Wednesday 15 August 2012

கல்வி நேற்று இன்று நாளை...




அடர்ந்த வெளிக்காடுகளில் வளர்ந்த மரத்தின் தால்வாரஙகளில்....
கதை கேட்கும் மரபில், வாய் மொழியாக தொடஙகியது நேற்றைய கல்வி முறை...

கலை - இலக்கியம் - தத்துவம் - கணிதம் - விஞ்ஞானம் அறிவியல் மருத்துவம் சட்டம் - ஆண்மீகம் அரசியல் - போர் தந்திரம் என்று கல்வியில் பகுக்கப்பட்ட - தொகுக்கப்பட்ட நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டன.

ஞானிகளும் யோகிகளும், பெரும் முனிவர்களும் ஆசிரியர்களாக இருந்ததார்கள் என்று, புரணக் கதைகளும், பயணக் குறிப்புகளும் சாட்சி சொல்கின்றன.

பல வருடங்கள் தியானித்து இயற்கையோடும், கலைகளோடும் வாழ்க்கையை மாணவர்கள் நன்குணர்ந்தார்கள்...

ஆரம்ப காலத்தில், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கல்வி கற்று கொடுக்கப்பட்டது.

ஆசானிடத்தில் அரசர்களும் தாழ்ந்து பணிந்து வணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

ஆசிரியருக்குத் தேவையான உதவிகள் செய்து, பொன்னும் பொருளும் கொடுத்துப், படித்து வந்தார்கள் என்பதை தமிழ் இலக்கியப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

ஓலைச் சுவடிகளிலும், மணலிலும் எழுதிப் பழகினார்கள். ஆயிரக் கணக்கான பாடல்களையும், சில நூறு கணிதச் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்தார்கள்.

வாள் சிலம்பம் வர்மம் மல்யுத்தம் போன்ற போர்க்கலைகள் கற்பது பாரம்பரியமாக இருந்தன.
கூத்து, பரதம் போன்ற நிகழ்த்துக் கலைகளும், ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிடக்கலைகளும் நம் முன்னோர்களின் கல்வியில் ஒரு பகுதியாகவே இருந்தன.

காலம் சூழல் என்று, எல்லாம் மாற்றிப் போட்ட அரசர்களின் படையெடுப்புகள், அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என வந்தபோதெல்லாம் கல்வி முறையிலும் திருப்பங்கள் உண்டானது.

1835 ஆம் ஆண்டுகளில்... மெக்காலே என்ற வெள்ளையர் கொண்டு வந்த கல்வித் திட்டம், கல்வியில் இது வரைக்கும் இல்லாத அணுகு முறையைக் கொண்டு வந்தது.

ஆங்கிலேய ஆட்சியில் சில பாதிரிமார்கள் செய்த சேவையில், மதம் - கல்வி -மருத்துவம் சுகாதாரம் என்ற, தன்னார்வத் தொண்டுகள் இந்திய தேசத்தைப் பக்குவப்படுத்துவதாகப் பார்வையிட்டது.

தலை நிமிர்ந்து பார்க்கும் உயரமான கட்டிடங்கள், கல்விக் கூடங்களாக அமைக்கப்பட்டன.

பல மாதங்களாக கப்பல்களில் கொண்டுவரப்ட்ட பிரமாண்டமான மரப்பலகைகள் கட்டக்கலையில் கல்விக்கூடங்களாக வடிவமைக்கப்பட்டன.

தேக்கு மர நாற்காலிகளில் எல்லோரும் சமமாக அமர்ந்து படிக்கும் நிலமையை அவர்கள் உருவாக்கினார்கள்.

ஆங்கிலேயர்கள் அமைத்த கல்விக் கூடங்களில், அன்றைய தினத்தில் மிகவும் சொர்ப்பமானவர்களே படித்தாலும், அதே இடத்தில் இன்று பல ஆயிரக்கணக்காண மாணவர்கள் இலவசமாக பட்டம் வாங்கிச் செல்கிறார்கள்.

சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்து தான், வித விதமாக மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

கல்வியின் தரத்தை இவ்வளவு வசதியாக கட்டி மதிப்பீடு செய்திருக்கிறார்கள், நம்மை ஆட்சி செய்த வெள்ளை மனிதர்கள்.

இன்று...

உலகத்தை உள்ளங்கையில் புரட்டிப் பார்க்கும் கல்வித் திட்டங்களை இன்று உருவாக்கியிருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த மூலையிலும் சென்று படிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இன்று ஏராளம் இருக்கின்றன.

