Wednesday 27 June 2012

கலாச்சாரம்



கலாச்சாரம்

நதியின் மடிப்புகளில் தொட்டில் கட்டித் தவழ்ந்தது
இந்தக் கலாச்சாரத் தொல்லியியல்.

வானம் - பூமி - காலம் - சூழல்  தொட்டு
சடங்குகள் வேறுபடும் போதெல்லாம்
மனிதர்களும் வேறுபடுகிறார்கள்.

பெரும்பாலும் வழிபாடுகளில் 
ஒரு மனித இனத்தின் கலாச்சாரத்தைக்
கண்டுபிடித்து விடலாம். 

மனிதக் குழுக்களின் கலாச்சாரங்கள்,
வாழ்வியலின் புவியீர்ப்பு மையத்தில் தான் எழுதப்பட்டது.

உறவுகள் பின்னப்பட்டு ஒரு
குறிப்பிட்ட வெளியில் வாழ்ந்து கொண்டிருந்தது
இந்த மனிதக் கூட்டம்.

அரசர்கனின் பேச்சுவார்த்தைகளில் 
அந்தச் சமூகத்துக்கான கலாச்சாரம்
கவனமாக எழுதப்பட்டது.

ஒரு சமூகத்தின் ஆட்சி நிலைகுழையும் போதெல்லாம் அச்சமூகத்துக்கான கலாச்சாரமும்
ஆடைமாற்றிக் கொள்கிறது.

வயல் வெளிகளில் - களத்து மேடுகளில்
அறுவடை செய்தார்கள்  இந்தக் கலாச்சாரத்தை
நமது மூத்த மனிதர்கள்.

ஆடுமாடுகளே  மனிதர்களின்
ரொக்க மதிப்புகள்

வயல் வரப்புகளே
வகுப்பறைகள்

அதோடு
காதலும், வீரமும்
தமிழனின் பழைய ஏற்பாடுகள்.

அதில் கலந்து விட்டது
சில பகட்டுப் பாடுகள்.

அதற்குக் காரணம்
வாழ்வியலின் அழகியல் தட்டுப்பாடுகள்.

கணவன் மனைவிக்குள்
சண்டைகள் இருக்கும், சச்சரவுகள் இருக்கும்
ஆனால் இப்போது நடக்கும்
விவாகரத்துகளோ, தற்கொலைகளோ
முன்னொரு காலப்பதிவில்
எந்த இடத்திலும் இல்லை.
   
கூட்டு மனிதர்கள்
தங்கள் வீட்டுக் குள்ளே முடிந்து கொண்டார்கள்
கலாச்சார முடிச்சுகளை.

ஜெமீந்தார்கள்
மிட்டாமிராஸ்தாரர்கள்
பண்ணையார்கள் என்று வாழ்ந்த காலக்கட்டத்தில்,

பிறப்பால் ஒதுக்கப்பட்டவர்கள்
கொத்தடிமைகளாக நசுக்கப்பட்டர்கள்.

அதிகாரம்
மனிதர்களின் வாழ்வியலில்
ஏறுவரிசையும், இறங்குவரிசையும் எழுதிப்பார்த்தது.

தேவலோக அழகிகள் என்ற
கற்பனைப் பாத்திரங்களான
ரம்பை, ஊர்வசி,மேகலைகளுக்கு நடுவில்
தேவதாசி முறை, பொட்டுக்கட்டிவிடும் பழக்கம்
அன்றைய நடைமுறையில்
தலைதெரித்து ஆடியது.

முட்டாள் சாத்திரங்களை வேரறுத்து
பெண்களின் முன்னேற்றத்துக்காக
சட்டமேதைகளும், பெரிய மனிதர்களும்
பிறந்தார்கள்.

வாரிசுரிமைப் போர்களின்
இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட
ஐரோப்பியர்களின் வருகை
ஒரு யுகத்திற்கான கலாச்சார மாற்றமானது.

மேற்கத்திய நாடுகளின் இறக்குமதியில்
கலாச்சாரமும் அடங்கியிருந்தது.

விதவிதமான ஆசைகளை
உலகம் விரும்பும்
கலாச்சாரக் கதம்பம் இது.

