Tuesday 11 June 2013

வெறுமையின் கனம் .



 
தன்னியல்பின் சுரங்கத் தடங்களில் மறைகிறான்
குற்றங்களின் எலும்புகளைச் சுமந்து கொண்டு.

வன்மத்தின் சுவாச மயக்கத்தில் மிருகங்கள் உறுமுகின்றன 
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்.

வெள்ளந்திகளென அனுதாபங்கள் சொன்ன தடயத்தில் நடத்தலாம்
இந்த முத்தமிட்டு நக்கும் நாடகத்தை. 

இதுவரைக்கும் தேடியும் இன்னும் கிடைக்கவில்லை  
சொரிக்கல்லில் ஒளிந்த மனதுக்கான திறவுகோல்.

உள்ளொடுங்கும் ஏவாளின் வார்த்தைகளுக்காக 
பொய்கள் ஒன்று கூடித் துப்புகின்றன சில நூறு பக்கங்களை.

சாக்கடை ஈரத்தில் நனைந்த அழுகிய ஆப்பிள்கள் - 
இந்தப் பாராட்டும் பூச்சென்டும்.

அறுந்து தொங்கும் பகட்டில் மலிவாக 
சில சொல் உதிர்கின்றன வாழ்த்துக்கள். 

நெருடிய பிரதேசத்தில் 
வெள்ளை தேவதைகளின் வீட்டில்  
பட்டாம் பூச்சிகள் தேன் குடிக்கும் போதெல்லாம் 
கனவுக்கு இன்னும் ஒரு வயதாகிறது.

மௌனனிகள் சொல்வடியும் 
எதையும் கொண்டு ஓட முடியாத சப்பானிகள்.

கட்டுக்கட்டாகப் பொன்னாங்கன்னிகள்
அறுத்துச் சுமந்து வர அறிவுரை சொல்லும் 
பிரியாணிக்கடை செம்மறிகள்.

மயிலிறகின் சுமை பொறுக்காமலா அச்சு முறிந்தது?  
சகாராவில் வெறுமையின் கனத்திலும்.

எங்கிருந்தோ இன்னும் விளங்காமல் 
வந்து கொண்டிருக்கின்றன இவைகள்.

- சந்திரபால் . 

No comments:

Post a Comment