அரசியல்.

மீனவர்கள் போராட்டமும் , வாபஸும் .

இலங்கைக் கடற்படையால்  கைது செய்யப்பட்ட 8  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் . இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குள்மீன்பிடிக்கச்சென்ற காலத்தை விட வேலை நிறுத்தப் போராட்டமே அதிகம். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்தும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும் இரட்டை மடி வலையை எதிர்த்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது . அதுவும் ‘கன்னித் தீவு .
மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாகவும்  மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். போராட்டம்தான் மீனவர்கள் லட்சியமா ? அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை விட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அதிகம்.
மீனவர்களின் வருமானமே மீன் பிடிப்பதில்தான் உள்ளது. ஆனால் பெரும்பாலும் இவர்கள் மீன் பிடிக்க செல்வதில்லை. இதற்கிடையில் இலங்கை கடற்படையினர் மீனவர்களைப் பிடித்துச்சென்று விடுகின்றனர். மீனவர்கள் இதை உணர வேண்டும்.
தங்கள் குடும்ப நிலை பிள்ளைகள்  போன்றவற்றை யோசிக்க வேண்டும் , வாழும் வரை என்று சாகும் வரை போராடக்கிறார்கள் . போராட்டத்தைக் கைவிடுங்கள் ; மீனைகளைப் பிடியுங்கள் ; குடும்பத்தைக் காப்பாற்றுங்கள் .
உங்கள் பாதையை யாரோ மாற்றி விட்டார்கள் . கடந்த கால அனுபவங்களில் போராட்டங்களால் பயனில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். பாதை மாறுங்கள் பயணத்தை தொடருங்கள்.  

ராஜபக் ஷே ஒரு தீவிரவாதி - சிங்கப்பூர் பிரதமர் .
“ ராஜபக்சே ஒருதீவிரவாதி . அவரைத் திருத்தமுடியாது .” இது தமிழர் நெஞ்சங்களில் பால் வார்த்தசெய்தி. முதன் முதலாக ஒரு சிங்கப்பூர் பிரதமர் தைரியமாக இப்படி சொல்லியிருக்கிறார்.
தமிழகத் தலைவர்களோ இந்தியத் தலைவர்களோ இதுவரைக்கும் இவ்வளவு தைரியமாக எதையும் சொன்னதில்லை. இப்படி சொல்லியதற்காக சிங்கப்பூர் பிரதமருக்கு எந்த விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதையும் எதிர்பாராமல் துணிவாக சொல்லியுள்ளார் அவர் .
“இலங்கையை இரண்டாகப் பிரியவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு  எதிராக பல கொடுமைகள் நடந்துள்ளன.” சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ  இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித வன்முறைகள் பல நடந்துள்ளன ; மதக் கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்துக் கோயில்கள் ஏராளம் இடிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் குடியிருப்புகளில் சிங்களவர் குடும்பம் நடத்தினார்கள் . இலங்கை ராணுவம் தமிழர்களின் பிணங்களைக் கூட சித்ரவதை செய்து வருகிறது  .
 மத்திய அரசு 1000 கோடி ரூபாய் ஈழத் தமிழர்களுக்கு வழங்கியும் அதை அவர்களுக்கு பயன்படுத்தவில்லை . 50 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி வழங்கியும் அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் முடங்கிக் கிடக்கின்றன.
பலமுறை இந்தியா தனது சார்பில் தூதுக் குழுக்களை அனுப்பியும் இலங்கை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர்களைத் துன்புறுத்துவதிலேயே குறியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு “ஈழத் தமிழர்களுக்கு ‘அதிகாரப் பகிர்வு’ வழக்கப்படும்” என்று ராஜபக் ஷே அறிவித்து ஏமாற்று வேலை காட்டினார். உடனே தமிழ் ஆர்வலர்கள் ஒரு கணம் திகைத்தார்கள் . சூரியன் மாறி உதிக்குமோ என சந்தேகப்பட்டார்கள் .
இதற்கிடையில் இலங்கை அரசு 36 வது சட்டத்தைத் திருத்தப் போவதாக கூறியுள்ளது. இது ஈழத் தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானது என குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
இலங்கை அதிபர் ராஜபக்சே எடுக்கும் எந்த நடவடிக்கையும் தமிழர்களுக்கு எதிரானதாகவே உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பல முறை இந்தியா தெரிவித்தும் ராஜபக்சே அரசு கண்டு கொள்ளவில்லை . ஐ.நா. சபையில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகும் இலங்கை அடங்கிய பாடில்லை.
சிங்கப்பூர் பிரதமரின் இந்தக் கருத்து தமிழர்களின் நெஞ்சங்களில் பால வார்த்துள்ளது .
உலக நாடுகள் இத்தனை இருந்தும் இப்படி பகிரங்கமாக சொல்லாத வார்த்தையை இவர் வெளியிட்டுள்ளார் .
ராஜபக் ஷே ஒரு தீவிரவாதி .  

நிறம் மாறாத உதயகுமார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவராக இருப்பவர் உதயகுமார். அணுஉலை குறித்த விழிப்புணர்வு இல்லாத மக்களை வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் இவர் , தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன், தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் என்ற கவிஞர் வாலியின் பாடலின் மொத்த உருவமாக இருப்பவர்.


நாட்டு நலன் முக்கியமல்ல  தன் வீட்டு நலன் முக்கியம் என நினைப்பவர். மின் தடையால் தவித்துக்கொண்டிருக்கும் தமிழகத்திற்கு ஒளி தரும் வரப்பிரசாதமாய் இருக்கும் கூடங்குளம் அணுஉலையை தன்னுடைய சுய விளம்பரத்திற்காக காவு கொடுக்க நினைப்பவர்.


அணுஉலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து  அணு உலையால் பாதிப்பில்லை என்று தெரிவித்த பிறகும் தாடி இருப்பதால் தன்னை ஒரு விஞ்ஞானி என நினைத்துக் கொண்டு மக்களை பயமுறுத்திக் கொண்டிருப்பவர். தன்னுடைய போராட்டங்கள் தோல்வி அடைந்து வருகின்றன என்பதை உணர்ந்த பிறகு வேறு வேறு பாதையை தேர்ந்தெடுத்து மீடியாக்களில் விளம்பரம் தேடிக்கொள்பவர்.

ஆனால் இவருடைய ஆட்டங்களுக்கு முடிவு கட்டி விட்டது உச்ச நீதிமன்றம். அணுஉலை இயங்க அணுஉலை ஆணையம் உத்தரவிட்டது சரியே என்று கூறி விட்டது. அணுஉலை இயங்க எவ்வித தடையுமில்லை என்று கூறிவிட்டது.

இது குறித்து நிருபர்களிடம் பேசியுள்ள உதயகுமார் உச்ச நீதிமன்ற 17அறிவுரைகளை பின்பற்றிய பிறகு அணு உலையைத்திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி என்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்து அணுஉலை இயங்காமல் தடுப்போம் என கூறியுள்ளார்.
அது சரி ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவரும் ஏமாற்றிக்கொண்டிருப்பார். ஆனால் அணுஉலை இயங்கும் .

தமிழகத்திற்கு 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி. குறிப்பாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. மற்றவர்களைப்பற்றி கவலை இல்லை.

 

நாளைய எஜமானர்கள்.

சாலையோர மக்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு அந்தஸ்து கொடுத்துள்ளது. அவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது. 66 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது.

நாடோடிகளாய் வாழ்ந்த அவர்களுக்கு மற்றவர்களின் கவனத்தை அவர்கள் பக்கம் தேர்தல் ஆணையம் திருப்பியுள்ளது.

வரும் நாடாளு மன்றத் தேர்தலில்  அவர்களையும் சிலர் ஓட்டுக்காக தேடி வருவர். அவர்களைப் பார்த்து கும்பிடுவர். இது சாலையோர மக்களுக்கு ஆச்சரியத்தைக்கொடுக்கும். நாம் தான் எப்பவும் பிறரைக் கும்பிடுவோம். அவர்கள் நம்மை கும்பிடுகிறார்களே எனறு ஆச்சரியப்படுவர்.

எல்லாம் தேர்தல் வரைதான். வெற்றி பெற்ற பிறகு அவர்கள் இவர்களை மறந்துவிடுவர். ஓட்டுப் போட்டதோடு சாலையோர மக்களின் மரியாதை போய்விடும். இவர்கள் மற்றவர்களைக் கும்பிடுவது தொடரும். சாலையோர மக்களின் நிலை அப்படியே இருக்கும்.

ஏற்கனவே வாக்களித்தவர்கள் ஏமாந்து போயுள்ளனர். அந்த வரிசையில் இனி இவர்களும் சேர்ந்து கொள்வார்கள். வெற்றி பெற்றவர்கள் வாக்களித்தவர்களை மறப்பது என்பது சகஜமானது.

இவ்வளவு பெரிய இந்திய நாட்டில் கேரளா முதலமைச்சர் உம்மன்சாண்டி மட்டுமே தரகர் இல்லாமல் தானே நேரில் மக்களைச் சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்பவர் என்று சர்வதேச ஆய்வு அறிக்கை கூறியள்ளது.

இதை மாற்ற மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி அறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நல்லவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஒழுக்கமுள்ள அரசியல்வாதிகளை நாடு அடையாளம் காணமுடியும்.

அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த தூரம் குறைய வேண்டும் .
  

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் வாதிகள் அடங்க மறுக்கிறார்கள்.

ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம் …

தெருவுக்கு ஒரு நீதிமன்றம் கட்டலாம் …
லஞ்சமும் ஊழலும் நிரந்தரமான இந்த சமுதாயத்தில் ஜனநாயகம் என்று சொல்வதில்  அர்த்தமில்லை.
“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் வாதிகள் அடங்க மறுக்கிறார்கள் -என்று சமூக ஆர்வலர்கள்   சொல்கிறார்கள் .
“தகவல் அறியும் உரிமைச் சட்டம் தன்னுடைய வரம்பை மீறுகிறது – என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் .
2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது . இந்த சட்டத்தின் கீழ் மத்திய மாநில தகவல் ஆணையங்கள் கொண்டு வரப்பட்டன .
பொதுமக்களுக்குத் தகவல் கொடுப்பதற்காகவே அரசு நிறுவனங்களில் தனியாக ஒரு தகவல் அதிகாரியை நியமித்தார்கள்.
நமது இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு  - இறையாண்மை கருதி , பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் தொடர்பு போன்ற ராணுவ ரகசியங்களைத் தவிர மற்ற அனைத்துத் தகவல்களும் 1 மாதத்திற்குள் வெளியிடுவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகளாக இருந்து வருகிறது .
அவரசமான தகவலாக இருந்தால் 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பித்த பொதுமக்களின் வீட்டுக்கே தகவல் வந்து சேரும் என்பதே தவகல் உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .
அரசு மற்றும் தனியார் துறைகளைப்பற்றி ஒரு குடிமகன் தகவல் கேட்டு அதில் திருப்தி இல்லையென்றால் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்யலாம்.
தனிமனிதனின் உரிமையாகவும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவையாகவும் கொண்டு வரப்பட்டது தான் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் .
“இந்தச் சட்டத்தில் , அரசியல் வாதிகளின் செயல்பாடுகள் அத்தனையும் பொதுமக்கள் கேட்க வேண்டும் . பொதுமக்களிடம் அரசியல் வாதிகள் நடத்தும் ஒவ்வொரு செயல்பாடுகள் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்கள் .
“அரசியல் கட்சிகளையும் தகவல் ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் உரிமை என்று சொன்னார்கள் .
மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் , “அரசியல் கட்சிகளும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என உத்தரவிட்டது .
அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது – அதன் சொத்து மதிப்பு என்ன - அது எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது – அதில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறை எப்படி நடக்கிறது – என்ற அத்தனை விபரங்களையும்  எழுத்துப்பூர்வமாக அரசியல் கட்சிகள் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது .
ஆனால் , ஜனநாயகத்தைக்  கட்டி காத்துக் கொண்டிருக்கும் நம் அரசியல் கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன .
அரசாங்கத்தின் நிதியுதவியில் நாங்கள் இயங்கவில்லை . தன்னார்வ நிறுவனங்கள் போல  , பொது மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறோம் .
அரசு ஊழிய நேரங்களைத் தவிர மாலை நேரங்களில் தான் எங்கள் அரசியல் கட்சிக்காக வேலை செய்து வருகிறோம் . வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் நிதி செலவிடும் விதம் அத்தனையும் கண்காணிக்க தேர்தல் ஆணையம் இருக்கிறது .
அதனால் தகவல் ஆணையத்திடம் நாங்கள் இதுபற்றி எதுவும் கொடுக்கத் தேவையில்லை . “தகவல் ஆணையம் தன்னுடைய எல்லையை மீறுகிறது  – என்று அரசியல் கட்சிகள் தகவல் உரிமைச் சட்டத்திற்கு கருப்புக்  கொடி காட்டி வருகின்றன .
அரசியல் கட்சிகள் தங்களுடைய நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பது என்பது ஒரு அலுவலக வேலை . நிறுவனங்கள் , தக்க சமயத்தில் வருமான வரி அலுவலகத்தில் தங்கள் நடவடிக்கைகளைக் கொண்டு சேர்ப்பது போல , இதுவும் ஒரு சாதாரண நடைமுறை தான் .
ஜனநாயகத்தின் வேர்கள் – இந்த அரசியல் கட்சிகள் . அரசியல் கட்சிகள் இல்லமல் ஒரு அரசு எப்படி உருவாக முடியும் ? வெற்றி பெற்ற அரசியல் கட்சியே ஒரு மாநிலத்தின் – ஒரு தேசத்தின் அதிகாரமாக மாறுகிறது . இதுவே குடியாட்சியின் இலக்கணமாகும் .
இதில் அரசியல் கட்சிகள் , தங்கள் அத்தனை நடவடிக்கைகளையும் பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க மறுப்பதென்பது ஜனநாயகத்தை எதிர்ப்பதற்கு சமமானதாகும்  – என்று சமூக ஆர்வளர்கள் கருதுகிறார்கள் .    
“அரசியல் கட்சிகளையும் தகவல் ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் - என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு 6 வாரங்கள் ஆகின்றன . எதிர்வாதம் செய்யும் எந்த அரசியல் கட்சியும் இந்த உத்தரவை  எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லை.
தனியொரு ஆளாய் தகவல் கேட்க வசதியாக வடிவமைக்கப்பட்ட தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வருமா - வராதா என்பது பற்றி , பிரதமர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும்  கூட்டம் ஒன்றை கூட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்தக் கூட்டம் , தகவல் ஆணையத்தின் உத்தரவை நீர்த்துப் போகச் செய்ய எடுக்கும் ஆயுதம் என்றே எதிர் தரப்பினர் கருதுகின்றனர்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு . இதில் என்ன பாகுபாடு .
ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்
தெருவுக்கு ஒரு நீதிமன்றம் கட்டலாம்
லஞ்சமும் ஊழலும் நிரந்தரமான இந்த சமுதாயத்தில் ஜனநாயகம் என்று சொல்வதில்  அர்த்தமில்லை.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு . ஜெய்ஹிந்த் !.
  
நரேந்திர மோ(ச)டி 


நரேந்திர மோடிக்கு விசா வழங்கக்கூடாது  என அமெரிக்க அதிபருக்கு இந்திய எம்.பி.க்கள் 65பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்து மார்க் .கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த சீத்தாராம் யெச்சுரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த அச்சுதானந்தன், தி.மு.க வைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், உட்பட 8பேர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த அதீப் என்ற எம்.பி. சீத்தாராம் யெச்சுரியிடம் தான் தான் கையெழுத்து வாங்கியதாகவும் யெச்சூரி மறுப்பு தெரிவித்திருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் மிகவும் நேர்மையானவர் என்று வர்ணிக்கப்படும் யெச்சுரி இதுபோன்று தவறான தகவல் தந்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க. நரேந்திரமோடியின் பெயரைக் கெடுக்க காங்கிரஸ் செய்யும் சதி என தனது வழக்கமான பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவோ நரேந்திர மோடி மனுச்செய்தால் அமெரிக்க குடியுரிமைச் சட்டப்படி விசா வழங்க பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளது.

நாடாளு மன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வும் கம்யூனிஸ்ட் களும் இந்த நாடகம் ஆடுவதாக ஒரு வதந்தியும் உலவுகிறது. கனிமொழிக்கு 2ஜி ஒலிக்கற்றை வழக்கில் உள்ள நெருக்கடி, வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணிவைக்க தி.மு.க. முயல்வதால் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக வும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம்.

ஆனால் மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு.

மக்களை எப்படி தீர்ப்பளிக்க வைக்க வேண்டும் என்பது அரசியவாதிகளின் தொலைநோக்கு !    


2014.ல் தொங்கும் பாராளுமன்றம்.

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதென கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இந்து நாளிதழும் சி.என்.என், ஐ.பி.என். தொலைக்காட்சியும் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 182 இடங்களும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 165 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கூட்டணிக்குமே அருதிப்பெரும்பான்மைக்கு 100 இடங்கள் குறைவாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு சென்ற தேர்தலை விட குறைவான இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸுக்கு 25 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிகிறது.

