Wednesday 29 August 2012

பர்மா பஜார்


சென்னை நகரின் கிழக்கு கடற்கரையில்... உலக பொருட்கள் அடங்கிய நூற்றுக் கணக்கான கடைகளின் தொகுப்புதான் பர்மா பஜார்.

சில்லரை வருமானமாகவும், மொத்த வருமானமாகவும் விற்பனை செய்யும் இந்தக் கடைகள் 3 க்கு 3 அடியாக மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறன.

பர்மா பஜார் அருகில் உயர்நீதிமன்றம், பூக்கடை, பீச் ஸ்டேஷன், குறளகம் போன்ற பிரபல இடங்கள் இருக்கின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கபடுவதற்கு முன்பு, பாரிஸ்தான் சென்னையின்  பிரதான பேருந்து நிலையமாக  இருந்தது.

இந்த பஜாரில் கிடைக்காத பொருளே இருக்காது என்பதைச்
சென்னைவாசிகள் அறிந்திருப்பார்கள்.
    

1960 ஆம் ஆண்டு வாக்கில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவேண்டி அன்றைய அரசால் அவர்களுக்காக  ஒதுக்கபட்டதுதான் இன்றைய பர்மா பஜாரின் பகுதிகள். 

1966 ஆம் ஆண்டு வாக்கில் இங்கு தொழில் செய்பவர்களுக்காக, பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு முதல் பர்மா பஜாரில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பிறகு இதன் வளர்ச்சி எவரெஸ்ட் சிகரத்தைப் போலத்தான்...
மற்ற மாநிலத்தில் உள்ளவர்களையும் வாடிக்கையாளர் வெகுவாக ஈர்த்துள்ளது.

 
கடல் கடந்து வந்த மேலை நாடுகளின் பலவகையான மின்சாதனப் பொருட்கள் பர்மா பஜாரில் வந்து குவிந்து கிடக்கின்றன.

பாப்புலரான பெரும் நிறுவனங்களின் பொருட்கள் விலை உயர்வாக இந்தாலும், அதே மாதிரியில் பிற கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இதனால், நடுத்தர மக்களும், சிறுவர்களும் தங்களுக்குத்  தேவையான பொருட்களை வாஙகிச் செல்கிறார்கள்.

இங்கே சென்றால் நமக்கு தேவையான பொருள்களை ஒரே இடத்திலேயே வாங்கி விடலாம் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

துணி வகைகளாகட்டும் செல்போன்களாகட்டும் அழகு சாதன பொருளாகட்டும்...கம்ப்யூட்டர் முதல் ஹைஹீல்ஸ் வரை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான் அதற்கு காரணம்.

ஒரு காலத்தில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி என்றாலும் கூட இன்றளவில் இந்த பகுதியில் பர்மா தமிழர்கள் இருப்பது குறைவுதான்.

பொருளாதாரத்தை உயர்த்திகொள்ளும் நோக்கத்தில் பல கடைகள் இங்கு வாடகைக்குக் கொடுக்கப்படுவதும், பணத்தேவைக்காகவும் சரியாக நடத்த முடியாத பட்சத்தில், கடையை விற்றுவிடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

 
இங்கே பலர் தின கூளிக்காகவே வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நெறுக்கமான உறவினர்களாக இருக்கிறார்கள்.

 
வயது முதிர்ந்தவர்கள், இங்கு பல ஆண்டுகளாகவே தொழில் செய்துவருவதாகக் கூறுகிறார்கள்.
 
பல வண்ணங்களில் விதவிதமான பொம்மைகள் ரோட்டோரத்தில் விற்பனைக்காக அடுக்கி வைக்கபட்டிருக்கிறார்கள்.

 
டிவிக்களும், கீ போர்ட் வகைகளும் , செல், வாக்மேன் மற்றும் ஐ பாட் போன்ற பொருட்களும் பல மாடல்களில் பர்மா பஜாரின் விற்பனையில் முதல் வரிசையில் வந்து நிற்கின்றன.


