Thursday 27 June 2013

சிறுவாட்டுக் காசு .

இன்றைய நவீன உலகத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
இணையத்தள வசதியுடன் வங்கிகளுக்குச் செல்லாமலே நாமே மற்றொருவருக்கு பணத்தை எளிதாக மாற்றம் செய்கின்ற வசதி வாய்ப்புகளோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

“கிரடிட் கார்ட் என்றும் , “டிபிட் கார்ட் என்றும் கையளவு “கார்டை வைத்துக் கொண்டு மிக சுலபமாக உலகத்தை விலைக்கு வாங்குகின்றோம.

அதனால் , இப்போதெல்லாம் யாரும் பணத்தைக் கட்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு அலைவதில்லை . எதாவது ஒரு ‘ஏட்டியம் மையத்தில் நுழைந்து தங்கள் கணக்கிலிருந்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்கிறார்கள் .

ஆனால் சில நூறு வருடங்களுக்கு முன்னால் விதைச்சோளம் அறுத்துக் கொடுத்து , உப்பும் ஒரு மண் சட்டியும் வாங்கி வந்த நமது சந்தைக் கலாச்சாரத்தில் , சிறுவாட்டுக்காசு என்ற ஒரு சேமிப்புப் பழக்கம் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத் தக்க ஒன்றாகும் .

புருஷனுக்குத் தெரியாமல் , சில்லரைகளைக் குருவி சேர்ப்பது போல மனைவிகள் ஒளித்து வைப்பார்கள் .

அன்றாட செலவுகளில் மிஞ்சுகின்ற இந்தச் சில்லரைகள் , ஒரு அவசரம் என்கிற நிலை வரும் போது கை கொடுக்கும்  .

அதிலும் சில பெண்கள் அவசர செலவுக்காக மட்டும் இதைச் சேர்ப்பதில்லை . புருஷனுக்குத் தெரியாமல் தன் வீட்டுக்கு அனுப்புவதும் இந்தச் சிருவாட்டுக் காசு தான் .

வீட்டில் மனைவிகள் மட்டுமல்ல , பிள்ளைகளும் சேர்த்து வைப்பார்கள் . நானும் சிறு பிள்ளை வயதில் , சிறுவாடு சேர்த்து அப்பனிடம் உதை வாங்கியிருக்கிறேன் .

தெள்ளு விளையாட்டில் வென்ற சோடா மூடிகளை எடைக்குப் போட்டும் , கொடிக்காய் புள்ளி மரத்தை ஐம்பதிலிருந்து நூறு ரூபாக்குள் குத்தகைக்கு எடுத்து கூறு கட்டி வியாபாரம் செய்தும் சிறுவாடு சேர்த்திருக்கிறேன்.

இதையெல்லாம் தாண்டி , பட்ட சாராயம் அடித்து விட்டு வரும் குடிமகன்களுக்கு “ஒனக்கையாக [ருசியாக] பிராய்லர் கோழியின் தலை கால்களை வறுத்து விற்றுக் காசாக்குவேன்.

இப்படி விளையாட்டுத்தனமாக சம்பாதிக்கும் காசையெல்லாம் யாருமில்லாத நேரத்தில் , வீட்டுக்குள் ஒரு மூலையில் குழி தோண்டி உண்டியில் புதைத்து அதில் போட்டு வருவேன் .

திருட்டுத்தனமாகச் சேர்த்த காசால் ஒரு நாள் உண்டியல் நிரம்பும் . அதுவும் ஒரு மாதத்திற்குள் .

என் வயது சிறுவர்களிலே நூறு ரூபாய் ‘தாள் வைத்திருக்கும் பணப்புழக்கம் , என்னிடம் மட்டும் தான் இருந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் .

உண்டில் காசுகள் வானொலி ரேடிவாக மாறி , பாட்டுப் பாடும் . சில சமயம் பேட்டரி வெளிச்சமாக இருட்டில் எனக்கு மட்டும் எரியும் .

சிறுவாட்டுக் காசில் புறாக்கள் வாங்கி வீட்டைச் சுற்றிப் பறக்க வைப்பேன். அதோடு கிளிக் குஞ்சுகளும் குய் குய்வென கத்திக் கொண்டிருக்கும் .
இதற்காக அப்பா , ஊரு ஊராகத் துரத்தியடித்தது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது .

பணப்பரிவர்த்தனையின் வெளியென்பது இந்தச் சமீப காலத்தில் மிகச் சுலபமாக உலக நாடுகளுக்குள் இணைந்திருக்கிறது .
நான் அதிகமாய் சேமித்த பைசாக்கள் எல்லாம் இப்போது செல்லாத காசாகி விட்டன.

தேவைகளின் மதிப்பீடுகள் மாறிவிட்டதால் , கடன் வாங்கும் உலக வங்கிகளின் பயன்பாடுகள் இன்று அதிகரித்து விட்டன .
‘டெபிட் கார்ட் அறிமுகத்திலிருந்து வருமானத்திற்கு அதிகமாகக் ,  கடன்களை சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

கடன் கொடுத்த உலக வங்கிகள் திவாலாகிப் போன பின்னடைகள் மூலம் சேமிப்பின் வரையறை இலக்குகள் குறைந்து விட்டதை நாம்  உணர முடியும் .

இன்றைய சந்தையில்  விதவிதமாக - புதிய புதிய ஆடம்பரங்கள் வந்து குவிந்து கிடக்கும் போது சேமிப்புக்கே இடமில்லாமல் போகிறது .

போன வாரம் , சந்தையில் ஆசைக்காக ஆப்பிள் போன்ற ஒரு உண்டியலை வாங்கினேன் . இன்று வரை அதில் காசு போடவேயில்லை .
தினமும் ஆகும் செலவுகளுக்கு மட்டும் ‘ஏட்டியம் கார்ட் வைத்து எடுத்துக் கொள்கிறேன் . 

       சந்திரபால் .

No comments:

Post a Comment