Thursday 27 June 2013

படைப்பாளனின் வியாதி .

ஒரு படைப்பாளன்,தான் வளரும் சூழல் மாற்றங்களை வைத்தே பிரதிபலிக்கின்றான். கலையில் மிக முக்கியமானது இந்த உளவியல் . அதாவது மனநிலை .

தன் படைப்பில் தியானிக்கும் போது ,  கலையானது அவன் நினைத்த இடத்திற்கு அவனைக் கொண்டு சேர்த்து விடுகிறது.
 
கலையைப் பிரச்சாரமாகவும் , வியாபாரமாகவும் நினைத்து இயக்குவது இதற்கு உடன்படாது . அழுகையும் – கண்ணீரும் , கொண்டாட்டமும் – குதூகலமும் , கோபமும் – குரோதமும் ஒரு படைப்பாளனுக்கு வேறு வேறு அல்ல . ஆனால் படைப்பில் இருக்கும் நேர்மை , மகத்துவமாக இருக்குமானால் , அது காலம் கடந்து நிற்கும் .
 
பார்க்கும் பார்வையில் இருக்கும் ஆகச் சிறந்த ரசனைகள் ஒரு கலைஞனை உருவாக்குகிறது : உயர்த்துகிறது .
 
என் பேராசிரியர் எனக்கொரு முறை சொன்னது இப்போதெனக்கு ஞாபகம் வருகிறது . “முதல்ல வேடிக்க பார்க்க நீ கத்துக்க . அப்புறம் எழுதலாம் . என்னைப் பொருத்த மட்டில் இது வேத வாக்குதான் .
 
தன்னிலை மறக்க வைத்து ரம்மியப்படுத்தும் கலை , மனிதர்களை நெகிழ்விக்கும் நேரங்கள் அற்புதமானது . அதில் சலித்துப்போன சமாச்சாரங்கள் சேரும் போது , வேதனையாகிறது .
 
“ஒரு படைப்பாளி அவனறியாமலேயே தன் வியாதியையும் தன் படைப்பில் ஊற்றுகிறான்  - என்று லூயி பாஸ்டரோ சொன்னது இதற்கு பொருத்தும் .
விரக்தியிலும் வேதனையிலும் கலை வளம் வருவதை வியாதியாக உதாரணப்படுத்தி விட முடியாது . அது ஒரு உணர்வு . அதை ரசிக்கும் படி அமைத்தால் அது கலையாகிறது . இல்லையென்றால் அது வியாதியாகிறது.
 
சில நேரங்களில் , ரசனையில் மொய்க்கும் இந்த வியாதிகள் கலைஞர்களின் படைப்பில் வந்து எரிச்சலூட்டுகிறது . நிர்பந்தங்களுக்கு மத்தியில் , கலையைக் கொன்று ஜடமாகப் பார்வையாளர்களுக்கு முன்னால் நிறுத்துகிறார்கள் . அப்போது , அதற்கு ஆதரவானவர்கள் கைதட்டல் சத்தம் கேட்க காத்திருப்பார்கள் .
 
மனதனின் அகவெளியில் தனக்கான காட்சிகளைப் பார்க்கத் தூண்டும் அனைத்தும் கலை தான் . அதை முகம் சுழிக்காமல் பார்க்க வைப்பதெல்லாம் கலைஞர்களின் கையில் இருக்கிறது .
 
மிக பெரிய புகழுடைய கலைஞர்களும் சில சந்தப்பங்களில் ரசனை குறைச்சாலான படைப்பைத் தந்து விடுவதும் உண்டு.  அதற்காக அவர்களை ஒட்டு மொத்தமாகத் தாழ்த்தி மதிப்பிடுவதும் தவறு .
 
மனம் யந்திரமல்ல . அங்கே ஓடுவது ரத்தம் . பெட்ரோல் டீசல அல்ல .
அது இது என்று ஏராளமான படைப்பை வெளி கொணர நினைக்கும் பரபரப்பில் கலையின் நேர்த்தி கெட்டு நாசமாகிவிடுகிறது .
 
மிகச் சாதாரணமாக எல்லையற்று நீளும் மனநிலையில் கற்பனை வற்றாமல் சிந்தும் கலையே சுவைக்கும் படியாக இருக்கும் .


- சந்திரபால் .

No comments:

Post a Comment