Monday 17 September 2012

மாமல்லபுரம்


ஆண்டுகள் ஆயிரக்கண்க்கில் கடந்து போகலாம்...

மனிதர்கள் எலும்புக்கூடுகளாகச் சிதைந்து
கோடிக்கணக்கில் பிறந்து வரலாம்...

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மேதைகளும்-ஞானிகளும்-
ஜாம்பவான்களும் நிச்சயம் காலம் சுமந்து வந்து கொண்டே இருப்பார்கள்...

கலையும் அறிவியலும் மனித குலத்தின் நாடி நரம்புகளில் பிறக்கும் போதே பின்னப்பட்டிருக்கிறது.

உலகம் அறிவியலில் வியந்து நடக்கிறது...
கலையில் தன்னை மறந்து மயங்கிக் கிடக்கிறது...

அறிவியலும், கலையும் பசியும் காமமும் போல, உயிரின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கிறது.

குகைவழிச் சந்துகளிலும், மரப்பொந்துகளிலும் கலை ரசித்து வந்த மனிதக் கூட்டம் அரியணையில் அமர்ந்தவுடன் தங்கள் பேழை திறந்து ஏதேதோ எழுதிக் கொண்டது.

நடுகல்-குத்துக்கல்-சமணப் படுக்கைகள்-புத்த மடாலயங்கள் என்று, கற்களும்-மிகப் பெரும் பாறைகளும், சிலைகளாக- புடைப்புச் சிற்ங்களாச் செதுக்கப்பட்டன.

உலோகங்களைக் கூட உருக்கி உருமாற்றி விடாலாம்...
இந்த கல் மனிதர்களின் கற்குகை மாடங்களை அழித்து விடாமல் செங்கோல் பிடித்த வேற்றரசர்களும் பாதுகாத்து வந்தார்கள்.

கடல் மல்லை’, ‘மாமல்லைஎன்றழைக்கப்படும் மாமல்லபுரம் பல்லவர்களின் மாபெரும் கோட்டைக் கொத்தளங்களாக, சில பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு விரிந்து கிடந்தது.


உலகத்தின் முக்கிய கலை அம்சத்தில் ஒன்றான கட்டக்கலையில் விரிந்த பல்வர்களின் சாம்ராஜ்யத்தை இனிவரும் கடைசி மனிதன் வரை யாரும் மறந்து விட முடியாது.

முதலாம் மகேந்திரனைத் தொட்டுத் தொடங்கிய பல்லவர்களின் பிரளயங்கள் ஒரு வியுகமாகக் காஞ்சிபுரத்தை மையமிட்டது.

மாமல்லன் என்று பட்டம் தாங்கிய முதலாம் நரசிம்மன் ஆட்சிக் காலத்தில் கட்டக்கலையில் சிற்பங்கள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டன.

சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவில, அமைந்த மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட கற்கோவில்களை உலக அருகாட்சியகத்தில் பாரம்பரியச் சின்னமாகப் பதிவு செய்திருக்கறார்கள்.

தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மாமல்லபுரமும் சிறந்த ஒன்றாக இருக்கிறது.

கி.பி.6 ஆம் நூற்றாண்டுகளில்... இலங்கை, சீனா, தெற்காசிய நாடுகள் மற்றும் ரோம் நகரத்துடன் பல்லவர்கள் வாணிபத் தொடர்பு கொண்ட ஒரு முக்கியத் தொடர்புத்தளமாக மாமல்லபுரம் இருந்தது.

