Wednesday 15 August 2012

முதல் தலைமுறை



அகதிகளுக்கும் அனாதைகளுக்கும் அதிகமான வித்தியாசம் இருப்பதில்லை.

இரண்டும் ஓரளவில் ஒன்றுதான்.

சூழல் எதுவாக இருந்தாலும் வலி என்பது ஒன்றுதான்.

தனிமையும் வெறுமையும் சேர்ந்து கொண்டு ஒரு மனிதனுக்கான  தேடலைத் தொடங்கி வைக்கிறது.

பிறவிக்கோளாறுகளில் உறவுகள் அறுந்து தொங்கவிடப்பட்ட மனிதர்களே அகதிகளாகவும் அனாதைகளாகவும் வந்து விடுகிறார்கள்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனிமைப்பட்டவர்கள் எழுதும் சாகசங்கள் தொடர்ந்து வரலாற்றின் பக்கங்களில் கவனமாக பதிவு செய்யப்படுகிறன.

ஒரு சமூதாயத்தை மாற்றிப்போட்டவர்கள், சாதாரண மனிதர்களிடமிருந்து விலகிக் கொண்டு தங்களுக்குத் தேவையான தனிமையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

நிலக்கரி இறுகி இறுகி வைரமாவது போல, மனிதர்களின் உணர்வுகள் பதப்படுத்தபடுகிறன.

இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையில் முதல் தலைமுறை மனிதர்கள் முரண்படும் போதெல்லாம், அங்கு ஒரு யுகப் புரட்சி நிகழும்.

முதல் தலைமுறை ....

இந்த வார்த்தையின் அர்த்தம் விளங்குவதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது.

ஒரு சந்ததி இடைவெளியின் நெருக்கடியில் விழுந்து விழுந்து நடக்கிறது இந்த முதல் தலைமுறை. 

கரட்டுக் காடுகளிலும், பெயர்சொல்லவே கூச்சப்படும் கிராமங்களிலும் பிறந்துவிட்டதால்,  இந்த மாடனிஸத்தில் சேர்ந்து ஓட முடியாமல் தேங்கிவிடுகிறார்கள்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பதற்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் சில தட்டுச் சிட்டுகள் தடம் மாறிச் சென்று விடுகிறன.

கனவுகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்த முடியாமல் போன இந்தக் கால ஓட்டத்தை, ஊடகங்கள் படம் போட்டு காட்டும் போதெல்லாம், சில நிமிடங்கள் மட்டும் அதற்காக இரக்கப்பட்டுக் கொள்கிறோம். 

மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களாக, ஏதோ ஒரு மூலையில், அடிதட்டு நிலையிலிருந்து தடைகளை உடைத்து சாதிக்கும் சாதனையாளர்களின் பெருமை சுய குறிப்புகளாக வரும்போது அதை வாங்கி ஆர்வமாகப் படிக்கிறோம்.

செருப்புக் கடைகள், ஹோட்டல்கள், கட்டட வேலை, என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டே ஒரு குறிப்பிட்ட சமூகம் படித்து பட்டம் வாங்குகிறது.

அம்மணச் சிறுவர்களையும் - அழுக்குச் சிறுமிகளையும் எந்தச் சாலை ஓரத்திலும் நீங்கள் பார்க்க முடியும்.

தூக்கி எறியப்பட்ட சோளிகளைப் போல சாவடிகளில், சொல்லக் கூடாத வார்த்தைகளைத் உளறிக் கொண்டிருக்கும் லுங்கி இளைஞர்களை நீங்கள் பார்க்க முடியும்.

காலமாற்றத்துகேற்ப மாற முடியாமல், தான் பெற்ற பிள்ளைகளுக்கு உரிய வயதில் உரிய தேவையை நிறைவேற்ற தெரியாமல், பிள்ளைகளைக் கொள்ளும் பெற்றோர்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள்.

படித்த படிப்புக்கும், தகுதிக்கும் எந்த இடத்தில் எந்த வாய்ப்பு இருக்கும் என்பது அனேக இளைஞர்களுக்கு இன்னும் சரிவர விளங்கவில்லை.

இதற்கெல்லாம் காரணம் சுறுங்கிப் போன மனநிலை. அதற்கு துணையாக இருக்கிறது, இந்தப் பழமைவாதச் சமூகம்.

இந்தியாவின் எலும்புக் கூடுகளான பட்டிக்காடுகளில் வாழும் மக்களிடம், சிந்தனையில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

நொடிக்கும் நேரத்தில் முடித்து விடும் தகவல் தொடர்புகள் இருந்தும், இன்னும் ஏன் பரம்பரைக்கூலிகள் இருக்கிறார்கள்.

மருத்துவத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வரும்போதெல்லாம் புது புது நோய்களும் வருவது போல, தொழில் நுட்பம் வளர்ந்த போதெல்லாம் முதல் தலைமுறை மனிதர்கள் அதற்கு ஈடு கொடுக்க முடியாவில்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இருக்கின்ற உறவு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இருக்கின்ற உறவாக இருப்பதை உங்களால் உணரமுடியுமா....

அதை, பரம்பரை இடைவெளி அல்லது சந்தததி இடைவெளி என்று சொல்லலாம்.

தந்தை வாழ்ந்த காலத்தின் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை பிள்ளைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெற்றோர்கள், தான் வாழ்ந்த அதே சூழலில் பிள்ளைகளையும் நிற்க வைத்து கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தண்டித்து விடுகிறார்கள். 

இதைச் சொல்லித் திருத்த முடியாது.
முதல் தலைமுறைகள் தெறித்து வந்து விழுந்த தனக்கான இருப்பிலைத் தக்கவைப்பதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது....    


No comments:

Post a Comment