நிதீஸ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு சென்ற தேர்தலை விட குறைவான இடங்களே கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆக மத்தியில் ஆட்சி அமைப்பதில் தி.மு.க, அ.தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் போன்ற மாநில கட்சிகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருக்கும். குதிரைப்பேரம் அமோகமாக நடக்கும். உதிரி கட்சிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.
                                          
ஜெயலலிதாவும் மம்தா பானர்ஜியும் கூட்டணியில் இணைய பெரும் நிபந்தனைகள் விதிப்பர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்  இவர்கள் இணைய மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் மம்தா பானர்ஜி இணைய விரும்பமாட்டார்.

3வது அணி அமைந்தாலும் பிரதமரை தேர்வு செய்வதில் இரண்டு பேருக்குமே கடும் போட்டி இருக்கும். குழப்பம்தான் மிஞ்சும். இந்தியாவில் நிலையற்ற அரசு அமைந்தால் எதிரி நாடுகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் மக்களிடம் வெவ்வேறு வகைகளில் செல்வாக்கு இழந்துள்ளன.

ஒன்று ஊழலிலும் மற்றது மதச்சார்பின்மையிலும் சிக்கித்தவிக்கின்றன. அதனால் தான் மாநில கட்சிகளை மக்கள் நாட ஆரம்பித்து விட்டனர். மத்தியில் நிலையற்ற ஆட்சி அமையும் என்பதுதான் கருத்து கணிப்புகளின் முடிவு தெரிவிக்கிறது.

திரையுலகில் தொடரும் மரணம் . 

சிறுவயதில் சினிமாவிற்கு வந்து  குறுகிய காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற பெரிய நடிகர்களின் ஜோடியாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலை பெற்ற மஞ்சுளா மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தி நிலையத்தில் “கடவுள் ஒருநாள் உலகை காண தனியே வந்தாராம் என்ற பாடலில் காஞ்சனாவுடன் நடித்த மஞ்சுளா , தமிழ்த்திரையுலகின் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்,சிவாஜி ஆகியோருக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் பெரும் புகழை அ டைந்தார்.

எம்.ஜி.யாரோடு “ரிக்ஷாக்காரன், “நினைத்ததை முடிப்பவன், “நேற்று இன்று நாளை- “உலகம் சுற்றும் வாலிபன், போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார். “அவன்தான் மனிதன், “டாக்டர் சிவா, “உத்தமன், “எங்க தங்க ராஜா ,போன்ற சிவாஜியின் படங்களில் நடித்து அவரது ரசிகர்களையும் கவர்ந்தார்.

நடிகர் விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளா அவருடன் பல படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாக வெற்றி உலா வந்த போது அவருக்கு அடுத்த படியாக மஞ்சுளா இருந்தார்.

மஞ்சுளாவின் மகள்கள் மூன்று பேரும் நடிகைகள் தான். வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி மூன்று பேரும் நடிகைகள். ஒல்லியான உடல், சிரிப்பு போன்றவை ரசிகர்கள் மஞ்சுளாவை மறக்க முடியாதவாறு செய்தன.

இந்த ஆண்டு திரையுலகம் இழந்திருக்கும் 3 வது பிரபலம் நடிகை மஞ்சுளா.

காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. கண்ணீரில் தத்தளிக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது அனுதாபங்கள்.

எங்க தேசம் .
 “பாரதநாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்

மகாகவி பாரதியாரின் இந்த வரிகளின் படி நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை அடைகிறோம். அது போல நம் தேசியக்கொடியின்மீது நாம் பெரிதும் மதிப்பு வைத்திருக்கிறோம். இன்று நமது தேசியக்கொடி உருவான தினம். இன்றைய தினத்தைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.

கொடியின் மேலே உள்ள ஆரஞ்சு நிறம் தைரியம் மற்றும் வீரத்தையும், நடுவில் உள்ள வெள்ளை உண்மை மற்றும் அமைதியையும், கீழே உள்ள பச்சை நம்பிக்கை மற்றும் செம்மையையும் குறிக்கிறது.

நடுவில் உள்ள தர்ம சக்கரம் புத்தரின் கொள்கையைக் குறிக்கிறது. இந்தக்கொடியை வடிவமைத்தவர் தற்போதைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர். இந்தக்கொடி முதன்முதலில் 1947 ம் ஆண்டு ஜூன்23ந் தேதி உருவாக்கப்பட்டது. கொடியின் நடுவில் ராட்டை வடிவம் அமைக்கப்பட்டது. அது காங்கிரஸ் கொடியைச் சார்ந்து இருந்ததால் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அதை மாற்றி அசோகா சக்கரத்துடன் கூடிய இந்தக்கொடி 1947ம் ஆண்டு ஜூலை 22ந்தேதி உருவாக்கப்பட்டது.

காந்தியடிகள் போன்றோர் பெற்று தந்த “சுதந்திரத்தை 69 ஆண்டுகள் ஆகியும் நாம் அனைவரும் அடையவில்லை. ஒரு சிலர் தான் அதனை அனுபவித்து வருகின்றனர். அவர் வகுத்து தந்த நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. சாதி மதமற்ற இந்தியா, தீண்டாமை, மதுவிலக்கு போன்றவற்றில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். 

இவற்றையெல்லாம் தாண்டி நாம் அமைதியான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஆன்மீகத்தில் நமக்குள்ள நம்பிக்கையும், தொன்று தொட்டு நாம் செய்து வரும் தர்மமும்தான். எதிரிகளை எதிர்க்கும் பொழுது  மற்றவற்றை எல்லாம் மறந்து ஒன்று படுகிறோம்.இயற்கை பேரிடர்களால் மற்றவர்கள் தவிக்கும்போது சாதி மதங்களை மறந்து வாரி வழங்குகிறோம். எல்லாப் பிரச்னையிலிருந்தும் இவைதான் நம்மை காப்பாற்றுகின்றன.அதோ நம் தேசியக்கொடி பறக்கிறது. நமது வணக்கம்.  

இசை உதிர்காலம்.


