Sunday 30 June 2013

காஞ்ச மண்ணு

“எந்த ஒரு நாட்லையும் விவசாயி பட்டினி இருக்கக் கூடாதுங்க  - இந்த வார்த்தைக்குள் இருக்கும்  வலி சதாரணமானதல்ல .

ஆனால் , நம் தமிழ் மண்ணில் மட்டும் விவசாயிகள் தற்கொலை செய்வதெல்லாம் அடிக்கடி நடக்கிறது . சொல்லப்போனால் , அது தற்கொலையல்ல . இதுவும் ஒரு வகையில் கொலை தான் .

“வம்பாடு பட்டு மண்ணக்கிட்டி மாரடிக்கிற பொழப்பெல்லாம் போதும்மப்பா …! எங்குட்டாவது அத்தக் கூலிக்குப் போனாலும் காவயித்துக் கஞ்சியாவது மிஞ்சும் . பெரும்பாலான விவசாயிகளின் மனமெல்லாம் இப்படி தான் பாலம் பாலமாகப் பிளந்து கிடக்கிறது .

பத்து - பதினைந்து ஏக்கர்கள் வைத்துப் பிழைக்கும் பெறும் விவசாயிகள் , கந்து வட்டிக்குக் கடன் வாங்கியாவது பயிரு பச்சைகளை விளைவித்துக் கொள்கிறார்கள் .

ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் – என்று எச்சம் சொச்சமாக வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கெல்லாம் பஞ்சப் பாடுதான் .

பணப்பயிர்களான தென்னை , கொய்யா , எலும்பிச்சை போன்ற தோப்புத் தொறவுகள் ஓரளவுக்குக் கை கொடுக்கலாம் . மற்றபடி மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும் பயிர்கள் , களையெடுப்புக் கூலிக்குக் கூட  கை கொடுப்பதில்லை .

ஒரு பயிரை விளைவிக்க , நான்கிலிருந்து ஐந்தாரு முறை நிலம் உழுது -  ஆள்விட்டு பாத்தி கட்ட– விதை அல்லது நாற்று வாங்கி – நடவு கூலி கொடுத்து – முதல் தவணை களையெடுத்து – வெட்டிக் கட்டி மண் அணைத்து – மருந்தடித்து – உரமூட்டைக்குக் காசு திரட்டி கடன் பட்டு – அறுப்புக் கூலி கொடுத்து – ஏற்றுக் கூலி – இறக்குக் கூலி தொடங்கி  – கமிஷன் வரைக்கும்  குடும்பமே உழைத்த உழைப்பை சந்தையில் கொட்டி வைத்தால் , ஆளாளுக்கு வந்து நினைத்த விலையை நிர்ணைத்து ஏழம் விட , உழவன் ஒரு மூலையில் அமர்ந்து இருக்கிறான் . தரகர்கள் தாராளமாக லாபம் பார்க்கிறார்கள் .

நினைத்த இடத்திற்கு கை மாற்றி விடுகிறார்கள் .

விவசாயிகள் கமிஷன் கடையில் முன் கூட்டியே வாங்கிய பணத்திற்கு வட்டியோடு சேர்த்து பூக்களையோ – காய்களையோ கொடுத்து விட்டு , அதிலிருந்து கழித்த மிச்சத்தைப் பெற்று போகிற வழியில் அழுகிய பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் கதைகளெல்லாம் எங்கும் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் .

“சம்சாரி வீட்டுல சாமத்துக்குத் தானப்பா சோறு – என்ற பழமொழிக்கு உதாரணங்களாகவே இன்னும் காயந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் , காவிரி நீர் பிரட்ச்சனை யெல்லாம் ‘எளைச்சவனுக்கு முதுகில் குத்து என்பது போல நடந்து கொண்டிருக்கின்றன .

கட்டட வேலை – 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் – என்ற வேலைகளுக்கெல்லாம் நல்ல சம்பளம் கிடைப்பதால் விவசாயத்துக்கு வேலையாட்கள் கிடைப்பதுமில்லை ,கிடைத்தாலும் கூலி கொடுக்க பெரும்பாலான உழவர்களுக்கு வக்கும்மில்லை .  
மானிபம் – உரம் தள்ளுபடி – விவசாயக் கடன்கள் – என்று பசுமையில் புரட்சி ஏற்படுத்துவதாக வரும் திட்டங்களெல்லாம் கோமணம் கட்டி பாடுபடும் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவதேயில்லை .

பெருநகரங்களில் காய்க்கடைகளில் டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் . வேண்டிய காய்களை பேரம் பேசும் வேலைக்கே இடமில்லாமல் குறித்த விலையில் எண்ணிக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள் .

சென்னை நீங்களாக, மற்ற மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து – விவசாய நிர்வாணத்தொகையாக ஏக்கருக்கு 15 மட்டும் தருவதாக தமிழக அரசு அறிவித்ததை புறக்கணித்து விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்திப் பார்க்கின்றன . ஏக்கருக்கு 30 ஆயிரம் இருந்தால் வரவேற்பதாகவும் வாடி பயிர்களுக்கு வாதாடி வருகிறார்கள் .

“எந்த ஒரு நாட்லையும் விவசாயி பட்டினி இருக்கக் கூடாதுங்க  - இந்த வார்த்தைக்குள் இருக்கும்  வலி சதாரணமானதல்ல .

ஆனால் ,நம் தமிழ் மண்ணில் மட்டும் விவசாயிகள் தற்கொலை செய்வதெல்லாம் அடிக்கடி நடக்கும் . சொல்லப்போனால் , அது தற்கொலையல்ல . இதுவும் ஒரு வகையில் கொலை தான் .

உழைத்து அழுத்த விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் இடையில் உள்ள தரகர்களுக்கே கிடைக்கிறது . யாரிடம் கையேந்த முடியும் …? அடுத்த போகத்தை எப்படி விளைவிப்பது..?

- சந்திரபால் .

No comments:

Post a Comment