Monday 10 June 2013

தைல நிறம் அணிந்தவள் .


மந்திரப்பூக்களின் நரம்புகள் கோர்த்து அவளுக்கு உயிர் செய்தார்கள் . விதிகள் சொல்லும் மாயத்தில் அவளின் கவிதையுடல் , யாருடைய கனவிலும் வராமல் மறைந்தே வந்தது காலச்சுழல் கொண்டு .

இனிவரும் ஆண்டுகளில் … தன் உடலைப் பத்திரப்படுத்தவும் , நமட்டல்களுக்கு முன்னால் தப்பியோடவும் தொனிக்கும் அவள் விழி .

மண் தொட்டு நகரும் பாதங்கள் கூட பாதி மறைக்கும் பொறுப்பில் எப்போதோ ஒரு முறை வருவள் கடைத் தெருவில் .

தண்ணீர்க் கூட்டத்தின் வளைவில் மீன் குஞ்சாகப் பிறந்த முன் ஜென்ம ரகசியம் யார் வந்து சொல்வார்கள் என்று தெரியவில்லை .

அரேபிய பாலையில் நெய்த காற்றைத் திண்ண வேண்டியவள் பெண்ணாகிறாள் சரிகைப் பின்னலில் வலை செய்த விழியசைவில் .

கலீமாக்களில் உடையாமல் இருதயம் துடிக்கின்ற சத்தத்துடன் வரிகளாகி நடந்தாள் : எழுந்து உறங்கினாள் .

காடுகளும் மலைகளும் கத்தும் ஜாமம் உதறி , இறகு உலர்த்தும் குருவிகளின் மொழியாய் . இருட்டின் உடை களைந்த வெள்ளைப் பொழுதில் குனிந்து குனிந்து நிமிர்வாள் : மண்டியிட்டு எழுவாள் சமீரா .

“அல்லாவின் வார்த்தைகளோடு என் பிரபஞ்ச தடத்தில் நான் பயணிக்கின்றேன் . அதற்கான ஈமான் நிச்சயம் வந்து சேரும். இனியென் மறுமையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழிகளாடாமல் சொல்வேன் . எத்தனிப்பில் வினவுவேன்
.

இந்த மூன்று வருடங்களில் … விசும்பிய அரபு வார்த்தைகளுக்கு மத்தியில் அர்த்தவசப்பட்டாள் . கனத்த புத்தகமாக ரத்த அலையில் மோதி வளர்கின்ற அணுக்களுக்குத் தினம் ஏதோதோ சொல்லிக் கொடுத்தாள் இப்படி ...

“எத்தனை கோடி உலகம் இருந்தாலும் , ஜீவராசிகள் அத்தனையும் எழுந்து நின்று , எதன் வழிப்பட வேண்டும் ….? இனிநான் மைனாக்குஞ்சுகளுக்கும் வகுப்பெடுப்பேன் . அலாதியில் ரஸ்சுல்லாக்களைப் பற்றிப் பேசுவேன் . வினாவில் காபீர்களின் மடமையிலிருந்து விலகி விடச் சொல்வேன் . அதில் என்னுலகம் சம்பாஷிக்கும்
.

- சந்திரபால் .
 

No comments:

Post a Comment