2012-2013 ஆம் ஆண்டு பல திரை இசை மன்னர்களை ரசிகர்களிடமிருந்து பறித்துக்கொண்டது. பி.பி. சீனிவாஸ்.டி.கே.ராமமுர்த்தி, டி.எம். சௌந்திரராஜன் , மற்றும் வாலி போன்ற இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற  வர்களை  சுருட்டிக்கொண்டது.

“மயக்கமா கலக்கமா”, “காதல் நிலவே”, “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்”, போன்ற நெஞ்சை உலுக்கும் பாடல்களைப் பாடிய பி.பி.சீனிவாஸ், விஸ்வனாதனுடன் இணைந்து 10 ஆயிரம் பாடல்களுக்கு இசை அமைத்த டி.கே. ராமமூர்த்தி, எம்.ஜி.ஆர், சிவாஜி.போன்ற பல நடிகர்களுக்கு அவர்களின் குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை  மாற்றி பாடி சாதனை புரிந்த டி.எம்.சௌந்தரராஜன்.


4 தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய வாலி போன்றவர்களை களவாடிச் சென்று விட்டது. இலவசங்களை அறிவித்து தன்னிடம் இருக்கும் பழைய பொருட்களை - விற்கும் வியாபாரி, இலவசங்களை அறிவித்து ஆட்சிக்கு வரத்துடிக்கும் அரசியல்வாதிகள் இவர்களை எல்லாம் விட்டுவிட்டு  காலம்தோறும் கஷ்டத்தில் உழலும் மக்கள் சிறிது நேரமாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் இசையை வாரி வழங்கிய இந்த இசைமன்னர்களை எடுத்துக்கொண்டது  காலம் செய்த பெரிய துரோகம். ஆனால் அந்த இடத்தில் ‘புதிய விதைகள்’ முளைக்கும் இதுவும் காலத்தின் கட்டாயம் தானே.


விஸ்வநாதனுடன் இணைந்து டி.கே. ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்திரராஜன், பி.பி. சீனிவாஸ், ஆகியோர் பாடிய வாலி எழுதிய “நான் ஆணையிட்டால்”, “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்”, “தரை மேல் பிறக்க வைத்தான்”, “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே”, “மூன்றெழுத்தில் என்மூச்சிருக்கும்”, “மையேந்தும் விழியாட , “யார் சிரித்தால்” என்ன போன்ற பாடல்களும், கண்ணதாசன் எழுதிய “வந்த நாள்முதல்”, “அண்ணன் என்னடா” , “நீரோடும் வைகையிலே”, “தாழையாம் பூமுடித்து” , “மயக்கமா கலக்கமா”, “மனிதன் என்பவன்”, போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை .

இதை உருவாக்கிய அவர்களைப் பிரித்தாலும் ரசிகர்களின் நெஞ்சங்களிலிருந்து பாடல்களைப் பிரிக்க முடியாது. இந்த விஷயத்தில் காலம்தான் தோற்று விட்டது.



முதல் பிரேத பரிசோதனையில் ஏன் சொல்லவில்லை . ?

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த “இளவரசன் இறப்புக்கு முன் மது அருந்தி இருந்தார்” என்று காவல் துறையினர் தற்போதைய ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

ஜூலை 4 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளவரசன் மர்மாக இறந்து கிடக்கும் செய்தி வெளியானது . அதைத் தொடர்ந்து , இளவரசனின் உடல் ஜூலை  5 தேதியே உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு , “இது தற்கொலை” என மருத்துவ அறிக்கை வெளியானது .

இதை ஏற்க மறுத்த இளவரசனின் பெற்றோரும் , உறவினர்களும் விடுதலைச் சிறுத்தை கட்சியினரும் கடும் போராட்டத்தில் இறங்கினார்கள் . 

இளவரசன் மரணம் தற்கொலை அல்ல , “இது கொலைதான்” என்று மறு பிரேத பரிசோதனை செய்யும் வரை உண்ணா விரதம் இருப்போம் என்று பெற்றோர்களும் உறவினர்களும் சொல்லி தொடர்ந்தார்கள் .

அதனால் டெல்லி - எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த 3 மருத்துவர்கள் , எட்டு நாள் கழித்து 13 தேதி மறு பிரேத பரிசோதனை செய்தனர் .

அதற்கு பிறகு , சென்ற ஞாயிறு 14 ஆம் தேதி இளவரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது . அதை தொடர்ந்து “இளவரசனின் மரணம் தற்கொலைதான் என்றும் கடிதங்களில் இருக்கும் கையெழுத்து இளவரசனுடையது தான்” என்று புலனாய்வில் தெரிவித்தார்கள் .

இன்று கடைசியாக வந்த தகவலின் படி இளவரசன் இறப்பதற்கு முன் மது அருந்தியதாக தகவல் தெரிவிக்கிறார்கள் . இளவரசனின் தந்தை ஏற்கனவே , “என் மகனுக்குக் குடிப்பழக்கம் எதுவும் இல்லை” , என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் .

ஆனால் , விசாரணையில் நண்பர்களுடன் சேர்ந்து இளவரசன் குடிப்பழக்கத்தில் இருந்திருக்கிறான் என்று தெரிய வந்ததாக போலிஸார் சொல்கிறார்கள் .

ஏன் இந்த குடிபழக்கத்தை முதல் பிரேத பரிசோதனையில் சொல்லவில்லை . ?

குறிப்புச் சொற்கள்: இளவரசன் , குடிப்பழக்கம் , பிரேத பரிசோதனை , தர்மபுரி , எய்ம்ஸ் மருத்துவமனை .


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்து வந்த பாதை.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து 2 முறை ஆட்சி நடத்தி வருகிறது. சோனியா காந்தி தலைமையிலான இந்த கூட்டணி அரசு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இயங்கி வருகிறது. ஒரு கூட்டணி அரசை நிர்வகிப்பது அவ்வளவு எளிதானதல்ல . அது சிரமமான காரியம்.   