கலாச்சாரத்தில் பின்னப்பட்ட பச்சை நரம்புகளே,
ஒரு சமூதாயத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகள்.

செயல்பாடுகள் அத்தனையும்
உலகத்தின் பொதுவில் வந்து நிற்கும் போது
கலாச்சாரமும் பொதுவாக இருக்கிறது.

நமக்கானத் தொன்மக் கலாச்சாரம்
தொலைந்து போகும் -  இந்தச்
சந்ததி இடைவெளியல்,
முதல் தலைமுறையின் வாழ்வியல்
பாழ் பட்டுப் போக வேண்டியிருக்கிறது.

இன்றைய கலாச்சாரத்தின் அடிப்படை இதுதான் என்று நிதானித்துச் சொல்லிவிட முடிவதில்லை.

அதிநவீனத் தகவல்தொழில் நுட்பங்கள்
இன்றைய மனிதர்களின் உணர்வுகளை
எளிதில் பகிர்ந்து கொள்ள வைக்கிறது.

சேட்டிங், டேட்டிங் என்று
இளைய தலைமுறைகள் கிறுக்கும் பதிவுகளை
விடிந்தால் ஊடகங்கள் ஒப்பித்துவிடுகிறது.

சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகங்கள்
சொல்லித் தரும் புதிய வாழ்வியல் முறைகளை
நாம் விரும்பாவிட்டாலும் 
சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கண்ணகி காலத்திலும் கூட
காலம் கெட்டுக் கெடக்கு புள்ள’, போகும் போது ஆத்தாள கூட்டிட்டு போ- என்ற
கிழவி மொழி நாட்டு நடப்பைச் சொல்லி வைத்திருக்கும்.

அச்சு யந்திரமும், தகவல்த் தொடர்பும்
போக்குவரத்தும் யந்திரமாக்கப்படாத காலத்தில்
கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.

ஆனால், இன்றைய
ஊடகங்கள் சொல்லித் தருகிறது
புதுபுதுக் கலாச்சாரத்தை.



களைத்துப் போட்டதெல்லாம்
இங்கு கலாச்சாரமாகிறது.

கலாச்சாரத்தின்
வடிவங்கள் மாறிவிட்டது
புதுபுது அர்த்தங்கள் தேடிவிட்டது

குலசாமிக் கோவில்
அய்யனார் குதிரை
அங்காடி வாசலில்
அலங்காரப் பொருளாகவும் இருக்கிறது

குளியல் உடையை
தெருவில் அணிந்து வருவதற்கும்
எந்தக் கூச்சமும் இல்லை

விண்வெளி மனிதர்களின்
விசைத்தட்டு ஆடைகளும்
கொண்டாட்ங்களில் பங்கேற்கக்
கொண்டு வரப்படும்

கலாச்சாரத்தை சூழல் தீர்மானிக்கிறது
சூழல் மாறும் போது கலாச்சாரமும் மாறுகிறது

அடர்ந்த வழியில்
நடந்து கொண்டியிருக்கிறது
இந்தத் திறந்த வெளிக் கலாச்சாரம்


வேதியல் கலவையில்
துரித உணவுகள்

வாழ்வியல் நாடகத்தில்
கார்டூன் ஆடைகள்

இசையிலும் கூத்திலும்
மின்சாரத் தாளங்கள்

கட்டணப் படியின் வரிசையில்
வழிபாட்டு நேரங்கள்

பளிங்கு வாசலில் பிளாஸ்டிக் கோலங்கள்

பக்கத்து வீட்டில் கொலை நடந்தாலும்
பத்திரிக்கையில் வரும்வரை
புரியாத பாடங்கள்

அந்தந்த  இடத்துக்குத்  தக்கவாறு
மனிதர்களின் தனிநடிப்பின் வேடங்கள்

எல்லாம்
நடப்பியல்  கலாச்சாரத்தின் நாடகங்கள்

பார்த்துப் பார்த்துப் பழகும்
கலாச்சாரம் காலம் தொட்டு இளகும்
ஆசை கொண்ட அச்சில் அமரும்

சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்து
கற்களோடும்
இலை தளை ஆடைகளோடும்
கலாச்சாரம் தொடங்கும்.



No comments:

Post a Comment