Monday 25 June 2012

வளைகுடா பகுதிகள்


வளைகுடா பகுதிகள்

பனித்துளிகள் உதிரும் பொய்கள் என்னை பச்சை தேவதைகளிடம் பேசச் சொன்னது.

வார்த்தை மடிப்புகளில் முகம் சிக்கி முண்டி நான் நிமிர, திசைகள் எதுவென்றே தெரியாமல் சிலந்தி வலைக் கூடுகள் கடந்த வளைகுடா பகுதிகளில், மீண்டும் நான் பனிப் பாறைகள் மோதி உடைந்து கிடந்தேன்.

காகிதப் பூக்களில் தேனெடுக்க அடம்பிடித்து நான் சிணுங்கிய போது, என் பால்வெளி அண்டத்தில் சில தும்மைச் செடிகள் வெடித்ததாகச் சொன்னார்கள்.

யாருமற்ற பயணத்தில் இலையுதிர்காலச் சருகுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பேசிக் கொண்டே நடக்கிறேன்.

நிலாக்காலத்தின் களத்தடியில் அரித்தாள் படைப்பின் கதகதப்பில் உறங்கி விழித்த போது, முக்குருணி நெல் குவிந்திருக்கும்.

நாட்டுக்கோழிச் சாறு குடிக்கச் சொல்லும் வயித்தியம் வெறுமையின் இலை நுனியில் தேங்கியிருக்கும்.

குளம்படிச் சத்தத்தில் காற்றைக் கிழித்து பறக்கும் குதிரையின் வியர்வை வாசம் கழுத்து மணிச் சிதறல் அள்ளி எறிந்த போதெல்லாம் ஞாபகம் வரும்.

விரட்டிக் கொண்டு வந்த அப்பனின் குரல், சிறு மூளையைக் கொத்தும் போதும், உயிரைக் கையில் பிடித்து உடம்பில் விசைத்தட்டு பொருத்தி கண்ணிமார் கோவிலில் உடைந்த குதிரை ஓட்டுக்குள் ஒளிந்து ஒடுங்கி, உடல் மறைத்தது இன்னும் மறந்து விடவில்லை.

கொடுக்காப்புள்ளி மரம் செதுக்கி, கூறு நாலனாவுக்கு விற்கும் முதலீட்டில் உண்டியல் நிரம்பும். விளக்கமாத்துக் குச்சி சுற்றிய பேட்டரி வெளிச்சம் வீட்டை நிறைக்கும்.

தட்டுச் சிட்டுகளும், கிளிக்குஞ்சுகளும் குய்குய்வென பொத்தி வைத்த ஜன்னல் கம்பிகளின் வழி கத்தும் ஜாமத்தில்.

தெள்ளு விளையாட்டில் சேர்த்த சோட மூடிகள் இரும்புக்கடைக்கு எடைக்குப் போகும். மீன்குஞ்சுகள் தொட்டிலில் செத்து மிதக்கும்.

வீட்டுப்பாடம் எழுதும் அதிகாலை நேரம் மணியடித்தவுடன் எண்ணெய் தேய்க்காமல், ஊக்கு குத்தி கைத்தையல் தெரியாமல் மூட்டிய சந்தோசத்தில் தேசியகீதம் பாடும்.        

No comments:

Post a Comment