அதை பிரதமர் மன்மோகன் , சோனியா தலைமையில் திறம்பட நடத்தி வருகிறார். பாரதிய ஜனதாக்கட்சி ஒரு முறை கூட்டணி அமைத்து அ.தி.மு.க. விலகியதால் கவிழ்ந்து விட்டது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்த திரிணாமூல் காங்கிரஸ் தி.மு.க. விலகியும் கூட இந்த அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் 3 பெண்கள். சோனியாகாந்தி, மம்தாபானர்ஜி, ஜெயலலிதாஆகியோர்.

இதில் சோனியா - மிதவாதி. மம்தா - தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என நினைப்பவர். ஜெயலலிதா - மற்றவர்கள் தன்னைத் தேடி வரவேண்டும் என்று நினைப்பவர்.

ஐ.மு.கூட்டணி அரசு முதல்முறை ஆட்சிக்கு வந்த போது 100 நாள் வேலைத்திட்டத்தினை அமல்படுத்தி அதன் மூலம் 2 வது முறையாக ஆட்சிக்கு வந்தது.

ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் பெரும் சோதனைகளைச் சந்தித்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதல் சோதனையாக வாய்த்தது . இதில் பெரும் ஊழலில் ஈடுபட்ட சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் எம்.பி ஆவார்.

அடுத்து நாட்டையே குலுங்க வைத்த ஊழல் 2ஜி அலைக்கற்றையாகும். இதில் 1,72,000கோடி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு காங்கிரஸை கலங்க வைத்தது. அடுத்து நிலக்கரிச் சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என அடுத்தடுத்து நடந்தன.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக டெல்லிப்பேருந்தில் 5 இளைஞர்கள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அந்தப் பெண் மரணமடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கிவிட்டது. இந்த சம்பவங்கள் ஐ.மு.கூட்டணி அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது .

மன்மோகன்சிங் தலைமையில் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, கபில்சிபல் போன்ற திறமையான அமைச்சர்கள் இருந்தும் கூட்டணிக்கட்சிகளின் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.

அவை தந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் அரசியல்வாதி அல்ல. சோனியா அழைத்ததால் அரசியலுக்கு வந்தவர். சிறந்த பெருளாதார நிபுணர்.

ஆனால் , அடிக்கடி நிறம்மாறும் அரசியல்வாதிகள் முன்பு இவரது திறமை எடுபடவில்லை. உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து தடுமாறியபோது இந்தியாவை நிலை நிறுத்தியவர்.

ஒருமுறை கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பது கஷ்டம் என மனம் நொந்து பேட்டியளித்திருந்தார். இச்சூழ்நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தல் காங்கிரசுக்கு பெரும் சோதனையைக் கொடுக்கும்.

     




பொய்யாகவே இருந்தாலும் நாங்கள் குனிந்து கொள்கிறோம் .


ஜூன் 4 தேதி இறந்து போன இளவரசனின் பிணத்தைக் கூட வாங்க முடியாமல் மருத்துவமனையின் சவக்கிடங்கு முன்னால் உறவினர்கள் தவித்து நிற்கிறார்கள். 

தினமும் எத்தனை வழக்குகள் – புலனாய்வு முடிவுகள் – இரண்டு முறை பிரேத பரிசோதனை என்று நிம்மதியில்லாமல் கிடக்கின்றன தர்மபுரி சனம்.
பா.ம.க.தான் இளவரசன் மரணத்துக்கு காரணம் என்று இளவரசனின் உறவினர்கள் கதறிக்கொண்டு இருப்பதற்கிடையில் திடீரென்று ஒரு புயல் திசை மாறுகிறது .

“என் தம்பி இளவரசன் இறப்பில் விடுதலை சிறுத்தை கட்சி என்ன உதவி செய்தது ?” என்று இளவரசனின் அண்ணன் பாலாஜி அக்கட்சி.யினர் முன்பு ஆவேசப்பட்டிருக்கிறார். 

மீண்டும் பிரேத பரிசோதனை வேண்டும் – வேண்டாம் என்று மாறி மாறி சொல்லி ஏன் என் தம்பியின் மரணத்தை அரசியல் படுத்துகிறீர்கள் ? மேலும் எங்களை காயப்படுத்தாதீர்கள் ! என்று கதறியுள்ளார்.

அந்த வலி சாதாரணமானதல்ல. 

இதே நெருக்கடி ஏன் திவ்யாவுக்கு இன்னும் வரவில்லை ?
வராது ! வந்தாலும் அது இன்னும் ஆபத்து தான் .

-         சந்திரபால்.

அரசியல் தீயில் இனி எரியும் இந்தக் காதல் மலர்கள்

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” “ஜாதி இரண்டொழிய வேறில்லை” “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்” என்று கூறிய பாரதி - ஔவை போன்ற சான்றோர்களின் வார்த்தைகளை குழி தோண்டி புதைத்துவிட்டது தர்மபுரி சம்பவம்.

ரத்தத்தில் உறைந்து விட்டது ஒருமலர் . ஜாதிய தீயில் மாட்டிக் கிடக்கிறது ஒருமலர். காதல் மலர்களைப் பிரித்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி விட்டது. ‘லைலா மஜ்னு’ சம்பவத்திற்கு பிறகு சரித்திரத்தில் இடம் பெறப் போகுது [திவ்யா – இளவரசன்] இந்தக் காதல். அந்தப் பறவைகள் பறக்க அனுமதிக்கப் பட்டிருந்தால் இந்த சமூகம் பாராட்டியிருக்கும்.

அந்த பறவைகளின் சிறகுகளை ஒடித்த அந்தக் குற்றவாளிகளுக்கு இந்த சமூகம் சவுக்கடி கொடுக்கும். வருங்கால சமுதாயம் புழுதி வாரி தூற்றும்.

