Tuesday 11 June 2013

மௌனத்தின் அர்த்தம் புரிந்தவர்கள்.



கலையின் பிறவித் தவம்
இன்னும் கலையவில்லை


சந்திர சூரியர்கள் தங்களுக்கான
எந்தப் பாடலையும் இசைக்கவில்லை


காலத் தவிப்புகளுக்கு இது வரைக்கும்
எந்தக் குறிப்பும் எழுதவில்லை

ஒரு சலனத்தின் தொடக்கத்தில் எல்லாம் சகாராவின் கையில்.

சகாராவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்
அது உங்களின் வணக்கத்துக்குரியதாக இருக்கும்.

சகாராவின் அசைவுதான் பிரபஞ்சத்தின் ஊழிக்காலம்
கண்ணீர்த் துளியின் பிசுபிசுப்பு தான் சகாராவின் ஈரம்
அழகியலின் உன்னதம்.


சகாரா பக்குவப்படவில்லை
அழகியல் எப்போதும் பக்குவப்படாது.

ஒரு கனவின் நுனியில் தொடங்கிய சகாரா
சூன்யத்தின் விளிம்பில் நின்றது.

ஒரு யுகத்தை வாழந்து முடித்த பிறகே
சகாரா வளரத் தொடங்கியது.

சகாராவின் ஜீவன் காதல் 
கலைகள் அலங்காரம்
இரவுகள் எழுதி முடித்த பூர்வீகம்.
 
ஒரு நாள் சகாரவில் ஒரு காதலர்கள் வந்தார்கள்
காதலை தியானம் என்றே சொன்னார்கள்.
கலவி நடத்தாமல் காதலைப் புனிதமாகக் கண்டார்கள்.
அது அவர்களின் அறியாமையாக இருக்கலாம்.
ஆனால்,
அறியாமையின் பேரழகை ரசித்தவர்கள் சகாராவின் மக்கள்.

மௌனத்தின் அர்த்தம் புரிந்தவர்கள்.
பொய்கள் பேச முடியாமல் போனவர்கள்.
 
பல நாவல்களும் ஒரு கோடிச் சிறுகதைகளும்
சகாராவின் தூரிகையில் உதிரும்
சகாராவின் தடயங்கள் உலகத்துக்கு எதிரும் புதிரும்.

ஒரு நாள் சகாராவில் ஒரு காதலர்கள் வந்தார்கள்
காதலை தியானம் என்றே சொன்னார்கள்.

- சந்திரபால் . 

No comments:

Post a Comment