Tuesday 10 July 2012

பாப்பாத்திகளின் தூங்கும் பகல்.


பாப்பாத்திகளின் தூங்கும் பகல்.


அவள் பச்சை நிறமணிந்து  காற்றில் ஏதேதோ எழுதி வந்தாள்.
ஒரு வெயில் அறிக்கையில், இப்படிக் குறிப்பிட்டிருந்தது.

நீயும் ஒரு நாள் சாகாராவுக்குள் வருவாய், கதை மண்டலச் சுருளில் ஒவ்வொரு கன்னியிலும் உனது பெயரும் உடனே எழுதப் பெறும்.

மௌனத்தின் அதிர்வுகளில், உன் பால் வெளி அண்டத்தின் கடைசி ஜாமம் கிழியும் சத்தம் கேட்டு நீ எழுவாய்.

அவனும் பரிதாபத்தின் குறியீடுகளைப் பிழைத்திருத்தம் செய்து, நேற்றிரவு முளைத்த காளாகளுக்கடியில் போட்டு வருவான். ஒரு சலனத்தில் கடல் பொங்கும்.

நரம்புகள் தாளத்துக்கு தடுமாறிய தாண்டவத்தில் உச்சிப் பொழுது பனி உதிர்க்கும்.

காத்திருத்தல் என்பது ஒரு ஆக்காட்டிக் குருவிக்கு நிகழ்ந்திருக்கலாம்.

தபோவனத்தின் தண்ணீர்ச்சாலையில் நெய்த கவிதைகளை பருத்திச் சுளையின் உடலின் வழி வாசித்து விட்டு வந்தார்கள்.

தேவாங்குகளின் கதறல் கேட்டு மொழி பெயர்ப்புகளின் போக்கத்த வார்த்தைகள் புழகத்தில் வரத் தொடங்கியன.

பச்சை இரவுகளில் வடிந்த ஈரப்பசையை ஒடித்துத் தின்ற துத்த நாகங்கள் சாத ஊழையிடுகின்றன யோனியின் மடிப்புகளில்.

அதோடு, கார்ட்டூன் வார்த்தைகளில் கதைத்த நிமிடங்கள் காட்சியின் குறுந்தொன்மங்களாகக் கனக்கின்றன.

ஒரு பனிக் காலத்தின் திமிரில் வளர்ந்த வரிக்குதிரைகள் வெறுத்துக் கத்தும் குழி பறிக்கும் கனவுகளில்.

சுகந்தத்தின் அடைமழை பொறுக்காமல் தவிப்புகள் புதருக்குள் மண்டிக் கிடக்கும். விதிகள் திருத்தும் ஒரு அச்சகத்தில் அச்சப் பிழைகள்.

ரத்தம் குடிக்கும் நீலிகளுக்கு வயிறு நிரம்பும். சந்திப்புகள் பெரிதென பட்டுப் பூச்சியின் நுனி விரலில் தீண்டும் வெளி.

உச்சுக் கொட்டும் மழை நனையும் கனவிலிருந்து ஆவாரஞ் செடி இலை மறைத்த சிவப்புப் பாப்பாத்திகளுக்காக தூங்கும் பகல்.    

No comments:

Post a Comment