மனித நேயங்கள் மறுக்கப்பட்டு தனிமனித கௌரவங்கள் இந்த மிருக சம்பவத்தின் பின்னணியில் நிற்கின்றன. மனிதர்கள் இந்த சம்பவத்தை மன்னிக்க மாட்டார்கள். சுயநலமிகள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.‘கௌரவக்கொலை’ என்ற ஒன்று நடைமுறையில் உள்ளது, அது நேற்று நடந்து விட்டது. காதல் மலர்களில் ஒன்று புதைக்கப்பட்டு விட்டது: ஒன்று சிறையில் அடைக்கப்பட்டு விட்டது.

இருவருமே சூழ்நிலைக் கைதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. இதை அடிப்படையாக வைத்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடை பெறப் போகின்றன. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த காதல் கதை பெரிய பங்கு வகிக்கும். ஆனால் இந்த காதல் மலர்கள் இரண்டும் அந்த பிரச்சாரத்தீயில் எரிந்து கொண்டிருக்கும்.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” “ஜாதி இரண்டொழிய வேறில்லை” “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்” என்று கூறிய பாரதி - ஔவை போன்ற சான்றோர்களின் வார்த்தைகளை குழி தோண்டி புதைத்துவிட்டது தர்மபுரி சம்பவம்.

ரத்தத்தில் உறைந்து விட்டது ஒருமலர் . ஜாதிய தீயில் மாட்டிக் கிடக்கிறது ஒருமலர். காதல் மலர்களைப் பிரித்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி விட்டது. ‘லைலா மஜ்னு’ சம்பவத்திற்கு பிறகு சரித்திரத்தில் இடம் பெறப் போகுது [திவ்யா – இளவரசன்] இந்தக் காதல். அந்தப் பறவைகள் பறக்க அனுமதிக்கப் பட்டிருந்தால் இந்த சமூகம் பாராட்டியிருக்கும்.

அந்த பறவைகளின் சிறகுகளை ஒடித்த அந்தக் குற்றவாளிகளுக்கு இந்த சமூகம் சவுக்கடி கொடுக்கும். வருங்கால சமுதாயம் புழுதி வாரி தூற்றும்.

மனித நேயங்கள் மறுக்கப்பட்டு தனிமனித கௌரவங்கள் இந்த மிருக சம்பவத்தின் பின்னணியில் நிற்கின்றன. மனிதர்கள் இந்த சம்பவத்தை மன்னிக்க மாட்டார்கள். சுயநலமிகள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.‘கௌரவக்கொலை’ என்ற ஒன்று நடைமுறையில் உள்ளது, அது நேற்று நடந்து விட்டது. காதல் மலர்களில் ஒன்று புதைக்கப்பட்டு விட்டது: ஒன்று சிறையில் அடைக்கப்பட்டு விட்டது.

இருவருமே சூழ்நிலைக் கைதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. இதை அடிப்படையாக வைத்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடை பெறப் போகின்றன. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த காதல் கதை பெரிய பங்கு வகிக்கும். ஆனால் இந்த காதல் மலர்கள் இரண்டும் அந்த பிரச்சாரத்தீயில் எரிந்து கொண்டிருக்கும்.

ஜெயலலிதாவின் பொறியில் சிக்கிவிட்டார் விஜய்காந்த்
 

நேற்றுநாகர்கோவில் நீதி மன்றத்தில் விஜயகாந்த் வழக்கறிஞருக்கும் அரசு வழக்கறிஞருக்குமஇடையே ஏற்பட்ட மோதலில்அரசு வழக்கறிஞரின சட்டைகிழிக்கப்பட்டு காயம் ஏற்படுத்திவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க . வழக்கறிஞர்கள் தாக்கி  தனது கோட்டையும் கிழித்து விட்டதாக விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற  செய்தியும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘விஜயகாந்த் ஒரு குடிகாரர்’ என ஜெயலலிதா விமர்சனம் செய்ததற்குப் பதிலடியாக ‘இவர் அருகிலிருந்து ஊற்றிக்கொடுத்தது போல சொல்கிறாரே’ என விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.



இந்த விசயம் கடுமையாக போகாமலிருக்க வைகோ சமாதானம் செய்து வைத்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப்பெற்றார், ஆனால் இது நீண்டநாள் நீடிக்கவில்லை.



தற்போது  நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க உறுப்பினர்கள் 7பேரை தன் பக்கம் இழுத்து தே.மு.தி.க.வை தோற்கடித்தார் ஜெயலலிதா.இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் தொடர்ந்து ஜெயலலிதாவை தாக்கி வந்தார்.



தக்க சமயத்திற்காக காத்திருந்த ஜெயலலிதா நாகர்கோவில் சம்பவத்தை அடிப்படையாக வைத்து விஜயகாந்தை பொறியில் சிக்க வைத்துவிட்டார். விஜயகாந்த் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.


விடுதலைப்புலிகளும் வைகோவும்.

இந்தியாவில்  விடுதலைப் புலிகள் இயக்கம் 1991 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

அதை தொடரந்து மீண்டும் 2010 ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதற்குத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.


இது சரிதானா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு பல்வேறு இடங்களில் விசாரணை செய்து ‘தடை செய்தது சரியே’ என தெரிவித்தது.


இதை எதிர்த்து வைகோ  மற்றும் வழக்குரைஞர்  புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.


1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த  தாணு  எனும் பெண்ணால் படுகொலை செய்யப்பட்டார்.



மேலும் ‘விடுதலைப் புலிகளால் இந்திய தலைவர்களுக்கு  ஆபத்து உள்ளது’ என்று கருதி அந்த இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதை ஆரம்பத்திலிருந்தே வைகோ எதிர்த்து வந்தார். கள்ளத்தோணியில் இலங்கை சென்று வந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.



விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சில இயக்கங்கள் செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ள நிலையில் , பிரபாகரன் இறந்த பிறகும் உயிருடன் உள்ளதாக  ‘உரிய நேரத்தில் வெளி வருவார்’ என்றும்  சொல்லிக்கொண்டிருந்தார்.


