Tuesday 9 July 2013

கொஞ்சம் ஜனநாயகம் பேசலாமா …


“தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளை லஞ்சமாக கருத வேண்டும்.  இலவசம் என்பது மக்களை பலவீனப்படுத்தும் செயல் .  அதை வன்மையாகக் கண்டிக்க வேணடும்.

டி.வி., மிக்ஸி, கிரைண்டர், லேப்-டாப், தங்க தாலி, ஃபேன், ஆடு, மாடு என்று பொது மக்களின் பணம், இலவசங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.

இலவசத் திட்டங்களால் தமிழக அரசின் கடன் தொகை 1 லட்சத்து 45 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது . இதனால் தமிழ் நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இப்படி கொடுக்கப்பட்ட எஸ் . சுப்ரமணியம் பாலாஜியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து , அந்த பொறுப்பைத் தேர்தல் ஆணையத்தின் தலையில் வைத்து விட்டது. ஆனாலும் சுப்ரமணியம் பாலாஜியின் இதை விடுவதாக இல்லை .  உச்ச நீதிமன்றத்தில் அவர் இதை மேல் முறையீடு செய்தார். ஆனாலும் சுப்ரமணியம் கண்ட கனவு வெளுக்க வில்லை.

ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த கலர் டி.வி. உள்ளிட்ட இலவசப் பொருள்கள் தானம் கொடுப்பதில் , என்ன பலன் இருக்கிறது ?

சகல வசதியோடு இருக்கும் பணக்காரர்களுக்கு இந்த இலவச பொருட்கள் தேவையற்றதாகவே வீணடிக்கப்படுகின்றன. இதனால் இந்த இலவசங்கள் சமூக நலன்களுக்கு எதிரானது என வாதாடுகிறார்கள்.

என்ன தான் வாதாடினாலும் , “இலவசத் திட்டங்கள் ஒன்றும் தவறில்லை” என உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்து விட்ட பிறகு , அரசியல் வாதிகளுக்கு இனி சந்தோஷம் தான்.

“ஜனநாயகத்தை விற்பனை செய்ய விளம்பரங்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன. அதற்கு இலவசத் திட்டங்கள் அறிக்கைகளாக தேர்தல் சமயத்தில் வெளியிடப்படுகின்றன.

பணமாக கொடுத்தால் லஞ்சமாம் . பொருளாகக் கொடுத்தால் தேர்தல் வாக்குறுதியாம்.

திறந்த வெளியில் வைத்து இப்படி அதிகாரப்பூர்மாக வெளியிடும் இலவச அறிக்கைகளை எதிர்த்து கொந்தளிப்பவர்கள் , தேர்தல் நேரத்தில் ‘தலைக்கு’ இவ்வளவு என்று தங்கள் சக்திக்கு அரசியல் கோஷ்டிகள் பணத்தை வாரி இரைப்பதைக் கண்டித்து ஏன் வழக்கு தொடுக்க வில்லை?

அந்தந்த தொகுதி பொறுப்பாளர்களர்களின் கையில் கொடுக்கப்படும் ரொக்கம் , ஓட்டுப் போடுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வாக்காளர்களின் வீட்டுக்கே வந்து சேர்கிறது.  இதைத் இந்த தேர்தல் ஆணையமும் நீதி மன்றங்களும் ஏன் தடுக்க மறுக்கின்றன ? 

அதிலும் இரண்டு மூன்று கட்சிகளிடமிருந்து பணம் பெற்ற வாக்காளர்கள் யாருக்கு ‘விசுவாசமாக’ இருப்பது என்று தெரியாமல் வாக்கு இயந்திரத்தின் முன்பு நின்று முடிவெடுப்பதெல்லாம் இங்கு சாதாரணம் தான்.

ஆட்சிக்கு வந்து செயல்படுத்தும் ஐந்தாண்டு ஜனநாயகத்தை விட ஓட்டு போடும் முன் கிடைக்கும் சில நூறு ரூபாய்கள் தான் சாதாரண மக்களுக்கு முக்கியம். 

ஜனநாயகம்  என்பது வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் கையிலும் இல்லை ; மெத்தப்படித்தவர்கள் கையிலும் இல்லை. யாருக்கு எவ்வளவு கமிஷன் பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கிறது இந்த ஜனநாயகம் என்ற அதிகார நாயகம் .

ரகசியமாகவோ , வெளிப்படையாகவோ ஊழல் என்பது கட்டாயமாக்கப்பட்ட போது யாரால் என்ன செய்ய முடியும் ?

“மக்கள் கையில் இருக்கிறது தீர்ப்பு” “அவர்கள் முடிவெடுப்பார்கள் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்று” – இப்படியெல்லாம் அடுக்கடுக்காக பேசி , பொது மக்களின் வாயையும் , கைகால்களையும் சட்டம் ஒழுங்கென்று ஏதேதோ சொல்லி கவனமாகக் கட்டி வைத்து விட்டு இந்த அரசியல் வாதிகள் பறந்து கொண்டே அறிக்கை விடுகிறார்கள். 

- சந்திரபால் .

No comments:

Post a Comment