மாமல்லபுரத்தில் ஏழு கோயில்கள் இருந்ததாகவும் இதனால் இதனை ஏழு கோயில் நகரம் என்று அழைத்திருக்கிறார்கள். இக்கோயில்களைக் கடல் குடித்ததாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பல்லவ பேரரசர்களின் கலை ஆர்வம் உலகம் அறிந்தத ஒன்று. அந்த வரிசையில் தன் பாட்டனார்களாமகேந்திர வர்மனையும், நரசிம்மவர்மனையும் கலைத்துறையில் ராஜசிம்மன் என்கிற இராண்டாம் நரசிம்மவர்மன் மித மிஞ்சியவனாக இருந்தான். 
பல்லவ வம்சத்தின் மாமன்னர்களைத் தொடர்ந்து காஞ்சி கைலாசநாதர் கோவிலும், மாமல்லபுர கடற்கரை கோவிலும் இன்றும் ராஜசிம்மனின் கலையார்வத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறன.
கற்களில் பலவகை உண்டு. எல்லாக் கல்லிலும் சிற்பம் வடிக்க முடியாது.
கருங்கல், சலவைக்கல், மணற்கல், மாக்கல் போன்றவற்றில் மட்டும் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன.
மகாபலிபுரத்தில் காணப்படுவது கருங்கல் சிற்பம் என்று சொல்கிறார்கள்.
குடைவரைக்கோயில் ஒற்றைக்கல் சிற்பங்கள்- புடைப்புச் சிற்பங்கள் கட்டுமான சிற்பங்கள் என சிற்பங்கள் நால்வகைகள் இருக்கின்றன
மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் குகைக்கோயில்கள் அர்ஜுனன் தவம் செய்யும் சிற்பம்- ஐந்து ரதம்- புலிக்குகை
மற்றும் ஏராளமான குறுஞ்சிற்பங்கள் இருக்கின்றன.
தர்மராஜரதம்- பீமரதம்-அர்ஜுனரதம்-நகுல சகாதேவரம்-திரௌபதிரதம் என்ற ஐந்து ரதங்கள் இருக்கின்றன. 
பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்றழைக்கப்படும் இந்த ரதங்களைச் பெரிய பாறையில் சிறுகச்சிறுக செதுக்கியிருக்கிறார்கள்.
நான்கு ரதங்கள் ஒரே பாறையில் உருவாக்கியதாக ஆய்வாளர்கள்  சொல்கிறார்கள்.
தர்மராஜ ரதம் ரதங்களில் மிகப் பெரிய ரதமாக இருக்கிறது.
பீம ரதம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.
துவாரபாலர் சிற்பங்பளைத் தவிர இதில் வேறு சிற்பங்கள் இல்லை. இது திருமாலுக்கு உரியதெனச் சொல்கிறார்கள்.
அர்ஜுனரத்தின் கிழக்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலும் பெண்களின
உருவங்கள் சிறந்த கலைப்படைப்புகளாக இருக்கின்றன.

இந்திரனுக்கு வடிக்கப்பட்டதாகச் சொல்லும் நகுல-சகாதேவரதம்
கொஞ்சம் முற்றுப்பெறாநிலையில் உள்ளது.

குடிசை போன்ற தோற்றத்தையுடைய திரௌபதி ரதம் மாமல்லபுர ரதங்களிலே சிறியதாக இருக்கிறது.
30 மீட்டர் உயரமும் 60 மீட்டர் நீளமும் கொண்ட அருஜுனன் தவம் செய்த வடிவில் அமைந்த சிற்பம் நான்கு நிலையைக் கொண்டிருக்கிறது.
முதல் நிலை விண்ணுலகத்தைக் குறிப்பதாகவும், இரண்டாம் நிலை விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் இடைப்பட்ட நிலையைக் குறிப்பதாகவும், மூன்றாம் நிலை மண்ணுல கத்தையும், நான்காம் நிலை பாதள உலகத்தைக் குறிப்பிடுவதாக ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.


வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என ஏராளமான சிற்பங்கள் அர்ஜுனன் தவத்தில் காணப்படுகின்றன. இதற்கு வலப்புரமாக ஒரே கல்லில் வடிக்கப்பட்ட குரங்கு குடும்பம் ஒன்று உள்ளது. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப் பட்டிக்கலாம் எனத் தெரிகிறது.

ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் இச்சிற்பத்தை அர்ச்சுனன் தபசு என்றழைக்கிறார்கள்.
இங்கு கிருஷ்ணரின் வெண்ணெய்க்கல் எனப்படும் இயற்கையாய் அமைந்த பாறை ஒன்று உள்ளது. சரிவொன்றில் அமைந்து இருந்தும் இது உருண்டு விழுந்து விடாமல் இருப்பது விநோதமாகவே இருக்கிறது.
8-ம் நூற்றாண்டில் வடிக்கபட்ட உலக நாதர் ஆலயத்திலிருந்து பார்த்தால் மொத்த நகரமும் கண்ணுக்கு தெரிகிறது.
இதன் தென் மேற்கே மகிஷாசுரமர்த்தினி குகை கோவில், ஆதிவராக குகை கோவில், திருமூர்த்தி குகை கோவில், ஆகியன மூன்று குகைக் கோவில்கள் உள்ளன.


இன்னும் தெற்கே சென்றால் கணேசரதம் என்னும் மலைக் கோவில் உள்ளது.


கடற்கரைக் கோவிலில் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான சில விஷயங்கள் இருக்கின்றது.
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே இடத்தில் சன்னதிகள் அமைக்கப்பட்டது இந்திய ஆண்மீகத்தில் குறிப்பித்தக்க ஒன்றாக இருக்கிறது.
கர்ப்பகிரகத்திற்கு பின்புறம் அமைக்கப் பட்டிருப்பது, சுற்றுப்புற சுவரில் வரிசையாக இருக்கும் நந்திகள் அற்புதமாக இருக்கிறது.


புத்த விகாரங்களின் சாயலிலும் பல்லவர்களின் சிற்பக்கலைக் காணப்படுகிறது.
அஜந்தா, எல்லோரா வகைக் குகைக் கோயிலின் மாதிரி வடிவத்தில் மாமல்லபுரத்தில் சில சிற்பங்கள் இருக்கின்றன.  
நரசிம்ம வர்மன் கி.பி.642 இல், சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்ற போது, அங்குள்ள சிற்பிகளையும், கலைஞர்களையும் போர்க்கைதிகளாக சிறைப்பிடித்திருக்கலாம் என்றும்,
அவர்களை காஞ்சிக்கும், மாமல்லபுரத்திற்கும் அழைத்து வந்து,  சிற்பங்கள் செதுக்கப்பட்டியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பெழுதிருக்கிரார்கள்.
இன்னும் பல சில சிற்பங்கள் முற்றுப்பெறாமலே இருக்கின்றன.
சாளுக்கியர்களின் படையெடுப்பும் விஜய நகரப் பேரரசின் தொடக்கமும் பல்லவர்களின் கலையை களைத்துப் போட்டிருக்கலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் தனஷ்கோடியிலும் 2004 ஆம் வருடம் சென்னையிலும் இதனைத் தொடர்ந்து கடலோர நாடுகள் ஆலிப்பேரலையில் எழுதிய இரங்கல் கதைகளை நம் கண் முன்னால் பார்த்திருக்கிறோம்.

மாமல்லபுரமும் கடல்கொந்தளிப்பில் சிக்கியிருக்கக் கூடும்...

கற்சிலைகளும் கோவில்களும் முழ்கடிக்கப்பட்டிருக்கக் கூடும்...

இன்றைய சூழலில்... பல்லவர்களின் கட்ட சிற்பக்கலை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுச் சிற்பங்கள் அனைத்தும் புராண இதிகாச கதைகளின் மையமாக இருக்கிறது.

இச்சிற்பக்கலையைப் பற்றி திருமங்கையாழ்வார்கள் பாடல்கள் தொட்டு, நவீன இலக்கியம் வரை பல கதைகளும் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.


பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி தனது South Indian History  என்ற நூலும், ராஜசிம்மனின் கலையார்வம் பற்றி சுவைபட எழுதப்பட்ட சாண்டில்யனின் ராஜதிலகமும் வரலாற்றுப்பதிவாக இருக்கிறது.
சரித்திர நாவலாசிரியரான கல்கி எழுதிய சிவகாமி சபதம் பல்லவர்களின் மகாபலிபுர சிற்பக்கலையை கட்டுக்கட்டாக எடுத்துச் சொல்கிறது.
சுவாமிநாதன் எழுதிய மகாபலிபுரம் என்ற புத்தகம் பல்லவர்களின் கட்டடக்கலையை நன்கு விளக்கியிருக்கிறது.
தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிற்பக்கலையில் மாமல்லபுர கடற்கரை கோயில் இன்று சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது.
மாமல்லனின் கலை அம்ச அழகைக் காணவரும் சுற்றுலாவாசிகளை மகிழ்விக்க கடலலைகள் வந்து ஏதேதோ சொல்லி விட்டுப் போகிறது.
கடலோரத்தில் சவாரி செய்வதற்குத் தயாராக நிற்கும் குதிரைகள், பாறைகளில் ஓடும் நண்டுகள், கடலலைகளில் சறுக்கி விளையாடும் இளைஞர்கள், காதலர்கள், கடைகள் விரித்துக் காத்திருக்கும் வர்த்தகர்கள், சிறு தெய்வப் பீடங்கள், எனக் காலை நேரத்து நிமிடங்கள் மாகபலிபுரத்தில் இன்னும் எத்தனையோ கோடி மனிதர்களால் கண்டு மகிழாமலே கடந்து போகிறது.
பல்லவ சாம்ராஜ்யத்தில் நம் மக்கள் கலையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நிதானமாகத் தியானித்திருக்கிறார்கள்.
சடங்குகளும் இறை வழிபாடும் கலையின் பெரும் பரப்பை நிறைத்திருக்கின்றன.


கி. மு. இரண்டாம் நூற்றாண்டுகளிலே மகாராஷாராவின் மலைத்தொடரில் அஜந்தா எல்லோர குகை ஓவியங்களை குதிரை லாட வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட குகைகளைப் புத்த மடாலங்களாக அமைத்து தீட்டிய ஓவியம் இன்று வாய்பிளக்க வைக்கிறது.
மாமல்லாபுரத்தின் கட்டக்கலைக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் சித்தன வாசல் என்ற கற்கோயிலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாறையில் செதுக்கியருக்கிறார்கள்.
ராஜராஜ சோழனின் தஞ்சை பிரகதீஷ்வரர் ஆலயம், மகன் ராஜேந்திரச் சோழனின் கங்கை கொண்ட சோழபுரம் போன்றவைகள் தமிழதப் பாரம்பரிய கலைச் சொத்தாக இன்று வரைப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பல்லவர்களிடமிருந்து 1500 வருடங்களுக்கும் அதிகமாக நாட்களை கடந்து வந்து விட்டோம். ஆனால் நம் சமகாலத்தில் மாகபலிபுரத்தைப் போல் ஓரே ஒரு கற்கோவில் செதுக்கி விட நம்மால் முடியுமா...?

முடியாதென்பது எதுவுமில்லை. மகாபலிபுரச் சிற்பஙகளை-என்ன வான தூதர்களா வந்து வடித்தார்கள்...?

இன்றும் கற்கோய்ல்களும் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கும் திறனுடையவர்கள் தமிழக்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காலம் சூழல் என்று எல்லாம் மாறிவிட்டது. ஒரு சாமானியன் நினைத்தால் பெரும் பாறைகளை சிற்பங்களாக காட்டி, திறப்பு விழா நடத்த முடியாது.


அரசனுக்கு கலை ஆர்வம் இருந்தால் மட்டும் அது சாத்தியமாகும். ஆனால் இன்றைய காலத்தி்ல் அதுவும் முழுமை பெறாது.


 ஆண்டுகள் ஆயிரக்கண்க்கில் கடந்து போகலாம்...

மனிதர்கள் எலும்புக்கூடுகளாகச் சிதைந்து
கோடிக்கணக்கில் பிறந்து வரலாம்...

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மேதைகளும்-ஞானிகளும்-
ஜாம்பவான்களும் நிச்சயம் காலம் சுமந்து வந்து கொண்டே இருப்பார்கள்...


















No comments:

Post a Comment