Thursday 27 June 2013

அமைதியின் குறியீடுகள் .



மரங்கள் அமைதியின் குறியீடுகள் …
சுதந்திரத்தின் பச்சை வடிவங்கள் …
நமது மூச்சுக் காற்றின் பிரசவ அறைகள் இந்த மரங்கள்  .


வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கலாம் என்பது , மழை பெறுவற்கு மட்டுமல்ல. 

மனிதர்கள் ,தங்களுடைய மனதை இளைப்பாற்றிக் கொள்ளவும் , குளிர்ந்த காற்றில் களைப்பாற்றிக் கொள்ளவும் மரங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன.

வனாந்திரங்களில்  மரங்கள் தேடி மயங்குதற்குக் காரணம் இருக்கின்றன.  மரத்தடி நிழல்கள் மனதில் மெல்லிய பதிவுகளை எழுதுகின்றன . 
நூறு ஆண்டுகளையும்  கடந்து நிற்கும் மரங்கள் பல கதைகளை நமக்குச் சொல்லித் தருகின்றன .

வாழ்வின் அழகியலை உணர்ந்து கொள்ள மனிதர்கள் இயற்கையின் மடியில் அமர்ந்து தான் , பாடம் கற்க வேண்டும் . அதற்கு மரங்கள் அனைத்துமே நமக்கு முன் உதாரணங்கள் தான் .

அறிவியல் , மரங்களுக்கானத் தேவையை பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கின்றன  . உளவியல் அடிப்படையில் போதிக்கப்பட்ட வார்த்தைகளில் மரங்களுக்கான கோடிட்ட இடங்களும் அதில் மருத்துவ குணங்களும் ஏராளம் இருக்கின்றன .

மரங்கள் ,இயற்கையின்  அற்புதக் கொடைகள் தான் .
விடை சொல்ல முடியாத கேள்விகளையும் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோசித்துப் பாருங்கள் .
 

எல்லாக் கண்களுக்கும் இந்த மரங்களின் அற்புதம் அவ்வளவு எளிதில் புரிந்து விடுவதில்லை . ஓடுகிற அவசரத்தில் நின்று பேசக் கூட நேரம் கிடைக்காத நிற்கதியில் , இந்த மரத்தடி நிழல்கள்  தேவையில்லை என்றால் , வாழ்க்கை இன்னும் வாழப்படவில்லை என்றே சொல்லலாம் .
 

மழையில் நனைந்து மரங்களை நம்பி வாழும் , எந்தப் பறவைகளுக்கும் இதுவரைக்கும் காய்ச்சல்  வந்ததில்லை. இதய நோய்களும் – சர்க்கை நோய்களும் மரங்களில் கிளைவிட்டு கிளை தாவும் பறவைகளுக்கில்லை .
 

எங்கே ஒரு மரம் வெட்டப்படுகிறதோ , அங்கிருக்கும் மண்ணியலும் ,மனித இயலும் மாற்றம் அடைகின்றன .
 

இந்த யந்திர உலகத்தில் , காங்கரிட் மரங்கள்  கட்டங்கள் முளைக்கும் தெருக்கடைச் சந்துகளில் , சுதந்திரமாக ஒரு மரத்தை வளர்க்க வழியில்லாமல் போகிறது .
 

எத்தனை மீட்டரில் நிற்க வேண்டும் என்று ,மனிதர்களைக் கேட்டு தான் மரங்கள் ஒவ்வொன்ரும் வளர வேண்டியதாய் இருக்கிறது . இந்தச்  சூழலில்  எளிமையான இந்த வாழ்க்கையை மிகச் சிரமப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

மரங்கள் அமைதியின் குறியீடுகள் …
சுதந்திரத்தின் பச்சை வடிவங்கள் …
நமது மூச்சுக் காற்றின் பிரசவ அறைகள் இந்த மரங்கள்  .


-சந்திரபால் . 

No comments:

Post a Comment