Wednesday 26 June 2013

ஊடக தர்மம்.


கல்லும் , மண்ணும் - கருத்தும் – பாசமும் கூட வியாபாரமாகும் இந்தக் காலத்தில், ஊடகங்கள் நடத்தும் கொள்கை முடிவுகள் - கோட்பாடுகள் அனைத்தும் வசதிக்கேற்ற ஒரு அரசியல் பூடகமாகவே இருந்து வருகின்றன .

செய்திக் குறிப்புகளும் – பதிவுகளும் வரையறுத்த எல்லைக் கோட்டை மதித்து விடாமல் கண்கானிக்க , ஒவ்வொரு ஊடக்ததிலும் நிச்சயம் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கும் . பொருளாதாரத்தை மையப்படுத்தியே அங்கு மேலாண்மை இயங்கும் .

நம் நாட்டில் காட்சி ஊடகங்கள் – பத்திரிகை ஊடகங்கள் என்று ஆயிரக்கணக்கில் இருந்தாலும் , குற்றங்கள் தீர்ந்து விடுமா?

நடந்த குற்றங்களின் வேர் வரை சென்று விசாரித்து பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு தான் கொடுத்து விட முடியுமா என்ன?

குறை சொல்வது எளிது தான் . அது போல குறைபட தவறு செய்வதும் எளிதாகி விட்டது . விமர்சகர்கள் கொட்டித் தீர்க்கும் எழுத்துக்களில் நல்ல லாபம் பார்க்கிறார்கள் . பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் .
 

அதிகாரம் கையசைக்கும் வரை எதுவும் இங்கு நகருவதுமில்லை . வேகம் குறைவதுமில்லை .

கவன ஈர்ப்பிற்கும் , உணர்ச்சி வசப்படுத்துவதற்கும் ரத்தமும் சதையுமாக நடக்கும் நிகழ்வுகளைச் செய்திகளாக அள்ளி எறிந்து விட்டு , கிளை விட்டு கிளைதாவி அடுத்த நாள் தலைப்புச் செய்திகளுக்காகத் தயாராகிறார்கள் .

நடந்த வன்முறைக்கும் – சீரழிவிற்கும் முன்னுரை மட்டும் எழுதி விட்டு முடித்து விடுவது தான் , எதார்த்தத்தில் பெரும்பாலும் ஊடக தர்மமாக இருந்து வருகிறது.
சமூக விரோதங்களைத் தட்டிக் கேட்டு அதனால் வரும் பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கெல்லாம் எந்த ஊடகங்களுக்கும் இங்கு நேரமில்லை .

ஏதொன்றுக்கும் அரசியல் வெள்ளை வேஷ்டிகள் வந்து பேரம் பேசும் . அழுதாலும் தெருவில் சட்டையைக் கிழித்துக் கொண்டு திரிந்தாலும் இன்று புதியாய் வெடித்த செய்திகளுக்கே உச்சு கொட்டப்படும் .

பிரச்சனை – தொல்லை – கொடுமை - தோல்வி – பஞ்சம் – பசி – பட்டினி - பலாத்காரம் – அபகரிப்பு – திருட்டு – சாவு என்று சாமனியன் தொட்டு , சகலத்தையும் வாங்கும் மனிதன் வரைக்கும் அனைத்தும் செய்திகள் தான்.
ஒவ்வொரு நாளும் எழுதப்படாத செய்திகள் லட்சக்கணக்கில் கடந்து போகின்றன எழுதப்படாத திரைக்கதைகள் போல .

ஒரு நேர சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாதவனுக்கு , பத்து பதினைந்து ரூபாய்களில் பிரச்சனையென்றால் , பண முதலைகளுக்கு கோடிகளில் பிரச்சனை ஏற்படுகிறது . இதில் உண்டாகும் வலிக்கும் வேதனைக்கும் மதிப்பென்பது ஒன்று தான் .

கருத்துச் சுதந்திரமும் , தகவல் உரிமை சட்டமும் வாய்மொழியாக மட்டும் உச்சரிக்கப்படும் போது ஜனநாயகத்தைத் தேடுவதென்பது , இருட்டில் தொலைந்த ஊசியை குருடன் தேடும் கொடுமையாகும் .

ஊடகங்களில் ஆளாளுக்குக் கருத்துச் சொல்ல கிளம்பி விடுகிறார்கள் . சொல்லியவர்கள், தங்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் தலைகீழ் ஆட்டம் புரிகிறார்கள் .

ஊடகத்தால் பிரச்சனைகள் தீரப்போவதில்லை . நாள் முழுக்க வேடிக்கை பார்க்கலாம் . தன்னுடைய தலையில் விழுந்தால் அது வலி . இல்லை என்றால் அது ஒரு செய்தி .

மக்கள் நல மன்றம் - அறக்கட்டளைகள் என்று உதவும் கரங்களே , அழுது கலங்கும் கண்களைத் துடைப்பது போல நடித்துக், கழுத்தைக் கடிக்கும் போது , நசிந்து கிடக்கும் மக்களுக்கு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் !

       சந்திரபால் .

No comments:

Post a Comment