Monday 10 June 2013

 

யார் அவள் ….?

காலையிலிருந்தே சாப்பிடாமல் , நேரம் போக வேண்டுமென்று செந்தில் சாயக்காலம் வரை உறக்கிக் கொண்டிருந்தான் . அலுவகலத்தில் முதல் ‘சிப்டுக்கு’ப் போயிருந்த பார்த்திபன் ‘பேன்ட்’ ‘சர்ட்’ மாற்றி விட்டு உறங்கும் செந்தில் அருகே வந்தான். மற்ற நண்பர்கள் ஊருக்குப் போயிருந்தார்கள் .

“டே …! செந்திலு ..! என்னாடா உடம்புக்கு முடியலையா” …? போர்வையை உதறி செந்தில் எழுந்தான் . “இல்லடா நைட்டுதூங்கலையில அதான்”…! “ சரி ,நான் போயிட்டு வர்ரே …! டே, நா வர லேட்டாகும் நீ சாப்டுரு” ….! வந்ததும் நிற்காமல், ‘பைக்’கை எடுத்துக் கொண்டு பறந்தான் பார்த்திபன் .

ஒவ்வொரு மாதக் கடைசியிலும் இப்படி தான் . சொந்த ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் இருந்தாலும் பசிக்கும் முன்பே , அம்மாவின் கை பக்குவத்தில் வகைவகையாக சாப்பிட்டதைப் பசியோடு இருக்கும் செந்தில் நினைத்துக் கொண்டான் . பார்த்திபனிடம் காசு வாங்கி சாப்பிடலாம் என்று படுத்தே கிடந்தவன் பசியில் சோர்ந்தான் .

செந்தில் , நேற்று இரவே சரியாக சாப்பிடவில்லை .பசி குடலைக் கிள்ளியது . பெட்டியில் எப்போதோ போட்டு வைத்திருந்த சில்லரைகளைப் பொறுக்கிக் கொண்டு நடந்தான் .
கையில் இருப்பதை வைத்து இரண்டு இட்லி ஒரு தோசையெல்லாம் சாப்பிட முடியாதென்பதால் , செந்தில் தெருவோரம் தள்ளு வண்டியில் வைத்து விற்கும் வாழைப்பழங்களைப் பார்த்தான் .
12 ரூபாய்க்கும் சேர்த்து வாழைப்பழம் வாங்கிக் கொண்டு, செந்தில் தன் இருக்கும் இடத்திற்கு நடந்தான் .

தெருவிளக்கின் வெளிச்சத்தில் இரண்டு சிறிய மூட்டைகளோடு , அழுக்குச் சேலை சுற்றி ஒரு வயதானவள் குத்த வைத்து அமர்ந்திருந்தாள் .

குறுக்கும் நெடுக்குமாக வந்து போகின்ற, வாகனங்களையோ - மனிதர்களையோ பார்க்காமல் ஏதோ ஒரு சிந்தனையில் மூக்கைச் சிந்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் .
பஞ்சத்தில் அடிபட்டவனுக்குத் தான் ,பசியின் அருமை புரியும் . அகதிகளுக்குத் தான் சுதந்திரத்தின் வலிமை தெரியும் . வாழைப்பழங்களோடு வரும் செந்தில் , கிறுக்கச்சி போல தோன்றும் அவளிடம் வந்தான் .

“இந்தாங்கமா” ….! நான்கு வாழைப் பழங்களை எடுத்து நீட்டினான் செந்தில் . “அதல்லாம் ஒன்னும் வேணாம்” …! அகங்காரத்தோடு அவள் பேசி மறுத்தாள் .

“அம்மா ,ஒங்க மகன் மாதி நெனச்சுக்கங்க” …! “இந்தங்க”….! மறுபடியும் வாழைப்பழங்களை நீட்டினான் .

“இந்தப்பா , எனக்கு பிள்ளையெல்லாம் யாருமில்ல போப்பா” ….! கோப்பட்டாள் அவள் .

அவள் சொன்னதும் , நின்றவன் அவளருகில் அமர்ந்தான் . “எனக்கு அம்மா இல்லனு நெனச்சுக்கங்க” ….! “இந்தங்க” …! கையில் கொடுத்தால் வாங்க மாட்டாள் என்று , செந்தில் மடியில் வாழைப்பழங்களை வைத்தான் .

“நீ நல்லா இருக்கனுப்பா”…..! கையெடுத்துக் கும்பிட்டாள் அவள் .

அவள் யார் …? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .

No comments:

Post a Comment