Wednesday 26 June 2013

‘உதவும் கரங்கள்’



அறக்கட்டளைகள்  - மக்கள் மன்றம் – மனித நல குழுக்கள் என்றெல்லாம் , உதவும் கரங்கள் - தங்கள் அமைப்புகளை இன்று ஊர் ஊருக்கு ஆரம்பித்து விட்டார்கள் .

பல விதமான  திட்ட அறிக்கைகளை வைத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள் .

ஏழ்மையான மக்களுக்குக் கை கொடுப்பதாக பல கிராமங்களுக்குச் சென்று , ஐந்தாறு நாட்கள் அங்கே தங்கி கலை நிகழ்வுகள் நடத்துகிறார்கள் . விழிப்புணர்வு என்ற பெயரில் ஏதோதோ பேசுகிறார்கள் .

பள்ளிச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கை தட்டுகிறார்கள் .
வாழ்க்கைக்கு வெளியே தூக்கியெறியப்பட்ட மக்களுக்குப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவர்களின்  குறைகளைக் கேட்டு, தேவையான அளவுக்கு எழுதிக் கையெழுத்து வாங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் தங்கள் அறக்கட்டளையில் வெட்டி முறித்த சாதனைகளின் பட்டியலைச் சரிபார்த்து , மேலிடத்திற்கு அதை அனுப்பி வைக்கிறார்கள் .
சில லட்சங்களை நன்கொடையாகவும்  - பரிசாகவும் வாங்கி வைப்பு நிதியாக வைத்துக் கொண்ட அமைப்புகள் கிளைகள் விட்டு வளர்கின்றன.

காய்ந்து போன கண்ணீர் தடத்தில் பொங்கும் ஈரத்தைத் துடைப்பதாகப் பேசிய சொற்பொழிவுகளையும் , வசனங்களையும் கேட்டு , கஞ்சிக்கே வழியில்லாத சாமனிய மக்கள்  வரிசையில் வந்து  நிற்கிறார்கள்.

தீர்க்க முடியாத வழக்குகளையும் – சச்சரவுகளையும் ஒரு பைசா செலவில்லாமல் தீர்த்துக் கட்டுவதாக உதவும் கரங்கள் , நசிந்த மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கின்றன .

கைகள் விரித்துக் கெஞ்சிக் கதறும் மக்களுக்கு எதுவும் உதவாமல் இருந்தாலும் , இருப்பதை வைத்து முட்டி மோதி , தனக்கு உண்டான காயத்திற்கு அவர்களே மருத்துக் கட்டிக் கொள்வார்கள் .

ஆனால் , ஆசை வார்த்தைகளில் தெம்பு சொல்லி , வழக்குகளை நீதிமன்றத்தில் இலவசமாகக் கோர்த்து விட்டு, விளையாட்டு காட்டும் "பிணந்திண்ணிகள்" வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் .

தர்மத்தையும், வியாபார உத்தியாக பயன்படுத்தும் சேவை அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் .
  
சட்டம் – ஒழுங்கு – அரசாங்கம் என்ற அதிகாரம் தாங்கிய பேனாக்கள் , அறக்கட்டளைகளுக்கான அங்கிகாரத்தை , நுணுக்கமாக ஆராய்ந்து உண்மையாகக் கையழுத்திட வேண்டும் .

ஆக்கப்பூர்வமாகவும் , உண்மையாகவும் இயங்கும் அறக்கட்டளைகளை, நாம் பணிவுடன் வணங்கத் தான் வேண்டும் .

– சந்திரபால் .

No comments:

Post a Comment