இவரது எந்த முயற்சியும் தமிழக மக்களிடம் எடுபடவில்லை. தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் விஷியத்தில் இவரை நம்பவில்லை. எனவே தான் இன்றும் அந்த விவகாரத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறார்.


சாத்தான் வேதம் ஓதுகிறது.

பரிதி இளம் வழுதி  மீண்டும் அ.தி.மு.க விற்கு வந்து அம்மா புகழ் பாட ஆரம்பித்துவிட்டார். 

புகழ்பாடிக் கொண்டே தனது பழைய தலைமையை தூற்ற தொடங்கிவிட்டார்.



அ.தி.மு.க. விலிருந்து தி.மு.க : தி.மு.க. விலிருந்து  அ.தி.மு.க என்பது பரிதிக்கு பழகிப்போனது. இவருக்கு மட்டுமல்ல எல்லா  அரசியல் வாதிகளுமே இப்படித்தான்.மக்களுக்கும் பழகிவிட்டது.



"இந்த செய்திகளை யாரும் கண்டுகொள்வதில்லை. கோபாலபுரத்து கொள்ளைகாரர்கள் தி.மு.க. தோற்றதற்கு ஸ்டாலின் காரணம்" என அவர் சொல்லியுள்ளார். இதுவரை இதை ஏன் சொல்லவில்லை என மக்கள் வியக்கிறார்கள்.



பேரம் என்பது அரசியலில் முக்கியமான வார்த்தை. அது படியவில்லையோ என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர். எது எப்படியோ அ.தி.மு.க.வில் இவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர்  பதவி கிடைத்து விட்டது.


“அரசியல்வாதின்னா எதாவது சுகத்தை அடையணும்.இல்லைன்னா அரசியல் வாதியா இருந்து புண்ணியமில்லை”. பரிதி தன்அனுபவத்தால்  அதை  உணர்துள்ளார். அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

                                

ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள் .தங்களை மதிக்காதவர்களை அவர்கள் மதிப்பதில்லை. இவரைப் போன்று நிறைய பேர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள்.



இன்று ஜெயலலிதாவைப் புகழ்பவர்  நாளை கருணாநிதியைப் புகழமாட்டார் என்பது என்ன நிச்சயம். பரிதி தி.மு.க விற்கு  உண்மையாக இருந்தவர்களில்  ஒருவர். காலம் மாற்றியிருக்கிறது. அரசியலில் இது சகஜம் தான்.

தி.மு.க. - காங்கிரஸ் - தேமு.தி.க - இப்படி இருந்தால் எப்படி இருக்கும் . !
                                   
ஈழத்தமிழர் பிரச்னையில் ஐ. நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் சில திருத்தங்களைக்கொண்டு வர இந்தியா கோர வேண்டும்  என்ற தி.மு.க வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததால் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க.  விலகியது. அதைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகியது.



2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற  தேர்தல் வரவுள்ளது . இதில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டை ஆதரித்ததன் மூலம் கம்யூனிஸ்டுகளுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தி.மு.க. வின் நிலைப்பாடு புரியாத புதிராக இருந்தது. ஆனால் இப்போது அதற்கு விடை கிடைத்து விட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற காங்கிரஸ் பச்சைக்கொடி காண்பித்து விட்டதால் இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி உறுதியாகும். புதிய தமிழகம் மற்றும் விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகளோடு தே.மு.தி.க. இணைந்தால்  அ.தி.மு.க. விற்கு கடும் சவாலாக இருக்கும்.

மின்வெட்டுபிரச்னை-  விலைவாசி உயர்வு - பேருந்துகட்டண உயர்வு- பால் விலை உயர்வு  போன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

வாக்கு வங்கி சிதறாமலிருக்க நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பை கடுமையாக குறைக்க தி.மு.க. - காங்கிரஸ் -  தே.மு.தி.க. கூட்டணி அவசியம். இக்கட்சிகளின் தலைவர்கள் சுயகௌரவத்தைவிட்டு நாட்டின் நலன் கருதி செயல்பட்டால் அது அ.தி.மு.க. அரசுக்கு ஒரு பாடமாக அமையும்.

.................................................................................................................................................

தி.மு.க. - கொள்கையில் தோல்வி .

அரசியலில் மோசமானவர்கள் என்றும் , மிகவும் மோசமானவர்கள் என்றும் 2 பிரிவு உண்டு. இதை நான் , ஏதோ ஒரு விவாத மேடையில் கேட்டிருக்கிறேன்.

அரசியல் வாதிகளில் பெரும்பாலோர் மோசமானவர்கள்தான். ஆனால் சந்தர்ப்பவாதத்திற்கும் கூட . சுயநலத்திற்கும் அரசியல் நடத்துபவர்கள் மிகவும்  மோசமானவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில், இந்த அரசியல்வாதிகளின் முகமூடி கிழிந்து விட்டது. ஈழத்தமிழர்களின் நல்வாழ்விற்காக தங்களது அமைச்சர் பதவியையும் காங்கிரஸ் கூட்டணியைவிட்டு விலகிய தி.மு.க,  தனது குடும்ப கௌரவத்திற்காக  மீண்டும் காங்கிரஸை சரணடைந்துள்ளது.

சுயநலம் என்று வரும்பொழுது நாட்டு நலம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இது வாக்களித்த மக்களை ஏமாற்றும்  செயல்.

ஈழப்பிரச்னைக்காகப் பதவியைத் துறந்ததாக ஆர்ப்பாட்டம்  செய்த தி.மு.க. இனி எந்த  முகத்தோடு  மக்களை சந்திக்கும்?

ஈழத்தமிழர் பிரச்னையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டது.

அரசியலில் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என வெளியில் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அரசியல் ரீதியாக தி.மு.க. தன்கொள்கையில் தோற்றுவிட்டது  என்பதே உண்மை.

No comments:

Post a Comment