Wednesday 26 June 2013

களைத்துப் போடுவது தான் கலை .



மனதை ரம்மியப்படுத்த, மனிதன் தனக்காகச் செய்து கொண்ட ஏற்பாடுதான் கலை.

குதூலகத்திற்காகவும், கொண்டாட்டத்திற்காகவும் வந்த நிகழ்த்துக் கலைகள், வாழ்வின் பெரும் பகுதியை நிறைக்கின்றன . பொழுது போக்கின் உச்ச கட்டமாக இருக்கின்றன .

தெய்வங்களையும் மன்னர்களையும் முன் வைத்தே உருவாக்கப்பட்ட கலைகள் , புராணங்களையும் – இதிகாசங்களையும் – வேதங்களையும் அடிப்படையாகக் கொண்ட தொன்மக் கதைகளின் வழி , தொடக்க காலத்தில் மனிதர்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தி வந்தன .

‘துன்பியல் மற்றும் ‘இன்பியல் [Tragedy and Comedy] என்ற இரண்டு பாகுபாடுகளில் மாறி மாறி வழங்கப்பட்டு வந்த கலை , ஆரம்ப காலத்தில் வாய் மொழியாக மட்டுமே, வளர்த்தெடுக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு வந்தன .

இலக்கியப் பதிவுகளும், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் , வெளிநாட்டார்களின் பயணக் குறிப்புகளும், அகழ்வாராச்சிகளும் கலைகளுக்கானத் தொல்பொருள் ஆதாரங்களாகத் திகழ்கின்றன .

வரலாறு எழுதத் தொடங்கிய இடைக்காலத்தில் , கலைகளை ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் – கலாச்சாரக் குறியீடாகவும் - வரலாற்றின் மனச்சாட்சியாகவும் வரையறை செய்து கொண்டார்கள் .

மனித வாழ்வியலின் ஒவ்வொரு சடங்குகளும் கலையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது .

போலச் செய்வது – குழுச் செயல்பாடு – விளையாட்டு என்ற இந்த மூன்று வகைப்பாடுகளின் அடிப்படையில் தான் கலை நிகழ்த்தப்படுகிறது .

இவற்றின் வழி கலை என்பது எதார்த்தமா ? கற்பனையா ? என்ற இரு பெரும் கேள்விகளுக்கு இடையில் நிற்கும் கலைஞர்கள் ,தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் கலையை வெளிப்படுத்துகிறார்கள்.

கலையில் வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் , அது நம்ப முடியாத பிரம்மையை ஏற்படுத்தி பார்வைகளைத் திகட்ட வைத்து விடும் . இதை ஆங்கிலத்தில் ‘ரொமாண்டிஷம் அதாவது புனைவியல் என்பார்கள் .

முழுக்க முழுக்க எதார்த்தமாக கலையில் ஈடுபட்டால் , அதுவும் பார்வையாளர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தி விடும் . இதை ஆங்கிலத்தில் ‘ரியலிஷம் அதாவது நடப்பியல் அல்லது எதார்த்தவியல் என்பார்கள் .

அப்படியானால் , முழுக்க கற்பனையாகவும் – எதார்த்தமாகவும் இல்லாமல் கற்பனையோடு சேர்ந்த எதார்த்தத்தையும் எதார்த்தத்தோடு சேர்ந்த கற்பனையையும் கலையாகத் கொடுக்கும் போது தான் அது சுவையாக அமைகிறது .

அதிலும் , கலையில் எந்த அளவுக்குக் கற்பனையை வைக்க வேண்டும் , எந்த அளவுக்கு எதார்த்தத்தை வைக்க வேண்டும் என்பதெல்லாம் கலைஞர்களைப் பொருத்த விஷியம் . அல்லது அது அவர்களின் சாமர்த்தியம் .

இந்த 21 ஆம் நூற்றாண்டில் …. கலையை ஆடம்பரத்தின் உச்ச கட்டமாக பார்க்கும் போக்கு நிகழ்ந்து வருகிறது . அதற்கு அதிநவீனக் கண்டுபிடிப்புகள் உதவுகின்றன.
கோடிக்கணக்கில் மக்கள் கலைக்காகச் செலவு செய்கிறார்கள் .

கலையை அழகியலாக மட்டும் பார்க்கும் ஒரு கூட்டமும், கலையை பிரச்சாரமாக – கருத்து சொல்லும் கருவியாகப் பார்க்கும் ஒரு கூட்டமும் இருப்பது காலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

இவ்விரண்டையும் , ‘கலை – கலைக்காக என்றும் ‘கலை – மக்களுக்காகஎன்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த இரண்டு கோட்பாடுகளை மையமாக வைத்தே கலை உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் .. அதில் , புது புது பரிசோதனை முயற்சிகள் நிகழ்த்தப்படுவது கலையின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

       சந்திரபால் .

No comments:

Post a Comment