ஆண்களுக்கான பெல்ட் வகைகளும், பெண்களுக்கான லிப்ஸ்டிக் வகைகளும், மற்றும் கைக்கடிகாரங்கள் முக கண்ணாடிகள் என்று பணத்துக்கேற்ற பொருட்கள் பர்மாபஜாரில் ஏராளம் இருக்கின்றன.

கடைகளின் நடை பாதையில் நடந்து போனால் போதும், அந்தந்த கடைகளின் இடைத்தரகர்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டே இருப்பார்கள்.

வாங்கும் பொருள்களைப் பற்றி ஒரு பேச்சுக் கொடுத்தால் போதும்...
பொருளைக் காட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

வாங்குபவர்கள் ஒரு கடையில் நின்று பேசினால் பக்கத்தில் நிற்கும் மற்ற கடைக்காரர்கள் விலகிக் கொள்வார்கள்.

பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள், இந்த பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள்.

தங்களுக்கு மட்டும் புரியும் தொழில் மொழியில் ஒரு பொருளை எந்த விலைக்கு விற்கலாம் என பேசிக் கொள்கிறார்கள்.

வாங்குபவர்களின் எண்ணம் திசை மாறாமல் பார்த்துக் கொள்வதை தொழில் உத்தியாக வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் அதிக நேரம் பேரம் பேசி, எந்தப் பொருளும் வாங்கவில்லையென்றால் பார்மா பஜாரின் கடைக்காரர்கள் வெறுப்படைந்து விடுகிறார்கள். இதைக் கடந்து, கடையை விட்டு விலகி வருவதே பெரும் சிரமாக இருக்கும்.

இங்கு எந்த நாட்டு திரைப்பட சீடிக்களும் எளிதில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.               

ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், பர்மா பஜார் சீடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு வேகமானவர்கள் இவர்கள்.

பொதுவாக உலக சினிமாக்களை வாங்குவதற்கு, விசுவல் கம்யூனிகேசன் படிப்பவர்கள், துணை இயக்குனர்கள் போன்றவர்களின்  வாடிக்கையில் பர்மா பஜாரில் நல்ல வரேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஈரான், பிரெஞ்ச்,ஜப்பான், கொரியன், லத்தின், ஆகிய வெளிநாட்டுப் படங்கள் அதிக விற்பனையாகின்றன.

தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் எடுக்கப்படும் ஆவணப்படங்களும், குறும்படங்களும் அதிக லாபம் ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள்.

உலக சினிமாக்ளை தவிர தியாகராஜ பாகவேதர், சந்திரபாபு, டி.எம். சௌந்திர ராஜன், சுசிலா, ஹிந்தியில் முகம்மது ரஃபி, கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர் ஆகியோர் பழைய படப்பாடல்களையும் பொதுவாக வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இது தவிர சீசனுக்கு ஏற்றபடி ஐய்யப்பன் பாடல்கள் போன்ற பக்தி பாடல்களும் விற்பனையாகின்றன.

சிறுவர்களுக்கா கார்ட்டூன், விளையாட்டு சீடிகள் அதிகமாக பர்மா பஜாரில் வாங்கிச் செல்கிறார்கள்.

அடிக்கடி சீடிக்கடைகளுக்கு வரும் காவல் துறையின் கண்காணிப்பை பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள்.

விற்பனையாகும் திருட்டு வீசீடிகளால் பர்மா பஜார் மீது படத் தயாரிப்பளர்கள் எரிச்சலடைகிறார்கள்.

நெறுக்கமான சொந்தக்காரர்களாக இருந்தாலும் வியாபாரம் பார்க்கும் போட்டியில் பல குழப்பங்களோடும் சர்ச்சைகளோடும்  பர்மா பஜாரில் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது.






No comments:

Post a Comment