பாடத்திட்டங்களும், தேர்வு முடிவுகளும் இன்று இணையத்தில் வாசிக்கப்படுகின்றன.

இந்த மின்னணு உலகத்தோடு இயங்கக் கற்றுக் கொண்டால் போதும். இன்றைய கல்விக்கு ஏற்ற வகையில் பயணிக்க முடியும்.

ஆனால், கரட்டுக் காடுகளில்...
புழுதி பறக்கும் கிராமங்களில்...

மூக்கை உறிஞ்சி கொண்டே செல்லும் பாவாடை கிழிந்த சிறுமிகளும், அழுக்குச் சிறுவர்களும், லட்சக் கணக்கில் செலவாகும் இன்றைய கல்வியில் சேர்ந்து எப்படி ஓடப் போகிறார்கள் ?

மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முதல் இடம் பெறும் பள்ளிகள், பெரும்பாலும் தனியார் பள்ளிகளாகவே இருக்கிறன.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் முதல் இடம் பெறாததற்குக் காரணம் என்னவாக இருக்கும் ?

படிக்கும் மாணவர்கள் மேல் குறையா? பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மீது குறையா? இல்லை அரசு பள்ளியே குறைதானா?

பள்ளியில் படித்து முடிக்க முடியாத பாடங்களை டியூசனில் வந்து படித்துக் கொள்கிறார்கள். அப்படியென்றால், பாடத் திட்டத்தில் குறையா ? நடத்தும் முறையில் குறையா ?

பல ஆசிரியர்கள் வாங்கும் டூயூசன் பீஸ், அவர்கள் வாங்கும் அரசாங்க சம்மபளத்தை விட அதிகமாக இருக்கிறது.

பள்ளி முடிந்தவுடன், சில ஆசிரியர்கள் படிப்பு அல்லாமல் வேறு விதமான பகுதி நேர வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி பாடம் கற்று கொள்வார்கள் ?

அதிக புள்ளிகளையும், விருதுகளையும் எடுத்த பள்ளிகளை ஊக்கப்படுத்தும் அரசு, அடிப்படை வசதியில் பின்தங்கிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் கவனிக்க மறுத்து விடுகிறது.

படித்து பட்டம் வாங்கிய முதல் தலைமுறையினர் பெரும்பாலும் கல்லூரி முடித்து வீதிக்கு வந்ததவுடன் தான் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள்.

இன்றைய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் வேலை வாய்ப்புகள் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும்,

போட்டித் தேர்வுகள் என்று தனியாக படிப்பதற்காக, ஐந்தாறு வருடங்கள் ஒதுக்கி மீண்டும் படிக்கத் தொடங்குகிறார்கள்.

கல்லூரியில் படித்த வரலாறோ, இலக்கியமோ, பொருளாதாரமோ முக்கியத்துவம் கொடுக்காமல், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி யெடுக்கிறார்கள்.

பத்திரிக்கை சினிமா உணவு மற்றும் கைத் தொழில்களான மீன் வளர்ப்பு கோழி வளர்ப்பு பட்டுப்பூச்சி வளர்ப்பு தேனி வளர்ப்பு காளான் வளர்ப்பு போன்ற படிப்புகள் இன்றைய கல்வியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

தொலை தூரக் கல்வியில் பல விதமான படிநிலைகள், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று துறைகளைப் பற்றி படிக்க வழி வகுத்துள்ளன.

படிப்பதற்குத் தேவையான தகவல்கள் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. 

கலையிலும், தொழில் நுட்பத்திலும் சிகரத்தில் ஏறி பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறைச் செயல் பாடுகளில்...

மனிதர்களைப் போலவே யந்திரங்கள் இன்று பாடம் நடத்துகின்றன.

கல்வியில் நாளை நிலை எப்படி இருக்கும்.....?

நாளை...

கல்வியில் நாளை...
கரும்பலகைகள் தேவையற்றதாக இருக்கும் ....
சாக்பீஸ் தயாரிப்பு நின்று விடும்...
புத்தகச் சுமை குறையும் ...
எழுதுகோல் தேவைப்படாது....
அயல் நாடுகளைப் போல கணிணி மையம் ஆகும்...
மணலில் எழுதி பழகிய கல்வி போல
கணிணியில் எழுதுவார்கள்...
கதிர்வீச்சில் பாடம் கவனிப்பார்கள்.
கல்வியில் வி்ஞ்ஞானம் நாளை விளையாட்டுப் பொருளாகும்...
பக்கத்துக் கோள்களுக்குப் பயணமாகும்....



  
 




  

      


No comments:

Post a Comment