய்யப்பனை மேலும் நோகச் செய்தது .
போனில் பேசுபவர்களும் வளவளவென்று அதிக நேரம் பேசுவதால் கடுப்பில் போனை வைத்து விட்டு ஐய்யப்பன் யோசனையில் இறங்கினான் .
இளம்பருவத்தில் வரும் காதலுக்கு இருக்கும் சக்தி சாதரணமானதல்ல. அதிலும் காதலியைப் பார்க்க வரும் போது அவளுக்கு பூவைத் தவிர வேறதையும் வாங்கிக் கொடுக்க வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று சில நிமிட பார்வையை மட்டும் தந்து விட்டு போவதென்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்.
இரவு முழுக்க கூடவே இருக்கும் தீபாவுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்காமல் , ‘பசிக்குதா என்று மட்டும் கேட்டுக் கொண்டே இப்படி நிற்பது ஐய்யப்பனுக்கு வேதனையாக இருந்தது .  
போனில் ரீங் அடித்தது . பெயரில்லாத நம்பர் வந்தது . யாராக இருக்குமென்று ஐய்யப்பன் அட்டன் பண்ணினான். “ ஹலோ நான் குமார் பிரண்டு காயத்திரி பேசுறேன் . நீங்க எங்க இருக்கீங்க ?
“நாங்க உக்கடத்துல இருக்கோம் . நீங்க ? “அங்கேயே இருங்க! நா இப்போ வந்திடுறே
ஐய்யப்பனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . போனில் பேசி இரண்டொரு நிமிடத்தில் மீண்டும் போன் செய்து கொண்டே காயத்திரி அருகில் வந்து நின்றாள்.
“ம் உங்கள பத்தி குமார் சொன்னாங்க…. இந்தாங்க! என்று வந்தவுடன் நூறு ரூபா தாள் சிலவற்றை எடுத்து நீட்டினாள் காயத்திரி . ஐய்யப்பனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தீபாவையும், ஐய்யப்பனையும் வலுக்கட்டாயமாக கூட்டி போய் , காயத்திரி காலை டிபன் வாங்கிக் கொடுத்தாள் .
“நீங்க குமாருக்கு எப்படி பழக்கம் ? ஐய்யப்பன் சந்தோஷத்தோடு கேட்டான்.
“நான் குமார பார்த்ததே இல்ல. சும்மா ரெண்டு மாசம் தான் பழக்கம்.
குமார் பேஸ்புக்குல வர்ரப்ப பேசியிருக்கேன். என்று சொல்லி விட்டு எதிர்பார்த்திருந்த பஸ் வந்ததால் , காயத்திரி தாட்டா சொல்லி ஏறி மறைந்தாள்.
ஐய்யப்பன் குமாருக்கு போன் செய்து கொண்டே தீபாவை கூட்டிக் கொண்டு நடந்தான்.



- சந்திரபால் .

No comments:

Post a Comment