Monday 25 June 2012

கலித்தொகை

கலித்தொகை

இது கேள் தோழி! நீண்ட பிரிவுக்கிடையில் அறிவன் அவன் தகவல் வந்து பாலைவனத் தூறல் போலச் சொட்டும்; சில கணம் மட்டும் நெஞ்சில் ஒட்டும்: தளிரின் சுனங்களாய் பசலையில் திதலை கட்டும்.

பனிவிலகா இளவெயில் கசிவில், புலனடங்காமல் நாநுனி தவித்துத் திசைதடுமாறி மனவெளியெங்கும் உயிரின் பதிவுகள்.

ராத்திரி மழையில் நனைந்து இலை நுனிகள் ஈரப்பட்டிருந்த அமுதப் பொழுதொன்றில், மலை இடுக்கில் உற்றவன் என்னை நோக்கித் தனித்திருந்தான்.

தவம் முற்றி தேவர் தரிசனம் போலும், இருளைக் கிழித்த சுடரொளி போலும், என் நாதனைக் கண்ட நிமிடம் - விழி கொட்டியது அமிலம்: மொழி தொலைத்தது என் உலகம்.

உடைந்து சிதறிய உள்ளத்தைப் பொருக்கி, உயிர் திரட்டிப் பேசினோம்.... பேசினோம்..... முடிவுகள் ஏதுமற்று.

கடக்கும் பொழுதுக்கு வருந்தி, இருவிழிக் கொழுவால் இதயம்உழுதான்: பெண் மோகம் விதைத்தான்: பின் காதல் சமைத்தான்: நல்வாழ்வு அமைத்தான்: என்னவன் அவன் என்னுயிர் வளர்த்தான்.

இடைவெளி கத்தரித்து - என்னை மெல்லத் தொட்டணைத்து - கடைவிழி தொடைத்து - நகைமொழி கேட்டு - என் நாணல்மேனி நாணித் தரை தொடும் முன்பு, நடைவண்டி வயதில் காலைக்கட்டும் பிள்ளையாக அடம்பிடித்தான்: சிணுங்கினான்: ஸ்பரிசித்தான்: மடியில் அமர்த்தி எனைச் சிக்கெடுத்தான்: சின்ன முத்தமிட்டான்: உடல் உயிர்த்துளைகளில் உருவில்லாமல் நுழைந்தான்: ஒரு மயக்கத் தொடக்கத்தில் உடனே கலைந்தான்.

பாகில் விழுந்த எறும்பாகத் துடித்தான்: துடிதுடித்தான்: தன்வசம் இழந்த நான் என்குணம் நான்கையும் அன்பனுக்குக் குழைத்துக் கொடுத்தேன்.

அவன் என் கூந்தல் கலையக் கொதித்தான்: வெண் பூக்கள் உதிர தவித்தான்: விழிமோதப் பதைத்தான்: என்முருவல் கண்டான்: எனக்குள் மருகச் செய்தான்: அதற்குள் உருகத் துணிந்தான்: இளையவன் வெறும் உள்ளம் மட்டும் பருகத் தணிந்தான்.

ஈங்கு நான் வேற்றுடல் மட்டும் கொண்டு வந்தேன். மற்று என் உள்ளம் அதைக் கள்வன் கையில் தந்தேன்.

இனி நான் இறந்துபடவும் சம்மதம்: அவனோடு இருந்த ஒவ்வோரு பொழுதும் எனக்கு உன்னதம்............

No comments:

Post a Comment