Tuesday 11 June 2013

ஒரு ஜமுக்காலம் இருந்தால் பராவாயில்லை .


5484

மொட்டவிழும் சத்தம் கேட்டு  வண்டுகளின் முனுமுனுப்பில்மரக்கிளையில் நடந்து வந்த மழைத்துளி ஒன்று 
ஒடிந்து விழுந்தது.

அன்று, மேகங்களைத் திட்டிய வார்த்தைகளில் 
வன்மம் இல்லை.

சகாராவின் வானத்திலிருந்து பூமிவரைக்கும் அப்போது ஈரம்
பாம்புக்குட்டிகளாக மணல் நகர்த்திக் கொண்டிருந்தது.

இவர்களுக்கிடையில் உரையாடல் சுமக்க காற்றின் அலைவரிசை
ஒரு ஜமுக்காலம் இருந்தால் பராவாயில்லை என்றது.

கருத்த இருட்டில் ஒரு மின்மினிப் பூச்சியும் நனைய வேண்டியிருந்தது.

ஓரிரு இறகு உதிர்ந்த ஈசல்களும் அந்தக் காடா வெளிச்சத்தில்
தங்கள் ஆயுள் ரேகையைப் பார்த்து விட ஆசைப்பட்டன.

இன்னும் மீன் குஞ்சுகள் பிடித்து விளையாடிய சிறுவனாகவே
அவளருகில் தொடை உரசி இருந்தான்.

அவள் மண் பொம்மைகள் கேட்டு அடம்பிடிக்கவில்லை.

ஆனால், றக்கைக்குள் எட்டிப்பார்க்கும் குஞ்சுகளோடு இருக்கும் கோழிக்குப் பயந்து
ஆன்மாவின் பக்கங்கள் திறந்து அவனிடம் பேசினாள்.

காற்றில் ஏற்ற முடியாத வார்த்தைகளைக் 
கனத்த புத்தகங்களில் எழுதலாம். அது ஒரு சாமானியனுக்குப் புரியாமல், சாபமாகவும் மாறலாம்.

- சந்திரபால் . 

No comments:

Post a Comment