Monday 25 June 2012


நேற்று இன்று நாளை.... [தொலைக்காட்சித் தொகுப்பு]

[சென்னை]

நேற்று கல் மனிதர்கள்
இன்று எந்திர மனிதர்கள்
நாளை விண்மீன்கள் வாங்கும் தந்திர மனிதர்கள்

வனமந்திரக் காடுகளில் தொடங்கியது
கல்மனித நாடோடிகளின் கதைசொல்லிகள்

மொழி - கலாச்சாரம் - அரியணை - போர்கள் என்று
கலையின் கம்பளங்கள் சொல்லி வந்தது
இந்தக் கூத்து நாட்கள்

நேற்று....

ஆங்கிலப் பறவையின் சிறகசைப்பில்
மதராசப்பட்டனத்தின் கூடுகள் ஒடிந்தது

மணலடிப் பாதைகள் கூடக் கருப்புத்துணி கட்டிக்கொண்ட
தார்ச்சாலைகளாகத் தாமரைக் குளங்கள்
உயிர் விட்டது

உறைவாளும் செங்கோலும்
வெள்ளை மனிதர்களால் கொள்ளையடிக்கப்பட்டது
சென்னை கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையடிக்கப்பட்டது

காங்கிரிட் மரங்கள் கட்டுக்கட்டாக முளைத்தது

தொட்டாச் சிணுங்கிகளுக்கு மத்தியில்
சில வரிப்புலிகள் தானே எரியும் கோலம் கண்டது

பல்லக்குகளும் ரதங்களும் தண்டவாளங்கள்
அது கண்டுபிடிப்பின் பிடிவாதங்கள்

ஓலைகளும் கல்வெட்டுகளும்
மின்சாரத் தூதுகள்
இப்படி விஞ்ஞான விரல் ஏதேதோ கிறுக்கி வைத்தது

முத்தும் மிளகும் கொடுத்து
நம்மவன் கிழிஞ்சல் பொருக்கி வந்த போது

அடிமைச் சங்கிலியில்
கல்வி - அறிவியல் - சட்டம் - மருத்துவம்
- கலைகள் என்று
உயிரின் ஒவ்வொரு அணுவிலும்
பக்குவமாய் நடவு செய்து நாடு கடந்தார்கள்

இன்றளவும் நீயும் நானும் அதன்
நகல்களாய் நடந்து கொண்டிருக்கிறோம்

இன்று....

விஞ்ஞான வெளிச்சத்தில் விடிந்து கொண்டிருக்கும்
இந்த மைக்ரோ வினாடிகளில்
கைகால் முகத்தைச் சுமந்து கொண்டு
கைதிகளாக அலைகிறார்கள்

யாருக்காகவோ எதற்காகவோ
அகதிகளாக அலைகிறார்கள்

சென்னை....

கடலலை ஓரத்தில் கனவுகளின் கூடாரம்
தமிழகத்தின் திறந்த வெளித் தால்வாரம்
வந்தேரிகளின் தாராளம்
மொழி - கலாச்சாரம் மிதிபட்டு
உயிர் வீங்கி அலையும்
கணிணி யுகத்தின் அனாதிக்காலம்

கண்ணாடி மாளிகையின்
ஆங்கில வாசத்தில் அறைகள் குளிரும் போது
பெருவெளிச் சாலையோரத்தில்
பிளாட்பார வீடுகள்
அது நகரும் நத்தைக் கூடுகள்

கலர்க் கலர்க் கோலமிடும்
சினிமா வாசல்கள்
உதிரும் ஈசல்கள்

கார்டூன் வார்த்தைகளில்
கதைக்கும் நிமிடங்களில்
தெருவில் ஒரு பைத்தியக்காரன் தமிழ் வாசிக்கிறான் என்பதும்
சென்னையில் மிகச் சாதாரணம்

பருவக்களிகள் கிறுக்கும் விடுகதை
மெரினாக் கடற்கரை

இனியொரு வழியில்
மெட்ரோ ரயில் திட்டம்

பளிங்கு மெத்தையில் மௌனம் அதிரும்
நூற்றாண்டு நூலகம்

சென்னையில்
கடல்நீர் சலவை செய்யப்படுகிறது
குடிநீராகும் நிலுவையில் இருக்கிறது

மேடையில் இடிமுழக்கம்
எதிர் கட்சிகள் எப்போதும் நெஞ்சைக் கிழிக்கும்

ஏதோ ஒரு நம்பிக்கையில்
சென்னை வந்திறங்கி
வாங்கிய சம்பளத்தில் பாதியை
வாடகைக்கே கொடுத்து விட்டு
வாய்கட்டி வயிறுகட்டி ஆண்மையும்கட்டி
அம்மா அப்பாவுக்கு
ஆயிரமோ இரண்டாயிரமோ
அனுப்பும் இளைஞர்களுக்குக்
காய்ந்து கிடப்பது குடல்கள் மட்டுமல்ல
இருதய மடல்களும் தான்

நாளை....

நிலாவில் வடை சுட்டு விற்கலாம்
விண்மீன்கள் விலைக்கு வரலாம்
விமானப் பயணம் வீணற்றதாக இருக்கலாம்
விஞ்ஞான ரெக்கைகள் சலுகையில் கிடைக்கலாம்
பக்கத்துக் கோள்களுக்குப் பண்டிகைக்குப் போய்வரலாம்

அங்கும்
கட்சிக் கொடிகள்
பிச்சைக்காரர்கள்...........

No comments:

Post a Comment